திங்கள், 30 மார்ச், 2009

நினைவோட்டம் 8

'நீறில்லா நெற்றிபாழ்' என்ற ஔவையாரின் கருத்தே ஐயாவுடையதும் என்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் திருநீறு பூசி வரவேண்டும் என்பது அவருடைய கட்டளை ஆக இருந்தது.

அப்போது ஊரில் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்ததும், வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடித்த ஒரு சிலர் கூட எதிர்க்காததாலும் அந்த கட்டளைக்கு எதிர்ப்பேதும் இல்லை. அப்படி வராத மாணவர்கள் நெற்றியில் ஐயாவின் உத்திரவுப்படி சட்டாம்பிள்ளை சாணியை பூசிவிடுவான். நல்ல வேளையாக எனக்கு அந்த 'அனுபவம்' ஏற்பட்டதே இல்லை!

அப்படி ஒரு தடவை திருநீறு பூசி வராத ஒரு மாணவனின் நெற்றியில் சாணியை சட்டாம்பிள்ளை பூசிவிட்டான். அந்த மாணவன் அழுதுகொண்டே போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட எங்கள் ஊரில் பெட்டி கடை நடத்தி வந்த அந்த பையனின் அப்பா சண்டைக்கே வந்துவிட்டார். காரணம் அவர் ஒரு இஸ்லாமியர். அவர்கள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் எனத்தெரியாததால் சட்டாம்பிள்ளை அவ்வாறு செய்துவிட்டான்.

அந்த வயதில் பிற மதங்களைப்பற்றியும் அவர்களின் பழக்க வழக்கங்கள் தெரியாததால் அந்த தவறைச்செய்துவிட்டான். உடனே ஐயா அவரிடம் மன்னிப்பு கேட்டதுமல்லாமல் சட்டாம்பிள்ளையை சரியாக 'கவனித்துவிட்டு' அவனை அந்த பொறுப்பிலிருந்தும் எடுத்துவிட்டார்.

பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் திருநீறோடு இருக்கவேண்டுமென்பது ஐயாவினுடைய கட்டளை. ஒரு நாள் ஐயா இரவில் ஊரை சுற்றி 'ரவுண்ட்' வரும்போது எங்கள் வீட்டில் படிக்கும் சத்தம் கேட்காததால் உடனே எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். நான் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எங்கள் அப்பாவிடம் 'எங்கே பையன்?' என விசாரித்துக்கொண்டிருந்தபோது அம்மா என்னிடம் 'ஐயா வந்திருக்கிறார், சீக்கிரம் சாப்பிட்டு போ' என்றார்கள்.

அப்போதுதான் எனக்கு திருநீறு பூசாமல் சாப்பிட உட்கார்ந்துவிட்டோமே என நினைத்ததும் பயம் வந்துவிட்டது. ஐயா வெறும் நெற்றியைப்பார்த்தால் நிச்சயம் அடிப்பார். ஐயா அடிப்பதை யாருமே தடுக்கமாட்டார்கள் என்பதால் அம்மாவிடம் 'அம்மா நான் சாப்பிட்டுமுடிப்பதற்குள் திருநீறு கொண்டுவாருங்கள்' என்றேன். திருநீறு வைத்திருக்கும் சம்புடவம் ஐயா உட்கார்ந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்ததால் அம்மா ஐயாவுக்கு தெரியாமல் மறைத்து எடுத்து வந்ததும், நான் சாப்பிட்ட உடன் நெற்றியில் பூசிக்கொண்டு வெளியில் வந்ததும் இன்னும் எனக்கு நினைவில் நிற்கிறது.

ஐயா வீட்டுக்கு வருகிறார் என்றால் எங்களுக்கு எப்போதுமே பயம்தான். ஏனெனில் வந்தால் சும்மா போகமாட்டார். ஏதாவது மனக்கணக்கு போடுவார். சரியான விடை சொல்லாவிட்டால் நிச்சயம் 'மண்டகப்படி' கிடைக்கும். அதனாலேயே ஐயா அன்று வந்ததும் என்ன கேட்பாரோ என பயந்துகொண்டே சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தேன்.அப்போது ஐயா என்னிடம் 'என்ன சாப்பிட்டே?' என்றார். நான் 'இட்லி ' என்றதும் உடனே ஐயா 'ஒரு கிழவி 25 இட்லிகளை ஒரு இட்லி காலணா வீதம் விற்றால் அவளுக்கு எவ்வளவு கிடைக்கும்?' என கணக்கு போட்டதும் நான் அவரைப்பார்த்த பயத்தில் தப்பு தப்பாக பதில் சொல்லி அப்பா அம்மா முன்னால் கிள்ளு வாங்கியதும் இதோ நேற்றுதான் நடந்தது போல் உள்ளது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

புதன், 25 மார்ச், 2009

குளத்துப்பறவைகள்

பணி மூப்பு எனபது பணியில் உள்ள அனைவருக்கும் வருவதே. ஆனால் சிலர் பணி மூப்பு காலம் நெருங்கும்போது ஒருவித சோகத்தோடு இருப்பார்கள்.
எனது பொது மேலாளர் சொல்லுவார் 'நாம் பணியில் சேரும்போதே எப்போது ஒய்வு பெறப்போகிறோம் என்பது தெரியும். அப்படி இருக்கையில் அதற்காக கவலைப்படுவானேன்?' என்று.

மத்திய, மாநில அரசுப்பணியில் உள்ள உயர் அதிகாரிகள் பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றதும் அவர்களால் யதார்த்த வாழ்க்கைக்கு வர பல நாட்கள் ஏன் பல மாதங்கள் கூட ஆகலாம். பணியிலே இருக்கும்போது கார் கதவைத்திறந்துவிட ஒருவர், கோப்புகளை தூக்கிவர ஒருவர், 
அறைக் கதவைத்திறந்துவிட ஒருவர் என அநேகம் பேர் இருப்பர். ஆனால் ஓய்வு பெற்ற மறுநாள் அவரை பார்க்ககூட வீட்டிற்கு ஒருவரும் வர மாட்டார்கள்.

அதேபோல பணமும் வசதியும் படைத்த பலர் ஒரு காலத்தில் அவைகளை இழந்து நிர்கதியாய் நிற்க வேண்டிய நிலை வரலாம்.
இதைத்தான் 'வெற்றிவேற்கை'யில் அதிவீரராமபாண்டியர் கூறுவார்.

'குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் நண்ணுவர்'


இந்த 'அதிர்ச்சி'யை தாங்கமுடியாத பணி மூப்பு பெற்ற அலுவலர்களில் பல உடல் நிலை சரி இல்லாமல் போவதும் மிக விரைவில் இவ்வுலகை விட்டு போவதும் நாம் பார்க்கின்ற ஒன்றுதான்.

மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்கும் கூட பணி மூப்பு என்பதே இல்லை. மற்ற பணியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட வயதில் ஒய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. இதை மனதளவில் அறிந்துகொண்டு அதை எதிர் நோக்குபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ஆனால் என்னைப்போன்று வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த கவலை இல்லை. ஏனெனில் வங்கியில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கு கூட இந்த 'வசதிகள்' கிடையாது. எனவே பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களது வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பணி மூப்பு எங்களில் அநேகம் பேரை பாதித்ததே இல்லை.

ஆனாலும் நாங்களும் ஒரு வித 'அதிர்ச்சியை'எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணியில் இருக்கும்போது நம்மை சுற்றி வந்த நண்பர்கள் நாம் ஒய்வு பெற்றதும் திடீரென காணாமல் போவதுண்டு. காரணம் நம்மால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதுதான்.

எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டது. பணியில் இருக்கும்போது இரவு பதினோரு மணிக்கு கூட என்னைக்கூப்பிட்டு அவர்களது மாற்றல் பற்றியும், அவர்களது பதவி உயர்வு பற்றியும், அவர்களுக்கு தரப்பட்ட Charge Sheet பற்றியும் மணிக்கணக்கில் பேசியவர்கள் உண்டு. விடுப்புக்காக சென்னை வந்திருந்த போது எனது சொந்த வேலையைக்கூட செய்யவிடாமல் தொந்தரவு செய்தவர்களும் உண்டு. ஆனால் ஒய்வு பெற்று வந்தவுடன் அவர்கள் நான் இருப்பதை மறந்தே போனார்கள்.

இப்படிப்பட்டவர்களைப்பற்றி ஔவை பாட்டி சொல்லும்போது, குளத்திலே நீர் இருக்கும்போது உள்ள பறவைகள் நீர் வற்றியதும் அந்த குளத்தைவிட்டு செல்வதை போன்றவர்கள உண்மையான நண்பர்கள் அல்லர். ஆனால் அந்த குளத்தில் நீர் உள்ள போதும், இல்லாத போதும் கூடவே இருக்கின்ற அல்லி, தாமரை போன்றவர்களே உண்மையான நண்பர்கள் என்கிறார்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

எனக்கு இந்த 'பறவைகளை' பற்றி முன்பே அறிந்திருந்ததால் நான் வருத்தப்படவோ கவலைப்படவோ இல்லை. ஆனாலும் கூட அல்லி, தாமரை போல நண்பர்கள் இன்னும் எனக்கு உண்டு எனபதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

சனி, 21 மார்ச், 2009

யாக்கை நிலையாமை

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்றார் கண்ணதாசன்.

அவருக்கு வேண்டுமானால் 'மரணமில்லாமல்' இருக்கலாம்.
ஆனால் நம்மைப்போன்றோர்க்கு ?

பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டும் என்பது இயற்கை.
இதையேதான் கவியரசர் இன்னொரு பாடலில் சொல்லுவார்.

'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது' என்று

நம்மில் பலர் தாங்கள் நிரந்தரமானவர்கள் என எண்ணிக்கொண்டு அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை. இவர்களை சுற்றி இருக்கின்ற துதிபாடிகள் அள்ளி வீசும் புகழ்ச்சியிலேயே மிதந்துகொண்டு இருக்கும் இவர்கள் ஒரு நாள் இவ்வுலைகைவிட்டு மறைய நேரிடும் என்பதும் அப்புறம் இவர்களை யார் நினைத்து பார்ப்பார்கள் என்பதையும் அறிந்தால் இவர்கள் நிச்சயம் அடக்கியே வாசிப்பார்கள்.

மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் மதிப்பு. இறந்த மறு வினாடியே அவன் பிணம் தான். பேச்சு வழக்கில் கூட 'பிணத்தை எப்போது எடுக்கிறார்கள்? என்பார்களே தவிர அவனது பெயரைச்சொல்லி எப்போது எடுப்பார்கள் எனக்கேட்கமாட்டார்கள். எல்லா 'காரியத்தையும்' முடித்துவிட்டு அவனை ஒரேயடியாக மறப்பது தான் உலக வழக்கு.(சில விதி விலக்கு இருக்கலாம்)

இதைப்பற்றி திருமூலர் திருமந்திரந்திலே சொல்லுவார்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

மனிதன் இறந்தபிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டு, பின்பு அவனுக்கு பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றி மறந்துபோகிறார்களாம்.

இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!

வியாழன், 19 மார்ச், 2009

நினைவோட்டம் 7

ஐயா பிள்ளைகளுக்கு சிம்மசொப்பனம் போல் தோன்றினாலும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். யார் யார் வீட்டில் குழந்தைகள் இருந்தனவோ அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்வார்.

பெண்களுக்கு கல்வி,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என பேசப்படுவதற்கு முன்பே அதாவது ஐம்பதுகளில் அதை தன்னால் முடிந்த அளவு செய்தார் என்பதை இப்போது நினைத்தாலும் அவருடைய சமுதாய நோக்கு எனக்கு சற்று ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

பள்ளியில் படிக்க மாதம் கட்டணம் எட்டணா (ஐம்பது பைசா) தான் வசூலித்தார். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண் குழந்தைகளுக்கும் தாழ்த்தபட்டோரின் குழந்தைகளுக்கும் கட்டணம் வாங்காமலே பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பது பெருமைப்படவேண்டிய செய்தி.

தினந்தோறும் அரசர்கள் நகர் வலம் வருவதுபோல இரவில் தெரு வலம் வருவார். யார் வீட்டில் பிள்ளைகள் படிக்கும் சத்தம் கேட்கவில்லையோ உடனே அந்த வீட்டுக்குள் நுழைந்துவிடுவார். பாடம் படிக்காத மாணவர்களை அவர்கள் பெற்றோர் முன்பே நன்றாக 'கவனித்து' விடுவார். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்குத்தானே செய்கிறார் என்பதால் அவர் அடிப்பதை தடுக்க மாட்டார்கள்.எனவே அவருக்கு பயந்துகொண்டு நாங்கள் சத்தம் போட்டு சிம்னி விளக்கு முன்னால் படித்துக்கொண்டு இருப்போம்.(அப்போது மின் இணைப்பு வராத காலம்)

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை ஆசிரியர்கள் தற்போது இவ்வாறு பள்ளி நேரம் முடிந்த பின்னும் மாணவர்கள் பற்றி அக்கறை எடுத்துகொள்கிறார்கள்? (பள்ளி நேரத்திலேயே அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தாலே அதிகம்!)

ஒரு தடவை ஐயா விருத்தாசலம் சென்றிருந்த நேரம். இரவு நாங்கள் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த போது எங்களது எதிர் வீட்டில் இருந்த கிளிமங்கலத்து மாமா என அழைக்கப்பட்டவர், 'டேய் பசங்களா! சாமிநாத வாத்தியார் விருத்தாச்சலத்திலிருந்து வரும்போது ஆற்றுக்கிட்டே அரணை கடிச்சு செத்துட்டார் டோய்" என்றார். உடனே நாங்கள் எல்லோரும் சந்தோஷத்தில் 'ஒ' என்றதும் பக்கத்தில் யாரோ கனைக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தால் ஐயா நின்றிருந்தார். அவ்வளவுதான். எங்களது சந்தோஷம் மறைந்து சப்த நாடியும் ஒடுங்கி வீட்டுக்குள் மறைந்துவிட்டோம். ஐயா வருவது தெரிந்தே அந்த மாமா அவ்வாறு செய்தார் என்பது பின்னால் தெரிந்தது.

எதற்கு சொல்கிறேன் என்றால் ஐயா நமக்கு நல்லதிற்குத்தானே செய்கிறார் என அறியாத காலம் அது. அவர் இறந்துவிட்டார் எனக்கேள்விப்பட்டதும் விடுதலை கிடைத்ததாக நினைத்து சந்தோஷப்பட்டோம்.

ஆனால் பின்னாளில் ஐந்தாவது முடித்து அரியலூரில் ஆறாவது (முதல் பாரம்) படித்துக்கொண்டிருந்தபோது உண்மையிலே ஐயா இறந்ததை கேள்விப்பட்டதும் என்னை அறியாமலே கண்ணில் நீர் வந்தது என்பதும் சொந்த உறவினர் மறைந்ததுபோல் எண்ணி அழுதேன் என்பதும் நிஜம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

ஞாயிறு, 15 மார்ச், 2009

கம்பசித்திரம்

சிலசமயம் ஒரு கஷ்டமான வேலையைப்பற்றி பேசும்போது, அது என்ன கம்பசித்திரமா என சொல்வது வழக்கம்.

ஆனால் கவிச்சக்ரவர்த்தி கம்பன் ஒரு கவிஞன் என்பது தான் தெரியும். அவன் கவிதை எழுதியதோடு சித்திரமும் வரைந்தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதபோது ஏன் கம்ப சித்திரம் என சொல்கிறோம் என்பது நம்மில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம்.

இரவிவர்மா போன்ற கைதேர்ந்த ஓவியர்கள் வரைந்த சித்திரங்களில் அவர்கள் உருவாக்கிய காட்சிகளை அல்லது உருவங்களை பார்க்கும்போது நாமே நேரில் அவைகளை/அவர்களை பார்ப்பது போல் உணரமுடியும். அதுபோல கம்பனோ தூரிகை உபயோகிக்காமலேயே கவிதையில் சித்திரம் தீட்டியுள்ளான் என்பதை அவன் கவிதையை படித்தமாத்திரத்திலேயே அறியமுடியும்.

கம்ப ராமாயணத்தை படிக்கும்போது கம்பனுடைய கற்பனைத்திறனும் சொற் திறனும் அவன் குறிப்பிடுகின்ற காட்சியை நம்முன் நேரில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது அனுபவிக்கவேண்டிய உண்மை. அனுமான் இலங்கைக்கு செல்ல கடலைத்தாண்டுகிறான். அதைப்பற்றி சுந்தர காண்டத்தில், கடல் தாவும் படலத்தில்


வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை

தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்

கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்

மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன்.


என்கிறான் கம்பன்.

அதாவது அனுமான் தன் வாலை உயரே தூக்கி, வலிமையான கால்களை மடக்கி, மார்பைக் குறுக்கி, பெருமை மிகு தோள்கள் பூரித்துப் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி,காற்றின் விரைவைக் கொண்ட கைகளை முன்னே நீட்டி, தலை பிரம்மலோகத்தை அளாவ, மற்றவர் கண் காணமுடியாதவாறு மிகுந்த உயரத்தில் வேகத்தோடு தாவினானாம்.

இந்த பாடலை படிக்கும்போது, நம் கண் முன்னே விரிந்து படர்ந்த கடலும், அதன் மேலே அனுமான் கால் மடக்கி கைநீட்டி பறப்பதும் முப்பரிமாண காட்சியாக தெரிவதை நிச்சயம் நம்மால் உணரமுடியும்.

உண்மையில் சித்திரம் வரைவதே கடினம். அப்படி வரைந்தாலும், நம்மில் சிலர் வரைந்த சித்திரங்களின் கீழே அவை என்ன,என்று எழுதினால்தான் நமக்கு தெரியும். இல்லாவிட்டால் அவை தெனாலிராமன் சுவற்றில் குதிரை வரைந்த கதையாகிவிடும். கவிதையின் மூலம், நாமே நேரில் பார்ப்பது போன்ற காட்சிகளை உருவாக்குவது என்பது கடினமான காரியம். அதை கம்பன் செய்திருப்பதால்தான் அதை கம்பசித்திரம் என்கிறோம்!

புதன், 11 மார்ச், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 3

மரங்கள்!
மரங்களைப்பார்க்கையில் நமக்கு அவைகள் நிழல் தருவதும் மழை பெற உதவுவதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் மரங்களைப்பற்றி இயற்கை ஆர்வலர்களிடம் கேட்டால் அவை எவ்வாறு காற்றில் மாசு படா வண்ணம் எவ்வாறு நம்மை காப்பாற்றுகிறது என்று விபரமாக சொல்வார்கள்.
ஒரு தாவர இயல் நிபுணரிடம் கேட்டால் அவை எந்தெந்த குடும்பத்தைச்செர்ந்தவை என்றும் அவைகளின் தாவர இயல் சிறப்பு பற்றியும் விளக்குவார்கள்.
ஒரு விவசாய விஞ்ஞானியிடமோ அல்லது ஒரு வன இயல் நிபுணரிடமோ கேட்டால் அவைகளை எவ்வாறு வளர்ப்பது என்றும் நல்ல மரங்களை எவ்வாறு கண்டறிவது என்றும் சொல்வார்கள்.
ஒரு மனித வள மேம்பாட்டு நிபுணரிடம் கேட்டால் மரங்கள் மூலம் தலைமைப்பண்பு பற்றி விளக்குவார்கள்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பார்வையில் மரங்களைப்பற்றி பேசக்கூடும்.
ஆனால் நம் ஔவை பாட்டிக்கோ நல்ல மரங்கள் என்றால் என்ன தெரியுமா? கொப்பும் கிளையுமாய் காட்டிலே வளர்ந்து நிற்பவை நல்ல மரங்கள் அல்லவாம். படித்தவர்கள் நிறைந்த சபையில் படிக்க தெரியாமல் நிற்கிறவனே நல்ல மரம் என்று படிக்காதவர்களை,


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன்மரம்


என சாடுகிறாள்.பாட்டியின் பாடலில் கிண்டலை விட ஆதங்கமே உள்ளது என்பதுதான் உண்மை.

பாட்டியின் சாடலை அங்கதம் எனவும் சொல்லலாம்.