சிறிது நேரம் கழித்து அவர் கையில் ஒரு பனை
ஓலை கட்டுடன் வந்தார். அது பழுப்பு நிறத்தில்
மிக பழைய ஓலைச்சுவடி போல் தோற்றமளித்தது.
“சார். உங்களுக்கான சுவடிபோல,இந்த உலகில்
பிறந்த பல்லாயிரக்கணக்கான பேருடைய சுவடிகள்
உள்ளே இருக்கின்றன.அவைகளிலிருந்து உங்களது
சுவடியை கண்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.
அந்த சுவடிகளிலிருந்து உங்களது சுவடியை
கண்டுபிடிக்க,நீங்கள் வைத்த கைரேகையைக்
கொண்டு உங்களைபற்றிய அடிப்படை
விவரங்களை கொண்ட சுவடிக்கட்டை
எடுத்து வந்திருக்கிறேன்.
இந்த சுவடி கட்டில் உள்ள விவரங்களை
கொண்டுதான் உங்களது சுவடியை
கண்டுபிடிக்கவேண்டும்.
இதுதான் நான் முன்பே சொன்ன Index
ரிஜிஸ்டர் போன்ற ஆதார சுவடி.இந்த சுவடியில்
நீங்கள் பிறந்த நாளன்று பிறந்த அனைவருடைய
முக்கிய விவரங்களும் இருக்கும்.இதிலிருந்து
உங்களுடைய விவரங்களை அறிய நான்
இதைப்பார்த்து உங்களிடம் கேள்விகள்
கேட்கும்போது, நீங்கள் உண்டு அல்லது இல்லை
என பதில் சொல்லவேண்டும்.
நீங்கள் சொல்லும் பதில் ஆமாம் என்று
இருந்தால் அந்த பக்கத்தை பார்த்து மேலே
செல்வேன். இல்லை என பதில் தந்தால் நான்
அடுத்த பக்கத்திற்கு செல்வேன்.
இந்த அந்த பதில் மூலம் நான் உங்களது
சுவடிக்கான அடிப்படை விவரத்தை என்னால்
பெறமுடியும். அந்த விவரத்துடன் உள்ளே
சென்று உங்களது சுவடியைக்கண்டுபிடித்து
எடுத்துவருவேன். நீங்கள் தயாரா?” என்றார்.
நாங்கள், “சரி.கேளுங்கள் என்றோம்” என்றோம்.
உடனே அவர் விநாயகப்பெருமான் மீது ஒரு
பாடலைப்பாடிவிட்டு அந்த அரத பழைய
ஓலைசுவடிக்கட்டை மிக மெதுவாக பிரித்தார்.
ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டு அதிபர்கள்
வரும்போது அவர்கள் பேசுவதை நமது
தலைவர்களிடம் மொழிபெயர்த்து சொல்லும்
துபாஷி எனப்படும் மொழிபெயர்ப்பாளர்கள் போல்,
நான் அந்த சோதிடர் தமிழில் கேட்கும்
கேள்விகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
திரு ஷெனாய் அவர்களிடம் சொல்லி,அவரது
பதிலை வாங்கி, திரும்பவும் அதை தமிழில்
மொழிபெயர்த்து கொடுத்தது எனக்கு ஒரு
புதிய அனுபவமாக இருந்தது.
அவர் கேட்ட கேள்விகளும், பதில்களும் கீழே.
(பதில் இல்லை என சொல்லும்போது அவர்
ஓலையின் அடுத்த பக்கத்தை புரட்டி கேட்டார்)
‘நீங்கள் பணி செய்து கொண்டு இருக்கிறீர்கள்?’
‘ஆமாம்’
‘தனியார் நிறுவனத்தில்?’
‘இல்லை.’
‘அரசுப்பணியில்?’
‘இல்லை. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில்
உள்ள நிறுவனத்தில்.’
‘நீங்கள் செய்யும் பணி கல்வி துறையிலா?’
‘இல்லை.’
‘மருத்துவத்துறையிலா?’
‘இல்லை.’
‘நிதித்துறையிலா?’
‘ஆமாம். வங்கியில்”
‘உங்களது பெற்றோர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?’
‘இல்லை.’
‘உங்கள் தந்தை விவசாயி?’
‘இல்லை.’
‘வாணிபம் செய்தவரா?’
‘ஆமாம்’
‘துணி வணிகமா?’
‘இல்லை. மளிகை வியாபாரம்.’
‘மொத்த வியாபாரம் (அ) சில்லறை வியாபாரம்?’
‘சில்லறை வியாபாரம்’
‘உங்களுக்கு திருமணமாகிவிட்டது?’
‘ஆமாம்’
‘உங்களது மனைவியின் பெயர்
ஐந்தெழுத்து கொண்டது?
‘இல்லை.’
‘நான்கெழுத்து?’
‘இல்லை.’
‘மூன்றெழுத்து?’
‘ஆமாம்’
‘முதல் எழுத்து வல்லினமா?’
(இந்த இடத்தில் மொழிபெயர்க்க
நான் சிரமப்பட்டேன். அதை எப்படி
சொல்வது யோசித்து கஷ்டப்பட்டு விளக்கினேன்.)
‘இல்லை.’
‘மெல்லினமா?’
‘இல்லை.’
‘இடையினமா?’
‘ஆமாம்.’
‘இடையினத்தில் எத்தனாவது எழுத்து?’
‘மூன்றாவது”
‘நெடில் (அ) குறில்?’
‘குறில்’
‘கடைசி எழுத்து எந்த இனம்?’
‘வல்லினம்”
‘எத்தனாவது எழுத்து?’
'நான்காவது எழுத்து'
‘நெடில் (அ) குறில்?’
‘நெடில்’
‘குழந்தைகள் மூன்று பேர்?’
‘இல்லை.’
‘இரண்டு பேர்?’
‘ஆமாம்’
‘ஒரு பெண் ஒரு ஆண்?’
‘இல்லை.’
‘இருவரும் பெண்?’
‘இல்லை.’
‘இருவரும் ஆண்?’
‘ஆமாம்’
இப்படியாக அவர் பல கேள்விகள் கேட்க,
நான் மொழி பெயர்க்க, நண்பர் பதிலை
சொல்ல, சுமார் அரை மணி நேரம் கழிந்தது.
பிறகு அவர் ‘சரி.பொறுங்கள்.நான் போய்
உங்களுடைய ஓலைச் சுவடியை எடுத்து
வருகிறேன்’எனக்கூறி உள்ளே சென்றார்.
(பதிவு நீள்வதன் காரணமாக அவர் கேட்ட
எல்லா கேள்வியையும் தரவில்லை)
சுமார் 15 நிமிடங்கள் கழித்து இன்னொரு
பழைய ஓலைச் சுவடி கட்டுடன் வந்தார்.
‘இதோ உங்களுடைய சுவடி. இதை நான்
படித்து,பின் எழுதித்தர நேரமாகும்.எனவே
இன்னும் சிறிது நேரம் பொறுத்தால் இதை
படிவெடுத்து கொண்டுவருகிறேன்’ என்றார்.
நாங்களும் சரி என்றோம்.
பின்பு அரை மணி கழித்து, நான்கு பக்கமும்
மஞ்சள் தடவிய ஒரு 40 பக்க நோட்
புத்தகத்துடன் வந்தார். அதில் எல்லாமும்
பாடல் வடிவிலேயே, வெண்பா நடையில்
கவிதைகளாய் இருந்தன. இலக்கண சுத்தமாக
இருந்ததா என தெரியவில்லை.
அவர் பக்கங்களை புரட்டி படிக்க (பாட)
ஆரம்பித்தார்.
தொடரும்
என்ன சார் முக்கியமான கட்டத்தில் தொடரும் என்று சொல்லி விடுகிறீர்கள். நாளை வரை காத்திருக்க வேண்டுமே!
பதிலளிநீக்குகாத்திருப்பதும் ஒரு சுகம் தானே. இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்கவும்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
பதிலளிநீக்குவருகைக்கும்,தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!.
பதிலளிநீக்குதொடர்ந்து அனைத்தும் படித்தேன். வைத்தீஸ்வரன் கோயிலில் இப்போது இது ஒரு வியாபாரம்.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர் முழுவதையும் படித்து கருத்து தந்தமைக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே!
நீக்கு