செவ்வாய், 8 அக்டோபர், 2013

நினைவோட்டம் 72


திருச்சி புனித வளவனார் கல்லூரியில் சேர்ந்தபோது முதலில் நகரப் 
பேருந்தில்தான் கல்லூரி சென்று வந்தேன். கல்லூரிக்கு சென்று விட்டு 
நேரே வீடு திரும்பியதால் பேருந்தில் செல்வது ஒன்றும் கடினமாகத்
தெரியவில்லை.

அப்போது தேசிய மாணவர் படையில் NCC (Rifles) என்ற புதிய பிரிவை தொடங்கியிருந்தார்கள். பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தோர்  NCC யில் சேர்ந்திருந்ததால், புகுமுக வகுப்பு (Pre University Course) மாணவர்கள் 
அனைவரும் அந்த புதிய பிரிவில் கட்டாயம் சேரவேண்டும் என்றார்கள். 
அதில் சேர்ந்து சான்றிதழ் பெற்றால் மருத்துவக் கல்லூரியில் சேரும்போது 
அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும் என்று சொன்னதால் 
ஜூலை மாதம் அதில் சேர்ந்தேன்.

NCC(R)NCC யிலிருந்து மாறுபடுத்திக் காட்டுவதற்காக, மேல் சட்டையை 
மட்டும் சாம்பல் வண்ணத்தில் வடிவமைத்திருந்தார்கள். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நாங்கள் அந்த ஒரு ஆண்டு பயிற்சி முடித்து கல்லூரியை 
விட்டு வெளியே வரும் வரை எங்களுக்கு சீருடை (Uniform) 
வழங்கப்படவில்லை.

அதனால் எங்களையே காக்கி வண்ணத்தில் காற்சட்டை (Pant) யும் காலுக்கு 
Bata நிறுவனத்தின் Canvas காலணியும் வாங்கி அணிந்து வர சொன்னார்கள். .

No.4. Madras Group N.C.C.R என்ற எங்களது பிரிவுக்கு Commanding Officer  
ஆக இருந்தவர் எங்கள் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த 
கேரளாவை சேர்ந்த திரு ஜோசப் அவர்கள் தான். மிகவும் கண்டிப்பானவர்.

காலையில் 6.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனைவரும் வந்துவிடவேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். 
காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கும் பயிற்சி 8.00 மணிக்குத்தான் முடியும். 
சில சமயம் பயிற்சி முடிய 8.30 மணி கூட ஆகிவிடும்.  

காலை 6.00 மணிக்கு கல்லூரியில் இருக்கவேண்டுமென்றால் வீட்டைவிட்டு 
5.30 மணிக்காவது கிளம்பவேண்டும். அந்த நேரத்தில் வீட்டருக்கே எந்த நகரப் பேருந்தும் வராது என்பதால் வீட்டிலிருந்து, சிறிது நடந்து வந்து புதுக்கோட்டை 
மன்னர் பங்களா அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில், திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து வரும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்லவேண்டும். 
சிறிது தூரம் நடக்கவேண்டும் என்பதால் வீட்டை விட்டு காலை 5 மணிக்கே கிளம்பிவிடுவேன். 

அது கூட பரவாயில்லை. பயிற்சி முடிந்து திரும்ப பேருந்து பிடித்து வீட்டுக்கு 
வந்து குளித்துவிட்டு .அவசர அவசரமாக சிற்றுண்டி அருந்தி, திரும்பவும் 
கல்லூரிக்கு 10 மணிக்குள் செல்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. 
அதுவும் காலையில் பேருந்தில் அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் கூட்டம் அதிகமாக இருக்குமாதலால் பயிற்சி முடிந்து வந்து நேரத்திற்குள் 
திரும்புவது பெரும்பாடாக இருந்தது.

ஒரு சைக்கிள் இருந்தால் நேரத்திற்கு போய் வரலாமே என எண்ணி 
அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் பேருந்தில் சென்று 
பயிற்சி முடித்து வந்து திரும்பவும் உடனே கல்லூரி செல்வது கடினமாக இருப்பதையும், சைக்கிளில் சென்றால் சௌகரியமாக இருக்கும் என்றும் மேலும் பேருந்துக்கு ஒரு வருடம் தரும் பணம் தருவதைவிட அந்த பணத்தில் சைக்கிள் வாங்கினால் வருடம் முடிந்ததும் சைக்கிள் நம்முடையதாகிவிடும் என்றும் எழுதிவிட்டு கடைசியில் ஒரு சைக்கிள் வாங்கித்தருமாறு கேட்டிருந்தேன்.

ஆனால் அப்பாவுக்கு  நான் கல்லூரிக்கு சைக்கிளில் போய் வருவதை விரும்பவில்லை.காரணம் S.S.L.C முடிக்கும் வரை எனக்கு சைக்கிள் ஒட்டவே தெரியாது. நான் கல்லூரியில் சேருவதற்கு முன்புதான் சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொண்டேன்.  

S.S.L.C தேர்வு முடித்து கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு காத்திருந்தபோது, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்று 
சொன்னபோது, அப்பா தயங்கினாலும் அம்மா சிபாரிசு செய்ததால் 
சம்மதித்தார்கள்.

எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த 
கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் திரு சீத்தாராமன் என்பவர், இளங்கோ 
மிதிவண்டி நிலையம் என்ற பெயரில் சைக்கிள்களை வாடகைக்கு தருவார். 
அப்போது ஒரு நாள் வாடகை ஒரு ரூபாய் தான்.  எனது பள்ளி நண்பர் 
சுந்தரேசனுடன் அங்கு போய் சைக்கிளை அரை நாள் வாடகைக்கு 
எடுத்து வந்தேன்.

வழக்கமாக எல்லோரும் ஒட்டிப் பழகும் இடமான எங்களூர் மாரியம்மன் 
கோவிலருகே  இரண்டு மணி நேரம் நண்பர் சுந்தரேசன் பின்னால் 
சைக்கிளைப் பிடித்துக்கொண்டு  வர, எல்லோரும் செய்யும் சேஷ்டைகளை 
செய்து முதுகை வளைத்து, நிமிர்த்தி, கீழே விழுந்து ஒருவழியாக ஓட்டக் கற்றுக்கொண்டேன்.

நான் கற்றுக்கொண்டதை அம்மாவிடம் காட்டவேண்டும் என்று எங்கள் 
தெருவில் ஒட்டிக்கொண்டு சென்று அம்மாவைக் கூப்பிட்டு பெருமையாய் காண்பித்துவிட்டு, திரும்ப நண்பர் சுந்தரேசனோடு போய் சைக்கிளை 
விட்டுவிட்டு அரை நாள் வாடகையான எட்டணாவை (50 பைசாக்கள்) 
கொடுத்து வந்தேன். உண்மையில் நான் அன்று சைக்கிள் ஓட்டியது(!) 
மூன்று மணி நேரம் தான்.  

நான் சைக்கிள் ஒட்டியதோ சன நடமாட்டம் இல்லாத கிராமத்தில். 
அதுவும் மூன்று மணி நேரம்தான்.திருச்சி போன்ற  பெரிய நகரத்தில், 
நான் இருந்த மின் வாரிய குடியிருப்பிலிருந்து தினம் போக்குவரத்து 
அதிகமாக உள்ள மெயின் கார்ட் கேட் (Main Guard Gate) வரை அதிக 
பயிற்சி இல்லாத என்னால் தினம் சைக்கிளில் போய் வர முடியுமா 
என்பதால் தான் அப்பா தயங்கி இருக்கிறார்கள்.
 
