செவ்வாய், 22 அக்டோபர், 2013

நினைவோட்டம் 74புனித வளவனார் கல்லூரியின் மேதக்க இலட்சியமே, தரம் வாய்ந்த 
கல்வியை உண்மையாக, நன்முறையில் இந்த சமூகத்திற்கு தருவது 
என்பதுதான். அதனால் தான் கல்லூரியின் குறிக்கோளை (Motto)  
“Pro Bono Et Vero” என வைத்திருக்கிறார்கள். இலத்தீனில் (Latin) உள்ள 
இந்த சொற்களுக்கான பொருள் For the Good and the True. அதாவது 
'நன்மைக்கும் உண்மைக்கும்' என்பதாகும்.

குறிக்கோள் என்னவோ, அதையே எங்கள் கல்லூரியில் பணியாற்றிய 
பேராசிரியர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 
ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியிலிருந்த சென்ற, விளையாட்டுப் 
பிள்ளைகள் போலிருந்த எங்களை மிகவும் பொறுப்போடும், சிரத்தையோடும் கவனித்துக்கொண்டார்கள்.

புனித வளவனார் கல்லூரியில் படித்தபோது நான் கற்றுக்கொண்ட 
காலந்தவறாமை (Punctuality), நேர மேலாண்மை (Time Management), 
விதிகளை மதித்தல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளவும், 
அவைகளை பின்பற்றவும் காரணமாக இருந்தது எனது கல்லூரியும், 
அதில் பணியாற்றிய கடமைமிகு ஆசிரியர்களும் தான் என்பதை 
இப்போதும் பெருமையோடு சொல்லுவேன்.

இந்த பழக்கங்கள் பின்னர் வங்கியில் பணியாற்றியபோது மிகவும் 
உதவியாக இருந்தன என்பது உண்மை.

எங்கள் கல்லூரியை நினைக்கும்போது எனக்கு தமிழ் பாடம் நடத்திய 
பேராசிரியர்கள் திரு அய்யம்பெருமாள் கோனார், திரு சாமிமுத்து, 
திரு ரம்போலா மாஸ்கரனாஸ், ஆங்கில பாடம் எடுத்த பேராசிரியர்கள்  
Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ,  Rev Fr T.N.செக்யூரா SJ, மற்றும்  
திரு பானுமூர்த்தி, இயற்பியல் பேராசிரியர் திரு அனந்தகிருஷ்ணன், 
வேதியல் ஆசிரியர் திரு மாத்யூ, தத்துவ ஆசிரியர் திரு பெர்னாண்டெஸ், வணிகவியல் ஆசிரியர் திரு பெர்னாண்டெஸ் தாவரவியல் ஆசிரியர் திரு வெங்கடராமன், உடற்கல்வி ஆசிரியர் திரு ஜோசப் ஆகியோரை 
நினைக்காமல் இருக்கமுடியாது.

நான் படித்தபோது A Group (கணிதம்) எடுத்தவர்களும் B Group 
(இயற்கை அறிவியல் பாடம்) எடுத்தவர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடங்கள் காரணமாக வெவ்வேறு வகுப்பில் இருந்தாலும், 
மொழிப்பாட வகுப்புக்கு மட்டும் அவரவர்கள் இரண்டாம் பாடமாக 
எடுத்துள்ள மொழிப்பாட வகுப்புக்கு செல்வோம்.

அதன்படி தமிழை இரண்டாம் பாடமாக தேர்ந்தெடுத்த என்னைப் 
போன்றோர் வேறு வகுப்பில் உள்ள தமிழை இரண்டாம் பாடமாக 
எடுத்துள்ள மாணவர்களுடன் சேர்ந்துகொள்வோம்.

எங்கள் வகுப்பில் வேறு மாநில மற்றும் வெளி நாட்டு மாணவர்களும் 
படித்து வந்ததால், எங்களோடு படித்து வந்த கேரள மாநில மாணவர்கள்  
மலையாள வகுப்புக்கும் வெளிநாட்டவரும் மற்றும் விருப்பப்படுவோரும் 
ஃபிரெஞ்சு வகுப்புக்கும் இந்தி மற்றும் வடமொழி வகுப்புகளுக்கும் 
சென்றுவிடுவார்கள்.

எங்களுக்கு அதிக நாட்கள்  தமிழ் பாடம் நடத்தியது திரு சாமிமுத்து 
அவர்கள்தான் என்றாலும் சில நாட்களில் திரு ரம்போலா மாஸ்கரனாஸ், 
மற்றும் திரு அய்யம்பெருமாள் கோனார்,ஆகியோரும் வகுப்பு 
நடத்தியிருக்கிறார்கள்.

நான் முன்பே அக்டோபர் 28, 2011 இல் நினைவோட்டம் 54 தொடரில் 
எழுதியிருந்தபடி S.S.L.C தமிழ் பாடத்திற்கா, பேராசிரியர் அய்யம்பெருமாள் 
கோனார் அவர்களால் எழுதப்பட்டு திருச்சி பழனியப்பா பிரசுரம் வெளியிட்ட தமிழ் பாடத்திற்கான கோனார் நோட்ஸ் எனப்படும், கோனார் தமிழ் உரை நூல் வாங்காத மாணவர்களே  அப்போது இல்லை எனலாம்.

P.U.C வகுப்பில் சேர்ந்த பிறகும், கோனார் தமிழ் உரை நூல் தான் 
வாங்கியிருந்தோம். எங்களுக்கு வகுப்பு எடுக்கும் அவர் வரும் வரை, எங்களுக்கெல்லாம் அவர் பாடம் எடுப்பார் என நினைக்கவில்லை. 
திரு அய்யம்பெருமாள் கோனார் அவர்களை முதன் முதல் பார்த்தபோது 
எங்கள் எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. காரணம் நாங்கள் எல்லோரும் 
அவரது உரை நூலை S.S.L.C படிக்கும்போது வாங்கிப் படித்தவர்கள். 
அதனால் பலனும் பெற்றவர்கள்.

அப்படி எங்கள் பாடங்களுக்கு உரை நூல் எழுதியவரின் வகுப்பில் அமர்ந்து 
அவர் நடத்தும் பாடத்தைக் கேட்போம் என கனவிலும் நினைத்துக்கூட 
பார்த்ததில்லை.திரு அய்யம்பெருமாள் கோனார் மிகவும் எளிமையானவர். 
ஒரு வெள்ளை ஜிப்பாவும் எட்டுமுழ வேட்டியுடன் தான் வகுப்புக்கு வருவார்.

வந்தவுடன் அன்று நடத்தவேண்டிய பாடம் என்ன என்று பார்த்துவிட்டு 
புத்தகத்தை மூடிவிடுவார். பின்பு அருவி கொட்டுவதுபோல் அவர் 
வாயிலிருந்து பாடல்களும் அதற்கான  பதவுரையும், பொழிப்புரையும் தங்கு தடையின்றி வந்துகொண்டே இருக்கும். (ஏற்கனவே எல்லா பாடல்களுக்கும் பதவுரையும் பொழிப்புரையும் எழுதியவர் அல்லவா! சரளமாக வருவதற்கு 
கேட்கவா வேண்டும்.)

யாரையும் கடிந்து பேசமாட்டார். அவர் பாடம் நடத்தும்போது நாங்கள் 
எங்களையே மறந்து இருப்போம். ஒரு மணி நேரம் போவதே தெரியாது.  
அந்த அளவுக்கு பாடங்களை சுவை பட சொல்லுவார். அவர் போன்ற 
தமிழாசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

திரு ரம்போலா மாஸ்கரனாஸ் அவர்களின் தாய்மொழி தமிழ் அல்ல 
என்றாலும் அவரைப் போன்று தமிழில் தமிழைத் தாய்மொழியாகக் 
கொண்டவர்கள் பேசுவார்களா என்பது சந்தேகமே. அவர் அடிக்கடி 
உபயோகப்படுத்தும் சொல். தம்பி. நீ முயல்.என்பது. அதற்கு 
இரு பொருள் உண்டு. ஒன்று முயல் போல் எதிலும் வேகமாக
இருக்கவேண்டும் என்பது. இன்னொன்று எதையும் முயற்சி 
செய்யவேண்டும் என்பது.

அவர் இன்னொன்றும் சொல்வார். தேர்வு எழுதும்போது C வாங்கினால் 
போதும் என நினைத்துப் படிக்காதே.D வாங்க முயற்சி செய். அப்போதுதான் 
C ஆவது கிடைக்கும். இல்லாவிடில் F தான் கிடைக்கும் என்பார்.  

(அப்போதெல்லாம் தேர்வு எழுதுவோருக்கு மதிப்பெண்கள் தருவதில்லை. 
அதற்கு பதில், பெற்ற மதிப்பெண்களை தர வரிசைப்படுத்தி (Grade) அதை 
A Plus இல் ஆரம்பித்து F வரை குறியீடாகத்தான் தருவார்கள். C என்றால் 
40 லிருந்து 45 விழுக்காடு மதிப்பெண்கள். D என்றால் 75 லிருந்து 80 
விழுக்காடு மதிப்பெண்கள். F என்றால் தேர்வில் தோல்வி. 
இந்த தர வரிசைப்பற்றி பின்னர் எழுதுவேன்.)

இவரும் ஜிப்பா வேட்டியுடன் தான் வகுப்புக்கு வருவார்.

திரு சாமிமுத்து அவர்கள் எப்போதும் பேண்ட் சட்டையுடன் தான் 
வருவார். அவரது வகுப்பு கலகலப்பாக, ஜனரஞ்சகமாக இருக்கும். 
எல்லோரிடமும் ஒரு நண்பனைப் போல் பழகுவார். அந்த ஆண்டு 
தேசியக்கவி பாரதி அவர்களின் கண்ணன் பாட்டு எங்களுக்கு 
பாடமாக இருந்தது.

அதில் எங்கிருந்தொ வந்தான் இடைச்சாதி நானென்றான். என்ற பாடலை 
அவர் இராகம் போட்டுப் பாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. 
அதோடு அந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த 
'படிக்காத மேதை' அப்போது திருச்சி பிரபாத் திரை அரங்கில் 
திரையிடப்பட்டு இருந்தது. அந்த பாடலை இரசிக்க அந்த படத்தைப் 
பாருங்களென்று அவர் சொன்னதும், அதை நான் பார்த்ததும் நினைவுக்கு 
வருகின்றன.  


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

16 கருத்துகள்:

 1. தமிழ்ப்பாட வகுப்புகள் பற்றி சுவையான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 2. புனித வளவனார் கல்லூரியில் படித்தபோது நான் கற்றுக்கொண்ட
  காலந்தவறாமை (Punctuality), நேர மேலாண்மை (Time Management),
  விதிகளை மதித்தல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளவும்,
  அவைகளை பின்பற்றவும் காரணமாக இருந்தது எனது கல்லூரியும்,
  அதில் பணியாற்றிய கடமைமிகு ஆசிரியர்களும் தான் என்பதை
  இப்போதும் பெருமையோடு சொல்லுவேன்.//

  இத்தகைய பண்புகள்தான் படிப்பை விடவும் மேலானவைகள். கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்பில் முதலாவது வரவேண்டும் என்பதை விட இவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். அதாவது alround development. படிப்புடன் நல்ல பண்புகள் உள்ளவர்களால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்பதை இத்தகைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த பலரும் நிரூபித்துள்ளனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் கூறுவது உண்மைதான். படிப்புடன் நல்ல பண்புகள் உள்ளவர்களால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்பதை எங்கள் கல்லூரியில் படித்த பலரும் நிரூபித்துள்ளனர்.

   நீக்கு
 3. இனிமையான நினைவுகள் ஐயா... படிக்காத மேதை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்... பாடல்கள் சொல்லவே தேவையில்லை... சமீபத்திய தினமலர் வாரமலரில் கூட இந்தப் படத்தைப் பற்றி ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் சிறப்பாக சொல்லி இருந்தார்... தொடர்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. இனிமையான நினைவுகள். நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியப் பெருமக்களில் நிறைய பேரை நேரில் பார்த்து இருக்கிறேன். நிறையபேர் திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகே இருந்த பிரிட்டோ காலனியிலும் மேலச்சிந்தாமணியில் இருந்த தெரசா தோப்பிலும் குடி இருந்தனர்.(இரண்டுமே ஜோசப் கல்லூரிக்கு சொந்தமானவை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!. தெப்பக்குளம் தபால் நிலையம் அருகேயுள்ள ஆசிரியர்கள் விடுதி அருகே இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விஜயம் செய்ததுண்டு. இப்போது அந்த கடை இருக்கிறதா எனத் தெரியவில்லை.

   நீக்கு
  2. நீங்கள் குறிப்பிடும் ஐஸ் கிரீம் கடையின் பெயர் “ மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் “ என்பதாகும். இப்போதும் திருச்சி தெப்பக்குளம் அருகே அந்த ஐஸ்கிரீம் கடையும், அப்போதிருந்தே சிங்காரத்தோப்பில் இருக்கும் பழைய கடையும் உள்ளன. அந்த க்டையின் பெரியவர் மறைவுக்குப் பின்னர் அவரது வாரிசுகள் நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலும், தென்னூர் ஸ்டேட் வங்கி எதிரிலும், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகிலும் இப்போது கிளைகள் தொடங்கி உள்ளனர். நானும் அப்போதிருந்தே “மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம் “ ரசிகன். இப்போதும் ஏதேனும் ஒரு கடைக்கு செல்வதுண்டு.

   நீக்கு
  3. தகவலுக்கு நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 5. நல்ல நினைவுகள். நானும் SSLC யின் போது கோனார் நோட்ஸ் வாங்கிப் படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! கோனார் நோட்ஸ் வாங்கிப் படிக்காதோர் உண்டோ?

   நீக்கு
 6. //ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியிலிருந்த சென்ற, விளையாட்டுப்
  பிள்ளைகள் போலிருந்த எங்களை மிகவும் பொறுப்போடும், சிரத்தையோடும் கவனித்துக்கொண்டார்கள்.//

  நாங்கள் படிக்கும் காலத்திலேயே, இத்தகைய ஆசிரியர்கள் குறைவு. ட்யூஷனில் சேரவில்லை என்று சந்தேகத்துக்கு பதில் சொல்லாத ஆசிரியர்களும் இருந்தார்கள். சிறப்பான ஆசிரியர்களும் இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த காலத்தில் இருந்த ஆசிரியர்கள் போன்றவர்கள் இப்போது மரபற்றழிந்தவர்கள் (Extinct) ஆகிவிட்டார்கள்!

   நீக்கு
 7. அய்யம்பெருமாள் கோனார் அவர்களே தமிழ் வகுப்பு எடுக்க அதில் அமரும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது!அருமையான நினைவுப்பகிர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு