திங்கள், 25 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 33



ரிசர்வ் வங்கியின் கடிதத்தை எதிர்நோக்கி காத்திருந்த 
நேரத்தில்,நானும்  சும்மா இருக்கவில்லை. தினம் 
அந்த வாடிக்கையாளராய் தொடர்புகொண்டு 
ஏற்றுமதிக்கான தயாரிப்புகள் எந்த நிலையில் 
இருக்கிறது என விசாரித்து கொண்டிருந்தேன்.

ஏன் அந்த வாடிக்கையாளர் ஏற்றுமதி செய்யாமல் 
Bill ஐ கொடுத்தார் என விசாரித்தபோது, அவர் 
Packing Credit வசதியில் பெற்ற பணத்தை 
மூலப்பொருளான மரக் கட்டைகள் வாங்காமல் 
வேறு சொந்த செலவினங்களுக்கு 
உபயோகப்படுத்தியிருக்கிறார்.

பின்பு வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய 
நாள் நெருங்கிக்கொண்டு இருந்தததால், கையில் 
பணம் இல்லாததால் இது போன்ற Bill ஐ கொடுத்து
 Negotiate செய்தால், Packing Credit வசதியில் எடுத்த 
பணம் போக, கையில் கொஞ்சம் பணம் வரும். 
அத்துடன் வெளியே கடன் வாங்கியும், 
மூலப்பொருளை வாங்கி ஒட்டுப்பலகை செய்து 
ஏற்றுமதி செய்துவிடலாம் என நினைத்திருக்கிறார். 
எது எப்படியோ எனக்கு மன உளைச்சலைக் 
கொடுத்துவிட்டார்.

தினம் நான் கொடுத்த தொந்தரவின் காரணத்தால் 
ஒருவழியாக ஒட்டுப்லகையை தயார் செய்து சரக்குக் 
கப்பலில் ஏற்றுமுன் G.R Form பெற்று, புதிய 
 Bill of Lading மற்றும் Bill களைக் கொண்டு வந்து 
கொடுத்தார். அன்றுதான் நிம்மதியாக உறங்கினேன்.

உடனே அந்த Bill ஐ ஆவணங்களுடன் வெளிநாட்டு 
வங்கிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். 

எதிர்பார்த்தது போலவே ஒரு நாள் ரிசர்வ் 
வங்கியிலிருந்து ஓலை வந்தது. அதில் குறிப்பிட்ட 
 BillG.R Form இல்லாமல் எப்படி Negotiate  
செய்தீர்கள் என்பதற்கான விளக்கத்தை  குறிப்பிட்ட 
நாட்களுக்குள் அளிக்குமாறு  கேட்டிருந்தார்கள்.

அந்த கடிதத்திற்கு பதில் எழுத நான் யாரையும் 
கலந்து ஆலோசிக்கவில்லை. நடந்தை அப்படியே 
எழுதி, அந்நிய செலாவணி நடைமுறைகளில் 
எனக்கு அனுபவம் இல்லாததாலும், அந்த Bill ஐ 
தந்தவர் நீண்ட நாள் வாடிக்கையாளர் என்பதாலும், 
மேலும் எனது மேலதிகாரி சொன்னதாலும் 
அது தவறு எனத் தெரியாததால் அப்படி 
செய்ததாக பதில் எழுதினேன்.

மேலும் அதுதான் முதல் தவறு என்பதால் அந்த 
தவறை மன்னித்துவிடும்படி கேட்டிருந்தேன். 
அதோடு கூட அந்த வாடிக்கயாளர் G.R Form, 
புதிய Bill of Lading மற்றும் Bill களைக் கொண்டு 
வந்து கொடுத்துவிட்டதாகவும் எழுதியிருந்தேன். 
விரிவான பதிலை அனுப்பிவிட்டு தண்டனைக்குக் 
காத்திருக்கும் குற்றவாளி போல், மிகவும் 
கவலையோடு ரிசர்வ் வங்கியின் பதிலுக்காக 
காத்திருந்தேன்.

சில நாட்கள் கழித்து ரிசர்வ் வங்கியிலிருந்து 
கடிதம் வந்தது. அந்த அஞ்சலைப் பரபரப்போடு 
பிரித்து, அதில் எழுதியிருந்ததை படித்து 
முடித்ததும் தான், அதுவரை இருந்த பதட்டம் 
குறைந்து நிம்மதி வந்தது.

அந்த வாடிக்கையாளரிடமிருந்து G.R Form 
பெற்றுவிட்டதாலும், எனது செயல் தவறு 
என்றாலும்,அது முதல் தடவை என்பதால், 
ஒரு எச்சரிக்கையோடு அந்த விஷயத்தை 
முடித்து வைப்பதாக எழுதியிருந்தார்கள்.

நிச்சயம் ஆய்வுக்கு வந்த அந்த அலுவலர்தான் 
எனக்கு அந்த உதவி செய்திருக்கக்கூடும் என 
நினைத்துக்கொண்டேன். நாம் மனதறிந்து, 
சுய இலாபத்திற்காக ஒரு செயலை 
செய்யவில்லை என்பதை ஆய்வுக்கு வருவோர் 
தெரிந்துகொண்டால் தவறு செய்திருந்தாலும் 
நிச்சயம் உதவுவார்கள் என்பதை உணர்த்தியது 
அந்த நிகழ்வு. அதற்குப் பிறகு ஒரு தடவைக்கு 
பல தடவைகள் ஆராயாமல் எதையும் 
செய்ததில்லை.

எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை சக 
அலுவலர்களோடு பகிர்ந்துகொண்டேன், அதற்கு 
பிறகு அந்த வாடிக்கையாளர் எந்த ஏற்றுமதியையும் 
செய்யவில்லை. அதனால் வங்கிக்கும் 
வருவதில்லை. 

ஒருநாள் காலை தங்கியிருந்த வீட்டில் 
குளிக்கத் தயாராகிக் கொண்டு இருந்தேன். 
(அப்போது அந்த ஊரில் நான் மட்டும் தனியாக 
இருந்தேன், எனது குடும்பம் சென்னையில்
இருந்தது.)

யாரோ அவசரமாக அழைப்பு மணியை 
அழுத்தும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். 
வெளியே நிற்பவரைப் பார்த்ததும் கோபமும், 
ஆச்சரியமும் ஏற்பட்டது.

ஏனெனில் G.R Form தராமல் என்னை சிக்கலில் 
மாட்டிவிட்ட அதே வாடிக்கையாளர் 
அங்கே நின்று கொண்டிருந்தார்! 


தொடரும்


புதன், 20 பிப்ரவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 32



ரிசர்வ் வங்கியின்  ஆய்வாளர்  எனது கிளையின் ஏற்றுமதி 
மற்றும் இறக்குமதி வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு 
நடத்த வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அப்போது 
எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சியா அல்லது மன அழுத்தமா 
என சொல்லத் தெரியவில்லை. எது நடக்கக்கூடாது 
என நினைத்தேனோ அது நடந்துவிட்டது.

எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வெளியே 
காட்டிக்கொள்ளாமல், அவரை வரவேற்று சாதாரணமாக 
பேச ஆரம்பித்தேன். என் பெயரையும் எனது பேச்சையும் 
கேட்டதும் அவருக்குத் தெரிந்துவிட்டது நான் அந்த 
மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லையென்று.  

நீங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரா? எவ்வளவு 
காலமாக இங்கு இருக்கிறீர்கள்?’ என விசாரித்தார்.ஆமாம். 
இங்கு வந்து 6 மாத காலம் தான் ஆகிறது,’ என்றேன்.

பிறகு நான் அவரிடம் கேரளாவில் எந்த இடத்தைச் 
சேர்ந்தவர் எனக் கேட்டேன். (அவர் பெயரிலிருந்தே அவர் 
மலையாளி என அறிந்துகொண்டேன்.) அவர் நான் இந்த 
ஊரைச் சேர்ந்தவன் தான்.என்றார். 

சரி. அப்படியானால் அவருக்கு எங்களது 
வாடிக்கையாளரைத் தெரிந்திருக்கும் என 
நினைத்துக்கொண்டேன்.

ஆய்வை ஆரம்பிக்கு முன் அவர் எந்த விதமான அந்நிய 
செலாவணி வணிக நடவடிக்கைகள் உள்ளன?’ என 
விசாரித்தார். அவரிடம் இறக்குமதியில் ஒரே ஒரு 
வாடிக்கையாளர்தான் என்றும் அந்த வாடிக்கையாளரும் 
கேரள அரசு  நிறுவனம் என்றும், அன்றைய நாளில் 
அவர்களது கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது என்றும் 
சொன்னேன்.

ஏற்றுமதி பற்றி அவர் ஆய்வு செய்து தவறை 
கண்டுபிடிப்பதை விட,  நாமே நடந்ததை சொல்லிவிடுவது 
நல்லது என நினைத்ததால், சார். ஏற்றுமதி வணிக 
நடவடிக்கையில் மட்டும் ஒரு கணக்கில் ஒரு தவறு 
நடந்துவிட்டது. என்று சொன்னேன்.

அவர் என்னை வினோதமாக பார்த்தார். என்ன இவர் 
நாம் கேட்காமலே சொல்கிறாரே என்று நினைத்திருக்கலாம். 
என்ன தவறு என்று அவர் கேட்கு முன்னரே நடந்ததை 
விரிவாக எடுத்து சொன்னேன்.

அவர் உடனே கேட்ட கேள்விகள்  எப்படி G.R. Form 
பெறாமல் அந்த BillNegotiate செய்தீர்கள்? அன்னிய 
செலாவணி நடைமுறைகள் உங்களுக்குத் தெரியாதா?’
என்பதுதான்.அதற்கு நான் இதுவரை அந்நிய செலாவணி 
வணிக நடவடிக்கைகள் உள்ள கிளைகளில் 
பணியாற்றியதில்லை. இதுதான் முதல் அனுபவம். 
என்றேன்.  

இருக்கலாம். ஆனால் அதில் பணியாற்றி அனுபவம் 
உள்ள அலுவலர்கள்  இங்கு இருப்பார்களே அவர்களிடம் 
கேட்டிருக்கலாம். இல்லாவிடில் உங்களது மண்டல 
அலுவலகத்தை தொடர்புகொண்டு இப்படி செய்யலாமா 
என்று கேட்டிருக்கலாமே? என்றார்.

நான் மண்டல அலுவலகத்தை தொடர்புகொண்டு 
கேட்கு முன்பே, எனது துணைப் பொதுமேலாளர்தான் 
அந்த வாடிக்கையாளர் G.R. Form ஐ கொடுத்துவிடுவார். 
நீங்கள் Negotiate செய்யுங்கள்.என்றார். மேலும் அந்த 
வாடிக்கையாளர் Bill Of Lading கொடுத்ததால் அவ்வாறு 
செய்தேன். என்று சொன்னேன்.

அதற்கு அவர் Bill Of Lading இருந்ததால் Negotiate 
செய்ததாக என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு
 Bill Of Lading வேண்டும்? சரக்குகளை அனுப்பாமலேயே 
அதற்கான Bill Of Lading ஐ தர பலபேர் தயாராக 
இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்நிய 
செலாவணி வணிக நடவடிக்கைகளில் இதுபோன்று 
சரக்கை அனுப்பாமலேயே பணம் பெறுவோர் உண்டு. 
நீங்கள் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும்.

மேலும்உங்கள் Boss எழுத்து மூலம் ஆணை 
கொடுத்தாரா? நிச்சயம் கொடுத்திருக்கமாட்டார். 
அப்படியே கொடுத்தாலும் விதிமுறைக்கு மாறான 
ஆணைகளை நீங்கள் நிறைவேற்றத் தேவையில்லை. 
சரி. அவர் தான் சொன்னார் என்பதற்கு என்ன 
ஆதாரம்?’ என்றார்.

நான் உடனே அந்த நிகழ்வன்று தயாரித்த 
ஆவணங்களைக் கொண்டு வர சொன்னேன். அவைகளில் 
முக்கியமானது அந்த BillNegotiate செய்யும்போது 
தயாரித்த பற்று (Debit) மற்றும் வரவு (Credit) 
சீட்டுகள் (Slips). அந்த Debit Slip இல் கையொப்பமிடும்போது 
பின்பக்கம் துணைப் பொது மேலாளரின் தொலைபேசி 
ஆணைப்படி அந்த Bill க்கான பணம் தரப்படுவதாக 
எழுதி நேரத்தையும் தேதியையும் குறிப்பிட்டு 
கையொப்பமிட்டிருந்தேன்.  
(முன்பு ஒரு காரியம் செய்தேன் என்று 
சொல்லியிருந்தேனல்லவா அதுதான் இது)

அதைப் பார்த்தவுடன், சரி. இதைப் பார்க்கும்போது 
நீங்கள் இந்த தவறை தானாக செய்யவில்லை எனத் 
தெரிகிறது. இருந்தாலும் இதை செய்தது நீங்கள் தான் 
என்பதால் இந்த தவறுக்கு நீங்கள்தான் பொறுப்பு.

உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் உடனே அந்த 
வாடிக்கையாளரை சந்தித்து சரக்குகளை அனுப்ப 
ஏற்பாடு செய்யுங்கள். பின்பு  புதிய Bill Of Lading மற்றும்  
G.R. Form ஐ பெற்று உடனே வெளி நாட்டு வங்கிக்கு

ஆவணங்களை அனுப்புங்கள். இவை யாவும் அந்த  
Letter of Credit இல் கொடுத்துள்ள நிபந்தனைகள் படி 
இருக்கவேண்டும். வெளி நாட்டிலிருந்து Credit வந்தவுடன் 
எங்களுக்கு G.R. Form ஐ அனுப்பவேண்டிய முறைப்படி 
அனுப்பிவிடுங்கள்.

நான் எனது அலுவலகம் சென்றவுடன் இது குறித்து 
அறிக்கை எனது Boss க்கு தருவேன். நிச்சயம் 
உங்களிடமிருந்து விளக்கம் கேட்டு கடிதம் வரும். 
நடந்ததை அப்படியே எழுதுங்கள். அதற்குள் நான் 
சொன்னதை செய்து முடிக்கப்பாருங்கள். என்றார்.

நான் எதிர்பார்த்ததை விட அவர் மிகவும் 
மென்மையாகவும் அனுசரணையாகவும்
நடந்துகொண்டது எனக்கு நம்பிக்கையைக் 
கொடுத்தது.

பின்பு அவர் மற்ற வணிக நடவடிக்கைகளை 
ஆராய்ந்துவிட்டு கிளம்பிவிட்டார். அவர் சென்ற 
உடனேயே எனது மேலாளருடன் சென்று அந்த 
வாடிக்கையாளரைப் பார்த்தேன்.

நல்ல வேளையாக அவர் அவரது தொழிற்சாலையில் 
தான் இருந்தார். அங்கு ஏற்றுமதிக்காக 
ஒட்டுப் பலகைகள் தயாராகிக்கொண்டு இருந்தன.
எங்களைப் பார்த்ததும் அவர் எந்த வித கூச்சமும் 
இல்லாமல் சார். உங்கள் வேலைதான்(!) 
நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு 
நாட்களில் ஆவணங்களோடு வந்து பார்க்கிறேன்   
என்றார்.

வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு ரிசர்வ் வங்கி 
ஆய்வில் நீங்கள் G.R. Form தராமல் இருப்பதை குறித்துக் 
கொண்டு சென்றுள்ளார்கள்.உங்கள் ஏற்றுமதி பாதிக்காமல்  இருக்கவேண்டுமென்றால். உடனே ஆவன செய்யுங்கள். 
இல்லாவிடில் நீங்கள் ஏற்றுமதியே செய்யமுடியாது. 
எனக்கூறி  வந்துவிட்டேன்.

தினம் ரிசர்வ் வங்கியின் கடிதத்தை எதிர்நோக்கி 
காத்திருந்தேன். 


தொடரும்