'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றாலும் கூட 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' என்கிறது குறள்.
அதனால்தான் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றனர் நம்முடைய முன்னோர்கள்.
'பணம் பந்தியிலே' என்றும், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்றும் 'பணம் பத்தும் செய்யும்' என்றும் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்றும் நமது பழமொழிகளும் வழக்கு சொற்களும் பணத்தின் அருமைப்பற்றி நமக்கு தெரிவிக்கின்றன.
வறுமையில் வாழ்வோர் வெளியில் நடமாடக்கூட தயங்குவர் என்பதை 'தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்;' என்கிறது விவேக சிந்தாமணி.
கண்ணதாசன் கூட ஒரு பாட்டிலே சொல்லுவார்,
'கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி' என்று.
சொந்த பந்தங்கள் கூட பணம் உள்ளவரைத்தான் மதிக்கும் என்பதால் 'கொண்டு வந்தால் சகோதரி' என்றும் சொல்வதுண்டு. இதற்கு விதிவிலக்காக 'கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்' என்போரும் உண்டு.
ஆனால் ஔவையோ தாய்கூட பணம் இல்லாவிட்டால் மதிக்கமாட்டாள் என்கிறார். கையிலே பணம் இருந்தால் படிக்காதவனாக இருந்தாலும் கூட எல்லோரும் அவனை வரவேற்பார்களாம். பணம் இல்லாதவனை கட்டிய மனைவியும் விரும்பமாட்டாள். பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் விரும்பமாட்டாளாம்!.
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளுமவேண்டாள் (;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா (து) அவன்வாயிற் சொல்
எனவே 'ஊரோடு ஒத்துவாழ்' என்ற பழமொழிக்கேற்ப நாமும் பணம் சம்பாதிப்போம் நாணயமான வழியில்!
பணத்தின் பெருமை பற்றிய கருத்துக்கள் அருமை . எவ்வாறேனும் செல்வம் ஈர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கடைசி வரி சாட்டை அடி .வாசுதேவன்
பதிலளிநீக்குவருகைக்கும் தங்களது ஆதரவான கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குகைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி என்பதும்,
வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ மிகவெளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி உழலுவதேன்?
என்பதும் இதனோடு ஒருங்கு வைத்தெண்ணத்தக்கது.
தொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நான் தந்திருக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் இணைப் பாடலை தாங்கள் தந்து என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டீர்கள்.
நீக்குஆனாலும் ‘பொருளில்லாருக்கு இவ்வுலக மில்லாகி யாங்கு’ என்று அய்யன் திருவள்ளுவரே கூறிவிட்டாரே. என் செய்ய? கல்வியோடு பொருளையும் ஈட்டவேண்டியிருக்கிறதே!