அம்மாவும், என் அண்ணன் திருவே சபாநாயகம் அவர்களும் அப்பாவிடம் 
எடுத்து சொன்னதும் கடைசியில் சைக்கிள் வாங்கித்தர சம்மதித்தார்கள். 
அப்பா சரி என்றதும் என் அண்ணனும் ஒரு Second hand சைக்கிளை வாங்கி  
TVS Lorry Service மூலம் அனுப்பினார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாயிருந்ததால், போக்குவரத்து அதிகம் இல்லாத 
இடமாக பார்த்து நான் சைக்கிளில் சென்று வந்தேன். நான் சென்ற பாதை 53 ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

மின் வாரிய குடியிருப்பு இருந்த மேட்டுப் பகுதியிலிருந்து கீழே இறங்கி, 
புதுக்கோட்டை மன்னர் பங்களா, இப்போது உள்ள அய்யப்பன் கோவில்
(அப்போது அது இல்லை) வரை நேராக சென்று, உய்யக்கொண்டான் கால்வாய் பாலத்தைக் கடந்து பாரதிதாசன் சாலையில் நுழைவேன். பின்னர் அந்த 
சாலையில் உள்ள  Guru Medical Hall க்கு முன்பே வலதுபுறம் திரும்பி, 
பட்டாபிராமன் சாலை வழியே போய், தென்னூர் பிஷப் சாலையில் நுழைந்து, வலப்புறம் திரும்பினால் தில்லைநகர் வளைவு வரும். அங்கே தில்லை 
நகருக்குள் நுழைந்து அதனுடைய பிரதான சாலை மூலமாக சாலை ரோடு 
சென்று, திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஏறி  
இறங்கி இடப்புறம் திரும்பி எங்களது கல்லூரிக்குள் நுழைவேன்.

அப்போதெல்லாம் பட்டாபி ராமன் சாலை மற்றும் தில்லைநகரில் 
போக்குவரத்து அதிகம் இருக்காது. எனவே என்னால் ஆரம்பத்தில் 
பயமில்லாமல் சைக்கிளில் பயணிக்க முடிந்தது.

அப்படி  சைக்கிளில் போய் வந்துகொண்டிருந்தபோது ஒரு நாள்   
NCC (Rifles) பயிற்சி முடிய  நேரம் ஆகிவிட்டது, வீட்டிற்கு வந்து குளித்து 
கல்லூரிக்கு திரும்பியது மணி 10 அடிக்க ஒரு மணித்துளி தான் இருந்தது. 
நேரத்தில் இருக்கையில் இல்லாவிட்டால் முதல்வரைப் பார்க்கவேண்டுமே 
என்ற அவசரத்தில் சைக்கிளை வகுப்பறை இருந்த கட்டிடம் அருகே 
நிறுத்திப் பூட்டிவிட்டு வேகமாக படியேறி வகுப்பில் அமர்ந்தேன்.

உணவு இடைவேளையின்போது சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் 
சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வைக்கலாம் என கீழே வந்தால் அங்கே 
எனது சைக்கிளைக் காணவில்லை! 


24 கருத்துகள்:

 1. உழைச்ச காசில் வாங்கிய சைக்கிள்திரும்ப கிடைத்து இருக்கும்னு நம்புகிறேன் !
  துப்பாக்கி எடுத்து சுட்ட நினைவுகளை அடுத்த பதிவில் சுடுவீர்கள்என எதிர்ப் பார்க்கிறேன் அய்யா !
  த.ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு K.A.பகவான்ஜி அவர்களே! சைக்கிள் என்னவாயிற்று என்பது அடுத்த பதிவில். NCC (Rifles) என்று தான் பெயரே தவிர ஒரு துப்பாக்கியைக் கூட கண்ணில் காட்டவில்லை. எனவே அது பற்றி எழுத வாய்ப்பில்லை. ஆண்டு முழுதும் வெறும் உடற் பயிற்சிதான். துப்பாக்கியைப் பிடித்தது அண்ணாமலை பலகலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் NCC யில் இருந்தபோதுதான்.

   நீக்கு
 2. இனிய அனுபவம்... முடிவில் திக்...

  ஆவலுடன் அடுத்த பகிர்வை எதிர்நோக்கி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. நீங்கள் கல்லூரிக்கு சைக்கிளில் சென்ற பாதையில்தான் நானும் சைக்கிளில் சிந்தாமணி பகுதியிலிருந்து ஜங்ஷன் ஏரியா சென்று வருவேன். இப்போது அந்த பாதையில் நடக்கவே பயமாக இருக்கிறது. அவ்வளவு வாகன நெரிசல். நினைவோட்டத்திற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! அப்போது பட்டாபிராமன் தெருவில் நடந்து செல்பவர்கள் கூட குறைவு.இப்போது நிச்சயம் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

   நீக்கு
 4. பூட்டியிருந்த சைக்கிளைக் காணோமா?!என்ன ஆச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! சைக்கிள் என்ன ஆச்சு என்பதைத்தான் அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.

   நீக்கு
 5. உடற்கல்வி ஆசிரியராக இருந்த
  கேரளாவை சேர்ந்த திரு ஜோசப் அவர்கள் தான். மிகவும் கண்டிப்பானவர்//

  ஜோசப்னு பேர் வச்சாலே பிரச்சினைதான். யாரையும் அனுசரித்து செல்ல மாட்டார்கள்..... என் அனுபவத்தில் சொல்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் கேட்டவரை ஜோசப் என்ற பெயருள்ளவர்கள், படைக்கும் திறன் கொண்டவர்களாகவும், சில சமயம் பிடிவாதம் கொண்டவர்களாகவும், தன் மதிப்பு குன்றாதவர்களாகவும் இருப்பார்களாம்!

   நீக்கு
  2. நன்றி திரு டிபிஆர் ஜோசப் அவர்களே!

   நீக்கு
 6. என் பார்வைக்குத்தான் தெரியவில்லை. மன்னிக்கவும் ஐயா. பிறகு வந்து படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகை தருகிறேன் ஐயா..உங்களின் வாழ்க்கை அனுபவங்கள் எங்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள் .நானும் உங்களப் போலத்தான் ஐயா.எட்டாவதுலதான் சைக்கிள் கத்துக்கிட்டன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. எனது வலைப்பதிவிற்கு முதன் முதல் வருகை தரும் புதுவை கலியபெருமாள் அவர்களே தங்களது கருத்திற்கு நன்றி!

   நீக்கு
 8. கோர்ட்டிலிருந்து மலைக்கோட்டை வருவதற்கு நானும் அந்தப் பாதையில் தான் போய் வருவேன். அதிக போக்குவரத்து இல்லாத சாலைகள் (அன்று). இப்போது எல்லாம் மாறிவிட்டது. நானும் செயின்ட் ஜோசப்பிலும் அண்ணாமலையிலும் படித்தவன்தான் பழை
  ய நினைவுகளை கொண்டு வந்தது உங்கள் பதிவு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. திரு Viya Pathy அவர்களே தாங்களும் புனித வளவனார் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் படித்தவர் என்பதும், நாம் இருவரும் பயணிக்க ஒரே பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வருகைக்கு நன்றி!

   நீக்கு
  2. 1969 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பீ.இ. முடித்தவன் நான். வீடு மலைக்கோட்டையில். இப்போது இருப்பது சென்னையில்.

   நீக்கு

  3. நான் வேளாண் அறிவியல் பட்டபடிப்பை மூன்றாம் ஆண்டு(1964-65) படித்துக்கொண்டு இருக்கும்போது தாங்கள் முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் 1966 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவன். தகவலுக்கு நன்றி!

   நீக்கு
 9. //சைக்கிளைக் காணவில்லை! //

  தண்டம் கட்டவேண்டியதுதான். வேறு வழி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நடந்ததை சொல்லிவிட்டீர்கள்!

   நீக்கு
 10. ஒவ்வொருவருக்கும் சைக்கிள் கற்ற அனுவம் மறக்க முடியாததாக இருக்கிறது . அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா! இப்போதெல்லாம் சைக்கிளை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T,N.முரளிதரன் அவர்களே! ஒரு திரைப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களுக்கு வடிவேலு அவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுப்பதை அழகாக காண்பித்திருப்பார்கள். அதுபோலத்தான் ஒவ்வொருவரும் கற்றுகொள்ளும்போது புதிய அனுபவத்தை பெற்றிருப்பார்கள்.

   நீக்கு