ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

நினைவோட்டம் 44

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர் திரு கண்ணன்.
எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். அதிகம்
பேச மாட்டார். எனக்கு மட்டுமல்ல நண்பர் திரு துரைராஜ்
மற்றும் திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் நண்பர்.

S.S.L.C தேர்வு முடிந்த அன்று (1960 பிப்ரவரி) இரவு,
விருத்தாசலம் இராஜராஜேஸ்வரி திரை அரங்கில்
‘சகோதரி’ திரைப்படத்தை அவரோடு இரண்டாம் காட்சி
பார்த்து விடைபெற்றேன். அதற்கு பிறகு தொடர்பே
இல்லை. திரும்ப பணி ஓய்வு பெற்று சென்னை
திரும்பியவுடன், நாற்பத்துஆறு ஆண்டுகள் கழித்து,
ஆண்டு நண்பர் துரைராஜ் அவர்களின் மகனின்
திருமணத்தில் சந்தித்தது போது ஏற்பட்ட உணர்வையும்,
மகிழ்ச்சியையும், எழுத்தில் விளக்க இயலாது.

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர்
திரு கிருஷ்ணமூர்த்தி. அவர் பள்ளி இறுதி தேர்வு
முடித்து, கல்கத்தா சென்றார். அங்கு வேலை
பார்த்துக்கொண்டே படித்ததாக கேள்வி. அவர்
இப்போது எங்கு இருக்கிறார் எனத்தெரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது தினம்
காலை 9 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்.
நானும் அவரும் அய்யனார் கோவில்
தெருவிலிருந்து மணிமுத்தா ஆற்றை (?)
கடந்து தினம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

அடுத்து எனக்கு பிடித்த நண்பர் திரு இராஜாமணி.
அவருடைய தந்தை இரயில்வே துறையில்
இருந்தார். விருத்தாசலத்தில் படிப்பு முடித்து
நான் திருச்சி புனித வளவனார் (St.Joseph)
கல்லூரியில் சேர்ந்தபோது அவர் திருச்சி
ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பு
படித்து பின் ‘வாரங்கலி’ல் உள்ள வட்டார
பொறியியல் கல்லூரியில்(R.E.C) படித்து
பொறியாளராக ஆனார் என்பது வரை
தெரியும். இப்போது எங்கிருக்கிறார்
எனத்தெரியவில்லை.

எனது இன்னொரு நண்பர் திரு பார்த்தசாரதி
சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து
மருத்துவராகிவிட்டார்.அவர் இருப்பிடமும்
தெரியவில்லை.

என்னால் மறக்கமுடியாத நண்பர்
திரு சிகாமணி. அவர்தான் என்னோடு
மனோகரா நாடகத்தில் ‘வசந்தசேனையாக’
நடித்தவர். அவரும் நண்பர் திரு பழமலை போல்,
தமிழ் பேராசிரியராக பணியாற்றியதாக கேள்வி.

என்னோடு படித்த இன்னொரு நண்பர்
திரு இராஜசேகரன் ராஸ். அவரை எல்லா
ஆசிரியர்களுக்கும் பிடிக்கும். என் அண்ணனிடம்
டியூஷன் படித்தவர். அண்ணாமலை பல்கலை
கழகத்தில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம்
பெற்று தமிழ்நாடு வேளாண் தொழில்கள் கழகத்தில்
(Tamilnadu Agro Industries Corporation) வேலை
பார்த்தார் என்பது வரை தெரியும்.

இன்னொரு நண்பரான திரு C.சுப்பிரமணியன்
எனது உறவினரும் கூட. பத்தாம் வகுப்பு படிக்கும்போது
எங்கள் வீட்டில் தங்கியிருந்து படித்தார்.எங்களது
வகுப்பில் இன்னொரு C.சுப்பிரமணியன் இருந்ததால்
தனது ஊரின் பெயரின் முதலெழுத்தான R ஐ சேர்த்து
R.C. சுப்பிரமணியன் என மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்து ஆசிரியப்பயிற்சி பெற்று
ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்
சொந்த ஊரான இராஜேந்திரப்பட்டினத்தில்
வேளாண்மை செய்து வருகிறார்.

இன்னும் பல நண்பர்களை பற்றி எழுத
நினைத்தாலும், பதிவின் நீளம் கூடும் என்பதால்
பள்ளி நண்பர்களைப்பற்றிய நினைவுகளை
இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வியாழன், 7 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 4

அவர் படித்து சொன்ன பாடல்களின் படி,
திரு ஷெனாய் அவர்கள் ஒரு வாணிபம் செய்யும்
குடும்பத்தை சேர்ந்தவர்.ஆனால் அவர் இப்போது
இருப்பதோ நிதி சார்ந்த அரசுப்பணி.தற்சமயம்
பெற்றோர்கள் உயிருடன் இல்லை.துணைவியார்
திருமதி லலிதா.மனைவியின் உடல் நலம்
குன்றும்.ஆனால் கவலைப்படும்படியாக இருக்காது.

திரு ஷெனாயின் எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.
பதவி உயர்வு பெற்று மேன்மேலும் உயர வாய்ப்பு
உண்டு.70 வயதுக்கு மேல் ஓகோ என்று இருப்பார்.
திரும்பவும் குடும்பத்தொழிலான வாணிபத்தை
செய்வார். இரும்பு வியாபாரம் செய்வார்.
வெளி நாடு எல்லாம் சென்று வருவார்.
நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

இரண்டு பிள்ளைகளில் மூத்த பையன் சரியாக
படிக்காமல் நின்று விடுவார். சொன்ன பேச்சை
கேட்கமாட்டார். இளையவர் நன்றாக படிப்பவர்.
எனவே அவரைப்பற்றி கவலை வேண்டாம்.
மூத்தவர் எதிர்காலம் பற்றித்தான் கவலை
இருக்கும்.அதற்காக செய்யவேண்டிய சாந்திகளை
செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அந்த நோட்டில் உள்ள பாடல்களைப்படித்து
பொருள் சொன்னபோது எனது நண்பரின் முகம்
மலர்ந்தது உண்மை.

பாடல்கள் முடிந்தபின், அந்த சோதிடர் “என்ன
சார். திருப்திதானே.உங்கள் மூத்த மகனின்
நன்மைக்காக ஒரு சாந்தி செய்தால் எல்லாம்
நல்லபடியாக நடக்கும். என்ன சாந்தி
செய்யவேண்டும் என்று பார்க்க நீங்கள்
ரூபாய் 200 தரவேண்டும். என்ன பார்க்கலாமா?’
என்றார்.

திரு ஷெனாய் சம்மதம் சொல்லு முன்பே,
நான் அவரிடம் சைகை காட்டிவிட்டு,’வேண்டாங்க.
அப்புறம் பார்த்துக்கொள்ளுகிறோம்’
எனச்சொன்னேன். அவர் எவ்வளவோ சொல்லியும்
நான் வேண்டாமெனக்கூறி, திரு ஷெனாய்
அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே
வந்துவிட்டேன்.

நாங்கள் இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலிருந்து
சிதம்பரம் வரும் வரை எதுவும்
பேசிக்கொள்ளவில்லை. சிதம்பரம் வந்து கடலூர்
செல்லும் பேரூந்தில் ஏறி உட்கார்ந்ததும்
திரு ஷெனாய் என்னிடம், ’சபாபதி! அவர்
சொன்னது எல்லாமே சரியாய் இருந்தது.
பின் ஏன் சாந்தி பற்றி,நாடி பார்க்கவேண்டாமென்று
சொல்லிவிட்டீர்கள்?’ என்றார்.அவரது பேச்சில்,
நான் அவரை மேற்கொண்டு நாடி பார்க்க விடாது
குறித்த வருத்தமும் ஆதங்கமும் இருந்தது.

‘சார்.அவர் சொன்னது எல்லாம் சரியா?’என்றேன்.

ஆமாம். நடந்தது எல்லாம் சரியாகத்தானே
சொன்னார். என் மனைவியின் பெயரைக்கூட
சரியாகச்சொன்னார். மற்றும் என் பையன்கள்
பற்றியும் என் குடும்பத்தைப்பற்றியும் சொன்னது
எல்லாம் சரி.அவர் சொன்னபடி செய்யவேண்டிய
சாந்தி பற்றி நாடி பார்த்திருக்கலாமே?’ என்றார்.

நான் சொன்னேன்.‘அவர் எங்கு சார் சொன்னார்?
நீங்கள்தான் எல்லாவற்றையும்,கேட்டது,கேட்காதது
எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள்.உங்கள்
குடும்பத்தைப்பற்றி இதைவிட விவரமாக
சொல்லமுடியாது. அதை வைத்து பாட்டாக
எழுதி வந்து படித்துவிட்டார்.

முதலில் நாம் நுழையும்போது நம்மோடு பேச
வந்தவரை பேசவிடாமல் தடுத்ததுமே எனக்கு
சின்ன சந்தேகம். பின்பு நீங்கள் மட்டும் தான்
வரலாம் என்றதும் அது இன்னும் அதிகமாயிற்று.
உள்ளே சென்று அவர் கேட்ட கேள்விகள்,எனக்கு
அவை Leading Questions போல தெரிந்ததால்,
அவர் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக
கவனித்தேன். நீங்கள் அவருக்கு பதில் சொல்லும்
நிலையில் இருந்ததால் அவரது செய்கைகளை
கவனிக்கவில்லை.

அவர் உங்களிடம் கேட்ட கேள்விகள் அந்த
ஓலையில் இருப்பதாகத்தெரியவில்லை.
அதைப்பார்த்து படிப்பதுபோல் பாசாங்கு செய்து,
அவருக்குத்தேவையான பதில்களை
உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்.ஒன்று மட்டும்
நிச்சயம் அவரது பேச்சுத்திறமையால்
மாஜிக் நிபுணர்கள் போல் உங்கள் போன்றோரை,
தன்வயப்படுத்தி பதில்களைப் பெற்றுக்கொள்கிறார்
என்பதே.

வழக்கமாக மூன்றாவது நபரை அனுமதிப்பது
இல்லையாதலால், உங்களைப்போல் வருவோருக்கு
அவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க
நேரமிருக்காது.

ஒரு விஷயத்தை நாம் பாராட்ட வேண்டும்.
வரும் வாடிக்கையாளர்கள் சொல்லும் விவரங்களை
மறக்காமல் மனதில் இருத்தி, உள்ளே சென்றதும்
அவைகளை ஒன்று விடாமல் பாட்டாக
எழுதி வருகிறார்களே அதற்காக.

நான் நினைக்கிறேன் அவர்கள் மாதிரி பாடல்
வடிவம் ஒன்றை ஏற்கனவே வைத்திருக்கிறார்கள்.
சேகரித்த விவரங்களை ஆங்காங்கே நிரப்பி
பாடல்போல் ஆக்கி வந்து படிக்கிறார்கள்.

ஒன்று கவனித்து இருப்பீர்கள் அனைவரையும்
சாந்தி செய்ய சொன்னதையும்,அதற்கான
நாடியைப்பார்க்கலாமா எனக்கேட்டதையும்.
நீங்கள் சரி என்று சொல்லியிருந்தால்,முன்பே
என்ன சாந்தி, எவ்வாறு செய்யவேண்டும் என
எழுதியுள்ள ஓலையைப்படித்து உங்களிடமிருந்து
பணத்தைக்கறந்து இருப்பார்கள்.பின்பு
சாந்திக்கான செலவுக்கும் நீங்கள் பணம்
தரவேண்டியிருந்திருக்கும்.

இங்கே நாடி சோதிடத்திற்கு பணம் பறிப்பதை
விட சாந்தி செலவுக்கு அதிகம்
பிடுங்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.
அதனால் தான் நான் ஒன்றும் வேண்டாம்
எனக்கூறிவிட்டேன்.’

‘சபாபதி நீங்கள் சொன்னது சரி என்றாலும்
கூட, அவர் எவ்வாறு என் மனைவியின்
பெயரை சரியாக சொன்னார்? நான்தான்
அதை சொல்லவில்லையே.’ என்றார்.

‘சார். உங்கள் மனைவியின் பெயரில்
உள்ள எழுத்தைக்கேட்டு, உங்கள் பதில்
மூலமே அவர் அதை கண்டுபிடித்துவிட்டார்.
அப்படி கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால்
அதை சொல்லியே இருக்கமாட்டார்.

இன்னொன்றையும் கவனித்து இருப்பீர்கள்.
அவர் சொன்னது எல்லாம்
எதிர்காலத்தைப்பற்றியே. கடந்த காலத்தில்
நடந்தவைகளை எல்லாம் அவர்
சொல்லவில்லை. காரணம் நீங்கள் அதை
சொல்லவில்லை!’என்றேன்.

திரு ஷெனாய் அவர்கள் முகத்தில் சுரத்தே
இல்லை. ஏமாந்துவிட்டோமே என்ற நினத்தார்
போலும். அதற்கு பிறகு கடலூர் வரும்
வரையில் அவர் பேசவே இல்லை. கடலூர்
பேரூந்து நிலையத்தில் இறங்கி வருகிறேன்
எனச்சொல்லி சென்றுவிட்டார்.

நான் இதன் மூலம் சோதிடமே ஏமாற்று
எனச்சொல்லவிரும்பவில்லை.

எங்களது வேளாண் படிப்பில் சொல்வார்கள்.
Agriculture is an Art and Science என்று.
அதுபோல சோதிடமும் ஒரு அறிவியல் கலைதான்.
ஆனால் இப்போதோ நம்மிடையே போலிகள்
அதிகம் உள்ளதால் உண்மையாக சோதிடம்
பார்ப்பவர்களை நம்மால் கண்டறியமுடியவில்லை,
என நினைக்கிறேன்.

திரும்பவும் தலைப்புக் கேள்விக்கே வருகிறேன்.

நம்பலாமா நாடி சோதிடத்தை?

‘ஏமாறாதே,ஏமாறாதே, ஏமாற்றாதே,ஏமாற்றாதே,’
என்று அடிமைப்பெண் திரைப்படத்தில்
திரு TMS பாடும் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது
!

புதன், 6 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 3

சிறிது நேரம் கழித்து அவர் கையில் ஒரு பனை
ஓலை கட்டுடன் வந்தார். அது பழுப்பு நிறத்தில்
மிக பழைய ஓலைச்சுவடி போல் தோற்றமளித்தது.

“சார். உங்களுக்கான சுவடிபோல,இந்த உலகில்
பிறந்த பல்லாயிரக்கணக்கான பேருடைய சுவடிகள்
உள்ளே இருக்கின்றன.அவைகளிலிருந்து உங்களது
சுவடியை கண்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.
அந்த சுவடிகளிலிருந்து உங்களது சுவடியை
கண்டுபிடிக்க,நீங்கள் வைத்த கைரேகையைக்
கொண்டு உங்களைபற்றிய அடிப்படை
விவரங்களை கொண்ட சுவடிக்கட்டை
எடுத்து வந்திருக்கிறேன்.

இந்த சுவடி கட்டில் உள்ள விவரங்களை
கொண்டுதான் உங்களது சுவடியை
கண்டுபிடிக்கவேண்டும்.

இதுதான் நான் முன்பே சொன்ன Index
ரிஜிஸ்டர் போன்ற ஆதார சுவடி.இந்த சுவடியில்
நீங்கள் பிறந்த நாளன்று பிறந்த அனைவருடைய
முக்கிய விவரங்களும் இருக்கும்.இதிலிருந்து
உங்களுடைய விவரங்களை அறிய நான்
இதைப்பார்த்து உங்களிடம் கேள்விகள்
கேட்கும்போது, நீங்கள் உண்டு அல்லது இல்லை
என பதில் சொல்லவேண்டும்.
நீங்கள் சொல்லும் பதில் ஆமாம் என்று
இருந்தால் அந்த பக்கத்தை பார்த்து மேலே
செல்வேன். இல்லை என பதில் தந்தால் நான்
அடுத்த பக்கத்திற்கு செல்வேன்.

இந்த அந்த பதில் மூலம் நான் உங்களது
சுவடிக்கான அடிப்படை விவரத்தை என்னால்
பெறமுடியும். அந்த விவரத்துடன் உள்ளே
சென்று உங்களது சுவடியைக்கண்டுபிடித்து
எடுத்துவருவேன். நீங்கள் தயாரா?” என்றார்.

நாங்கள், “சரி.கேளுங்கள் என்றோம்” என்றோம்.

உடனே அவர் விநாயகப்பெருமான் மீது ஒரு
பாடலைப்பாடிவிட்டு அந்த அரத பழைய
ஓலைசுவடிக்கட்டை மிக மெதுவாக பிரித்தார்.

ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டு அதிபர்கள்
வரும்போது அவர்கள் பேசுவதை நமது
தலைவர்களிடம் மொழிபெயர்த்து சொல்லும்
துபாஷி எனப்படும் மொழிபெயர்ப்பாளர்கள் போல்,
நான் அந்த சோதிடர் தமிழில் கேட்கும்
கேள்விகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
திரு ஷெனாய் அவர்களிடம் சொல்லி,அவரது
பதிலை வாங்கி, திரும்பவும் அதை தமிழில்
மொழிபெயர்த்து கொடுத்தது எனக்கு ஒரு
புதிய அனுபவமாக இருந்தது.

அவர் கேட்ட கேள்விகளும், பதில்களும் கீழே.
(பதில் இல்லை என சொல்லும்போது அவர்
ஓலையின் அடுத்த பக்கத்தை புரட்டி கேட்டார்)


‘நீங்கள் பணி செய்து கொண்டு இருக்கிறீர்கள்?’
‘ஆமாம்’

‘தனியார் நிறுவனத்தில்?’
‘இல்லை.’

‘அரசுப்பணியில்?’
‘இல்லை. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில்
உள்ள நிறுவனத்தில்.’

‘நீங்கள் செய்யும் பணி கல்வி துறையிலா?’
‘இல்லை.’

‘மருத்துவத்துறையிலா?’
‘இல்லை.’

‘நிதித்துறையிலா?’
‘ஆமாம். வங்கியில்”

‘உங்களது பெற்றோர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?’
‘இல்லை.’

‘உங்கள் தந்தை விவசாயி?’
‘இல்லை.’

‘வாணிபம் செய்தவரா?’
‘ஆமாம்’

‘துணி வணிகமா?’
‘இல்லை. மளிகை வியாபாரம்.’

‘மொத்த வியாபாரம் (அ) சில்லறை வியாபாரம்?’
‘சில்லறை வியாபாரம்’

‘உங்களுக்கு திருமணமாகிவிட்டது?’
‘ஆமாம்’

‘உங்களது மனைவியின் பெயர்
ஐந்தெழுத்து கொண்டது?
‘இல்லை.’

‘நான்கெழுத்து?’
‘இல்லை.’

‘மூன்றெழுத்து?’
‘ஆமாம்’

‘முதல் எழுத்து வல்லினமா?’

(இந்த இடத்தில் மொழிபெயர்க்க
நான் சிரமப்பட்டேன். அதை எப்படி
சொல்வது யோசித்து கஷ்டப்பட்டு விளக்கினேன்.)
‘இல்லை.’

‘மெல்லினமா?’
‘இல்லை.’

‘இடையினமா?’
‘ஆமாம்.’

‘இடையினத்தில் எத்தனாவது எழுத்து?’
‘மூன்றாவது”

‘நெடில் (அ) குறில்?’
‘குறில்’

‘கடைசி எழுத்து எந்த இனம்?’
‘வல்லினம்”

‘எத்தனாவது எழுத்து?’

'நான்காவது எழுத்து'

‘நெடில் (அ) குறில்?’
‘நெடில்’

‘குழந்தைகள் மூன்று பேர்?’
‘இல்லை.’

‘இரண்டு பேர்?’
‘ஆமாம்’

‘ஒரு பெண் ஒரு ஆண்?’
‘இல்லை.’

‘இருவரும் பெண்?’
‘இல்லை.’

‘இருவரும் ஆண்?’
‘ஆமாம்’

இப்படியாக அவர் பல கேள்விகள் கேட்க,
நான் மொழி பெயர்க்க, நண்பர் பதிலை
சொல்ல, சுமார் அரை மணி நேரம் கழிந்தது.
பிறகு அவர் ‘சரி.பொறுங்கள்.நான் போய்
உங்களுடைய ஓலைச் சுவடியை எடுத்து
வருகிறேன்’எனக்கூறி உள்ளே சென்றார்.

(பதிவு நீள்வதன் காரணமாக அவர் கேட்ட
எல்லா கேள்வியையும் தரவில்லை)

சுமார் 15 நிமிடங்கள் கழித்து இன்னொரு
பழைய ஓலைச் சுவடி கட்டுடன் வந்தார்.

‘இதோ உங்களுடைய சுவடி. இதை நான்
படித்து,பின் எழுதித்தர நேரமாகும்.எனவே
இன்னும் சிறிது நேரம் பொறுத்தால் இதை
படிவெடுத்து கொண்டுவருகிறேன்’ என்றார்.
நாங்களும் சரி என்றோம்.

பின்பு அரை மணி கழித்து, நான்கு பக்கமும்
மஞ்சள் தடவிய ஒரு 40 பக்க நோட்
புத்தகத்துடன் வந்தார். அதில் எல்லாமும்
பாடல் வடிவிலேயே, வெண்பா நடையில்
கவிதைகளாய் இருந்தன. இலக்கண சுத்தமாக
இருந்ததா என தெரியவில்லை.

அவர் பக்கங்களை புரட்டி படிக்க (பாட)
ஆரம்பித்தார்.


தொடரும்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 2

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போனவர்களுக்கு தெரியும்
மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலை
ஊர்அருகில் வந்ததும் வளைந்து செல்லும் என்று.
நாங்கள் அந்த வளைவில் இறங்கி நாடி சோதிடர்
பற்றி விசாரிக்க எண்ணியபோது,எங்களுக்கு வேலை
வைக்காமல் ஒருவர் வந்து “என்ன சார், நாடி
சோதிடம் பார்க்கவேணுமா?” (எங்கள்
முகத்தைப்பார்த்தே தெரிந்து கொண்டார் போலும்!)
என்று கேட்டு கையைப்பிடித்து இழுக்காத குறையாக
மேல வீதியில் உள்ள ஒரு ‘பிரபல’ சோதிடர் வீட்டிற்கு
அழைத்து சென்றார்.

அந்த சோதிடருடைய இல்லத்தின் முன்,வருவோரும்
போவோருமாக கூட்டம் அதிகம் இருந்தது.
(அப்போதெல்லாம் அவர் ஒருவர் தான் நாடி சோதிடம்
பார்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.இப்போதோ அவரிடம்
‘வேலை’ பார்த்தோரும், இன்னும் பலரும் வைத்தீஸ்வரன்
கோவிலை சுற்றியும் மற்ற ஊர்களிலும் ஐயங்கார் பேக்கரி
மற்றும் மதுரை முனியாண்டி விலாஸ் போல கிளைகளை
திறந்துமக்களுக்கு‘சேவை’செய்து கொண்டு இருக்கிறார்கள்! )

நாங்கள் அங்கே சென்றபோது உள்ளே இருந்து வந்த ஒரு
வாடிக்கையாளர் எங்களைப்பார்த்து ஏதோ சொல்ல வந்தார்.

அதற்குள் எங்களை அழைத்து(இழுத்து) சென்றவர்,
அவரிடம் பேசவிடாமல் செய்து உள்ளே அமரச்
செய்துவிட்டார்.

சற்று நேரத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு,நெற்றியில்
விபூதி பட்டை சந்தன பொட்டுடன் ஒருவர் வந்தார்.
”எங்கிருந்து வருகிறீர்கள்” என்று எங்களிடம் கேட்டார்.
கடலூரிலிருந்து என்று சொல்லாமல் சென்னையிலிருந்து
என்று சொன்னேன்.

உடனே ‘யாருக்கு நாடி சோதிடம்பார்க்கவேண்டும்?’
என்றார். நான் திரு ஷெனாய்அவர்களைக்காட்டியதும்,
அவரிடம் ஒரு தாளில் கைரேகை வைக்க சொல்லி
அவருடைய பெயரையும், பிறந்த ஊரையும் மற்றும்
பிறந்த தேதியையும் கேட்டார்.

‘அது எதற்கு?’ என்று நான் கேட்டவுடன்,“சார்
எங்களிடம் உலகத்தில் பிறந்த அனைவருடைய
விவரங்களும் உள்ள பல்லாயிரக்கணக்கான
ஓலைகள்உள்ளன.இவர் பிறந்த தேதியில் அநேகம்
பேர்பிறந்திருக்கலாம் அதனால் அவருடைய விவரம்
உள்ள நாடியை(ஓலையை) கண்டறிந்து எடுக்க
இந்த விவரம் வேண்டும்’ என்றார்.

அவர் கேட்ட விவரத்தை கொடுத்து, திரு ஷெனாய்
அவர்கள் கைரேகையைப்பதித்ததும், ‘உங்களது
நாடியைப்பார்க்க மொத்தம் ரூபாய் 100 ஆகும்.
இப்போது முன் பணமாக ரூபாய் 60 கொடுங்கள்.
பாக்கியை பிறகு தரலாம். நாடி பார்த்து ஏதேனும்
சாந்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று
வந்தால் அதன் விவரம் அறிய அதற்கு தனியாக
பணம் தர வேண்டியிருக்கும்’ என்றார்.

சரி என சொல்லி அவர் கேட்ட பணத்தை கொடுத்ததும்
திரு ஷெனாய் அவர்களை ‘நீங்கள் மட்டும் உள்ளே
வாருங்கள்’ என்றார். உடனே நான் அவருக்கு தமிழ்
சரியாக பேச வராது. அதனால் நானும் கூட வருகிறேன்’
என்றேன். சற்றே தயக்கத்தோடு என்னையும் உள்ளே
செல்ல அனுமதித்து அந்த வீட்டிற்கு பின்னே
அழைத்து சென்றார்.

அப்படி செல்லும்போது, எனது தூரத்து உறவினர்
(அப்போது தஞ்சை மாவட்டத்தில் காவல் துறை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வாளாராக
இருந்தவர்)ஒருவர் எங்களைக்கடந்து
செல்வதைப்பார்த்தேன்.ஆனால் அவர்
என்னைப்பார்க்கவில்லை.

அவரைப்பார்த்ததும் எனக்கு சற்றே நம்பிக்கை வந்தது.
காரணம் ஒரு மாவட்ட காவல் துறை அலுவலரே அங்கு
வருகிறார் என்பதால்.

அந்த வீட்டிற்கு பின் உள்ள தோட்டத்தில், திறந்த வெளி
குடிசை போன்ற அமைப்பில் தரையில் சிமெண்ட்
போடப்பட்டு, சின்ன சின்ன வட்டமான இடத்தில்
நான்கைந்து அமரும் இடங்கள் இருந்தன. உட்காருவதற்கு
நாற்காலிகளும் இருந்தன. அவற்றில் ஒன்றைத்தவிர
மற்ற இடங்களில் எங்களைப்போன்று வந்தோர்
அமர்ந்திருக்க,அவர்களிடம் பனை ஓலை சுவடிகளுடன்
அந்த சோதிட நிலையத்தின் ஊழியர்களும்(சோதிடர்கள்)
அமர்ந்து, அதை படித்து காட்டிக்கொண்டிருந்தனர். எல்லா
இடங்களிலும் வாடிக்கையாளர் ஒருவர் மட்டுமே இருக்க,
விதிவிலக்காக நாங்கள் இருவர் சென்று,காலியாக இருந்த
குடிலில் அமர்ந்தோம்.

அப்போது நான் கேட்டேன்.‘சோதிட நிலையத்தின்
உரிமையாளரான தலைமை சோதிடர் வந்து நாடி
படிக்க மாட்டாரா என்று?’எங்களை அழைத்து சென்ற
அந்த‘குட்டி’ சோதிடர் நான் ஏதோ கேட்கக்கூடாத
கேள்வியைக்கேட்டதுபோல் என்னைப்பார்த்து,‘அய்யா
அவர்கள், எல்லோருக்கும் வரமாட்டார். முக்கிய
பிரமுகர்களாயிருந்தால்(V.I.Ps) மட்டும் அவரது
அறையில் நாடி பார்ப்பார். மற்றவர்களுக்கெல்லாம்
எங்களைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் தான்
நாடி பார்ப்போம்’ என்றார்.

நாங்கள் முக்கிய பிரமுகர்கள் இல்லை என்பதை
அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்!

பிறகு அவர் ‘சார் நீங்கள் தந்த விவரங்களை வைத்து
உள்ளே சென்று Index நாடி எடுத்து வருகிறேன்.
பொறுத்திருங்கள்’ என்றார்.

அது எதற்கு என்றதும், ‘என்னிடம் நீங்கள்
எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ என்றார். ‘வங்கியில்’
என்றதும், ‘உங்கள் வங்கியில் சேமிப்பு அல்லது
நடப்பு கணக்கு எண்ணை சொன்னதும், Index Register ல்
பார்த்து கணக்கை எடுப்பது இல்லையா? அதுபோல்தான்
இதுவும்’ என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

நாங்கள் அவரது வருகைக்காக காத்திருந்தோம்.


தொடரும்

திங்கள், 4 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 1

1987 ஆம் ஆண்டு. அப்போது நான் எங்கள் வங்கியின்
கடலூர் கிளையில் முது நிலை கிளை மேலாளராக
பணியாற்றி வந்தேன்.எல்லா வங்கிகளிலும் ஆண்டுக்கு
ஒருமுறை Internal Audit எனப்படும் ஆய்வு நடத்தப்படும்.

அவ்வாறு ஆய்வு செய்வதற்காக எங்களது
சென்னை வட்டார ஆய்வு அலுவலகத்திலிருந்து
இருவர் கொண்ட குழு வந்தது. அதன் தலைவராக
வந்த ஆய்வாளர் நான் எங்களது சென்னை
கோடம்பாக்கம் கிளையில் உதவி மேலாளராக
பணிபுரிந்தபோது எனக்கு சார்பு மேலாளராக
(Sub Manager) இருந்த திரு ஷெனாய் அவர்கள்.
(அவரது முழுப்பெயர் வேண்டாமென என
எண்ணுவதால் அதைக்குறிப்பிட விரும்பவில்லை)

ஆய்வுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நாட்கள்
நான்கு.புதன் கிழமை காலை வந்த அவர்கள்
சனிக்கிழமை மதியம் தங்களது ஆய்வை
முடித்துக்கொண்டார்கள். அன்று மாலை திரு ஷெனாய்
அவர்கள், “சபாபதி, இங்கிருந்து வைத்தீஸ்வரன்
கோவில் எவ்வளவு தூரம்?” என்றார். அவர் கோவிலுக்கு
போக கேட்கிறார் என எண்ணிக்கொண்டு,“சார்.
இங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் 76 கிலோ
மீட்டர்கள். கோவிலுக்கு போகவேண்டுமா? நான்
வேண்டுமானால் கூட வரட்டுமா?” என்றேன்.

உடனே அவர் “இல்லை. இல்லை. அங்கு நாடி சோதிடம்
பார்ப்பதாக அறிந்தேன். அங்கு போய் சோதிடம்
பார்ப்பதற்காக கேட்டேன். மேலும் நீங்கள் இல்லாமல்
போக விரும்பவில்லை. எனவே நீங்கள் அவசியம்
வரவேண்டும்”என்றார்.

அதற்கு காரணம் அவருக்கு தமிழில் சரியாக பேச வராது.
அவர் கேரளாவில் உள்ள காஞ்சாங்காடு என்ற
ஊரைச்சேர்ந்தவர். தாய் மொழியோ கொங்கணி.
பிறந்து வளர்ந்து படித்தது, கேரளாவில் என்பதால்
மலையாளம் அவருக்கு தெரியும். எனவே
வைத்தீஸ்வரன் கோவிலில் சோதிட நிலையத்தில்,
சோதிடம் பார்க்கும்போது தமிழில் உரையாட என்னை
துணைக்கு அழைத்தார்.

எனக்கும் நாடி சோதிடம் என்றால் என்ன என்று அறிய ஆசை.

(இந்த இடத்தில் நாடி சோதிடம் பற்றி. இந்த உலகத்தில்
பிறந்த பிறக்கப்போகின்ற அனைவருடைய
விவரங்களையும்,அவர்களுக்கு நடக்க இருப்பது
பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அகத்திய
முனிவரால் கணிக்கப்பட்டு பனை ஓலையில்
எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
அந்த ஓலைசுவடிகள் பின்பு தஞ்சை சரஸ்வதி
மஹால் நூல் நிலையத்திலிருந்தன என்றும்,அவைகள்
ஆங்கில அரசால் ஏலம் விட்டபோது, வைத்தீஸ்வரன்
கோவிலை சேர்ந்த ஒருவரால் அவைகள்
வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை
வாங்கியவரின் வழித்தோன்றல்கள் அந்த ஓலைச்
சுவடிகளைப் படித்துதான் வருபவர்களுக்கு சோதிடம்
சொல்கிறார்களாம்)

எனவே நானும் அவரிடம்,“சரி சார். நான் வருகிறேன்.
நாம் இங்கிருந்து நாளை (ஞாயிறு) காலை கிளம்பி
நேராக மயிலாடுதுறை செல்வோம். வைத்தீஸ்வரன்
கோவில் சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடையே
உள்ளதால், மயிலாடுதுறை போய் கோவிலுக்கு
போய் விட்டு திரும்பும்போது வைத்தீஸ்வரன் கோவில்
வந்து நீங்கள் சொல்லும் நாடி சோதிடம் பார்த்து
வரலாம்” என்றேன்.

மறுநாள் காலை 8 மணிக்கு கடலூரிலிருந்து
கிளம்பி 11 மணி வாக்கில் மயிலாடுதுறை
சென்றடைந்தோம். கோவிலுக்கு போய்விட்டு
பின் அங்கே கோவிலுக்கு அருகில் உள்ள எனது
மாமனார் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, மதியம் 1 மணிக்கு
கிளம்பி 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
வைத்தீஸ்வரன் கோவில் சென்று இறங்கினோம்

தொடரும்