திங்கள், 30 மார்ச், 2009

நினைவோட்டம் 8

'நீறில்லா நெற்றிபாழ்' என்ற ஔவையாரின் கருத்தே ஐயாவுடையதும் என்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் திருநீறு பூசி வரவேண்டும் என்பது அவருடைய கட்டளை ஆக இருந்தது.

அப்போது ஊரில் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்ததும், வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடித்த ஒரு சிலர் கூட எதிர்க்காததாலும் அந்த கட்டளைக்கு எதிர்ப்பேதும் இல்லை. அப்படி வராத மாணவர்கள் நெற்றியில் ஐயாவின் உத்திரவுப்படி சட்டாம்பிள்ளை சாணியை பூசிவிடுவான். நல்ல வேளையாக எனக்கு அந்த 'அனுபவம்' ஏற்பட்டதே இல்லை!

அப்படி ஒரு தடவை திருநீறு பூசி வராத ஒரு மாணவனின் நெற்றியில் சாணியை சட்டாம்பிள்ளை பூசிவிட்டான். அந்த மாணவன் அழுதுகொண்டே போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட எங்கள் ஊரில் பெட்டி கடை நடத்தி வந்த அந்த பையனின் அப்பா சண்டைக்கே வந்துவிட்டார். காரணம் அவர் ஒரு இஸ்லாமியர். அவர்கள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் எனத்தெரியாததால் சட்டாம்பிள்ளை அவ்வாறு செய்துவிட்டான்.

அந்த வயதில் பிற மதங்களைப்பற்றியும் அவர்களின் பழக்க வழக்கங்கள் தெரியாததால் அந்த தவறைச்செய்துவிட்டான். உடனே ஐயா அவரிடம் மன்னிப்பு கேட்டதுமல்லாமல் சட்டாம்பிள்ளையை சரியாக 'கவனித்துவிட்டு' அவனை அந்த பொறுப்பிலிருந்தும் எடுத்துவிட்டார்.

பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் திருநீறோடு இருக்கவேண்டுமென்பது ஐயாவினுடைய கட்டளை. ஒரு நாள் ஐயா இரவில் ஊரை சுற்றி 'ரவுண்ட்' வரும்போது எங்கள் வீட்டில் படிக்கும் சத்தம் கேட்காததால் உடனே எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். நான் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எங்கள் அப்பாவிடம் 'எங்கே பையன்?' என விசாரித்துக்கொண்டிருந்தபோது அம்மா என்னிடம் 'ஐயா வந்திருக்கிறார், சீக்கிரம் சாப்பிட்டு போ' என்றார்கள்.

அப்போதுதான் எனக்கு திருநீறு பூசாமல் சாப்பிட உட்கார்ந்துவிட்டோமே என நினைத்ததும் பயம் வந்துவிட்டது. ஐயா வெறும் நெற்றியைப்பார்த்தால் நிச்சயம் அடிப்பார். ஐயா அடிப்பதை யாருமே தடுக்கமாட்டார்கள் என்பதால் அம்மாவிடம் 'அம்மா நான் சாப்பிட்டுமுடிப்பதற்குள் திருநீறு கொண்டுவாருங்கள்' என்றேன். திருநீறு வைத்திருக்கும் சம்புடவம் ஐயா உட்கார்ந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்ததால் அம்மா ஐயாவுக்கு தெரியாமல் மறைத்து எடுத்து வந்ததும், நான் சாப்பிட்ட உடன் நெற்றியில் பூசிக்கொண்டு வெளியில் வந்ததும் இன்னும் எனக்கு நினைவில் நிற்கிறது.

ஐயா வீட்டுக்கு வருகிறார் என்றால் எங்களுக்கு எப்போதுமே பயம்தான். ஏனெனில் வந்தால் சும்மா போகமாட்டார். ஏதாவது மனக்கணக்கு போடுவார். சரியான விடை சொல்லாவிட்டால் நிச்சயம் 'மண்டகப்படி' கிடைக்கும். அதனாலேயே ஐயா அன்று வந்ததும் என்ன கேட்பாரோ என பயந்துகொண்டே சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தேன்.அப்போது ஐயா என்னிடம் 'என்ன சாப்பிட்டே?' என்றார். நான் 'இட்லி ' என்றதும் உடனே ஐயா 'ஒரு கிழவி 25 இட்லிகளை ஒரு இட்லி காலணா வீதம் விற்றால் அவளுக்கு எவ்வளவு கிடைக்கும்?' என கணக்கு போட்டதும் நான் அவரைப்பார்த்த பயத்தில் தப்பு தப்பாக பதில் சொல்லி அப்பா அம்மா முன்னால் கிள்ளு வாங்கியதும் இதோ நேற்றுதான் நடந்தது போல் உள்ளது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது. மற்றும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ப்ளாகரில் ஃபாலோவர்ஸ் என்பதனை Enable செய்யுங்கள் இதன் மூலம் உங்களை நிறைய பின்தொடர்வார்கள்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வடிவேலன் அவர்களே! தாங்கள் கூறியபடி ஃபாலோவர்ஸ் என்பதனை Enable செய்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.

  சட்டாம் பிள்ளை..

  வகுப்புத்தலைவன்


  இதைத்தான் எதிர்பார்த்துக் கேட்டேன்.

  அறிந்தேன் .

  மிக்க நன்றி
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு