வெள்ளி, 29 ஜூலை, 2011

விதையைத் தின்னும் விவசாயிகள்!

இன்றைய ‘ஹிந்து’ குழுமத்தின் வணிக நாளேடான
‘பிசினஸ் லைன்’ வெளியிட்டுள்ள ஒரு செய்தியே
என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

Ford India குஜராத் மாநிலத்தில் 4000 கோடி
ரூபாய் அளவில் முதலீடு செய்ய இருக்கிறதாம்.
அங்கே Sanand என்ற இடத்தில் (‘டாடா’ வின்
நானோ தொழிற்சாலை உள்ள இடம்தான்)
460 ஏக்கர்இடத்தில் ஒரு புதிய தொழிற்சாலை
கட்ட இருப்பதாகவும்,அதில் வருடத்திற்கு
2.4 இலட்சம் கார்களும், 2.7 இலட்சம்
என்ஜின்களும் தயாரிக்கப்படுமாம்.இதனால்
சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு
கிட்டுமாம்.

தொழிற்சாலை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்
என்றும், 2014 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கும்
என்றும் அந்த செய்தி கூறுகிறது.

இதில் என்ன இருக்கிறது என நினைக்கலாம். ஆனால்
உண்மையில் தமிழகம் தொழில் முதலீட்டார்களின்
பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறதோ என்ற
ஐயம்தான் எழுகிறது.

Ford India வின் சென்னை தொழிற்சாலையில்
விரிவாக்கம் செய்தாலும், புதிய தொழிற் கூடத்தை
கட்ட ஏன் குஜராத் செல்கிறார்கள் என்பதே கேள்வி.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் நிறுவனம்
கூட அவர்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட ‘அனுபவம்’
காரணமாக தங்களது புதிய முதலீடுகளை
குஜராத் மாநிலத்தில் செய்யலாமா என
யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ பியூஜியாட்
சிட்ரியான் நிறுவனம், சென்னையை அடுத்த
ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில்
கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
இதன் வாயிலாக, 5,000 பேருக்கு நேரடியாகவும்,
15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை
வாய்ப்பு உருவாகும் என்றும் முதலில் வந்த
செய்தியை கூட அந்த நிறுவனம் பின்பு மறுத்து
இன்னும் இடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை
என்று கூறியுள்ளது.

பின் குஜராத் சென்று அந்த மாநில முதல்வரையும்
அலுவலர்களையும் தொழிற்சாலை அமைப்பது
பற்றி பேச்சு நடத்தியுள்ளது என செய்திகள்
சொல்கின்றன.

உண்மையில் சுதந்திரம் அடைந்தபின் குஜராத்,
மகாராஷ்டிரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில்
முதலீடு செய்யப்பட்டது போன்று தமிழ் நாட்டில்
முதலீடும் ஏதும் பெரிதாக செய்யப்படவில்லை.
அதனால் பொதுத்துறை மற்றும் தனியார் துறையின்
கீழ் அந்த மாநிலங்களில் உள்ளது போல் பெரிய
தொழிற்சாலைகள் நமக்கு இல்லாமல் இருந்தன.

அதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை தேடி
வட மாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது.
நல்ல வேளையாக கடந்த 20 ஆண்டுகளாக
வெளிநாட்டு மற்றும் இந்திய தொழில்
முதலீட்டார்களின் கவனம் நம் பக்கம்
திரும்பியதால் அநேக தொழிற்சாலைகள் இங்கே
நிறுவப்பட்டு, நமது இளைஞர்கள் வேலைக்காக
வெளி மாநிலம் செல்லாமல் இங்கேயே பணி
செய்யும் நிலை ஏற்பட்டது. மாநில அரசுக்கும்
வரிகள் மூலம் வருவாய் கிட்டியது.

ஆனால் சமீபகாலமாக இங்கு ஏற்பட்டிருக்கின்ற
‘சூழ்நிலை’ முதலீட்டார்களை அச்சத்தில்
ஆழ்த்தியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத
மறைக்கமுடியாத உண்மை.

ஒருவேளை நாமும், கேரளா மற்றும்
மேற்கு வங்காளம் போல் புறக்கணிக்கப்
படுவோமோ என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கிறது
என்பது நிஜம்.

2002-2003 ல் BMW குழுமம் கேரளாவில், கொச்சியில்
தான் முதலில் தனது கார் தொழிற்சாலையை
தொடங்க நினைத்தது. அதற்கான பேச்சு
வார்த்தைகள் முடிந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையொப்பமிட ஜெர்மனியிலிருந்து அந்த
குழுமத்தின் உயர் அதிகாரிகள் வந்தபோது
அவர்களால் கொச்சி விமான நிலையத்தை
விட்டு வெளிவரமுடியவில்லை.

காரணம் வழக்கம்போல் கேரளாவில் நடக்கும்
பணிநிறுத்தம் தான்.( இது பற்றி பின் விவரமாக
எழுதுவேன்) ஒரு நாள் முழுவதும் விமான
நிலையத்தை விட்டு வெளியே வரமுடியாமல்
இருந்த அவர்கள், அங்கே உற்பத்தி தொடங்க
இருந்த தங்களது முடிவை மாற்றிக்கொண்டு
சென்னைக்கு வந்து தொழிற்சாலையை
ஆரம்பித்தார்கள்.

கேரளாவை தலைமை இடமாக கொண்ட
V Guard நிறுவனம் கூட தனது தொழிற்சாலை
விரிவாக்கத்தை கோவை மாவட்டத்திற்கு
மாற்றிக்கொண்டதும் இந்த பணி முடக்க
பிரச்சினைகள் தான்.

தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள்
இடையே இருந்த இணக்கமான சூழ்நிலைதான்
மேற்கூறிய நிகழ்வுகள் நடக்க காரணம். ஆனால்
அவை கடந்த கால வரலாறு ஆகிவிடுமோ என்ற
பயம் தான் எனக்கு.

நான் தொழிலாளர்கள், தங்கள் உரிமைக்கு குரல்
கொடுக்கக்கூடாது என சொல்லவில்லை. ஆனால்
‘சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.’

தொழிற்சாலைகள் இருந்தால் தானே வேலை
கிடைக்கும். நமது உரிமைகளுக்காக
போராடமுடியும். பொன் முட்டையிடும் வாத்தை,
ஒரே நாளில் எல்லா பொன் முட்டைகளையும்
பெறவேண்டும் என ஆசைப்பட்டு அதன் வயிற்றை
கிழித்து, அதையும் கொன்று, தனக்கும் ஒன்றும்
கிடைக்காமல் போக வழி செய்த மனிதனின்
கதை போல் நமக்கு ஆகக்கூடாதே என்ற
ஆதங்கம் தான் எனக்கு.

ஒருவேளை தமிழ்நாட்டில் தற்போது
ஏற்பட்டிருக்கின்ற 'சூழ்நிலை' காரணமாக
தொழிற்சாலைகள் இங்கு வராமல் போனால்
இங்குள்ள இளைஞர்கள் முன்போல் வேலை
தேடி வெளி மாநிலம் செல்லவேண்டியதுதான்.
போக முடியாதவர்கள் வேலை இல்லாமல்
திண்டாட வேண்டியதுதான்.

சிலம்புச்செல்வர் திரு ம.பொ.சி அவர்கள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1965 ஆம்
ஆண்டு மாணவர்களிடையே பேசியபோது
‘நான் விதையைத்தின்னும் விவசாயி அல்ல.’
என்று சொன்னது இந்த நேரத்தில் எனக்கு
நினைவுக்கு வருகிறது.

விவசாயி பசிக்கு தானியத்தைத்தான் சாப்பிடவேண்டும்.
விதையை அல்ல.அதற்காக விதையை
விதைத்து தானியத்தை பெருக்கி தேவையைப்
பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்.

பசிக்காக விதையையே சாப்பிட்டுவிட்டால்?
எப்போதும் நிரந்தர பசியால் வாட வேண்டியதுதான்.

யோசிக்க வேண்டியவர்கள் யோசித்தால் சரி.

திங்கள், 25 ஜூலை, 2011

எல்லா உயிரும் தொழும்! எப்போது? 2

அந்த இறைச்சி வெட்டும் கூடம் கிராமத்து வீடுகளில்,
தாழ்வாரமும் நடுவே முற்றமும் இருக்குமே,
அதுபோல் இருந்தது.முற்றம் கம்பி வலையால்
மூடப்பட்டிருந்தது.

தாழ்வாரத்தின் ஓரம் ஒரு கட்டுமஸ்தான தேகம்
படைத்த ஒருவர் கையில் பெரிய பட்டாக் கத்தியுடன்
உட்கார்ந்திருந்தார்.அவருக்கு உதவியாக ஆட்கள்
நின்றிருந்தனர்.

அவருக்கு எதிரே ஆடுகளை வெட்ட,வட்டமான
மரத்தாலான பலகை போல் ஒன்று இருந்தது.
(இப்போது இறைச்சி கடைகளில் இறைச்சியை
துண்டமாக்கி தர வைத்திருக்கிறார்களே
அதுபோல பெரிய அளவில்)

அவருக்கு அருகில் ஆட்டின் இரத்தத்தோடு கூடிய
ஒரு பெரிய கொப்பரை இருந்தது.அருகில் தேங்காய்
குவியல் போல் அதுவரை வெட்டப்பட்ட ஆடுகளின்
தலைகள் கிடந்தன. பக்கத்தில் வெட்டப்பட்ட
ஆடுகளின் தோல்களும்,எலும்புகளும் கிடந்தன.

கம்பிவலைக்கு கீழே வெட்டப்பற்ற ஆடுகளின்
சதைப்பகுதிகள், நமது வீடுகளில் சட்டைகளை
மாட்டி வைத்திருப்பதுபோல்,வரிசையாய்
தொங்கவிடப்பட்டிருந்தன.

கம்பி வலைக்கு மேலே அநேக காக்கைகள்
உட்கார்ந்திருந்தன. அந்த சதைப்பகுதிகளிலிருந்து
சில துண்டங்களாவது கிடைக்காதா என்ற
நைப்பாசையில் அவைகள் உட்கார்ந்து இருந்தது
போல் தெரிந்தது.

வெட்டப்படாமல் இருந்த இரண்டு ஆடுகளும்
மிரட்சியோடு நின்றிருந்தன.ஒருவேளை அந்த
ஆடுகளால் பேசமுடிந்திருந்தால்,‘எங்களை
விட்டுவிடுங்கள்.’என்று கெஞ்சி இருக்கும்.

அந்த காட்சிகளைப் பார்த்த எனக்கு என்னவோபோல்
இருந்தது.ஏனெனில் அதுபோன்று காட்சிகளை
நான் பார்த்ததில்லை.

எங்களைப் பார்த்ததும்,என் அண்ணனிடம்
‘வெட்டலாமா சார்?’ என அந்த ஊழியர் கேட்டார்.
‘சரி’என என் அண்ணன் சொன்னவுடன்,அந்த
இரண்டு ஆடுகளையும் இழுத்து பலகையில் வைத்து
ஒன்றன் பின் ஒன்றாக கையில் இருந்த கத்தியால்
அவைகளின் கழுத்தை ஒரே வெட்டில் துண்டித்துவிட்டார்.

(ஆடுகள் வெட்டப்படுவதை நான் பார்க்கவேண்டும்
என்பதற்காகத்தான், இரண்டு ஆடுகளை நாங்கள் உள்ளே
செல்லும் வரை வெட்டவேண்டாம் என என் அண்ணன்
சொல்லியிருக்கிறார்.)

அந்த நேரத்தில் பீரிட்டு எழுந்த இரத்தமும்,
அந்த ஆடுகள் துடித்த துடிப்பும் பார்க்க என்னை
என்னவோ செய்தது.மயக்கம் வரும்போல் இருந்தது.

அருகில் நின்ற மற்றொருவர் வெட்டிய தலையை,
இளநீர் வெட்டும் இடத்தில் தூக்கிப் போடுவார்களே,
அதுபோல் போட்டுவிட்டு,முண்டமான உடலை
எடுத்து அருகில் இருந்த கொப்பறையில் கவிழ்த்தார்.

இரத்தம் எல்லாம் அதில் வடிந்தவுடன், அருகில்
இருந்த இன்னொருவர் ஆட்டின் உடலின் அடி
வயிற்றை கத்தியால் பிளந்து, உடலிலிருந்த
தோலையும் எலும்புகளையும் இலாகவமாக
எடுத்துவிட்டு, சதைப் பிண்டத்தை அருகில் உள்ள
தொட்டியில் நன்றாக கழுவி விட்டு பின் ஒரு
கொக்கியில் மாட்டி கம்பி வலையில் தொங்கவிட்டார்.

அதன் பிறகு என் அண்ணன்,அங்கு தொங்கிக்
கொண்டு இருந்த ஒவ்வொரு ஆட்டின் சதைப்
பகுதிகளை,உறைகள்(Gloves) அணிந்து
இருகைகளாலும் விலக்கிப் பார்த்து அவைகளில்
நோயுற்றவை ஏதேனும் உள்ளதா என
ஆய்வு செய்தார்.

(வெட்டுவதற்கு முன் ஆட்டின் கண்ணையும்,
காதையும் பார்த்திருந்தாலும்,அங்கே புலப்படாத
நோயின் தாக்கங்கள் உள்ளே சதைப் பகுதியை
ஆய்வு செய்யும்போது தெரியுமாம்.)

அவ்வாறு நோய் தாக்கப்பட்ட சில இறைச்சிகளை
நிராகரித்துவிட்டு மற்றவைகளை ஓ.கே செய்தார்.

அவர் கூடவே சென்ற அவரது உதவியாளர்,
ஓ.கே செய்யப்பட இறைச்சிகளுக்கு சான்றளித்ததன்
அடையாளமாக அரசின் முத்திரையை வைத்தார்.

அதற்குப்பின் தான் அவைகள் விற்பனைக்கு
அனுப்பப்படுமாம். நிராகரிக்கப்பட்டவைகள்
அழிக்கப்பட்டுவிடுமாம்.

ஆய்வு முடிந்ததும் என் அண்ணன் சிற்றுண்டி
உண்ண ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.
ஆனால் அங்கே எனக்குப்பிடித்த பூரி மசாலா
இருந்தும், என்னால் ஏனோ அவைகளை
சாப்பிடப் பிடிக்கவில்லை.

உள்ளிருக்கும் குடல் வெளியே வருவதுபோல்
ஒரு பிரமை. சாப்பிடமுடியாமல் வாந்தி
வருவதுபோல் இருந்தது.சரியாக சாப்பிடவில்லை.

என் கண் முன்னே, அந்த ஆடுகள் உள்ளே
வர அடம் பிடித்ததும், அவைகளின் கண்களில்
இருந்த மிரட்சியும், மரணபயமும், பின்பு அவைகள்
வெட்டப்பட்டபோது,அவைகள் துடித்த துடிப்பும்,
அங்கிருந்த ஆட்டுத்தலைகளின் குவியல்களும்,
இரத்தோடு கூடிய கொப்பரையும்,வந்து வந்து
போயின.

(45 ஆண்டுகள் கழிந்தாலும்,என்னால் அந்த
காட்சியை எனது மனத்திரையிலிருந்து இன்னும்
அகற்ற முடியவில்லை.)

ஒருவேளை சைவ உணவை உண்ணும் வழக்கத்தை
கொண்டு இருந்ததால் அந்த காட்சிகளை
‘ஜீரணிக்க’ முடியவில்லையோ என்னவோ.

இன்றைக்கும் நினைக்கிறேன். அசைவம் உண்ணும்
நண்பர்கள் அநேகம் பேர் இறைச்சிக்காக விலங்குகள்
வெட்டப்படுவதை நேரில் பார்த்திருக்கமாட்டார்கள்.

ஒருவேளை அந்த காட்சியை அவர்கள் பார்க்க
நேர்ந்தால், இவ்வாறு துடிதுடிக்க ஒரு
உயிரைக்கொன்று சாப்பிடவேண்டுமா என
எண்ணி நிச்சயம் அசைவம் உண்ணத்
தயங்குவார்கள் என்பது எனது எண்ணம்.

கொலைக்குற்றம் புரிந்தோருக்கு கூட மரண
தண்டனை அளிக்கக்கூடாது என்றும்,அந்த
தண்டனையை அறவே ஒழிக்கப்பட வேண்டும்
என்றும்,ஒரு உயிரைக்கொல்ல நமக்கு உரிமை
இல்லை என்றும் இப்போது நம்மில் பலபேர்
வாதாடிக்கொண்டிருக்கிறோம்.

அப்படி வாதாடிக்கொண்டு இருக்கிற இந்த
வேளையில்,வாயில்லா ஜீவனை மட்டும்
உணவுக்கே என்றாலும்,கொல்லலாமா என்பதே
எனது கருத்து.

அந்த விலங்குகளை கொல்வதை நிறுத்தினால்,
ஒருவேளை அந்த உயிரினங்கள் பேசமுடிந்தால்,
நம்மை வாழ்த்தும் என்றே நினைக்கிறேன்.

அதனால்தான் தெய்வப்புலவர் அன்றே சொன்னார்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


என்று.

(உணவுப்பழக்கம் என்பது தனிப்பட்டோரின்
விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நான் அறிவேன்.
எனவே இந்த பதிவில், வெளியிடப்பட்டிருக்கும் எண்ணங்கள்/கருத்துக்கள், எனது
கண்ணோட்டத்திலிருந்து எழுதப் பட்டது என்பதை,
புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.)

திங்கள், 18 ஜூலை, 2011

எல்லா உயிரும் தொழும்! எப்போது? 1

அது 1966 ஆம் ஆண்டு மே மாதம். அப்போதுதான்
வேளாண் அறிவியல்(B.Sc(Agriculture)) இறுதியாண்டு
தேர்வு எழுதி விட்டு,ஊருக்கு வந்திருந்தேன்.எனது
இளைய அண்ணன் டாக்டர் வே. ஞானப்பிரகாசம்
அப்போது தூத்துக்குடியில் அரசு கால் நடை மருத்துவ
மனையில் மருத்துவராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

விடுமுறையைக் கழிக்க இங்கு வாயேன்.திருச்செந்தூர்,
திருக்குற்றாலம் எல்லாம் பார்க்கலாம் என்று கடிதம்
எழுதியிருந்தார்.

நானும் சரி எனப் புறப்பட்டு காலையில்
விருத்தாசலத்திலிருந்து கிளம்பும் விரைவுப் பேருந்தில்
கிளம்பி திருச்சி சென்று,அங்கிருந்து அரசின் இன்னொரு
விரைவுப் பேருந்தில் பயணித்து மாலை சுமார்
6 மணிக்கு தூத்துக்குடியை அடைந்தேன்.என் அண்ணன்
பேருந்து நிலையம் வந்து அழைத்து சென்றார்.

மறுநாள் மாலை அவருடன் திருச்செந்தூர் சென்று,
முருகனை வழிபட்டு வந்தேன். இரண்டாம் நாள்
என் அண்ணன் வரமுடியாததால் நான் மட்டும் தனியாக
கிளம்பி பேருந்து மூலம் திருநெல்வேலி போய்
அங்கிருந்து திருக்குற்றாலம் போய் வந்தேன்.

மூன்றாம் நாள் காலையில்,என் அண்ணன்
‘இறைச்சியை வெட்டும் கூடம்(Slaughter House)
செல்கிறேன். நீயும் வருகிறாயா?’என்றார்.

ஆடுகளை மட்டும் இறைச்சிக்காக வெட்டும் அந்த
கூடம் தூத்துக்குடி நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு
வந்தது. வெட்டப்பட்ட ஆட்டிறைச்சி, உண்ணும்
தகுதியில்,(நோய் தாக்காமல்) உள்ளதா என
கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்ற பின்
தான் நுகர்வோர்கள் பயன்பாட்டுக்கு
அனுப்பப்படவேண்டும் என்பது விதி.
கட்டாயமும் கூட.

அதற்கான சான்றிதழ் தரும் பணியை,வழக்கமாக
அரசின் கால்நடை மருத்துவ மனையில் பணிபுரியும்
மருத்துவர் தான் செய்வார்கள்.

என் அண்ணன் டாக்டர் வே. ஞானப்பிரகாசம்
அப்போது தூத்துக்குடி அரசு கால்நடை மருத்துவ
மனையில் மருத்துவராக இருந்ததால்,அவர் அந்த
பணியையும் செய்து வந்தார். தினம் காலையில்
6 மணிக்கு சென்று அந்த பணியை முடித்துவிட்டு
மருத்துவ மனைக்கு செல்வார்.

எனக்கும் இறைச்சியை வெட்டும் கூடம் எப்படி
இருக்கிறது என பார்க்கும் ஆவல்(?) இருந்ததால்
‘சரி.வருகிறேன்’எனக் கூறி அவருடன் சென்றேன்.

நாங்கள் சென்றபோது,அந்த கூடத்தின் அருகே,
அநேகம் பேர் தங்களது ஆடுகளோடு நின்றிருந்தனர்.
கால்நடை மருத்துவருக்கான அறையில் என் அண்ணன்
சென்று அமர்ந்ததும், அந்த அறையில் இருந்த
பார்வையாளருக்கான நாற்காலியில் நானும் சென்று
அமர்ந்தேன்.

என் அண்ணனுடைய உதவியாளர்,அவருடைய
அனுமதி பெற்று வெட்டப்பட இருக்கின்ற ஆடுகளை,
ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே கொண்டுவர
அனுமதித்தார்.

அப்போதுதான் கவனித்தேன்.குழந்தைகள் முதன்
முதல் பள்ளிக்கு அனுப்பும்போது, போக
விருப்பமில்லாமல் அடம் பிடித்து நகர மறுக்குமே,
அதுபோல் அந்த ஆடுகள் உள்ளே வர மறுத்து
திமிறியதை.

அவைகளின் கண்களில் ஒரு பயம் இருந்ததையும்,
அப்போது கவனித்தேன். அவைகளுக்கு தாங்கள்
எதற்காக அங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம்
எனத் தெரிந்திருக்கும் போல.

ஆனாலும் ஆடுகளின் உரிமையாளர்கள் அவைகளை
இழுத்தும், தள்ளியும் கொண்டுவந்து மருத்துவ
ஆய்வுக்காக நிறுத்தினார்கள்.

என் அண்ணன் டாக்டர் ஞானப்பிரகாசம் அவர்கள்
ஒவ்வொரு ஆட்டின் கண்ணையும்,
காது மடல்களையும்(Ear Lobes) கூர்ந்து கவனித்து,
நோய் தாக்கப்படாத ஆடுகளை, இறைச்சிக்காக
வெட்டஉள்ளே அனுப்ப அனுமதித்தார்.

(விலங்குகளின் கண்களையும் காது மடல்களையும்
பார்த்தே ஒரு கைதேர்ந்த கால்நடை மருத்துவர்
அவைகள் நோயுற்றுள்ளனவா எனக் கண்டுபிடிக்க
முடியும் என் அண்ணன் பின் சொன்னார்.)

இறைச்சியாக தகுதியில்லாத ஆடுகளை நிராகரித்து
திருப்பி அழைத்து செல்ல அனுமதித்தார்.அவ்வளவுதான்
அந்த ஆடுகள் (அதிர்ஷ்டசாலி ஆடுகள்!) சந்தோஷத்தோடு
துள்ளிக்குதித்து வெளியே ஓடின.

இவ்வாறு ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போதே
உதவியாளரை அழைத்து கடைசியில் இரண்டு ஆடுகளை
வெட்டாமல் வைத்திருக்கும்படியும், தான் உள்ளே
வந்தபிறகு வெட்டலாம் எனவும் சொன்னார்.

கொண்டுவரப்பட்ட எல்லா ஆடுகளையும் ஆய்வு
செய்தபின், ஆடுகள் வெட்டப்படும் அந்த கூடத்திற்கு
என்னை அழைத்து சென்றார்.


தொடரும்

திங்கள், 11 ஜூலை, 2011

வங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 7

நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்

விவசாயி :(வங்கி மேலாளரிடம்) ஐயா,
கறவை மாடு வாங்க கடன் கிடைக்குமா?

வங்கி மேலாளர்: நிச்சயம் கிடைக்கும் ஆனால்
எப்படி கட்டுவீர்கள்?

விவசாயி : கயிற்றால்தான்.

வங்கி மேலாளர்: ?????


வாடிக்கையாளர்: (வங்கி மேலாளரிடம்) சார்!
சிறுதொழில் ஆரம்பிக்க விரும்புகிறேன்.
என்ன செய்யவேண்டும்?

வங்கி மேலாளர்: முதலில் பெரிய தொழில்
ஒன்று ஆரம்பியுங்கள். பிறகு ஆறு மாதம்
காத்திருங்கள். பிறகு தானே அது சிறிய
தொழிலாகிவிடும்
.
வாடிக்கையாளர்:??????


டாக்டர் (இதய நோயாளியிடம்): உங்கள்
இதயம் பழுதடைந்துவிட்டதால், மாற்று இதயம்
பொறுத்தவேண்டும். விபத்தில் இறந்த
சிலருடைய இதயம் தயாராக இருக்கிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

நோயாளி: டாக்டர் அவைகளில், வங்கி
மேலாளருடைய இதயம் இருக்கிறதா? இருந்தால்
அதை பொருத்துங்கள்.

டாக்டர்: இருக்கிறது. ஏன் வங்கி மேலாளரின்
இதயம் அத்தனை சிறப்பானதா? அதுதான்
வேண்டும் என்கிறீர்கள்
.
நோயாளி: வேறொன்றும் இல்லை டாக்டர்.
அதுதான் அதிகம் உபயோகப் படுத்தப்பட்டிருக்காது.
அதனால்தான்
.
டாக்டர்: !!!!!!!!!


ஒரு வங்கி மேலாளர், முதன் முதல் ‘சூட்’
போட நினைத்தார். ஊரிலேயே இருந்த புகழ்
வாய்ந்த தையல் கலை நிபுணரிடம் சென்று
அளவுகளைக் கொடுத்து வந்தார்.

ஒரு வாரம் கழித்து சென்றபோது அவரது ‘சூட்’
தயாராக இருந்தது. அதை அணிந்து கொண்டு
கண்ணாடி முன் நின்று பார்த்தபோது அவருக்கு
அது மிகவும் பொருத்தமாகவும், கச்சிதமாகவும்
இருந்தது.

ஆனால் ஏதோ குறை இருப்பதாக அவருக்கு
தெரிந்தது. என்ன என்று பார்த்தால் அந்த
‘சூட்’ டில் கை வைக்க ‘பாக்கெட்’ டே
இல்லை என்பது.
தையல்கலை நிபுணரிடம் அது பற்றி
கேட்டபோது, அவர் “சார். நீங்கள் வங்கி
மேலாளர் என்றுதானே சொன்னீர்கள்”என்றார்.

“ஆமாம்” என்று வங்கி மேலாளர் சொன்னதும்,
தையற்காரர் சொன்னார். “எந்த வங்கி மேலாளர்
தனது ‘பாக்கெட்’டில் கை வைக்கிறார்? அதனால்
தான் வைக்கவில்லை”

வங்கி மேலாளர் வாயடைத்து நின்றார்.


நகைச்சுவை துணுக்குகள் தொடரும்

வியாழன், 7 ஜூலை, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

நண்பேன்டா-தொடர் பதிவு

என் அருமை நண்பர் திரு சென்னை பித்தன் அவர்களது
அன்பான அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவை
தொடர்கிறேன்.

என் நண்பர்கள் வட்டம் அடையார் ஆலமரத்தின்
கிளைகளப் போல் படர்ந்து விரிந்தது. எங்கள் ஊரில்
உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்தபோதும், பின்
அரியலூர், பெண்ணாடம் மற்றும் விருத்தாசலம்
உயர்நிலைப்பள்ளிகளில் படித்தபோதும், திருச்சி
புனித வளவனார் கல்லூரியில்(St.Joseph’s college)
புகுமுக வகுப்பு படித்தபோதும், அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல்
நான்காண்டுகள் படித்தபோதும் கிடைத்த நண்பர்கள்
ஏராளம்.

மாநில வேளாண் துறை,மைய அரசின் நிறுவனமான
தேசிய விதைக்கழகம், பொதுத்துறை வங்கியான
சிண்டிகேட் வங்கிஆகிய நிறுவனங்களில் பணி
ஆற்றியபோது,தலைஞாயிறு, தார்வார்,கதக்,புது தில்லி,
பெங்களூரு, மணிப்பால்,பொள்ளாச்சி,சென்னை,கடலூர்,
சேலம், கோட்டயம்,கோயம்புத்தூர்,கண்ணூர் போன்ற
இடங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது எனக்கு கிடைத்த நண்பர்கள் அநேகம்.

அனைவர் பற்றியும் எழுத ஆசை. ஆனால் அது
முடியாது என்பதால், என் நண்பர்களில் சிலர் பற்றி
எனது‘நினைவோட்டம்’தொடரில் எழுதி வருகிறேன்.
இந்த தொடர் பதிவில் மேலும் சிலரைப்பற்றி எழுத
நினைக்கிறேன்.

1.திரு கோ.இராதாகிருஷ்ணன். எனது பக்கத்து
வீட்டுக்காரரான இவர் என்னுடைய ஆரம்பப்பள்ளி
நண்பர். பள்ளி சென்று வந்ததும் தெருவில் நாங்கள்
விளையாடாமல் இருக்கமாட்டோம்.

கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் ஓடும்
வெள்ளாற்றுக்கு சென்றதும்,போகும் வழியில் உள்ள
மாமரத்தில், காவல்காரனுக்கு தெரியாமல் கல்லால்
அடித்து எனக்கு மாம்பழம் அவர் பறித்துக் கொடுத்ததும்,
இருட்டும் வரை ஆற்றின் மணலில் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பியதும்
மறக்கமுடியாத நினைவுகள்.

ஊரில் விவசாய பணிகளை செய்து வரும் அவர்,
இன்றைக்கும் ஊருக்கு செல்லும்போது
வாஞ்சையுடன் ‘எப்படி இருக்கீங்க?’
எனக்கேட்டுக்கொண்டு வந்து பேசி செல்வார்.நான்
முதன் முதல் கர்நாடகா சென்றுவிட்டு ஒருவருடம்
கழித்து வந்தபோது அவர் கேட்ட கேள்வி(!)யும்
அதை எதற்காக கேட்டார் என்பதையும்
‘நினைவோட்டத்தில்’ எழுத இருக்கிறேன்.

2. திரு சு.கிருஷ்ணன்.விருத்தாசலம் பள்ளியில் எனது
நெருங்கிய நண்பர் தற்சமயம் விருத்தாசலத்தில்
குழந்தை நல மருத்துவராக சேவை செய்து வருகிறார்.
இவரைப்பற்றி நினைவோட்டம் 40 ல் விரிவாக எழுதியுள்ளேன்
.
3.திரு இராம.நாச்சியப்பன்.என்னுடன் நான்கு ஆண்டுகள்
வேளாண் அறிவியல் படித்தவர். இரண்டு ஆண்டுகள்
விடுதியில் எனது அறை நண்பராகவும் இரண்டு
ஆண்டுகள் பக்கத்து அறை நண்பராகவும்
இருந்தவர்.பின்பு பூச்சியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்று வேளாண்
கல்லூரியில் பேராசிரியாக இருந்து ஓய்வு
பெற்று சிதம்பரத்தில் தற்சமயம் ஆலோசகராக
பணியாற்றி வருகிறார்.

இவருடன் நான் சண்டைபோடாத நாட்களே இல்லை.
காரணம் அறையில் எல்லாவற்றையும் ஒழுங்காக
வைக்க வேண்டும் என்பார். நான் வேண்டும் என்றே
எல்லாவற்றையும் கலைத்துப்போடுவேன். எவ்வளவு
சண்டை போட்டாலும் உடனே சமாதானமாகிவிடுவோம்.
அவர் ஊருக்கு (காரைக்குடிக்கு அருகில் உள்ள
ஆத்தங்குடி)சென்றுவரும்போது, நெய்யில் செய்த
சீடைகளையும் ‘சீப்பு சீடை’ எனப்படும்
சீப்பணியாரத்தையும் கொண்டுவந்து அன்புடன்
தருவார்.

3. திரு V.R. அரங்கநாதன்.வணிகவியலில் முதுகலை
பட்டம் பெற்ற இவர் தார்வாரில் வேலை செய்யும்போது
என்னோடு பணிபுரிந்தவர். பின்பு பெங்களூருவிலும்
என்னோடு வேலை செய்தவர். இருவரும்
சேஷாத்ரிபுரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தபோது,
சமைத்து சாப்பிட்டோம். அவர் சமைப்பார்.
நான் சாப்பிடுவேன்!!

Cost Accountant தேர்வு எழுத வேண்டும் என்ற ஆசையை
மனதில் விதைத்தவர் இவர். பின்னால் வங்கியில் சேர்ந்த
பிறகு C.A.I.I.B தேர்வு எழுத அவரும் ஒரு காரணம்.
இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

4.திரு S.சிவக்குமார்.புது தில்லியில் ‘கரோல்பாக்’கில்
இராமநாத ஐயர் மெஸ்ஸில் தங்கியிருந்த போது
அறைத்தோழனாக இருந்தவர். எனக்கு எல்லா
விதத்திலும் உதவியாக இருந்தவர்.எனது
சுக துக்கங்களில் பங்கேற்றவர். இவரை என்னால்
வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது.
இவரைப்பற்றி விவரமாக பின் எழுதுவேன்.

5.திரு V. கோவிந்தராஜன். பொள்ளாச்சியில் வங்கியில்
பணிபுரிந்தபோது இவர் ‘ஸ்டேட் பாங்க்’கில் பணிபுரிந்து
வந்தார். நெருக்கமான நண்பர். வேளாண் அறிவியல்
படித்த எனக்கு வணிகவியல் (Accountancy) பாடம்
சொல்லிக்கொடுத்து C.A.I.I.B தேர்வில் முதல்
தடவையிலேயே வெற்றி பெற காரணமாக இருந்தார்.
இவரைப்பற்றியும் பின் விரிவாய் எழுதுவேன்.

6. திரு க.சு. பரமேஸ்வரன். எங்கள் வங்கியில் எனது
துறையில் ஒன்றாக பணியாற்றியவர்.உடுப்பியில்
இருந்தபோது இவர் எங்களுக்கு செய்த உதவியை
மறக்கமுடியாது. தற்போது சென்னையில் உள்ளார்.
தினம் காலையில் தொலை பேசியில்
தொடர்புகொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்.

இன்னும் பல நண்பர்கள் பற்றி எழுத ஆவல். நிச்சயமாக
அவர்கள் பற்றி எழுதுவேன். இந்த தொடரை எழுத
அழைத்த நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கட்கு
நன்றி உரித்தாகுக.

இந்த தொடரை பின் தொடர நான் அழைப்பது:

1. Nighthawk .திரு க.வாசுதேவன்

2. இளந்தென்றல் திரு முரளி நாராயண்

திங்கள், 4 ஜூலை, 2011

நினைவோட்டம் 50

அரசு நடத்திய பேச்சுப்போட்டியில், இரண்டாம் பரிசை
பெற்றிருந்தாலும் எனக்கு வருத்தமில்லை. காரணம்
முதல் பரிசுக்கும் இரண்டாம் பரிசுக்கும் ஒரே
மாதிரியான பரிசுப்பொருள்தான்.

ஏன் அப்படி கொடுத்தார்கள் என விசாரித்தபோதுதான்
தெரிந்தது விவரம்.அரசின் சார்பில் போட்டி நடத்தி பரிசு
கொடுப்பது என முடிவு எடுத்தபோது பரிசுப்பொருட்களை
‘வாங்கும்’பணியை விருத்தாசலம் தாசில்தார்
தலையில் கட்டிவிட்டார்களாம்!!

இந்த மாதிரி செலவுகளுக்கெல்லாம் அரசின்
கஜானாவிலிருந்து பைசா பெயராதாம்.எனவே
கீழ்மட்டத்தில் உள்ள அலுவலர்கள்தான் தங்கள்
கைக்காசை செலவு செய்யவேண்டும்.

அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து இவைகளுக்கு
செலவு செய்ய அவர்களது நிதிநிலை அனுமதிக்காது.

எனவே அவர்கள் தங்கள் பதவியின் ‘அதிகாரத்தை’
உபயோகித்துதான் இந்த மாதிரியான விழாக்களுக்கு
தேவையான பொருட்களை வாங்குவார்களாம்.

எங்களது போட்டிக்கான பரிசை வாங்கப்பணித்த,
தாசில்தார்,விருத்தாசலம் கடைவீதியில் இருந்த,
எழுதுபொருள் மற்றும் பாடப்புத்தகங்கள் விற்கும்
ஸ்ரீனிவாச செட்டியார் கடைக்கு சென்று,பரிசுக்காக
ஏதாவது பொருள் தரும்படி கேட்டிருக்கிறார்.
(இப்போதும் அந்த கடை இருக்கிறதா
எனத்தெரியவில்லை)

கேட்பவர் தாசில்தார் என்பதால் முடியாது என
சொல்லமுடியாமல்,கதையின் உரிமையாளரான
திரு ஸ்ரீனிவாச செட்டியார் அவர்கள் இருப்பதிலேயே
மிகவும் குறைவான விலையுள்ள பொருளான ஒரே
விலையுள்ள இரண்டு பேனாக்களை கொடுத்துள்ளார்.

பணம் கொடுக்காமல் வாங்கியதால், முதல் மற்றும்
இரண்டாம் பரிசுக்காக வெவ்வேறு பொருட்களை
வாங்காமல், அவர் கொடுத்ததை வாங்கி வந்து
எங்களுக்கு கொடுத்து விட்டார்.

எது எப்படியோ மாணவர்களாகிய எங்களுக்கு,அந்த
பேனா உபயோகமான பரிசுதான்.

அந்த போட்டியில் பரிசு கிடைத்ததால் ஏற்பட்ட
தன்னம்பிக்கையால்(!)அடுத்து அறிவித்த
‘ஐக்கியநாடுகள் சபை’ பற்றிய பேச்சுப்போட்டிக்கும்
பெயர் கொடுத்திருந்தேன்.

நன்றாக பேச்சை தயார் செய்து பேசியும், எனக்கு
அந்த போட்டியில் பரிசு கிடைக்கவில்லை.

காரணம் கலந்துகொண்ட மற்ற நண்பர்கள்
என்னைவிட நன்றாக பேசியதால்! வழக்கம்போல்
நண்பர் பழமலைதான் முதல் பரிசை தட்டிச்சென்றார்.

எங்கள் பள்ளியில் குறிப்பிட்ட பாடம் நடத்தும்
ஆசிரியர் வராவிட்டால்,அந்த வகுப்பு நேரத்தில்,பாடம்
நடத்தும் பணி இல்லாமல் இருக்கும் ஆசிரியரை,
மாற்று ஆசிரியராக அனுப்புவது வழக்கம்.

காரணம் ஆசிரியர் இல்லாவிட்டால் மாணவர்கள்
சத்தம் போட்டுக்கொண்டு மற்ற வகுப்புகளுக்கு
இடையூறாக இருப்பார்கள் என்பதால்.

இது எல்லா பள்ளிகளிலும் நடக்கும் வழக்கமான
ஒன்றுதான்.

இவ்வாறு வரும் ஆசிரியர்களில் பெரும்பாலோர்
மாணவர்களை ஏதாவது படிக்க சொல்லிவிட்டு
உட்கார்ந்துவிடுவார்கள்.தங்களுடைய ஓய்வு நேரத்தில்,
ஏன் வீணாக பேசி தங்களுடைய ‘சக்தி’யை
வீணாக்கவேண்டும் என்பதால். வேறு சிலரோ
அரசியலைப் பற்றி பேசி மாணவர்களை தங்களது
வழிக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள்.

மற்றும் சிலர் மாணவர்களுக்கு விருப்ப "பாடமான"
திரைப்படங்களை ப்பற்றி பேசி கலகலப்பை
உண்டாக்குவார்கள்.

எனது அண்ணன் திரு சபாநாயகம் இவர்களிலிருந்து
சற்று வித்தியாசமானவர்.அவரே எழுத்தாளராக
இருந்ததால், அவர் மாற்று ஆசிரியராக வரும்போது,
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வை.கோவிந்தன்,
தி.ஜானகிராமன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
எழுதிய சிறுகதைகளைச் சுவைபட சொல்வார்.

நாங்கள் படிக்கும்போது துணைப்பாடங்களாக
சிறுகதைத்தொகுப்பை வைத்தது இல்லை.
(இப்போது இருப்பதாக அறிகிறேன்)

எனவே சிறுகதைகளை,பாடமாக வைக்காத
காலத்தில் இந்த சிறுகதை அறிமுகம்,வழக்கமான
பாடங்களையே கேட்டு அலுத்துப்போன
மாணவர்களுக்கு, ஒரு புதிய அனுபவமாகவும்,
மாற்று மருந்து போலவும் இருந்தது என்பது நிஜம்.

இன்றைக்கு அநேகம் பேர் ‘கதை சொல்லி’களாக
இருக்கிறார்கள். ஆனால் ‘கதை சொல்லி’ என்ற
சொற்றொடர் வழக்குக்கு வருமுன்பே அவர்
கதை சொல்லியாக இருந்தார் என்பதை
நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

எங்களுக்கு அந்த வயதில் அநேக பிரபல
எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை
அவரையே சேரும்.அவரது கதை சொல்லும் திறனால்
ஈர்க்கப்பட்டு மாணவர்களில் சிலர் கவிஞர்கள் ஆகவும்
எழுத்தாளர்களாக ஆகவும் ஆனதும் உண்மை.

சிறுகதைகள் மட்டுமல்லாமல் கல்கியின் ‘சிவகாமியின்
சபதம்’ போன்ற நாவல்களையும் எல்லோரும் இரசிக்கும்
வண்ணம் சொல்லுவார்.

நாவல் என்பதால், ஒரே வகுப்பில் முழு நாவலையும்
சொல்லமுடியாது என்பதால், இதழ்களில் தொடரும்
எனப் போடப்படுவதைப்போல நாவல் சொல்வதையும்
தொடரும் எனச்சொல்லி, எல்லோரையும் ஆவலுடன்
காக்க வைத்து, அடுத்ததடவை மாற்று ஆசிரியாக
வரும்போது விட்ட இடத்திலிருந்து தொடங்குவார்.
அதற்காகவே மாணவர்கள் திரும்பவும் எப்போது
அவர் மாற்று ஆசிரியராக வருவார் எனக்
காத்திருப்பார்கள்.

சில சமயம் ஒரு மாறுதலுக்காக கதை சொல்லாமல்,
‘Quiz’ எனப்படும் புதிர் போட்டியையும் நடத்தியிருக்கிறார்.

புதிர் போட்டியை எங்கள் பள்ளியில்
அறிமுகப்படுத்தியவரும் அவரே.இன்றைக்கு
வேண்டுமானால், இந்த போட்டி ஒன்றும் புதிதாக
இல்லாமல் இருக்கலாம்.

1957-60 களில் இந்த மாதிரி ஒரு போட்டி நடத்துவதே
ஒரு புதுமைதான். இப்படி போட்டியை நடத்தலாம்
என்பதே அநேக அரசுப்பள்ளிகளில் அப்போது
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே அவர் மாற்று ஆசிரியராக வருகிறார் என்றால்
மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான்.

மாற்று ஆசிரியராக வரும்போதுதான், இப்படி என்றால்
அவரது பாடமான கணிதத்தை நடத்தும்போதும்,
அவரது ‘பாணி’யே தனிதான்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி