வெள்ளி, 10 ஜூன், 2011

நினைவோட்டம் 45

நான் முன்பே சொன்னது போல 1957 ஜூன் முதல்
1960 பிப்ரவரி வரை விருத்தாசலத்தில் கழக உயர்
நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் என
சொல்லப்பட்ட ஒன்பதாம் வகுப்பு முதல் ஆறாம்
படிவம் என சொல்லப்பட்ட S.S.L.C வரை படித்தேன்.

என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அந்த
பள்ளியில் அப்போது கணித ஆசிரியராக இருந்ததால்
அவருடன் தங்கி படித்தேன்.

விருத்தாசலத்தில் அய்யனார் கோயில் தெருவில்
ஒரு வாடகை வீட்டில் அண்ணனுடன் தங்கியிருந்தேன்.
காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை
கடைத்தெருவில் இருந்த கோமள விலாஸ்
ஹோட்டலில் சாப்பிட்டு வந்தோம்.

காலையில் ஹோட்டலில் காலை சிற்றுண்டியை முடித்து
வீட்டிற்கு வந்து பள்ளிக்கு செல்ல ஆயத்தமாவேன்.

எனது வகுப்புத் தோழர் திரு கிருஷ்ணமூர்த்தி காலை
சுமார் 9 மணிக்கு வருவார். இருவரும் அய்யனார்
கோவில் தெருவை அடுத்து ‘ஓடிய’ மணிமுத்தார்
நதியை கடந்து பள்ளிக்கு செல்வோம். ஆற்றில்
அக்டோபர்-நவம்பர் மாதங்களைத் தவிர மற்ற
மாதங்களில் தண்ணீரே இருக்காது.

மதியம் மற்றும் இரவில் எனக்கும், என்
அண்ணனுக்கும் ஹோட்டலிருந்து, வீட்டில் வேலை
செய்த ஒரு பாட்டி, உணவு எடுத்துவருவார்கள்.

மதிய உணவை ஆசிரியர்கள் சாப்பிடும் அறையில்
என் அண்ணனோடு சாப்பிட்டு இருக்கிறேன்.அதனால்
எல்லா ஆசிரியர்களையும் தெரியும்.

மாலை பள்ளி விட்டதும் நேரே ஹோட்டலுக்கு போய்
காஃபி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
பள்ளியிலிருந்து நேரே வீட்டுக்கு வந்துவிடுவதால்
விளையாட்டுகளில் ஈடுபட எண்ணம் வந்ததே இல்லை.

என்னுடைய சகோதரர்கள் அனைவரும் (திரு சபாநாயகம்
அவர்கள் நீங்கலாக) விளயாட்டு வீரர்கள்தான். ஒருவர்
ஹாக்கியிலும் இன்னொருவருவர் உதைப்பந்திலும்
மூன்றாமவர் குத்து சண்டை விளையாட்டிலும்
தனித்திறமை பெற்றிருந்தனர்.

என் அண்ணன் நான் படித்த பள்ளியிலேயே கணித
ஆசிரியராக இருந்ததால், எனக்கு சௌகரியமும்
இருந்தது. அசௌகரியமும் இருந்தது. நான் ஒரு
ஆசிரியரின் தம்பி என்பதால் எந்த மாணவரும் என்னிடம்
வம்புக்கு வந்ததில்லை.

ஆனால் ஆசிரியர்களால் தான் எனக்கு கஷ்டமே. நான்
ஏதாவது பேசினாலும் என் அண்ணனிடம்
சொல்லிவிடுவார்கள். வகுப்புத் தேர்வில் குறைவான
மதிப்பெண்கள் பெற்றால் ‘என்னப்பா உன் அண்ணன்
கணித ஆசிரியராக உள்ளார்.ஆனால் நீயோ மதிப்பெண்
குறைவாக வாங்குகிறாயே’ என சொல்லி என்
அண்ணனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி
விடுவார்கள்.அதனால் நான் அதிக கவனம் எடுத்து
மதிப்பெண்கள் பெறவேண்டியிருந்தது.

என் அண்ணன் மிகவும் கண்டிப்பானவர். காலையில்
எழுந்து படிப்பதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை.
அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
படித்தபோது இரவு வெகு நேரம் கண்விழித்துதான்
படிப்பாராம். அந்த பழக்கம் எனக்கும் வந்துவிட்டது.

பள்ளியிலேயே இரவு கண்விழித்து படித்ததால்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், வேளாண்
அறிவியல் பட்டப்படிப்பு படித்தபோதும், இரவு 12 மணி
வரை படித்ததுண்டு. விடியற்காலை எழுந்து படித்ததே
இல்லை. பின்னால் வங்கியில் சேர்ந்த பிறகு C.A.I.I.B
தேர்வுக்கு படித்தபோதும், இரவு வெகு நேரம்
கண்விழித்தே படித்திருக்கிறேன்.

என் அண்ணனோடு இருந்தபோது அவருடைய சில
பழக்கங்கள் எனக்கும் வந்துவிட்டது உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான நினைவுகள்!
    நான் உங்களுக்கு நேர் எதிர்!இரவில் கண் விழித்துப் படிக்கும் பழக்கமே இருந்ததில்லை!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
    இரவிலே கண் விழித்து படிக்கும் பழக்கம் வந்துவிட்டால், அதிகாலையில் எதைப் படித்தாலும் ஒன்றும் புரியாததுபோல் இருக்கும். இது எனது சொந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
  3. இரவில் வெகு நேரம் விழித்து படிக்கும் பழக்கம் எனக்கும் இருந்தது / இருக்கிறது . இப்போது கூட நான் வெகு நேரம் இரவில் எதையாவது படித்துக்கொண்டே இருப்பேன் . அண்ணன் வேலை பார்த்த பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட விளைவுகளை படித்தேன் . எனக்கும் அந்த அனுபவம் ஒரு தடவை ஏற்பட்டதுண்டு . சாத்தூரில் ஒரு வருடம் A.V. High School ல் படிக்க நேர்ந்தது . என்னுடைய தாய் வழி தாத்தா Head Master ஆக பணி புரிந்த பள்ளி ! நிற்க , சிறு வயதில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு கொண்டே படிப்பது என்பது சுவையான அனுபவம் தான்.

    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! உங்களுக்கும் என்னைப்போல் பள்ளியில் படிக்கும்போது சுவையான அனுபவம் ஏற்பட்டது அறிந்து மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு