திங்கள், 27 ஜூன், 2011

நினைவோட்டம் 49

என் அண்ணன் திரு சபாநாயகம்,நான் முன்பே
சொல்லியிருந்தது போல ஒரு சிறந்த ஓவியரும் கூட.
அவர் வண்ணப் படங்கள் மற்றும் கருப்பு வெள்ளை
படங்கள் வரையும்போது அருகில் இருந்து கவனித்ததும்
உண்டு.

அதனால் தானோ என்னவோ எனக்கும் படம்
வரைய ஆசை வந்தது போலும்.

அவர் Indian ink ல் வரைந்த புகழ் பெற்ற தத்துவ ஞானி
Bertrand Russell அவர்களின் படமும், எங்களது அம்மா
மற்றும் அப்பா புகைப் படங்களைப்பார்த்து Indian ink ல்
வரைந்த படங்களும் இன்றைக்கும் அவரது
ஓவியத்திறமையை சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.

அவரது படத்தையே கூட சில ஆண்டுகளுக்கு முன்
வரைந்து இருக்கிறார்.

அவர் வரைந்தது போல, நானும் அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் முதலாண்டு வேளாண்
அறிவியல் படிக்கும்போது, எங்களது துறை வெளியிட்ட
(1962-63) ஆண்டு மலருக்காக, மகாத்மா காந்தி
அவர்களின் படத்தை Indian ink ல்
வரைந்து கொடுத்தேன்.

அந்த படத்தின் கீழே தேசியக்கவி பாரதியின் வைர வரிகளான

‘பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை,
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!!


என எழுதிக்கொடுத்தேன்.

ஆண்டுமலர் கையில் வந்தபோது, நான் வரைந்த
படத்தை அச்சில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை
விவரிக்க இயலாது. துரதிர்ஷ்டமாக, அந்த ஆண்டு
மலரை பாதுகாக்க மறந்துவிட்டேன்.

எனது அண்ணன் ஒரு புகைப்பட கலைஞரும் கூட.
எங்கள் வீட்டு திருமணங்களில் புகைப்படம் அவர்தான்
எடுப்பார். வீட்டிலேயே புகைப்பட சுருள்களை கழுவி
படமாக்க ‘Dark Room’ வைத்திருந்தார்.

வீட்டில் ‘Enlarger’ ம் வைத்திருந்தார். அவர் எடுத்த
படங்களை கழுவி ‘பிரிண்ட்’ போடும்போது கூடவே
இருந்து பார்த்திருக்கிறேன். எனது திருமண
புகைப்படங்கள் கூட அவர்தான் எடுத்தார். ஏனோ
எனக்கு அந்த கலைமேல் எனக்கு நாட்டம்
ஏற்படவில்லை.

நான் 9 வது படிக்கும்போது எங்கள் பள்ளியில், அரசின்
ஐந்தாண்டு திட்டத்தைப்பற்றி பேச
மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.
எனக்கு அதில் பங்கேற்க ஆசையாக இருந்தது. எனவே
நானும் அதில் பேச பெயர் கொடுத்துவிட்டு, பின்பு
என் அண்ணனிடம் நான் பேசுவதற்கான பேச்சை
தயார் செய்து தருமாறு கேட்டேன்.

காரணம் நான் முன்பே எழுதியிருந்தது போல
என் அண்ணன் சிறந்த பேச்சாளரும் கூட. அப்போதே
அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து, அவர்களது
இலக்கிய மன்றங்களில் பேச அழைத்திருக்கிறார்கள்.
(இன்றைக்கும் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு
பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.)

அவரும் நான் பேச வேண்டிய பேச்சை
எழுதிக்கொடுத்தார்.அதை,மனப்பாடம் செய்து
அவரிடம் பேசிக்காட்டியபோது, போட்டியில் எவ்வாறு
ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் எனப் பயிற்சி
கொடுத்தார். போட்டியில் என்னைப்போலவே எனது
வகுப்புதோழர் திரு பழமலை(கவிஞர் த.பழமலய்)யும்
கலந்துகொண்டார்.

குறிப்பிட்ட நேரத்தில்,நானும்,நண்பர் பழமலையும்
மற்றும் சிலரும் நடுவர்கள் முன்னாலும்,
பார்வையாளர்களாக அமர்ந்திருந்த எங்கள் பள்ளி
மாணவர்கள் முன்னாலும் பேசினோம்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது அரியலூரில்,மாணவர்கள்
முன்னால் பாட்டு ஒப்புவித்தல் போட்டியில்
கலந்துகொண்டு பரிசு பெற்றிருந்தாலும், இந்த
போட்டியில் பேசும்போது ஏதோ ஒரு நடுக்கம்
இருந்தது உண்மை.

ஆனால் என் அண்ணன் சொல்லிக்கொடுத்தது போல்
எப்படியோ பேசி சமாளித்துவிட்டேன்.

போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டபோது,
நண்பர் பழமலைமுதலாவதாகவும்,நான்
இரண்டாவதாகவும் வந்திருந்தோம்.

எங்கள் இருவருக்கும் ‘Writer’ ‘பேனா’ பரிசாக கொடுத்தார்கள்.நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

திங்கள், 20 ஜூன், 2011

நினைவோட்டம் 48

கல்கி இதழுக்கு ‘வெள்ளம்’ என தலைப்பில் எனது
கதையை அனுப்பிவிட்டு காத்திருந்தபோது, அதற்குள்
இன்னொரு போட்டிக்கான விளம்பரம் வந்தது.
ஒரு நாவலை ஆய்வு செய்து எழுதவேண்டும்
என்பதே அது.

சிறுகதைப்போட்டியில் கலந்துகொண்ட‘அனுபவம்’(?)
இருந்ததால், அந்த போட்டியிலும் கலந்துகொள்ள
விரும்பினேன்!!!

எந்த நாவலைப் பற்றி எழுதலாம் என நினைத்தபோது,
எனக்கு பிடித்த எழுத்தாளரான திரு தேவன் அவர்களின்
‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவல் நினைவுக்கு வந்தது.

"எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே
இருக்கவேண்டும்.பேனாவை கீழேவைத்துவிடக்கூடாது.
அப்படி வைத்துவிட்டு எடுத்தால் அது கனக்கும்.
உலுக்குமரம் போடுவது போல் இருக்கும் என் அந்த
நாவலில் தேவன் அவர்கள் எழுதியிருந்தது ஏனோ
என்னை ஈர்த்ததால்,உடனே அந்த நாவலைப்பற்றிய
எனது கருத்தை எழுதி அனுப்பிவிட்டு முடிவுக்கு
காத்திருந்தேன்.

இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது. 15 வயதில் ஒரு நாவலை ஆய்வு
செய்து எழுதம் துணிவு(!) எவ்வாறு வந்தது என்று.

‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலை பற்றி விமரிசனம்
எழுதும்போது, எனக்கு சந்தேகம்தான். ஏனெனில்
அந்த போட்டிக்கு நாவலாக பிரசுரமானவைகளைப்
பற்றியே எழுதவேண்டும் என்பது விதி.

ஆனந்த விகடனில் தொடராக மட்டுமே வந்திருந்த
அந்த நாவல், அப்போது நூலாக வெளிவரவில்லை.
எனவே எனது படைப்பு நன்றாக இருந்தாலும்,
நிராகரித்துவிடுவார்கள் எனத்தெரியும்.

ஆனால் எனது கதை மட்டும் நிச்சயம்
தேர்ந்தெடுக்கப்படும் என்று ஏனோ எனக்குள்
ஒரு நைப்பாசை இருந்தது.

இரண்டு போட்டிகளுக்கும், எனது படைப்புகளை
அனுப்பும்போது, எனது பள்ளியின் முகவரியை
கொடுத்திருந்ததால், தினம் அஞ்சல் ஊழியர்
பள்ளிக்கு வரும்போது, நல்ல செய்தியுடன் எனது
வகுப்புக்கு அவர் வருகிறாரா என காத்திருப்பேன்.

கடைசியில் போட்டிகளின் முடிவு வந்தபோது எனது
கனவு நிறைவேறவில்லை.இரண்டு போட்டிகளிலுமே
எனக்கு தோல்விதான்.

எனது கதை தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு
ஏமாற்றத்தை தந்தாலும் ‘கல்கி’ அலுவலகத்திலிருந்து
நிராகரிக்கப்பட்ட எனது படைப்பு திரும்ப வரும் என
நினைத்து இருந்தேன்.

ஆனால் எனது படைப்புகள் இரண்டுமே திரும்ப
வரவில்லை. அப்போதுதான் தெரிந்தது. அவைகளை
திரும்பப்பெறவேண்டுமெனில் போதிய அஞ்சல்
தலைகள் வைத்து அனுப்பவேண்டுமென்று.

படைப்புகளை அனுப்பும்போது அவற்றின் படிகளை
எடுத்துவைக்காததால் எனது முதல் படைப்பு
என்னிடம் இல்லாமல் போய்விட்டது.

(மன்னிக்கவேண்டும் திரு சென்னை பித்தன் அவர்களே!
உங்களது விருப்பத்தை நிறைவேற்றமுடியவில்லை!!)

S.S.L.C தேர்வு முடிந்து விடுமுறையில் அப்போதைய
திருச்சி மாவட்டத்தில் இருந்த எனது பெரியம்மா
ஊரான கோமான் என்ற ஊருக்கு (தற்சமயம் இது
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது) போயிருந்தபோது,
‘குமுதம்’ வார இதழ் முதன் முதல் கதை
எழுதுபவர்களுக்காக, ஒரு போட்டி வைத்திருந்ததைப்
பார்த்தேன்.

அந்த போட்டிக்கும் கதை எழுத ஆசை திரும்ப வந்தது.
ஏற்கனவே எழுதி ‘சூடு’ கண்டிருந்ததால்,அந்த போட்டிக்கு
கதை எழுத ஏனோ முயற்சிக்கவில்லை.

ஒருவேளை எனது முதல் கதை, போட்டியில்
வெற்றி பெற்றிருந்தால், நானும் ஒரு எழுத்தாளனாக
ஆகியிருப்போனோ என்னவோ!

நல்லவேளை வாசகர்கள் தப்பித்துக்கொண்டார்கள்!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு, எங்கள் வங்கியின்,
ஊழியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியின்போது
கேட்ட, சிந்தனையை தூண்டும் ஒரு சொற்றொடர்
என்னை யோசிக்கவைத்தது. முதல் தோல்வியை
வெற்றிப்படியாக நினைத்து, திரும்பவும் கதை
எழுத முயற்சித்திருக்கலாமோ என்று.

என்னை சிந்திக்க வைத்த அந்த சொற்றொடர்
இதுதான்.

“You only fail, when you stop trying!நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வியாழன், 16 ஜூன், 2011

நினைவோட்டம் 47

நான் கதை எழுத நினைத்த நேரம் பார்த்து, கல்கியில்
‘மாவட்டசிறுகதைகள்’ என்ற தலைப்பில் ஒரு போட்டி
வைத்திருந்தார்கள்.

அந்த போட்டிக்கு அனுப்பும் கதைகள் அந்தந்த
மாவட்டத்தின் நிகழ்வுகள்,சம்பந்தப்பட்டிருக்க
வேண்டும் என்பது விதி.

நான் எனது மாவட்டமான தென் ஆற்காடு மாவட்டம்
சார்பாக எழுத ஆசைப்பட்டேன்!!!!

முதல் கதையை அதுவும் பல முது பெரும்
எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் போட்டிக்கு
அனுப்ப நினைத்த எனது எண்ணம் ஆசை
அல்ல பேராசை என்றே எண்ணுகிறேன்.

இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்புதான்
வருகிறது.எனது முயற்சியை அசட்டுத் துணிச்சல்
என்பதா அல்லது அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை(!)
என எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.

என்ன எழுதலாம் என யோசித்த போது, அப்போது
செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது.
பெண்ணாடம்(பெண்ணாகடம்) பக்கம் ஒருவர் தனது
மனைவியின் தலையைத்துண்டித்து எடுத்துக்கொண்டு
வந்து, காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்
என்பது தான் அது.

நாம் ஏன் இந்த நிகழ்வை ‘கரு’வாக எடுத்துக்கொண்டு
எழுதக்கூடாது என எண்ணி எழுதத் தொடங்கினேன்.
கதையின் நாயகன் ஒரு சந்தேகப்பேர்வழி என்றும்,
தினம் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை
போடுபவன் என்றும், ஒருநாள் குடிபோதையில்
மனைவியை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டிவிட்டு,
தலையுடன் வந்து ‘சரண்’ அடைவதாகவும், பின்னால்
தான் செய்த தவறை உணர்ந்து காவல்
நிலையத்திலேயே தூக்கு போட்டு இறந்துவிடுவதாகவும்
கதையை அமைத்திருந்தேன்.

அப்போதெல்லாம் ‘கதை’ எப்படி எழுதுவது
என்பதை பற்றி, திரு எஸ்.ஏ.பி போலவோ,
திரு சுஜாதா போலவோ யாரும் புத்தகம்
எழுதவில்லை.

எனவே கதையை எப்படி ஆரம்பிப்பது என
யோசித்தபோது,‘கல்கி’அவர்கள் பொன்னியின்
செல்வன் நாவலில் முதல் அத்தியாயத்தில்
வந்தியத்தேவன் குதிரையில் வரும்போது,
வீராணம் ஏரியை வர்ணித்திருப்பது நினைவுக்கு
வந்தது.

நாமும் அதுபோல் ஆரம்பிக்கலாமென்று எண்ணி,
பெண்ணாடத்தில் ஓடும் வெள்ளாற்றின் கரையோரம்,
எனது கதையின் நாயகன் வசிப்பதாகவும், ஒருநாள்
வெள்ளம் வருகையில் அவன் குடித்துவிட்டு
ஆற்றைக்கடந்து வீட்டுக்கு வருவதுபோல்
ஆரம்பித்திருந்தேன்.

எனக்கு தெரிந்த நடையில் வெள்ளாற்றின்
வெள்ளத்தை, அதன் வேகத்தை, வெள்ளம்
சுழித்துக்கொண்டு கரைபுரண்டு ஓடியதை
வர்ணித்திருந்தேன்.

கதை முடியும்போது, அவனது பிணத்தை
காவல்துறையினர் அவனது உறவினர்களிடம்
ஒப்படைப்பதாகவும், அவனது உடலை ஆற்றின்
கரையோரம் எரியூட்டியபோது, வெள்ளாறு
சப்தமில்லாமல் ஓடியது, தனது அனுதாபத்தை
தெரிவிப்பது போல் இருந்ததாக,முடித்திருந்தேன்.

நான் அப்போது பள்ளி இறுதி ஆண்டு
படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணனுக்கு
தெரியாமல் ,அவர் வீட்டில் இல்லாதபோது முழு நீள
வெள்ளைத்தாளில் எழுதி ‘கல்கி’ அலுவலகத்திற்கு
அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

முடிவு வருவதற்குள் ஏகப்பட்ட கற்பனைகள். எனது
கதை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது போலவும்.
எனது புகைப்படம் ‘கல்கி’யில் வருவது போலவும்,
அண்ணன் உட்பட அனைவரும் என்னை
பாராட்டுவதுபோலவும் ஏராளமான பகல் கனவுகள்!நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 13 ஜூன், 2011

நினைவோட்டம் 46

என் அண்ணனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு.
யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே பதில்
எழுதிவிடுவார்.

அந்த பழக்கம் எனக்கும் தொத்திக்கொண்டது.எந்த
கடிதம் வந்தாலும் அதைப்படித்தவுடனே பதில்
எழுதுவது என் வழக்கமாக ஆகிவிட்டது.

அதுவே பின்னால் வங்கியில் வேலை செய்யும்போது
தலைமை மற்றும் வட்டார அலுவலகத்திலிருந்து வரும்
அஞ்சல்களுக்கு உடன் பதில் எழுதுவது என்பது
தானாகவே வந்துவிட்டது.

இன்றைக்கும் மின் அஞ்சல் மூலம் வரும்
அஞ்சல்களுக்கும் உடன் பதில் எழுதிக்கொண்டு
இருக்கின்றேன்.

(இந்த நேரத்தில் ஒன்றை சொல்லியாகவேண்டும்.
எனக்கு திருமணமாகிய போது புது டில்லியில்
இருந்தேன். காலை 8.30 மணிக்கு அலுவலகம்
கிளம்பினால் மாலை வீட்டுக்கு 6 மணிக்கு மேல்
தான் வருவேன்.வந்தவுடன் காஃபி கூட சாப்பிடாமல்
அன்றைக்கு வந்த கடிதங்களைப் படித்துவிட்டு
உடனே ‘இன்லண்ட் கடிதத்தில்’ பதில்
எழுதிவிட்டுத்தான் மற்ற வேலைகளைப்பார்ப்பேன்.
இது பற்றி இன்றும் என் மனைவி
சொல்லிக்கொண்டிருக்கிறார்.)

என் அண்ணன் தான் செய்யவேண்டிய காரியங்களை
ஒரு சிறிய காகிதத்தில்(Note Pad ல்)வரிசை எண்
இட்டு குறித்துக்கொள்வார்.பின்னால் அந்த காரியங்கள்
முடிந்ததும் அவைகளை குறிப்பு நோட்டிலிருந்து
நீக்கிவிடுவார்.அதனால் நினைத்த காரியங்களை
மறக்காமல் அவர் செய்வதை பார்த்திருக்கிறேன்.

அதையே பின் பற்றி,நானும் பின் நாட்களில் வங்கியில்
வேலை செய்யும்போது செய்யவேண்டிய வேலைகளை
மேசை காலண்டரில் குறித்துவைத்து பணியை
மறக்காமல் செய்து முடித்ததுண்டு.

இன்றைக்கும் ஏதேனும் ஊருக்கு செல்லும்போது எடுத்து
செல்ல வேண்டியவைகளை முன்பே பட்டியலிட்டு
வைத்துக்கொண்டு,கிளம்பும்போது அந்த
பட்டியலைப்பார்த்து எடுத்துசெல்வதை
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

வீட்டில் அண்ணன் எல்லா பொருட்களையும் புத்தகங்கள்
உட்பட அழகாக ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்.
அவருக்கு தெரியாமல் யாராவது எந்த பொருளையாவது
எடுத்திருந்தால் அவருக்கு நிச்சயம் தெரிந்துவிடும்.

காரணம் எடுப்பவர்கள் அவைகளை அந்த இடத்தில்
வைக்க மாட்டார்கள். நான் மட்டும் புத்தகங்களை
எடுத்தால் அதே இடத்திலேயே வைத்துவிடுவேன்.
ஆனால் அவர் போல் பொருட்களை ஒழுங்காக வைக்கும்
பழக்கம் மட்டும் எனக்கு வரவில்லை.

என் அண்ணன் கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர்,
பேச்சாளர் என்று பல முகங்களைக் கொண்டவர்.

பள்ளியில் படிக்கும்போதே எங்கள் ஊர் பள்ளியின்
ஆசிரியர் ஐயா அவர்களைப் பற்றி ‘எங்கள் வாத்தியார்’
என்று 'ஆனந்த போதினி'இதழில் எழுதியிருக்கிறார்.
பின்னால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
படிக்கும்போது 'குழந்தை தெய்வம்’ என்ற
சிறுகதையை ‘ஆனந்த விகடனில்’ மாணவர்
திட்டத்தின் கீழ் எழுதி பரிசும் பெற்றிருக்கிறார்.
அவருடைய கதைகள் குமுதம், ஆனந்த விகடன்
போன்ற இதழ்களில் வந்திருக்கின்றன.

முதலில் ‘சபா’ என்ற புனைப்பெயரிலும் பின்பு
வே.சபாநாயகம் என்ற அவரது பெயரிலும் அநேக
கதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார்.போட்டிகளுக்கு
அனுப்பப்பட்ட அவரது நாவல்களும் கதைகளும் பரிசை
வென்றிருக்கின்றன.

என் அண்ணன் எழுத்தாளராக இருந்ததால் அநேகமாக
எல்லா இதழ்களையும் வாங்கிவிடுவார்.எனக்கு தெரிந்து
‘கணையாழி’ இதழ் வெளியான நாள் முதல் அது
நிறுத்தப்படும் வரை வெளிவந்த அனைத்து
இதழ்களையும் அவர் இன்னமும் பேணிப்பாதுகாத்து
வருகிறார்.

அப்போது வெளிவந்த ‘சரஸ்வதி’ மற்றும்
சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ போன்ற இதழ்களை
அவர் வாங்கியதால் அவைகளை படிக்கும் அனுபவமும்
எனக்கு கிடைத்தது.அந்த இதழ்களை அவர்
இல்லாதபோது அவருக்குத் தெரியாமல் படித்துவிட்டு
அந்த இடத்திலேயே வைத்துவிடுவேன்.

திரு சுந்தர ராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின்
கதை’யையும் திரு ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச்சோறு’
கதையையும் அப்படி படித்தது, இன்னும் எனது
நினைவில் உள்ளது.

திரு.புதுமைப்பித்தன் எழுத்தும்,திரு.வல்லிக்கண்ணன்
எழுத்தும், திரு.ஜானகிராமனின் எழுத்தும்,
திரு.தி.ஜ.ர வின் எழுத்தும் எனக்கு அறிமுகமானது
அப்போதுதான்.

என் அண்ணன் நிறைய சிறுகதை தொகுப்புகள்,
நாவல்கள் மற்றும் ‘பைண்ட்’ செய்யப்பட்ட
தொடர் நாவல்கள் என்று ஏராளமான புத்தகங்கள்
எங்கள் ஊரில் உள்ள ‘அலமாரி’யில் வைத்திருப்பார்.

ஏனோ அந்த புத்தகங்கள் மேல் கறையான்களுக்கும்
‘ஆசை’ வந்துவிட்டதால் பாதிக்கு மேல் காணாமல்
போனது துரதிருஷ்டமே.

(இன்றைக்கும் கூட விருத்தாசலத்தில் உள்ள என்
அண்ணனின் மாடி அறை முழுதும் புத்தகங்களே
நிறைந்து இருக்கின்றன.)

ஊருக்கு விடுமுறைக்கு செல்லும்போது, கல்கியின்
‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’,
பார்த்திபன் கனவு’ மற்றும் தேவனின் ‘சி.ஐ.டி சந்துரு’,
’மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ போன்ற
நாவல்களை குறைந்தது 4 அல்லது 5 தடைவையாவது
படித்திருப்பேன்.

சமீபத்தில் கூட தேவனின் மேற் சொன்ன மூன்று
நாவல்களையும் ஒரே மூச்சில் திரும்பவும் படித்தேன்.

என் அண்ணன் கதைகள் எழுதி அனுப்பி, அவைகள்
பிரசுரமாவதைப் பார்த்ததும், எனக்கும் கதைகள் எழுத
ஆசை வந்தது!!


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வெள்ளி, 10 ஜூன், 2011

நினைவோட்டம் 45

நான் முன்பே சொன்னது போல 1957 ஜூன் முதல்
1960 பிப்ரவரி வரை விருத்தாசலத்தில் கழக உயர்
நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் என
சொல்லப்பட்ட ஒன்பதாம் வகுப்பு முதல் ஆறாம்
படிவம் என சொல்லப்பட்ட S.S.L.C வரை படித்தேன்.

என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அந்த
பள்ளியில் அப்போது கணித ஆசிரியராக இருந்ததால்
அவருடன் தங்கி படித்தேன்.

விருத்தாசலத்தில் அய்யனார் கோயில் தெருவில்
ஒரு வாடகை வீட்டில் அண்ணனுடன் தங்கியிருந்தேன்.
காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை
கடைத்தெருவில் இருந்த கோமள விலாஸ்
ஹோட்டலில் சாப்பிட்டு வந்தோம்.

காலையில் ஹோட்டலில் காலை சிற்றுண்டியை முடித்து
வீட்டிற்கு வந்து பள்ளிக்கு செல்ல ஆயத்தமாவேன்.

எனது வகுப்புத் தோழர் திரு கிருஷ்ணமூர்த்தி காலை
சுமார் 9 மணிக்கு வருவார். இருவரும் அய்யனார்
கோவில் தெருவை அடுத்து ‘ஓடிய’ மணிமுத்தார்
நதியை கடந்து பள்ளிக்கு செல்வோம். ஆற்றில்
அக்டோபர்-நவம்பர் மாதங்களைத் தவிர மற்ற
மாதங்களில் தண்ணீரே இருக்காது.

மதியம் மற்றும் இரவில் எனக்கும், என்
அண்ணனுக்கும் ஹோட்டலிருந்து, வீட்டில் வேலை
செய்த ஒரு பாட்டி, உணவு எடுத்துவருவார்கள்.

மதிய உணவை ஆசிரியர்கள் சாப்பிடும் அறையில்
என் அண்ணனோடு சாப்பிட்டு இருக்கிறேன்.அதனால்
எல்லா ஆசிரியர்களையும் தெரியும்.

மாலை பள்ளி விட்டதும் நேரே ஹோட்டலுக்கு போய்
காஃபி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
பள்ளியிலிருந்து நேரே வீட்டுக்கு வந்துவிடுவதால்
விளையாட்டுகளில் ஈடுபட எண்ணம் வந்ததே இல்லை.

என்னுடைய சகோதரர்கள் அனைவரும் (திரு சபாநாயகம்
அவர்கள் நீங்கலாக) விளயாட்டு வீரர்கள்தான். ஒருவர்
ஹாக்கியிலும் இன்னொருவருவர் உதைப்பந்திலும்
மூன்றாமவர் குத்து சண்டை விளையாட்டிலும்
தனித்திறமை பெற்றிருந்தனர்.

என் அண்ணன் நான் படித்த பள்ளியிலேயே கணித
ஆசிரியராக இருந்ததால், எனக்கு சௌகரியமும்
இருந்தது. அசௌகரியமும் இருந்தது. நான் ஒரு
ஆசிரியரின் தம்பி என்பதால் எந்த மாணவரும் என்னிடம்
வம்புக்கு வந்ததில்லை.

ஆனால் ஆசிரியர்களால் தான் எனக்கு கஷ்டமே. நான்
ஏதாவது பேசினாலும் என் அண்ணனிடம்
சொல்லிவிடுவார்கள். வகுப்புத் தேர்வில் குறைவான
மதிப்பெண்கள் பெற்றால் ‘என்னப்பா உன் அண்ணன்
கணித ஆசிரியராக உள்ளார்.ஆனால் நீயோ மதிப்பெண்
குறைவாக வாங்குகிறாயே’ என சொல்லி என்
அண்ணனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி
விடுவார்கள்.அதனால் நான் அதிக கவனம் எடுத்து
மதிப்பெண்கள் பெறவேண்டியிருந்தது.

என் அண்ணன் மிகவும் கண்டிப்பானவர். காலையில்
எழுந்து படிப்பதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை.
அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
படித்தபோது இரவு வெகு நேரம் கண்விழித்துதான்
படிப்பாராம். அந்த பழக்கம் எனக்கும் வந்துவிட்டது.

பள்ளியிலேயே இரவு கண்விழித்து படித்ததால்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், வேளாண்
அறிவியல் பட்டப்படிப்பு படித்தபோதும், இரவு 12 மணி
வரை படித்ததுண்டு. விடியற்காலை எழுந்து படித்ததே
இல்லை. பின்னால் வங்கியில் சேர்ந்த பிறகு C.A.I.I.B
தேர்வுக்கு படித்தபோதும், இரவு வெகு நேரம்
கண்விழித்தே படித்திருக்கிறேன்.

என் அண்ணனோடு இருந்தபோது அவருடைய சில
பழக்கங்கள் எனக்கும் வந்துவிட்டது உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

புதன், 1 ஜூன், 2011

எல்லாமே நூறு தான்!!!!

எண் 100 என்பது ஒரு விசித்திரமான எண்.கணித
வல்லுனர்களைக் கேட்டால் அது விழுக்காடுகளின்
அடிப்படை என்பார்கள்.

நல்ல நீர் மற்றும் கடல் நீரின் கொதி நிலை கூட
100 டிகிரி செல்ஷியஸ்‌ என்றே
சொல்லப்படுகின்றது.

பல நாடுகளின் நாணயங்கள் கூட நூறு
பகுதிகளாகத்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் ஆண்டுகளை பிரிக்கும்போது கூட நூறு நூறு
ஆண்டுகளாக பிரித்து நூற்றாண்டு என்கிறோம்.

நூறு என்கிற எண்ணுக்கும் நமக்கும் ஏதோ சம்பந்தம்
இருக்கிறது என நினைக்கிறேன். நாம் கூட ஒருவரை
வாழ்த்தும்போது கூ.ட ‘‘நூறாண்டுகாலம் நோய்
நொடியின்றி வாழ்க’ என்றுதான் வாழ்த்துகிறோம்.

புள்ளி விவரங்களைக்கூட நூற்றுக்கு இத்தனை
விழுக்காடு என்றே சொல்கிறோம். மதிப்பெண்கள்
போடும்போது கூட நூறை அதிக பட்சமாக வைத்தே
கணக்கிடுகிறோம்.

அவ்வளவு ஏன் புதிய ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்கள்
கழித்தே அதனுடைய செயல்பாடுகள் குறித்து அலசப்படுகிறது.

திரைப்படங்கள் கூட நூறு நாள் ஓடினால்தான்
(ஓட்டினால் அல்ல) வெற்றிபடங்களாக
ஒத்துக்கொள்ளப்படுகின்றன. நான் சொல்வது
அந்த காலத்தில். இப்போதெல்லாம் ஒரு படம்
25 நாட்கள் ஓடுவதே ஒரு சாதனைதான்!

அவசர போலீஸ் உதவிக்கு நாம் கூப்பிடும் எண்ணும்
கூட 100 தான்.

ஒரு பொருளின் தரத்தை குறிப்பிடும்போது கூட நூறு
சதம் சுத்தமானது என சொல்வதன் காரணம் அது
முழுமையானது என்ற பொருளில்தான்.

தமிழில் அந்த காலத்தில் நூறு எண்ணிக்கை கொண்ட
பாடல்கள் இயற்றப்பட்டு அவை சதகம் என
அழைக்கப்பட்டன.(சதகம் என்றால் வடமொழியில்
நூறு உள்ளடக்கியது என்று பொருள்.)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில்
எழுந்தருளியுள்ள அருள்மிகு அறப்பளீஸ்வரரைப்பற்றி
பாடப்பட்ட அறப்பளீசுவர சதகம், வாழ்வியலைப்பற்றி
கூறும் குமரேச சதகம் போன்றவை இவற்றுள்
அடங்கும்.

100 ஐ பற்றி எழுதும்போது, ஜெர்மன் கணித மேதை
திரு Carl Friedrich Gauss அவர்களைப் பற்றி படித்த ஒரு
செய்தி நினைவுக்கு வருகிறது. திரு கார்ல் சிறிய
வயதிலேயே ஆச்சரியப்படத்தக்க திறமை உடையவராய்
இருந்தாராம். பள்ளியிலே இவர் மிகவும் சூட்டிகையாய்
இருந்ததால் இவரை ‘சமாளிப்பது’ ஆசிரியர்களுக்கு ஒரு
சவாலாம்.

ஒரு தடவை இவரிடம் கணித ஆசியர் ஒன்றிலிருந்து
நூறு வரை கூட்டி சொல்ல சொன்னாராம். காரணம்
அதைக் கூட்டி சொல்ல நேரம் ஆகும். அதுவரை அவரது
‘தொந்தரவு’ இல்லாமல் இருக்குமே என்றுதான்.

ஆனால் திரு கார்ல் ஒரு நிமிடத்துக்குள்ளேயே எழுந்து,
‘சார். நான் நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன்.
கூட்டலின் மதிப்பு 5050’ என்றாராம்.

ஆசிரியருக்கோ ஆச்சர்யம்.’எப்படி இவ்வளவு
சீக்கிரத்தில் கூட்டினாய்’ என்றாராம்.

அதற்கு அவர், ‘சார். 1 யும் 100 யும் கூட்டினால் 101,
2 யும் 99 யும் கூட்டினால் 101,அதுபோல் 3 யும் 98 யும்
கூட்டினால் 101, 50 யும் 51 யும் கூட்டினால் 101.
ஆகமொத்தம் ஒன்றிலிருந்து நூறுக்குள் 50, 101 கள்
கிடைக்கும். ஆகவே 101 யும் 50 யும் பெருக்கினால்
வரும் விடை 5050’ என்றாராம்.

ஆசிரியர் மூர்ச்சை போடாத குறைதான்.

என்ன இது இந்த பதிவில் ஒரேயடியாய் 100 ஐ பற்றி
எழுதியுள்ளேனே என நினைக்கலாம்.

வேறொன்றுமில்லை.இது என்னுடைய நூறாவது பதிவு!!!

ஒருவழியாக 100 பதிவை எழுதிவிட்டேன் என
நினைக்கையில் மகிழ்ச்சியே.

2004 ஆகஸ்டில் பணி நிறைவு பெற்று சென்னை
வந்தவுடன், இணையத்தில் உள்ள தமிழ்
பதிவுகளை படிக்க நேரம் கிடைத்தது. பல
தரப்பட்ட பதிவுகளை படித்தபோது ஏன் நானும்
என்னுடைய அனுபவங்களை பதிவேற்றக்கூடாது
என்ற எண்ணம் வந்தது. ஆனால் எப்படி பதிவு
இடுவது எனத்தெரியாமல் சில நண்பர்களைக்
கேட்டபோது உதவுகிறேன் என்றார்களே தவிர,
வேலைப்பளு காரணமாகவோ என்னவோ உதவவில்லை.

அந்த சமயத்தில் நண்பர் திரு. மஸ்தூக்கா அவர்களின்
அதிரை வலைப்பதிவில் சொந்தமாக வலைப்பதிவு
தொடங்குவது எப்படி என்ற தொடரைப்படித்ததும்
தைரியமாக ‘நினைத்துப்பார்க்கிறேன்’
என்ற இந்த தொடரை தொடங்கிவிட்டேன்.

என்னுடைய அனுபவங்களை எழுதும்போது, அதை
படிப்பவர்களுக்கு அலுப்பாக இருக்கக்கூடாது என்பதற்காக
இடையிடையே வெவ்வேறு தலைப்புகளிலும் பதிவு
இட்டிருக்கிறேன்.மேலும் பதிவு எழுது முன்பே, எனது
பதிவில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது
என்றும், கூடியவரையில் அரசியல் கலக்கக்கூடாது
என்றும், முடிவெடுத்து அதுபோலவே பின்பற்றியும்
வருகிறேன்.

இதுவரை எனது பதிவைப்படித்து பின்னூட்டம் இட்டு
என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும்,
பதிவைப்படித்துவிட்டு நேரம் குறைவு காரணமாகவோ
அல்லது வேறு காரணங்களாலோ பின்னூட்டம் இடாமல்
சென்றவர்களுக்கும், இனியும் படிக்க இருப்பவர்களுக்கும்
கோடானுகோடி நன்றிகள்.

இந்த நேரத்தில் இந்த வலைப்பதிவை தொடங்க
கிரியா ஊக்கியாக இருந்த நண்பர் திரு.மஸ்தூக்கா
அவர்களுக்கு திரும்பவும் என் மனமார்ந்த
நன்றிகள் பல.பதிவேற்றம் தொடரும்