வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நினைவோட்டம் 20

பெண்ணாடத்தில் படித்ததுஓராண்டுதான். ஆனாலும் அப்போது எனக்குபாடங்கள்சொல்லிகொடுத்த, தமிழாசான் புலவர் திரு குஞ்சிதபாதனார் அவர்களையும், கணிதம்சொல்லிக்கொடுத்த திருசதாசிவம்பிள்ளையையும்,அறிவியல் ஆசிரியர் திருஞானப்பிரகாசம்பிள்ளையையும்,

சமூக இயல்ஆசிரியர் ECநாத் எனஅழைக்கப்பட்டதிரு சிதம்பரநாதன்

அவர்களையும் என்னால் இன்றும் மறக்க இயலவில்லை.


புலவர் குஞ்சிதபாதனார் எங்கள் ஊர்க்காரர். அவர் தமிழ் பாடம் நடத்தும் அழகே தனி. எவ்வளவுகடினமான பாடலானாலும் அவர் பதம் பிரித்து, பொருள்சொன்னதும் அது மிகசுலபமாக மனதில் பதிந்துவிடும்.உண்மையில் எனக்கு தமிழின் பேரில் ஈர்ப்புவந்ததற்கு அவரும் ஒரு காரணம்.


சமூக இயல்(Social Studies)பாடத்தை பொறுத்தவரைஅது ஒரு விரும்பாதபாடமாக, எட்டிக்காயாககருதப்பட்ட காலம் அது.

சமூகஇயல்பாடத்தில்வரலாறு(History),புவிஇயல்(Geography) ஆகியவைகள்இருக்கும். அதில் வரலாறு தான் எங்களுக்குபிடிக்காத பகுதி. ஆனால் அவைகளை சுவைபட நடத்தி அந்த பாடத்தை விரும்பச்செய்தவர்

திரு E .C .நாத் அவர்கள்.


பாடங்களை மனதில் இருத்த அவர் கையாண்ட முறையே தனி.


ஒவ்வொரு மாணவனும் விருப்பமான ஐந்து பாடங்களைதேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரே பதில் வருகிறமாதிரி

மூன்று அல்லது ஐந்துகேள்விகளை ,அஞ்சல் அட்டை அளவுள்ளஅட்டைகளில் எழுதி முடிவில்நான் யார்? என கேள்வி எழுப்பவேண்டும்.

அவைகளை ஒவ்வொருவரும் வகுப்பில் படிக்க வேண்டும்.


நான் அன்று எழுதியது இன்றும் நினைவுக்கு வருகிறது.

1 .இந்தியாவின் மேல் படையெடுத்தேன்.

2 .ஜீலம் நதிக்கரையில் மன்னன் புருஷோத்தமனை தோற்கடித்தேன்.

3 .அவரது வீரத்தை மெச்சி அவரிடமே நாட்டை திருப்பிக்கொடுத்தேன்.

4 . என்னை மாவீரன் என்றும் சொல்வார்கள்.


நான் யார்?


இதை நான் படித்ததும் எல்லோரும் கோரசாகஅலெக்சாண்டர் என சொன்னது நினைவுக்கு வருகிறது.


எல்லா பாடங்களையும் இவ்வாறு எழுதி படித்ததால் தேர்வு எழுதுவது சுலபமாக இருந்தது. பாடங்களைவெறுமனே மனனம் செய்யாமல் இவ்வாறு கேள்விபதில்போல்எழுதிபடித்ததால் வெறுத்தபாடம் விருப்பபாடமானது.


மனப்பாடம் செய்யும் முறையை ஒழித்த திரு E .C .நாத் அவர்களை என்றும்

மறக்க இயலாது.


இதே முறையை பின்னாளில் வேளாண் அறிவியல் படிக்கும்போது, வேளாண் விரிவாக்க பாடத்தில் பின் பற்ற போகிறேன் என்பது அப்போது தெரியவில்லை.நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி