புதன், 21 ஆகஸ்ட், 2013

நினைவோட்டம் 69





வகுப்புத் தொடங்கும் மணியை அடித்ததும், அறிவிப்புப் பலகையின் முன்
நின்றிருந்த கூட்டம் முழுதும் திடீரென கலைந்து செல்ல, நான் மட்டும் 
தன்னந்தனியாய் அங்கு செய்வதறியாது நின்றிருந்தேன்.

அதுவரை கேட்ட இரைச்சல் சொல்லிவைத்தாற்போல் திடீரென நின்றுவிட்டது. ஆயிரக்கணக்கான  மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ள ஒரு கல்லூரியில் 
இருப்பது போன்றே தோன்றவில்லை எனக்கு. ஒரு சிறிய ஊசி கீழே விழுந்தால் ஏற்படும் ஒலியைக் கூட கேட்கக்கூடிய அளவுக்கு அப்படியொரு
ஒரு அரவமின்மை.

அப்போது எனக்குப் பின்னால் சரக் சரக் என எழுந்த சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் 
(Rev Fr Ehrhart  SJ) அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும்
என்னுள் இருந்த பயமும், படபடப்பும்  இன்னும் கூட ஆரம்பித்தது.

ஆனால் அவர் புன்னகையுடன் என் அருகில் வந்து. ஏன் இங்கு நின்று கொண்டு இருக்கிறாய்?’ வகுப்புக்கு செல்லவேண்டியது தானே?’ என்றார் ஆங்கிலத்தில்.
எனக்கோ தொண்டை வறண்டு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
போன்ற பிரமை. வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

உடனே அவர் அதே புன்னகை மாறாமல் உனது D.No. என்ன என்று கேட்டார்?’ அப்போது தட்டுத்தடுமாறி எனக்குத் தெரியாது. என்று ஆங்கிலத்தில்
பதிலளித்தேன். அவர் எனது தோளின் மேல் கை போட்டு என்னுடன் வா.
என்று கூறி கல்லூரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற எழுத்தர் ஒருவரிடம், என்னைக்காட்டி
இந்த பையனுடைய Department No. மற்றும் வகுப்பு அறை எண் என்ன வென்று 
பார்த்து சொல்லுங்கள். என்றார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது D.No.  
என்றால் Department No. என்று!  

அந்த எழுத்தர் எனது பெயரையும், Group யும்  கேட்டபோது, நான் எனது 
பெயரை சொல்லி Natural Science, Physical Sciences, Commerce, Logic Group 
என்றேன். அந்த Group இல் ஒரு வகுப்பு மட்டும் இருந்ததால், உடனே அவர் 
அருகில் இருந்த பேரேட்டை (Ledger) பிரித்துப் பார்த்து, எனது D.No. என்ன என்று பார்த்துவிட்டு,அது 2292 என்றும் எனது Section E’ என்றும் சொன்னார்.

உடனே முதல்வர் அவர்கள், அதே பரிவுடன் தோளில் கை போட்டு என்னை அழைத்துக் கொண்டு எனது வகுப்பு இருந்த முதல் தளத்திற்கு அழைத்து
சென்றார்.  

இந்த இடத்தில் புனித வளவனார் கல்லூரியில் வகுப்புக்கள் இருந்த அமைப்பு
பற்றி சொல்லவேண்டும் என எண்ணுகிறேன். கல்லூரியில், கிழக்கு திசை
நோக்கி இருந்த Lawley Hall என அழைக்கப்பட்ட இரு தளங்கள் உயரம் 
கொண்ட பெரிய கலையரங்கம் (Auditorium) த்தின் இரு பக்கங்களிலும் முதல் தளத்திலும்,கீழ் தளத்திலும் வரிசையாய் வகுப்பறைகள் இருக்கும்.

அந்த வகுப்பறைகளின் நுழை வாசல் உள்ள பக்கத்தில் சன்னல்களுடன் கூடிய வராந்தாவும், Auditorium உள்ள மறுபக்கத்தில் சன்னல்களும் இருக்கும். அந்த சன்னல்கள் வழியே பார்த்தால் கலையரங்கம் முழுதும் தெரியும் வண்ணம்
அவைகள் கட்டப்பட்டிருக்கும்.

எனது வகுப்பறை Lawley Hall இன் தென்பகுதியில் இருந்த முதல் தளத்தில் இருந்ததால், கல்லூரி முதல்வர் அவர்கள் என்னை அங்கு அழைத்து சென்றார். 
நானோ அவருடன் மிகுந்த கூச்சத்தோடும் பயத்தோடும் சென்றேன். பல
வகுப்பறைக் கடந்து சென்றபோது அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த
ஆசிரியர்களின் குரலைத் தவிர வேறு ஓசை ஏதும் கேட்கவில்லை.

எனது வகுப்பு அறை முன் சென்றதும் அங்கு அப்போதுதான் வகுப்பை நடத்த ஆரம்பித்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் கல்லூரி முதல்வரைப் பார்த்ததும்
வணக்கம் சொல்லிக்கொண்டே வெளியே வந்தார். அவரிடம் என்னைக் காட்டி.
இதோ உங்கள் வகுப்பு மாணவன். உள்ளே அனுமதியுங்கள். என்னைப் பார்த்து.
இனி காலை வகுப்பு தொடங்கு முன் வகுப்பில் இருக்கவேண்டும். அதோடு
D.No. யும் மறக்காதிருக்கவேண்டும். எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு முதல்வரே கல்லூரிக்கு புதிதாய் வந்துள்ள மாணவனை அழைத்து
சென்று வகுப்பில் விடுவது என்பது எப்போதுமே நினைத்துப் பார்க்கமுடியாத
ஒன்று. அது அவரது வேலையும் அல்ல. இப்போது நினைத்தாலும் அந்த காட்சி
என் மனக்கண் முன் நிழலாடும்போது, அது ஒரு கனவோ என எண்ணத்
தோன்றுகிறது.

அவர் நினைத்திருந்தால் எனது வகுப்புப் பிரிவை, அந்த எழுத்தர் சொன்னதும் 
என்னை அங்கு போகச் சொல்லியிருக்கலாம். அல்லது  கல்லூரியில் உள்ள உதவியாளர் ஒருவரை  என்னுடன் அனுப்பி வகுப்பறையைக் காட்டச் சொல்லியிருக்கலாம். ஆனால் பெற்றோர் வந்து தங்களது பிள்ளைகளை விட்டு செல்வது போல பொறுப்புடன் அவரே வந்து என்னை விட்டு சென்றதை
என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை.

அவர் கண்டிப்பானவர்தான் ஆனால் அதே நேரம் மாணவர்களிடம், அதுவும்
புதிய மாணவர்களிடம் பரிவுடனும் கனிவுடனும் நடந்துகொள்வார் என்பதை
பின்னர் கேள்விப்பட்டேன். அந்த அனுபவத்தை நான் கல்லூரியில் சேர்ந்த
முதல் நாளே பெற்றேன்.

எனது வகுப்பில் இருந்த ஆங்கிலப் பேராசிரியர் (அவர் திரு பானுமூர்த்தி 
அவர்கள் என பின்னர் அறிந்துகொண்டேன்)  என்னை உள்ளே வரச் 
சொன்னதும், நான் நுழைந்தபோது வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் என்னையே பார்த்தது என்னவோபோல் இருந்தது.

வேகமாக உள்ளே சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து 
கொண்டேன். நான் உட்கார்ந்ததும் அருகில் இருந்த மாணவர் என்னைப்
பார்த்து புன்னகைத்தார்.நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

என்ன பாடம் ஆரம்பித்துவிட்டாரா?’ என அவரிடம் கேட்டபோது இல்லை.
இல்லை இப்போது சுய அறிமுகம் நடந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயர். ஊரின் பெயர் மற்றும் படித்த பள்ளியின் பெயரை சொல்லவேண்டும்.அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.என்றார் அவர்.

அப்போதுதான் கவனித்தேன். தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, பக்கத்து
மாநிலமான கேரளாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் ஏன் ஆப்பிரிக்க நாட்டிலிருந்தும் வந்திருக்கும் மாணவர்கள் எனது வகுப்பில் உள்ளார்கள் என்று.

எனது முறை வந்தபோது எழுந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
எனது அடுத்த இருக்கையில் இருந்தவர் எழுந்து அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்.

எனது வகுப்பு மாணவர்களில் சிலர் ராஜேந்திர பிரசாத், அண்ணாதுரை, 
கருணாநிதி என புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பெயரைக் 
கொண்டிருந்ததையும் கண்டேன். ஒரு பயிற்சி பாதிரியாரும் எங்களோடு 
மாணவனாக இருப்பதையும் கண்டேன்.    

அறிமுகப்படலம் முடிந்ததும் பேராசிரியர், பள்ளிமாணவனாக இருந்த நாங்கள் கல்லூரியில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு, 
உடனே பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார். அவர் முதன்முதல் நடத்திய பாடம் இன்னும் நினைவில் இருக்கிறது. அது Jerome K. Jerome எழுதிய  
Uncle Podger hangs a picture என்ற நகைச்சுவை கட்டுரை.

அவரது வகுப்பு முடிந்து, அடுத்து தர்க்கவியல் எனப்படும் Logic பாடம் நடத்த
ஆசிரியர் திரு ஃபெர்னாண்டெஸ் வந்தார். அவர் சிரித்த முகத்தோடு பாடம் நடத்தினாலும், ஒன்றுமே புரியவில்லை. காரணம், புரியாத பாடத்தை ஆங்கிலத்தில் கேட்டதால். இந்த அனுபவம் அந்த காலத்தில் தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டு கல்லூரி வந்த எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் இரண்டாவது மாதமே எல்லாம் சரியாகிவிட்டது.

மதிய உணவு இடைவேளை விட்டதும் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை
எங்கு வைத்து சாப்பிடுவது எனத் தெரியாமல் தயங்கியபோது, எனது பக்கத்து இருக்கை நண்பர் சொன்னார். நான் க்ளைவ் உணவுவிடுதியில் 
தங்கியுள்ளேன். அங்கு எனது அறையில் நீங்கள் வந்து  மதிய உணவை 
சாப்பிடலாம். என்றார். பழகிய சில மணி நேரத்திலேயே, எனக்கு 
நெருங்கிய நண்பராக மாறிவிட்ட அவரைப்பற்றி பின்னர் சொல்லுவேன்.    



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

16 கருத்துகள்:

  1. அன்றே அரசியல் தலைவர்கள் நண்பர்கள்...!!! ஹிஹி... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது அரசியல் தொடர்பை (?) அறிந்துகொண்டதற்கும்(!) தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. உங்க பிரின்சி உங்கள கூட்டிக்கொண்டு போய் வகுப்பறையில் விட்டதை எங்களையும் கூட்டிக்கொண்டு போய் சொன்ன விதம் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை பாராட்டியமைக்கும், நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே!

      நீக்கு
  3. நான் செயிண்ட் ஜோசப் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கவில்லை. இருந்தாலும், எனது கிறிஸ்தவ நண்பர்களால் அவற்றோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த காலநாள் மலரும் நினைவுகளை உங்கள் நினைவோட்டம் தந்து விட்டது. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, ஆரம்பத்தில் எங்கள் வங்கியில்தான் அந்த கல்லூரி ஆசிரியர்களின் சம்பளக் கணக்குகள் இருந்தன. அதில் பலபேர் அறிமுகம். உங்கள் ஆங்கிலப் பேராசிரியர் திரு பானுமூர்த்தி அவர்களையும் பார்த்து இருக்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!எனது பதிவு தங்களுக்கு பழைய நினைவுகளைக் கொண்டுவந்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  4. துவக்கப்பள்ளியில்தான் அழும் குழந்தைகளைத்தான் ஹெட்மாஸ்டர் கொண்டுவந்துவிடுவார். காலேஜில் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. நமது கல்வி முறையில் பெயரளவில்தான் மாற்றங்கள். +1-ல் நாங்களும் அதே Uncle Podger hangs the picture- ஐப் படித்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! கல்லூரி முதல்வர் விழித்துக்கொண்டு நின்ற இந்த ‘குழந்தை’ வகுப்பறையைத் தேடி அலையவேண்டாமே என்ற எண்ணத்தில் அழைத்து சென்றிருக்கலாம் என நினைக்கிறேன். Uncle Podger hangs the picture கட்டுரையை தாங்களும் படித்திருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  5. வருகைக்கும் பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. கல்லூரித்தலைவர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்!
    சுவாரஸ்யமான முதல்நாள் அனுபவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  7. சுவாரசியமாக சொல்லும் கலை உங்களுக்கு கைவந்திருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  8. படிப்பதற்கு சுவையாக தருகிறீர்கள்.ஆனால் ஒரு குறை சிறிய பதிவாக உள்ளது.சிறிது நீட்டித்து தாருங்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! சிலர் பதிவின் நீளம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னதால் குறைக்கும்படி ஆயிற்று. இனி குறையை சரி செய்கிறேன்.

      நீக்கு