செவ்வாய், 29 அக்டோபர், 2013

நினைவோட்டம் 75

எங்களுக்கு ஆங்கில பாட வகுப்பு நடத்தியவர் பேராசிரியர் பானுமூர்த்தி
அவர்கள். அவருக்கு முன்பு பேராசிரியர் கமலபதி இருந்ததாகவும்,அவர்
நாங்கள் கல்லூரியில் சேருமுன்பே, எங்கள் கல்லூரியிலிருந்து விலகி
ஜமால் ஜமால் முகமது கல்லூரியில் சேர்ந்து பணிபுரிவதாகவும்
சொன்னார்கள்.

அவர் பாடம் நடத்தும் விதமே அலாதியாம். ஷேக்ஸ்பியரின்
‘ஒத்தெல்லோ’வை நடத்தும்போது அவரே அந்த கதாபாத்திரமாக மாறி
நடிப்பாராம்.அதனால் அவரது ஆங்கில வகுப்பே ஒரு நாடக மேடைபோல்
இருக்கும் என்று கேள்விப்பட்டேன்.

எங்களுக்கு திரு பானுமூர்த்தி அவர்கள் தான் ஆங்கில ஆசிரியர்
என்றாலும், அவர் விடுப்பில் இருக்கும்போது துறைத்தலைவர்
Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ அவர்களும், Rev Fr T.N.செக்யூரா SJ
அவர்களும் சில சமயம் பாடம் நடத்தியதுண்டு.

திருச்சி புனித வளவனார் கல்லூரி, சென்னை இலயோலா கல்லூரி
மற்றும் பாளையம்கோட்டை புனித சவேரியார் கல்லூரி
(St.Xavier’s College) மூன்றும் ஒரே முகவர் (Rector) கீழ் இருந்ததால்
ஒரு கல்லூரியிலிருந்து இன்னொரு கல்லூரிக்கு பேராசிரியர்கள்
மாற்றலாகி வருவதுண்டு.அதனால் Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ
அவர்களும், Rev Fr T.N.செக்யூரா SJ அவர்களும் சென்னை
இலயோலா கல்லூரியில் பணியாற்றியவர்கள் தான்.

Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ அவர்கள் சிரித்த முகத்துடன் பாடத்தை
நடத்துவார். ஆனால் Rev Fr T.N.செக்யூரா SJ அவர்களோ பாடம்
நடத்தும்போது எங்களை சிரிக்க வைப்பார். ஆனால் மிகவும்
கண்டிப்பானவர்.

பேராசிரியர் பானுமூர்த்தி அவர்களும் துணை பாடம் (English
Non Detailed Lesson
)நடத்தும்போது, சில சமயம் அந்த பாடத்தில்
வரும் உரையாடலை சொல்லும்போது அந்த கதாபாத்திரம் பேசுவது
போலவே பேசுவார். அதனால் துணைப்பாட வகுப்பு மிகவும்
சுவாரஸ்யமாக இருக்கும்.

நான் படித்தபோது எங்களுக்கு சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)
அவர்களின் பிரசித்திபெற்ற நாவலான Great Expectations ஆங்கில
துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு அநாதை சிறுவன்,
முகம் தெரியா புரவலர் ஒருவரால் பண்புள்ள மனிதனாக ஆக்கப்பட்டது
பற்றிய மிக அருமையான நாவல் அது

எனக்கு ஆங்கில பாடங்களை விட துணைப் பாடங்கள் தான் பிடிக்கும்.
ஏனெனில் அதில் தானே கதைகள் இருக்கும்! நான் 10 ஆம் வகுப்பு
படிக்கும்போது எனது ஆசிரியர் திரு A.கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய
அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) எழுதிய The Count of
Monte Cristo
வையும், S.S.L.C படிக்கும்போது எங்களது தலைமை
ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் நடத்திய ஜோநாதன் ஸ்விஃப்ட்
(Jonathan Swift) அவர்களின் Gulliver's Travels வையும்
மறக்க முடியுமா என்ன?

Great Expectations நாவல் எங்களுக்கு பாடமாக வைக்கப்
பட்டிருந்தபோது, திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்த
‘பிளாசா’ திரை அரங்கத்தில் அதே நாவல் Great Expectations என்ற
பெயரிலேயே திரைப்படமாக வெளியாகி இருந்தது. அந்த கதையை
1946 இல் David Lean என்ற இயக்குனர் John Mills மற்றும்
Valerie Hobson ஆகியோரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைத்து
இயக்கி இருந்தார்.

பேராசிரியர் திரு பானுமூர்த்தி அவர்கள் அந்த படம் அப்போது
திரையிடப் பட்டிருப்பதை சொல்லி எங்கள் எல்லோரையும்
திரைப்படத்தைப் பார்க்க சொன்னார். நானும் என் அண்ணனிடம்
அனுமதி பெற்று, அந்த திரை அரங்கில் திரைப் படத்தைப் பார்த்தேன்.
மிக அருமையான படம். அதைப் பார்த்துவிட்டு வந்தபின் பாடத்தை
கவனிக்கும்போதுகதையை புரிந்துகொள்ள மிகவும் சுலபமாக இருந்தது.

இந்த பதிவை எழுதும்போது அந்த திரைப்படத்தை திரும்பவும் பார்க்க
எண்ணி, வலையில்தேடியபோது கிடத்த காணொளியை
கீழே தந்துள்ளேன்.


அவசியம் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வந்தவைகள் அப்போது திரைப்
படங்களாக வந்ததும், அவைகளைப் பார்க்க ஆசிரியர்களே சிபாரிசு
செய்ததும் தான் ஆச்சரியம்.

அடுத்து நான் மறக்க முடியாத ஆசிரியர் இயற்பியல் (Physics)
சொல்லிக் கொடுத்த பேராசிரியர் திரு அனந்தகிருஷ்ணன் அவர்கள்.
பெருந்தலைவர் காமராசர் போல் முழங்கை வரை உள்ள கதர் சட்டை
அணிந்து தோளில் துண்டுடன் வேட்டி உடுத்தி வகுப்பு எடுக்க வருவார்.
நெற்றியில் குங்குமம் துலங்க,கையில் எப்போது வெற்றிலைப்பெட்டி
இருக்கும்.

வகுப்புக்கு வந்ததும் வெற்றிலைப் பெட்டியை மேசையின் ஒரு ஓரத்தில்
வைத்துவிட்டு பாடத்தை துவங்குவார்.

அவர் பாடம் நடத்தும்போது வகுப்பு அமைதியாய் இருக்கும்.அவர்
யாரையும் கண்டித்ததில்லை. ஆனாலும் அவரிடம் ஒரு பயம் கலந்த
மரியாதை எங்களுக்கு. Screw gauge யும் Vernier calliper யும் அதுவரை
பார்த்திராத,கேள்விப்பட்டிராத புரியும்படி சொல்லி அவைகளை எங்களுக்கு
அறிமுகப்படுத்தியது அவர்தான். பின்பு வேளாண் அறிவியல் பட்டப்
படிப்பில் சேர்ந்தபோது, முதலாம் ஆண்டில் இருந்த இயற்பியல் பாடம்
சுலபமாக புரிய காரணமாக இருந்தது அவர் போட்ட அடித்தளம் தான்
என்பதில் சந்தேகம் இல்லை.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 22 அக்டோபர், 2013

நினைவோட்டம் 74புனித வளவனார் கல்லூரியின் மேதக்க இலட்சியமே, தரம் வாய்ந்த 
கல்வியை உண்மையாக, நன்முறையில் இந்த சமூகத்திற்கு தருவது 
என்பதுதான். அதனால் தான் கல்லூரியின் குறிக்கோளை (Motto)  
“Pro Bono Et Vero” என வைத்திருக்கிறார்கள். இலத்தீனில் (Latin) உள்ள 
இந்த சொற்களுக்கான பொருள் For the Good and the True. அதாவது 
'நன்மைக்கும் உண்மைக்கும்' என்பதாகும்.

குறிக்கோள் என்னவோ, அதையே எங்கள் கல்லூரியில் பணியாற்றிய 
பேராசிரியர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 
ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியிலிருந்த சென்ற, விளையாட்டுப் 
பிள்ளைகள் போலிருந்த எங்களை மிகவும் பொறுப்போடும், சிரத்தையோடும் கவனித்துக்கொண்டார்கள்.

புனித வளவனார் கல்லூரியில் படித்தபோது நான் கற்றுக்கொண்ட 
காலந்தவறாமை (Punctuality), நேர மேலாண்மை (Time Management), 
விதிகளை மதித்தல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளவும், 
அவைகளை பின்பற்றவும் காரணமாக இருந்தது எனது கல்லூரியும், 
அதில் பணியாற்றிய கடமைமிகு ஆசிரியர்களும் தான் என்பதை 
இப்போதும் பெருமையோடு சொல்லுவேன்.

இந்த பழக்கங்கள் பின்னர் வங்கியில் பணியாற்றியபோது மிகவும் 
உதவியாக இருந்தன என்பது உண்மை.

எங்கள் கல்லூரியை நினைக்கும்போது எனக்கு தமிழ் பாடம் நடத்திய 
பேராசிரியர்கள் திரு அய்யம்பெருமாள் கோனார், திரு சாமிமுத்து, 
திரு ரம்போலா மாஸ்கரனாஸ், ஆங்கில பாடம் எடுத்த பேராசிரியர்கள்  
Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ,  Rev Fr T.N.செக்யூரா SJ, மற்றும்  
திரு பானுமூர்த்தி, இயற்பியல் பேராசிரியர் திரு அனந்தகிருஷ்ணன், 
வேதியல் ஆசிரியர் திரு மாத்யூ, தத்துவ ஆசிரியர் திரு பெர்னாண்டெஸ், வணிகவியல் ஆசிரியர் திரு பெர்னாண்டெஸ் தாவரவியல் ஆசிரியர் திரு வெங்கடராமன், உடற்கல்வி ஆசிரியர் திரு ஜோசப் ஆகியோரை 
நினைக்காமல் இருக்கமுடியாது.

நான் படித்தபோது A Group (கணிதம்) எடுத்தவர்களும் B Group 
(இயற்கை அறிவியல் பாடம்) எடுத்தவர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடங்கள் காரணமாக வெவ்வேறு வகுப்பில் இருந்தாலும், 
மொழிப்பாட வகுப்புக்கு மட்டும் அவரவர்கள் இரண்டாம் பாடமாக 
எடுத்துள்ள மொழிப்பாட வகுப்புக்கு செல்வோம்.

அதன்படி தமிழை இரண்டாம் பாடமாக தேர்ந்தெடுத்த என்னைப் 
போன்றோர் வேறு வகுப்பில் உள்ள தமிழை இரண்டாம் பாடமாக 
எடுத்துள்ள மாணவர்களுடன் சேர்ந்துகொள்வோம்.

எங்கள் வகுப்பில் வேறு மாநில மற்றும் வெளி நாட்டு மாணவர்களும் 
படித்து வந்ததால், எங்களோடு படித்து வந்த கேரள மாநில மாணவர்கள்  
மலையாள வகுப்புக்கும் வெளிநாட்டவரும் மற்றும் விருப்பப்படுவோரும் 
ஃபிரெஞ்சு வகுப்புக்கும் இந்தி மற்றும் வடமொழி வகுப்புகளுக்கும் 
சென்றுவிடுவார்கள்.

எங்களுக்கு அதிக நாட்கள்  தமிழ் பாடம் நடத்தியது திரு சாமிமுத்து 
அவர்கள்தான் என்றாலும் சில நாட்களில் திரு ரம்போலா மாஸ்கரனாஸ், 
மற்றும் திரு அய்யம்பெருமாள் கோனார்,ஆகியோரும் வகுப்பு 
நடத்தியிருக்கிறார்கள்.

நான் முன்பே அக்டோபர் 28, 2011 இல் நினைவோட்டம் 54 தொடரில் 
எழுதியிருந்தபடி S.S.L.C தமிழ் பாடத்திற்கா, பேராசிரியர் அய்யம்பெருமாள் 
கோனார் அவர்களால் எழுதப்பட்டு திருச்சி பழனியப்பா பிரசுரம் வெளியிட்ட தமிழ் பாடத்திற்கான கோனார் நோட்ஸ் எனப்படும், கோனார் தமிழ் உரை நூல் வாங்காத மாணவர்களே  அப்போது இல்லை எனலாம்.

P.U.C வகுப்பில் சேர்ந்த பிறகும், கோனார் தமிழ் உரை நூல் தான் 
வாங்கியிருந்தோம். எங்களுக்கு வகுப்பு எடுக்கும் அவர் வரும் வரை, எங்களுக்கெல்லாம் அவர் பாடம் எடுப்பார் என நினைக்கவில்லை. 
திரு அய்யம்பெருமாள் கோனார் அவர்களை முதன் முதல் பார்த்தபோது 
எங்கள் எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. காரணம் நாங்கள் எல்லோரும் 
அவரது உரை நூலை S.S.L.C படிக்கும்போது வாங்கிப் படித்தவர்கள். 
அதனால் பலனும் பெற்றவர்கள்.

அப்படி எங்கள் பாடங்களுக்கு உரை நூல் எழுதியவரின் வகுப்பில் அமர்ந்து 
அவர் நடத்தும் பாடத்தைக் கேட்போம் என கனவிலும் நினைத்துக்கூட 
பார்த்ததில்லை.திரு அய்யம்பெருமாள் கோனார் மிகவும் எளிமையானவர். 
ஒரு வெள்ளை ஜிப்பாவும் எட்டுமுழ வேட்டியுடன் தான் வகுப்புக்கு வருவார்.

வந்தவுடன் அன்று நடத்தவேண்டிய பாடம் என்ன என்று பார்த்துவிட்டு 
புத்தகத்தை மூடிவிடுவார். பின்பு அருவி கொட்டுவதுபோல் அவர் 
வாயிலிருந்து பாடல்களும் அதற்கான  பதவுரையும், பொழிப்புரையும் தங்கு தடையின்றி வந்துகொண்டே இருக்கும். (ஏற்கனவே எல்லா பாடல்களுக்கும் பதவுரையும் பொழிப்புரையும் எழுதியவர் அல்லவா! சரளமாக வருவதற்கு 
கேட்கவா வேண்டும்.)

யாரையும் கடிந்து பேசமாட்டார். அவர் பாடம் நடத்தும்போது நாங்கள் 
எங்களையே மறந்து இருப்போம். ஒரு மணி நேரம் போவதே தெரியாது.  
அந்த அளவுக்கு பாடங்களை சுவை பட சொல்லுவார். அவர் போன்ற 
தமிழாசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

திரு ரம்போலா மாஸ்கரனாஸ் அவர்களின் தாய்மொழி தமிழ் அல்ல 
என்றாலும் அவரைப் போன்று தமிழில் தமிழைத் தாய்மொழியாகக் 
கொண்டவர்கள் பேசுவார்களா என்பது சந்தேகமே. அவர் அடிக்கடி 
உபயோகப்படுத்தும் சொல். தம்பி. நீ முயல்.என்பது. அதற்கு 
இரு பொருள் உண்டு. ஒன்று முயல் போல் எதிலும் வேகமாக
இருக்கவேண்டும் என்பது. இன்னொன்று எதையும் முயற்சி 
செய்யவேண்டும் என்பது.

அவர் இன்னொன்றும் சொல்வார். தேர்வு எழுதும்போது C வாங்கினால் 
போதும் என நினைத்துப் படிக்காதே.D வாங்க முயற்சி செய். அப்போதுதான் 
C ஆவது கிடைக்கும். இல்லாவிடில் F தான் கிடைக்கும் என்பார்.  

(அப்போதெல்லாம் தேர்வு எழுதுவோருக்கு மதிப்பெண்கள் தருவதில்லை. 
அதற்கு பதில், பெற்ற மதிப்பெண்களை தர வரிசைப்படுத்தி (Grade) அதை 
A Plus இல் ஆரம்பித்து F வரை குறியீடாகத்தான் தருவார்கள். C என்றால் 
40 லிருந்து 45 விழுக்காடு மதிப்பெண்கள். D என்றால் 75 லிருந்து 80 
விழுக்காடு மதிப்பெண்கள். F என்றால் தேர்வில் தோல்வி. 
இந்த தர வரிசைப்பற்றி பின்னர் எழுதுவேன்.)

இவரும் ஜிப்பா வேட்டியுடன் தான் வகுப்புக்கு வருவார்.

திரு சாமிமுத்து அவர்கள் எப்போதும் பேண்ட் சட்டையுடன் தான் 
வருவார். அவரது வகுப்பு கலகலப்பாக, ஜனரஞ்சகமாக இருக்கும். 
எல்லோரிடமும் ஒரு நண்பனைப் போல் பழகுவார். அந்த ஆண்டு 
தேசியக்கவி பாரதி அவர்களின் கண்ணன் பாட்டு எங்களுக்கு 
பாடமாக இருந்தது.

அதில் எங்கிருந்தொ வந்தான் இடைச்சாதி நானென்றான். என்ற பாடலை 
அவர் இராகம் போட்டுப் பாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. 
அதோடு அந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த 
'படிக்காத மேதை' அப்போது திருச்சி பிரபாத் திரை அரங்கில் 
திரையிடப்பட்டு இருந்தது. அந்த பாடலை இரசிக்க அந்த படத்தைப் 
பாருங்களென்று அவர் சொன்னதும், அதை நான் பார்த்ததும் நினைவுக்கு 
வருகின்றன.  


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

புதன், 16 அக்டோபர், 2013

நினைவோட்டம் 73வகுப்பறையில் 10 மணிக்கு இருக்கவேண்டுமே என்ற எண்ணத்தில், 
சைக்கிளை வகுப்பறை இருந்த கட்டிடம் அருகே நிறுத்திப் பூட்டிவிட்டு 
வகுப்புக்கு சென்ற நான், உணவு இடைவேளையின்போது சைக்கிளை 
எடுத்துக்கொண்டு போய் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வைக்கலாம் என 
கீழே வந்தால், சைக்கிள் அங்கே இல்லை என்றதும் பகீர் என்றது எனக்கு.

சைக்கிளை யாரோ திருடிக்கொண்டு போய் விட்டார்கள் போலிருக்கிறதே 
என நினைத்தபோது அழுகையே வந்துவிட்டது. மேற்கொண்டு 
என்ன செய்வது, யாரிடம் இதைப்பற்றிக் கேட்பது என்று யோசித்துக் 
கொண்டு நின்றபோது, கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அந்தோணி 
என்பவர் என் அருகில் வந்தார். என்ன சார்?  என்ன தேடுகிறீர்கள்?’ என்றார்.

காலையில் வகுப்புக்கு நேரமாகிவிட்டபடியால், இங்கு தான் எனது 
சைக்கிளை வைத்து பூட்டிவிட்டுப் போனேன். இடைவேளையில் சைக்கிள் 
நிறுத்தும் இடத்தில் அதை வைக்கலாம் என்று வந்தால் அதைக் காணவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’ என்று தயங்கியபடியே கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, உங்கள்  சைக்கிள் எங்கும் 
போய்விடவில்லை. சைக்கிளை அதை நிறுத்தும் இடம் தவிர வேறு 
எங்கும் நிறுத்தக்கூடாது என உங்களுக்குத் தெரியாதா? கல்லூரி 
துணை முதல்வர் அவர்களின் ஆணைப்படி நான் தான் உங்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் அருட் தந்தைகள் வசிப்பிடத்தில் (Fathers’ Lodge) 
 உள்ள அவரது அறையில் வைத்திருக்கிறேன். மாலையில் வகுப்பு 
விட்டதும் அவரது அறைக்கு சென்று அவரைப் பார்த்துவிட்டு நீங்கள் 
உங்கள் சைக்கிளை எடுத்து செல்லலாம். என்றார்.

அப்போது துணை முதல்வராக இருந்தவர்   மதிப்பிற்குரிய அருட் தந்தை 
இருதயம் (Rev Fr Irudhayam SJ)  அவர்கள்.

சைக்கிள் திருடு போகவில்லை என அறிந்ததும் சந்தோஷம் அடைந்தாலும் 
மாலையில் துணை முதல்வரைப் போய் பார்க்கவேண்டுமே என நினத்தபோது
சிறிது கலக்கமாகவே இருந்தது.அதுவரை அவரை நான் பார்த்ததில்லை. 
அவர் என்ன சொல்வாரோ என்று கவலைப்பட்டுக்கொண்டே வகுப்பில்
இருந்தேன்.  

மாலையில் வகுப்பு முடிந்ததும், எல்லோரும் வீட்டிற்கும், விடுதிக்கும் 
செல்ல நான் மட்டும் பலி ஆடு போல Fathers’ Lodge க்கு போனேன்.   

அங்கே கீழ் தளத்தில், மதியம் பார்த்த ஊழியர் திரு அந்தோணி நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், உங்கள் அதிர்ஷ்டம் ஃபாதர் 
வந்து விட்டார். நான்காவது தளத்தில் உள்ள அவரது அறையில் போய் 
பாருங்கள் என்றார்.

தயக்கத்தோடும், பயத்தோடும்  படியேறி, துணை முதல்வர் அவர்களின் 
அறையை அடைந்து கதவை மெதுவாக தட்டினேன். யாரது? எனக் 
கேட்டுக் கொண்டே அவர்  கதவைத் திறந்தும் முதலில் எனது கண்ணில் 
பட்டது பத்திரமாக அவரது அறையின் மூலையில் வைக்கப் பட்டிருந்த 
எனது சைக்கிள் தான்.

Good evening Father! எனது சைக்கிளை காலையில் வகுப்பறைக்கு வெளியே விட்டுவிட்டு சென்றுவிட்டேன். மதியம் அதை எடுத்து சைக்கிள் நிறுத்தும் 
இடத்தில் வைக்க சென்றபோது, அது இங்கு இருப்பதாக சொன்னார்கள்.
அதனால் தங்கள் அனுமதிபெற்று எடுத்து செல்ல வந்தேன். என்று 
தட்டுத்தடுமாறி தமிழில் சொன்னேன். அவர் தமிழர் என்றாலும் தமிழில் 
பேசக்கூட அப்போது வாய் வரவில்லை.

நான் நினைத்தது போல் இல்லை அவர் . சிரித்த முகமாகவே இருந்தார். 
ஆனால் கண்டிப்பாக பேசினார். கல்லூரியில் கண்ட இடங்களில் சைக்கிளை வைக்கக்கூடாது எனத் தெரியாதா? ஏன் வகுப்பறைக்கு அருகில் வைத்தீர்கள்?’ 
என்றார்.

 ஃபாதர். காலையில் NCC (Rifles) முடிய 8.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
அதற்குப் பிறகு மிளகுப்பாறை அருகே உள்ள வீட்டிற்கு போய் குளித்து 
உடை மாற்றி திரும்பி வரும்போது நேரம் ஆகிவிட்டபடியால், சைக்கிளை 
அங்கு வைத்து சென்றேன். அங்கு வைத்தது தவறுதான். இனி வைக்க 
மாட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் ஃபாதர். என்றேன்.

அதற்கு அவர், இனி அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்பது இருக்கட்டும். 
இப்போது செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அதனால் நீங்கள் 
நாளை காலை வகுப்புக்குப் போகுமுன் கல்லூரி அலுவலகத்தில் ஐம்பது 
பைசாவை அபராதத் தொகையாகக் கட்டிவிட்டு வகுப்புக்கு செல்லலாம்.

எனக்குத் தெரியும் நீங்கள் கட்டும் இந்த அபராத தொகை உங்களது பெற்றோருடையதுதான் என்று. நீங்கள் செய்த தவறால் உங்கள் 
பெற்றோர்களுக்கு வீண் செலவு. என்ன செய்ய. அப்போதுதானே அடுத்த 
முறை இந்தத் தவறை செய்யமாட்டீர்கள். என்றார்.

பிறகு என்னுடைய பெயரையும் D.No யும் குறித்துக்கொண்டு எனது 
சைக்கிளை எடுத்துப் போகச்‌ சொன்னார்.

நன்றி ஃபாதர். என சொல்லிவிட்டு, எனது சைக்கிளை மிகவும் சிரமப்பட்டு 
நான்காவது தளத்தில் இருந்து இறக்கி எடுத்துவந்தேன். அவர் சொன்ன 
அபராதத் தொகையை  கட்டுவதை விட, அந்த சைக்கிளை, நான்காவது 
தளத்திலிருந்து, படிகள் வழியாக கீழே கொண்டு வருவதே எனக்கு 
பெரிய தண்டனை போல் இருந்தது.

மறுநாள் முதல் வேலையாக காலையில் கல்லூரிக்கு சீக்கிரம் சென்று 
அலுவலகத்தில் ஐம்பது பைசா அபராதத் தொகையை கட்டி இரசீதைப் பெற்றுக்கொண்டு வகுப்புக்கு சென்றேன்.

அன்று காலை வழக்கம்போல் ஆங்கில வகுப்பு ஆசிரியர் திரு பானுமூர்த்தி 
அவர்கள் உள்ளே நுழைந்து, வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் வருகையை 
குறிக்கு முன்பு D.No. 2292, நீங்கள் அபராதத் தொகையைக் கட்டிவிட்டீர்களா? அப்படியென்றால் அந்த இரசீதைக் கொடுங்கள். என்றார்.


அவர் குறிப்பிட்ட எண் என்னுடையது என்பதால் எனக்கு ஆச்சரியமாக 
இருந்தது  நான் அபராதம் கட்டவேண்டுமென்று இவருக்கு எப்படித் 
தெரியுமென்று.

முதல் நாள் எனது பெயரையும் D.No யும் குறித்துக்கொண்ட 
துணை முதல்வர்  அதை அன்றே அலுவலகம் அனுப்பியிருக்கிறார். 
மறுநாள் காலை முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியரிடம் அந்த தகவலை 
அலுவலகத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பதை பின்னர் 
தெரிந்துகொண்டேன்.

நான் எழுந்து சென்று அந்த இரசீதைக் கொடுத்துவந்தேன்.அதுவே நான் 
கல்லூரியில் கட்டிய முதலும் கடைசியுமான அபராதத் தொகை. 
அதற்குப் பிறகு அபராதம் கட்டும்படி நான் நடந்துகொள்ளவில்லை. 
பின்னர் கேள்விப்பட்டேன். இதுபோல் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட 
அபராதத் தொகை கல்லூரியில் ஒரு கட்டிடம் கட்ட உபயோகப்படுத்தப் 
பட்டதென்று. இந்த தகவல் உண்மையா பொய்யா எனத் தெரியவில்லை!

நினைவுகள் தொடரும்    

வே.நடனசபாபதி