திங்கள், 29 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 6

வண்டி நகர்ந்தது நிம்மதியை தந்தாலும்,யாருக்கும்
மகிழ்ச்சியை தரவில்லை. பயணிகளிடம் வழக்கமாக
காணப்படும் உற்சாகம் இல்லை.யாரும் எதுவும்
பேசாததால்,நாங்கள் இருந்த பெட்டியில் ஒரே
மரண அமைதி.

அந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த,
பரப்பணங்காடி என்ற நிலையத்தை அந்த இரயில்
மெதுவாக ஊர்ந்து சுமார் 9.30 மணி வாக்கில்
அடைந்தது.

வண்டி பிளாட்பாரத்தில் நின்றதும்,‘திபு திபு’என்று
நிறைய இளைஞர்கள் ஏறினார்கள்.எங்கள்
அனைவரிடமும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும்
நலம் விசாரித்துவிட்டு அனைவருக்கும் ரொட்டியும்
பழமும் கொடுத்தார்கள்.அவர்கள் யார் என்று
விசாரித்தபோது அவர்கள் இந்திய சனநாயக வாலிபர்
சங்கத்தை(DYFI) சேர்ந்தவர்கள் என்றும்,அந்த
வண்டியில் Pantry Car துண்டிக்கப்பட்டு விட்டதால்
எங்களுக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காது என்பதால்
அவைகளைக் கொண்டுவந்ததாக சொன்னார்கள்.

எங்களுக்கு அந்த நேரத்தில் சாப்பிடக்
கொடுக்கவேண்டும் என நினைத்த அவர்களின்
தன்னலமில்லா சேவைக்கு நன்றி சொல்ல
வார்த்தைகள் வரவில்லை என்பது உண்மை.

அந்த இரயில் நிலையத்தை விட்டு வண்டி
நகரத்தொடங்கியவுடன், கைபேசியில்
குறிப்பலை (Signal) கிடைத்ததால்,விபத்து பற்றி
விவரமாக சொல்லலாமென்று திரும்பவும் வீட்டை
தொடர்புகொண்டேன்.

அதற்குள் சென்னையில் என் வீட்டில் ஒரே
பதட்டமும் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.நான்
மாலையில் தொடர்புகொண்டபோது
தொலைக்காட்சியில்,எந்த செய்தியும் விபத்து
பற்றி தெரிவிக்காததால்,நான் சிறிய விபத்து
என்று சொன்னபோது, என் மனைவி அதை
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் நான் தொலை பேசியில்,பேசி முடித்தவுடன்,
எல்லா தொலைக்காட்சிகளிலும் அந்த விபத்து பற்றி
கூறி அநேகம் பேர் உயிர் இழந்தனர் என்றும் நிறைய
பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அதைக்கேட்டு என் மனைவிக்கு சந்தேகம்
வந்திருக்கிறது.நான் பேசிவிட்டு உடனே
தொலைபேசியை வைத்துவிட்டதால்,ஒருவேளை
நான் மருத்துவமனையிலிருந்து பேசியிருக்கலாம்
என்றும், விவரமாக சொன்னால், தான் பயப்படுவோம்
எனக்கருதி உடனே இணைப்பை துண்டித்துவிட்டதாகவும்
எண்ணி,பதட்டத்தோடு திரும்பவும் என்னை தொடர்பு
கொள்ள முயற்சித்திருக்கிறார்.

தொலைத்தொடர்பு கிடைக்காததால்,கண்ணூரில்
என்னோடு பணிபுரியும் நண்பர் திரு உமா மகேஸ்வரனின்
துணைவியார்,சென்னையில் பணிபுரிந்துவந்ததால்
அவரைக்கூப்பிட்டு விஷயத்தை சொல்லி,என்னைப்பற்றி
விசாரிக்க சொல்லியிருக்கிறார்.

அவர் திரு உமா மகேஸ்வரனிடம் விசாரித்து நான்
நலமுடன் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.இருந்தும்
என் மனைவிக்கு சந்தேகம் தீரவில்லை.என் குரலைக்
கேட்டவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி ‘எங்கிருந்து
பேசுகிறீர்கள்?’என்பதுதான்.நான் ‘இரயிலில்
வந்துகொண்டிருக்கிறேன்.காலையில் சென்னை
வந்துவிடுவேன்.’என சொன்னவுடன் தான் அவருக்கு
நிம்மதி.பிறகு விவரத்தை சொல்லிவிட்டு,
என் மகனிடமும் மகளிடமும் பேசினேன்.

பிறகு வண்டியில் இருந்த சிலர்,அவர்களது
வீட்டுக்கு பேச விரும்பியபோது,எனது
கைப்பேசியைக்கொடுத்து பேசச்சொன்னேன். அந்த
பயணிகளில் ஒருவர் மணிப்பூரை சேர்ந்தவர்.

இரவு 10.30 மணி வாக்கில் ஷோரனூர் சந்திப்பை
அடைந்தது எங்களது இரயில்.அங்கும் அநேகம் பேர்
வந்து என்ன நடந்தது என என்னிடம் விசாரித்தார்கள்.
திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் செல்லும் இரயில்
வந்ததும், அது மங்களூர் செல்லமுடியாது என்பதால்
அதில் இருந்த Guard Van ஐ எங்கள் வண்டியில்
இணைத்து சென்னை செல்ல அனுமதித்தார்கள்.

காலையில் ஈரோடு சந்திப்பு வந்ததும் எங்களது
வண்டியைப்பற்றித்தான் பேச்சு. காலை 'ஹிந்து'
தினத்தாளில், அந்த விபத்து பற்றி செய்தி தந்துவிட்டு
என்னைப்போன்ற பயணிகளின் பேட்டியையும்
போட்டிருந்தார்கள். அதைப்பார்த்து என்னை தொடர்பு
கொண்டவர்கள் அநேகம்.அவர்கள் அனைவருக்கும்
நான் நலமுடன் இருக்கிறேன் என்று சொல்வதற்குள்
சென்னையே வந்துவிட்டது.

சென்னையை எங்களது இரயில் அடைந்த நேரம்
மதியம் சுமார் 12.30 மணி. என்னோடு புது தில்லியிலும்,
சென்னையிலும்,கோவையிலும் பணிபுரிந்த நண்பர்
திரு க.வாசுதேவன் என்னிடம் தொலைபேசியில்
தொடர்புகொண்டு, நான் இரயிலில் வருவதை அறிந்து
என்னை அழைத்து செல்ல,சென்னை சென்ட்ரல்
இரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

நான் வண்டியை விட்டு கீழே இறங்கியதும் தான்
தாமதம், என்ன நடந்தது என்பதை அறிய சென்னையில்
உள்ள தொலைக்காட்சி நிருபர்கள் அனைவரும்
என்னை சுற்றி நின்று விவரத்தைக் கேட்டனர். நான்
நடந்தைச் சொல்லிவிட்டு, மறக்காமல் எங்களுக்கு
உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
சொன்னேன்.

நண்பர் திரு வாசுதேவனோடு வீடு வந்து சேர்ந்தபோது,
என் மனைவிக்கும், மகனுக்கும்,மகளுக்கும் ஏற்பட்ட
மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல இயலாது.
அதற்குள் எனது பேட்டி எல்லா தொலைக்காட்சியிலும்
ஒளி பரப்பப்பட்டதால், எனது உறவினர்களும்
நண்பர்களும் நான் விபத்திலிருந்து தப்பியது அறிந்து
தொடர்புகொண்டு வாழ்த்தினார்கள்.

அன்று மாலை நண்பர் திரு சந்தானகிருஷ்ணனின்
மகள் திருமண வரவேற்பில் நான்
கலந்துகொள்ளவில்லை.காரணம் திருமண வீட்டில்
இதைப்பற்றி எல்லோரும் விசாரிப்பார்கள் என்பதால்.
மறுநாள் காலை திருமணத்திற்கு சென்று வந்தேன்.
அப்படியும் என்னிடம் அந்த நிகழ்வு பற்றி
விசாரிப்பவர்களை தவிர்க்க இயலவில்லை.

மூன்று நாள் விடுப்பு முடிந்து திரும்ப கண்ணூருக்கு
இரயிலில் கிளம்பி,ஷோரனூர் சென்று அங்கிருந்து
காரில் கண்ணூர் சென்றடைந்தேன்.அலுவலகத்திலும்
என்னிடம் நலம் விசாரித்து, நீண்ட நாள் வாழ
வாழ்த்தியவர்கள் எடுத்துக்கொண்டது கிட்டத்தட்ட
அரைநாள்.

இரயில்வே துறையினர் வழக்கம்போல் ஒரு
விசாரணைக்கமிஷன் அமைத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவி செய்து தன் பணியை முடித்துக்கொண்டது
வேறு கதை.

அந்த விபத்தில் சிக்கிய இரயில் பெட்டிகள்,
அந்த பாலத்துக்கு அருகிலேயே கிட்டத்தட்ட
ஓராண்டுக்குமேல் வைக்கப்பட்டிருந்ததால்,அந்த
பாலத்தை கடக்கும்போது,அவைகளைப்பார்த்ததும்
என்னை அறியாமலேயே ஒரு சோகம்
பற்றிக்கொள்ளும்.

இந்த ஆண்டு சனவரியில் கொல்லூர் மூகாம்பிகை
அம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும்போது,
அதே இரயிலில் கடலுண்டி பாலத்தை
கடக்கும்போது ஒன்றைக்கவனித்தேன்.அந்த
ஆற்றின் தென்கரையில் பாலத்துக்கு அருகே,
அந்த ஊர் மக்கள் விபத்தில் இறந்தவர்களுக்காக,
நினைவுமண்டபம் கட்டியிருந்ததை.

எந்த அளவுக்கு அந்த விபத்து அவர்களை பாதித்து
இருந்தால்,அவர்கள் இந்த நினைவிடத்தை
அமைத்திருக்கவேண்டும். நல்ல உள்ளம் கொண்ட
அவ்வூர் மக்கள் நீண்டகாலம் வாழ மனதுக்குள்
வேண்டினேன்.

என் நினைவு உள்ளவரை இந்த விபத்து என் மனதில்
இருந்து மறையாது என்பது நிச்சயம்.


ஐந்தாவது தடவையாக நான் மயிரிழையில்
மரணத்திலிருந்து தப்பியது 2003 ஜூன் மாதத்தில்.
சிண்டிகேட் வங்கியிலிருந்து Deputation ல்
North Malabar Gramin Bank வந்த என்னை,மூன்று ஆண்டு
கால பணி முடிந்ததும், வங்கிக்கு திரும்ப
அழைக்கப்பட்டு, மணிப்பாலில் உள்ள எங்கள்
தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டேன்.

மாற்றலாகி செல்லும் எனக்கு பிரிவு உபசார
விழாவை,எர்ணாகுளம் பகுதி அலுவலக
வங்கி நண்பர்கள், எர்ணாகுளத்தில்
ஜூன் 7 ஆம் தேதி (சனிக்கிழமை)மாலை
வைத்திருந்தனர். அன்று காலை கண்ணூரில்
இருந்து காலை கிளம்பி மதியம் எர்ணாகுளம்
அடைந்தேன்.விழா முடிய இரவு 8 மணி
ஆகிவிட்டதால், இரவு அங்கேயே தங்கி
காலையில் 4 மணிக்கு காரில் கிளம்பினேன்.

என்னுடைய தனிச்செயலர் திரு தனஞ்சயனும்
என்னுடன் பயணித்தார். காரை ஒட்டுனர்
திரு முரளி ஓட்டிவந்தார்.காலை சுமார் 7.30 மணி
வாக்கில் கோழிக்கோடு நகரை அடைந்தோம்.
அங்கே ஒரு உணவகத்தில் காலை சிற்றுண்டியை
முடித்துவிட்டு,8 மணிக்கு கிளம்பினோம்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில்
வாகனங்கள் அதிகம் இல்லை.25 கிலோ மீட்டர்
தூரத்தில் இருந்த கொயிலாண்டியைக்கடந்து,
12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
பயோளி என்ற ஊர் (ஒட்டப்பந்தய வீராங்கனை
P.T.உஷா வின் ஊர்) அருகே சென்ற போது
எதிரே ஒரு சரக்குந்து (Truck) வந்துகொண்டு
இருந்தது. அதைத் முந்திக் கொண்டு கேரள
அரசின் பேருந்து ஒன்று வந்தது. அதைப்பார்த்த
ஒட்டுனர் முரளி காரை சாலையின் இடப்புறம்
ஒதுக்கி ஓட்டினார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த
இரு வாகனங்களையும் தாண்டிக்கொண்டு ஒரு
மாருதி கார் அதிவேகமாக எங்களுக்கு நேரே
வந்துவிட்டது. அது வந்த வேகத்தைப்பார்த்ததும்,
நிச்சயம் நேருக்கு நேர் மோதல் தான்
(Head on Collision) என நினத்த போது
‘டமால்’ என்ற காதைக் கிழிக்கும்படியான
சப்தம் கேட்டது.


தொடரும்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 5

நான் பயணம் செய்த இரயில் வண்டியின் பெட்டி
கடலுண்டி ஆற்றுப்பாலத்தை தாண்டியபோது,திடீரென
பயங்கர குலுக்கலுடன் முன்னும் பின்னும் படு வேகமாக
குலுங்கி நின்றது.

நிற்கும்போது யாரோ எங்கள் இரயில் பெட்டியை
வேகமாக இழுப்பதுபோல் இருந்தது.வெளியே
எட்டிப்பார்த்தபோது மின்னல் வெட்டுவது போல்
தீப்பொறிகள் பறப்பதும், இரயில் பாதை ஓரம் இருந்த
தந்தி கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டு இருப்பதும்
தெரிந்தது.அப்போது பார்த்து பயங்கர மழை வேறு
பெய்து கொண்டு இருந்தது.

யாரோ மலையாளத்தில்‘இரயில் பெட்டிகள் தீ
பிடித்துக்கொண்டன.’என்று கத்தினார்கள்.உடனே
அவசர அவசரமாக அந்த மழையிலும் நானும் என்னோடு
பயணித்த இரு சென்னை பயணிகளும் கீழே
இறங்கிப்பார்த்தபோது,தீ ஏதும் காணப்படவில்லை.

ஆனால் பாலத்தின் அருகே ஒரே அழுகையும்
சத்தமுமாய் இருந்தது.அருகில் உள்ள வீடுகளில்
இருந்து நிறைய பேர் அந்த இடத்திற்கு ஓடி வந்து
கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் சென்று பார்த்தபோது,எனது பெட்டிக்கு
அடுத்தபெட்டி பாலத்தையும் கரையையும்
தொட்டுக்கொண்டு இருந்தது.அதற்கு அடுத்த
இரண்டு பெட்டிகள் பாலத்திலிருந்த தண்டவாளங்களில்
இருந்து இறங்கி தண்ணீரில் விழுந்து
தொங்கிக்கொண்டு இருந்தன.

அந்த கோர விபத்தின் காட்சியை இன்னும் என்னால்
மறக்க இயலவில்லை.இப்போது நினைத்தாலும்
மனதை என்னவோ செய்கிறது.

தண்ணீரில் விழுந்த பெட்டிகளில் இருந்து வந்த
மரணஓலமும், தண்ணீரில் விழுந்த சிலர்
வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி
செய்து கொண்டு இருந்ததும்,சிலர் தண்ணீரில்
மூழ்கிக்கொண்டு இருந்ததும்,என் நினைவைவிட்டு
இன்னும் மறையவில்லை.

விபத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த பயணிகளைக்
காப்பாற்ற ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு
இருந்தவர்கள் விரைந்து படகில் வந்து தங்களால்
முடிந்த அளவு உயிர்களைக்காப்பாற்ற
உதவிக்கொண்டு இருந்தார்கள்.

அருகில் உள்ள வீடுகளில் இருந்து வந்த பல நூறு
மக்கள் மழையையும் பொருட்படுத்தாது,மீனவர்கள்
காப்பாற்றி கரை சேர்த்தவர்களை மருத்துவ மனைக்கு
கொண்டு செல்ல உதவினார்கள்.அந்த இடத்திற்கு
ஜீப் முதலிய வாகனங்கள் செல்ல வசதியாக சிலர்
சாக்குப் பைகளில் ஈரமணலை நிரப்பி கட்டி
வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில் போட்டு
உதவிக்கொண்டு இருந்தார்கள்.

நாங்களே விபத்தில் மாட்டிக்கொண்ட‘அதிர்ச்சி’யில்
இருந்ததால் என்ன செய்வது எனத்தெரியாமல்
சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தோம்.

ஒரு சில விநாடி முன்பு அந்த விபத்து நடந்திருந்தால்
நாங்கள் பயணம் செய்த பெட்டி தண்ணீரில்
மூழ்கியிருக்கும்.அதை நினைத்தபோதே அடிவயிற்றில்
ஏதோ அமிலம் சுரப்பதுபோல் இருந்தது.

அப்போது திடீரென ஞாபகம் வந்தது. இந்நேரம்
ஊடகங்கள் இந்த விபத்து பற்றி நாடு முழுவதும்
தெரிவித்து இருக்கும்.நான் இந்த இரயிலில்
வருவதாக தெரிவித்து இருந்ததால், உடனே
என் மனைவிக்கு நான் நலமுடன் இருப்பது குறித்து
உடனே தெரிவிக்க வேண்டுமென்று நினைத்து
கைபேசியில் தொடர்பு கொண்டேன்.

எல்லோரும் ஒரே நேரத்தில் கைபேசியில் முயற்சி
செய்ததால் Network Busy என வந்ததால்,அருகில்
உள்ள வீடுகளில் ஏதேனும் தொலை பேசி இருந்தால்
அதன் மூலம் தெரிவிக்கலாம் என்று கிளம்பினேன்.
என்னுடன் கீழே இறங்கிய அந்த இரு பயணிகளும்
உடன் வந்தனர்.

சிறிது தூரம் அங்கே உள்ள தென்னந்தோப்பு வழியே
நடந்து சென்று, ஒரு வீட்டை அடைந்து விஷயத்தை
சொன்னதும் சற்றும் தயங்காது எங்களை
தொலைபேசியை உபயோகிக்க அனுமதித்தார்கள்.

எனது மனைவியைக் கூப்பிட்டபொது அவருக்கு
அந்த விபத்து பற்றி அப்போது தெரியவில்லை. நான்
வந்த இரயில் ஒரு‘சிறிய’ விபத்தில் சிக்கியுள்ளதால்
நான் சென்னையை அடைய சில மணி நேரங்கள்
தாமதமாகும் என்றும்,நான் நலமுடன் இருப்பதாகவும்
கூறி தொலை பேசியை வைத்துவிட்டேன்.

மற்ற பயணிகளும் அவரவர் வீடுகளுக்கு
தொலைபேசியில் தாங்கள் நலமுடன் இருப்பதை
தெரிவித்தார்கள்.

பிறகு நாங்கள் தொலைபேசிக்கான கட்டணத்தை
அந்த வீட்டின் உரிமையாளருக்கு கொடுத்தபோது,
நீங்கள் விபத்தில் இருந்து தப்பித்தீர்களே,அதுவே
போதும் எனக்கூறி அவர் அதை வாங்க மறுத்து,
விட்டார். அவருக்கு நன்றிகள் பல சொல்லி
திரும்பத்தொடங்கினோம்..

திரும்பும்போது ஒரு இடத்தில் Signal கிடைத்தபோது,
என்னோடு வங்கியில் பணி புரிந்து கொண்டு இருந்த
திரு இலக்ஷ்மணன் என்ற நண்பர் தொலை பேசியில்
தொடர்பு கொண்டார்.

அப்போது மணி 6.30 இருக்கும். அவர் பதட்டதோடு என்
நலம் பற்றி விசாரித்தார். நான் நலமோடு இருக்கிறேன்
என்றதும்,‘சார், நாங்கள் செய்தி அறிந்ததும்,பதட்டப்பட்டு
உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.ஆனால்
இணைப்பு கிடக்கவில்லை. உடனே பொது மேலாளர்
உட்பட நாங்கள் 15 பேர் காரிலும் ஜீப்பிலும் கிளம்பி
கோழிக்கோடு வந்தபோது,பொது மக்கள் எல்லோரும்
விபத்து நடந்த இடத்துக்கு சென்றால்,மீட்புப்பணி
செய்ய இயலாது என்பதால் மேலே செல்லவிடாமல்
காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்திவிட்டனர்.
அதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் உங்களை
தொடர்பு கொள்ள எல்லோரும் முயற்சித்துக்கொண்டு
இருக்கிறோம்.தங்கள் குரலைக் கேட்டதும் தான்
எங்களுக்கு நிம்மதி.’ என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்ததும்,
அடுத்து NABARD வங்கியிம் உதவிபொதுமேலாளரும்,
எங்கள் வங்கியில் நெறியாளருமான
திரு சாமுவேல் ஜான்சன் என்னைத் தொடர்பு
கொண்டார். அவரிடமும் இறைவன் கருணையால்
உயிர் பிழைத்ததை சொன்னேன்.

திரும்ப பெட்டிக்கு அருகே வந்தபோது, விபத்து
நடந்த இடத்தில் இரயில்வே துறையினரின்
மீட்புக்குழு வந்து, உள்ளூர் மக்கள் மற்றும் மாவட்ட
நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, சிரமத்தைப்பாராது
விபத்தில் சிக்கி இருந்தோரை காப்பாற்றிக்
கொண்டிருந்ததை பார்த்தேன்.

பயணிகளில் இறந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது
தெரியாவிட்டாலும் குறைந்தது 50 பேருக்கு மேல்
இறந்திருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.அந்த
நேரத்தில் உள்ளூர் மக்கள் செய்த உதவியை
யாராலும் மறக்க இயலாது.

திரும்பவும் மழை வலுத்துக்கொண்டதால்,
பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். அப்போது
அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பொது மக்கள்
பெட்டியில் இருந்த எங்களைப்பார்த்து எல்லோரும்
‘நலம் தானே?’ என விசாரித்து எங்கள் அனைவருக்கும்
வாழைப்பழமும் தேநீரும் கொடுத்து சாப்பிடச்
சொன்னார்கள்.

நாங்கள் மறுத்தபோது,’தயை செய்து சாப்பிடுங்கள்.
உயிரோடு இருந்து இதை சாப்பிட அனுமதித்த
இறைவனுக்கு அதுவே நீங்கள் காட்டும் மரியாதை.’
என்றதும் அனைவரும் மறுக்காமல் அந்த பரிவான
உபசரிப்பை ஏற்றுக்கொண்டோம்.

அப்போது அவர்களில் ஒருவர் ‘இந்த வண்டி எப்போது
கிளம்பும் எனத்தெரியவில்லை. ஒருவேளை இன்று
இரவும் இங்கேயே இருக்க நேரிட்டால், பெண்கள்
எல்லாம் அருகில் உள்ள வீடுகளில் தங்கிக்கொள்ளலாம்.
ஆண்கள் அனைவரும் வண்டியிலேயே இருந்து
பொருட்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள்
உங்களுக்கு காவலாக இருப்போம்.’ என்று
சொன்னதைக் கேட்டதும்,ஆபத்து என்று வந்துவிட்டால்
மொழி, இனம் என்ற பாகுபாடு மறைந்து மனித நேயம்
வெளிப்படும் போலும் என நினைத்துக்கொண்டேன்.

பின் ‘ஹிந்து’ நாளிதழின் நிருபர் ஒருவர் வந்து
நடந்தைப்பற்றி கேட்டபோது அதுபற்றி மற்றவர்கள்
பேசத்தயங்கியபோது நான் முன்வந்து எனக்குத்
தெரிந்ததை சொன்னேன்.

எங்களது இரயில், எஞ்சினோடு முக்கால் பகுதி
கரையைத் தாண்டி விட்டதால்,எங்கள் பெட்டிக்கு
அடுத்த பெட்டியோடு பயணத்தை தொடர
அனுமதிப்பார்கள் என்றும், வண்டியின் கடைசியில்
இருக்கும் Guard Van பாலத்தின் மேல் இருப்பதால்
அது இல்லாமல் வண்டியை எடுக்க அனுமதிக்கு
காத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

என்ன நடந்ததோ தெரியவில்லை. இரவு சுமார்
9 மணிக்கு எங்களது இரயில் அந்த இடத்தை விட்டு
நகர ஆரம்பித்தது.


தொடரும்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 4

பேருந்து குளத்தில் இறங்க ஆரம்பித்ததும்,பேருந்தில்
இருந்த அனைவரும் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டோம்.
எல்லோருடைய குரலிலும் மரண ஓலம் இருந்தது
உண்மை.ஆனால் ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை
அந்த குளத்தில் சகதி இருந்த இடத்தில்
செலுத்தி விட்டார்.

பேருந்து குளத்தில் மூழ்கப்போகிறது,நாம் எல்லாம்
தண்ணீரில் மூழ்கப்போகிறாம் என நினைத்தபோது,
எங்களது அதிர்ஷ்டம் அது நேரே சென்று சகதியில்
சிக்கிக்கொண்டது.

குளத்தின் சரிவான பகுதியில் சென்றதால்,பேருந்தின்
முன்பகுதி தண்ணீரிலும் சகதியிலும் இருக்க,பின் பகுதி
அப்படியே தூக்கிக்கொண்டு 45 டிகிரி கோணத்தில்
நின்றது.நாங்கள் எல்லாம் அந்தரத்தில்,சறுக்கு மரத்தில்
இருப்பதுபோல் இருந்தோம்.

தண்ணீருக்குள் சென்ற இன்ஜின் வேலை செய்வதை
நிறுத்தியதும்,உடனே அந்த பேருந்தின் ஓட்டுனர்
அநாசயமாக எழுந்து,‘யாரும் பயப்படவேண்டாம்.
பேருந்தின் நடத்துனர் முதலில் பின்புறம் உள்ள
Emergency கதவைத் திறப்பார். நான் உள்ளே இருந்து
ஒருவர் பின் ஒருவராக உங்கள் அனைவரையும்
பத்திரமாக இறக்கிவிடுகிறேன்.அவசரப்படாமல்
பொறுமையாய் இருங்கள்.’என்றார்.

ஆனால் அவர் பேச்சை யாரும் கேட்பதாக இல்லை.
எங்கே பேருந்து இன்னும் தண்ணீருக்குள்
சென்றுவிடுமோ என எண்ணி,Emergency கதவை
நோக்கி எல்லோரும் பாய்ந்தனர்.

கதவருக்கே செல்வதற்காக எழுந்த அனைவரும்
பேருந்து சம நிலையில் இல்லாமல் சரிவு நிலையில்
இருந்ததால்,எழுந்து வெளியே வர முயற்சித்தபோது
நிலை தடுமாறி, கீழே விழுந்து,உருண்டு கை
கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

நான் மட்டும்,பேருந்து இனி தண்ணீருக்குள்
செல்லாது என்பதால்,இந்த களேபரத்தில் எல்லோரும்
இறங்கியபின் இறங்கலாம் என்று,அமைதியாய்
உட்கார்ந்திருந்தேன்.

முதலில் நடத்துனர் இருக்கைகளின் கைப்பிடியை
பிடித்துக்கொண்டு மெதுவாக Emergency கதவைத்
திறந்து,முழங்கால் அளவு சேறுடன் கூடிய
தண்ணீரில் குதித்தார்.

அதற்குள் ஒட்டுனர் வந்து மிகவும் பொறுமையாய்
ஒவ்வொருவராக பிடித்து கதவருகே கொண்டுசென்று
குதிக்க சொன்னார்.கீழே நடத்துனர் இருந்து
ஒவ்வொருவரையும் தாங்கிப்பிடித்து இறக்கினார்.

கையிலும் காலிலும் காயமாதலால்
அந்த இடத்தில் ஒரே அழுகையும் சப்தமுமாய்
இருந்தது. எல்லோரும் இறங்கிய பின்
என்னைப்பார்த்து,‘சாப்.நீங்களும்
இறங்கலாம்.’என்றார்.

அதுவரை எல்லோரும் எழும்போது விழுவதைப் பார்த்த
நான், விழாமல் கவனமாக எழவேண்டும் என
நினைத்திருந்தேன்.ஆனால் நானும் மறந்துபோய்
கைப்பிடியை பிடிக்காமல் எழுந்தபோது, தடுமாறி கீழே
விழுந்து இரண்டு முழங்கால்களிலும் சிராய்ப்பு
ஏற்படுத்திக்கொண்டேன்.

அந்த ஓட்டுனர் என்னையும் பிடித்து தூக்கி
சன்னலருகே அழைத்து சென்று குதிக்கவைத்தார்.
பின் அவரும் எனக்கு பின் குதித்து வந்தார்.

அவரைக்கண்டதும் பேருந்தில் பயணம் செய்த
பயணிகள் அனைவரும் தங்களது காயத்தையும்,
வலியையும் மறந்து கோபத்தோடு‘ஏன் பேருந்தை
குளத்தில் இறக்கி எங்களைக் கொல்லப்பார்த்தாய்?
என சண்டை போட்டனர்.

அவர் மிக சாவதானமாக ‘நான் அவ்வாறு செய்யாது
இருந்தால் நாம் அனைவரும் உயிரோடு இருந்திருக்க
மாட்டோம்.காரணம் பேருந்தில் Brake திடீரென
வேலை செய்யவில்லை.அதை நான் Palwal தாண்டியதும்
கவனித்தேன். இந்த தில்லி மதுரா சாலையில்
Brake இல்லாமல் ஓட்டினால், இன்னும் சிறிது தூரத்தில்
இருக்கும் Bamni Khera கிராமத்தில் விபத்து ஏற்படுவது
நிச்சயம்.

அப்படி ஒருவேளை இங்கு இல்லாவிட்டாலும்,நெருக்கடி
மிகுந்த இந்த சாலையில் எதிரே வரும் வண்டியில்
மோத நேரிடலாம்.அதனால்தான் திரும்பி திரும்பி
பார்த்து பின்னாலும் முன்னாலும் யாரும் வரவில்லை
என்பதை உறுதி செய்துகொண்டு,இந்த குளத்தில்
இறக்கினேன். இங்கு தண்ணீரைவிட சேறு அதிகம்
இருக்கும் என எனக்குத் தெரியும் ஆதலால் இங்கே
இறக்கினேன்.’என்றார்.

அதுவரை கோபத்தொடு பேசிய பயணிகள் உண்மை
நிலை தெரிந்ததும் அந்த ஓட்டுனரின் கையைப் பிடித்து
குலுக்கியும் கையில்,முத்தம் கொடுத்தும் தங்களது
நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.நானும் அவருக்கு
என் நன்றியைத் தெரிவித்தேன்.

நல்ல வேளையாக அந்த பேருந்தில் இருந்த ஒரு
பயணியிடம் Dettol இருந்ததால் அதை எல்லோருக்கும்
கொடுத்து முதல் உதவி செய்தார்.

பின் நடத்துனர் எங்களை சாலைக்கு அழைத்து வந்து
மதுரா நோக்கி செல்லும் ஹரியானா அரசுப்பேருந்தில்
ஏற்றிவிட்டார்.

நான் Hodal வந்ததும் இறங்கி எங்களது வங்கி கிளைக்கு
சென்றேன்.எனது கோலத்தைப் பார்த்த மேலாளர்
அதிர்ந்து‘என்ன ஆயிற்று?’என்றதும் நடந்ததை
விளக்கியதும்.’நல்ல வேளை.நீங்கள் உயிர் பிழைத்து
வந்தீர்களே!அதுவே போதும்.’என்றார்.
பணி முடித்து வந்து டில்லியில் நண்பர்களிடம்
சொன்னபோது அடுத்த வாரம் ஊருக்கு செல்ல
இருக்கையில் ஏன் இந்த வேலை?’என்றனர்.
ஆனால் இந்த நிகழ்வை மறு வாரம் திருமணத்திற்கு
ஊர் சென்றபோது வீட்டில் சொல்லவில்லை.

நான்காவது தடவையாக நான் மரணத்தின் பிடியில்
இருந்து தப்பியது 2001 ஆம் ஆண்டில்.அப்போது
நான் கேரள மாநிலம் கண்ணூரில் எங்கள் வங்கியால்
Sponsor செய்யப்பட்ட North Malabar Gramin Bank ல்
தலைவராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

எனது நெருங்கிய நண்பரும் எங்கள் வங்கியின்
தில்லி வட்டார அலுவலகத்தில் துணைப்
பொதுமேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த
திரு சந்தானகிருட்டினன் அவர்களின் மகள்
திருமணம் சென்னையில் ஜூன் 24 ஆம் நாள்
(ஞாயிறு) நடக்க இருந்தது.

அவர் என்னை திருமணத்திற்கு முதல் நாளே
வரவேண்டும் என சொல்லியிருந்ததால்,
ஜூன் 22(வெள்ளி)அன்று மதியம் கண்ணூரிலிருந்து
புறப்பட்டேன். மதியம் 2.45 மணிக்கு மங்களூரில்
இருந்து சென்னை செல்லும் சென்னை மெயிலில்
சென்னைக்கு புறப்பட்டேன்.

நான் முன் பதிவு செய்தபோது,மூன்றடுக்கு பெட்டியில்
கீழே உள்ள படுக்கை கிடைத்ததால்,சன்னலோரம்
அமர்ந்து தென்னை மரங்களையும், இடையே ஓடும்
ஆறுகளையும், சில இடங்களில் தெரிந்த அரபிக்
கடலையும் இரசித்துக்கொண்டிருந்தேன்.

சுமார் 4.30 மணிக்கு கோழிக்கோடு இரயில்
நிலையத்தை அடைந்த இரயில், சுமார் கால் மணி
நின்றுவிட்டு 4.45 மணிக்கு கிளம்பியது. அடுத்து
11 கி.மீ தூரத்தில் இருந்த பரூக் என்ற நிலையத்தில்
நின்றுவிட்டு கிளம்பியது.

அதற்கு அடுத்த இரயில் நிலையமான கடலுண்டி
என்ற இடத்தை கடந்தபோது மணி சுமார் 5 இருக்கும்.
(அங்கே அந்த மெயில் நிற்காது) அந்த இரயில்
நிலையத்திற்கு அருகே ஓடிய ஒரு பெரிய ஆறு,
அருகில் உள்ள அரபிக் கடலில் கலப்பது இரயில்
இருந்து பார்க்கும்போது நன்றாகத்தெரியும்.

அன்று அந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடி
ஓடியதால்,தண்ணீர் இரயில் பாலத்தை தொட்டுக்
கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

இரயில் அந்த பாலத்தைகிக் கடக்கும்போது,‘ஐயோ
வெள்ளம் இப்படி கரை கொள்ளாமல் ஓடுகிறதே
என நினத்துக்கொண்டு இருந்தேன்.

நான் இருந்த இரயில் பெட்டி கரையைத்
தொட்டபோது ‘அது’ நடந்தது.


தொடரும்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 3

தண்ணீருக்குள்ளே போய்க்கொண்டிருந்தபோது
திடீரென தலைமயிரைப் பிடித்து யாரோ
இழுப்பதுபோல் உணர்ந்தேன்.

சில வினாடிகளில் நான் தண்ணீர் மட்டத்திற்கு
வெளியே இருந்தேன்.

அப்போதுதான் பார்த்தேன் எனது தலைமுடியை
நண்பர் இராதாவின் தம்பி இராமலிங்கம் தான்
பிடித்து வெளியே இழுத்திருக்கிறார்.

உடனே இருவரும் என் அருகில் வராமலேயே
என்னை இழுத்துக்கொண்டு நீந்தி வந்து கரையில்
போட்டார்கள்.

பிறகு நண்பர் இராதா என்னிடம் ‘என்ன எங்களை
இப்படி பயமுறுத்திவிட்டாய்? நாங்கள் உன்னோடு
குதித்து வெளியே வந்து பார்த்தால் உன்னைக்
காணவில்லை. எங்களுக்கு பயம் வந்து
பார்த்தபோது நீ உள்ளே போய்க்கொண்டு
இருந்தது தெரிந்தது.

அதனால் தான் திரும்பவும் மூழ்கி உன்னைக்
கொண்டு வந்தோம். நீரில் குதிக்கும்போது
கைகளை கீழே வைத்து அழுத்தவேண்டும்.
அப்போதுதான் வெளியே வரலாம்.
நீ கைகளை மேலே தூக்கிவிட்டதால், வெளியே
வராமல் உள்ளே போக ஆரம்பித்துவிட்டாய்.

நல்லவேளை. உன்னைக் காப்பாற்றி விட்டோம்.
இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு என்ன பதில்
சொல்வது?’ என்றார்.

நான் ‘ஏன் என் தலைமுடியைப்பிடித்து இழுத்து
வந்தீர்கள். என்னை அப்படியே தூக்கியிருக்கலாமே?’
என்றபோது அவர் ‘நீரில் மூழ்குபவர்களின் அருகில்
சென்றால் பயத்தில் அவர்கள் நம்மை
கட்டிப்பிடித்து கொள்வார்கள்.அப்போது காப்பாற்ற
சென்றவர்களும் மூழ்கவேண்டியதுதான்.
அதனால்தான் அருகில் வராமலேயே உன்னுடைய
தலைமயிரை பிடித்து இழுத்து கரை சேர்த்தோம்.’
என்றார்.

அவரிடம் சொன்னேன் ‘எனக்கும் தண்ணீருக்கும்
இராசி இல்லை போலும். இனி கனவில் கூட இந்த
மாதிரி முயற்சிக்க மாட்டேன்.உங்களால் எனக்கு
இன்றைக்கு புது வாழ்வு கிடைத்தது.அதற்கு நன்றி.’
என்று.

அதற்கு அவர்’ நீ மாட்டேன் என்று கூறியும்,
நாங்கள் வற்புறுத்தியதால் தானே நீ குதித்தாய்.
அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்.’என்றார்.

சிறிது நேரம் ஆற்றங்கரையிலேயே ஓய்வெடுத்து
பின் அவர்களோடு வீடு திரும்பினேன்.இந்த
செய்தியை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள்
என்று சொல்லவில்லை.

மூன்றாவது தடவையாக நான் மரணத்தில் இருந்து
தப்பிய நிகழ்வு, நான் புது தில்லியில் சிண்டிகேட்
வங்கியில் பணிபுரிந்தபோது நடந்தது.

1973 அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் எனது
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்காக
அக்டோபர் 9 ஆம் நாள் தில்லியிலிருந்து சென்னை
செல்லும் GT Express இரயிலில் முன்பதிவு
செய்திருந்தேன்.

திடீரென அக்டோபர் 1 அன்று எனது Boss கூப்பிட்டு
அரியானா மாநிலத்தில் உள்ள Hodal என்ற ஊரில்
இருந்த கிளையில் நிறைய வேளாண் கடன்
விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருப்பதாகவும்,
போய் பார்த்துவிட்டு வந்து அறிக்கை தருமாறு
பணித்தார்.

நான்,“சார். நான் 9 ந்தேதி ஊருக்கு விடுப்பில்
செல்ல இருப்பதால் வேறு யாரையாவது
அனுப்புங்கள்” என்றேன். உடனே அவர் ‘
அங்கு நீங்கள் அதிக நாள் இருக்க
வேண்டியதில்லை.ஒரு நாள் அல்லது இரண்டு
நாளில் வேலை முடிந்துவிடும். எனவே
நீங்கள் திருமணத்திற்கு செல்லும் நாளுக்கு
முன்பே திரும்பி வந்துவிடலாம்.’ என்றார்.

நானும் அக்டோபர் 3 அன்று காலை ஜனக்பூரியில்
நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கிளம்பி ISBT என
அழைக்கப்பட்ட,வேறு மாநிலங்களுக்கு செல்லும்
பேருந்துகளுக்கான நிலயத்திற்கு சென்று Hodal
செல்லும் ஹரியானா மாநில பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.

தில்லியிலிருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில்
இருந்த ஹோடல் அடைய சுமார் இரண்டு
மணிக்கு மேல் ஆகும் என்பதால் படிக்க
‘குமுதம்’ வார இதழ் வாங்கிக்கொண்டேன்.

பேருந்தில் ஏறும் இடத்தருகே இருந்த
சன்னலோர இருக்கையில் அமர்ந்து ‘குமுதம்’
படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

'குமுதம்' இதழ் படிக்கும் சுவாரஸ்யத்தில் பேருந்து
ஃபரிதாபாத் தாண்டியதையும் 62 கி.மீ தூரத்தில்
இருந்த Palwal என ஊரை அடைந்ததையும்
கவனிக்கவில்லை.

Palwal இல் இருந்து 3 கி.மீ தூரத்தில் இருந்த
Bamni Khera என்ற ஊரை நெருங்கும் போது
தான் அது நடந்தது.

அதுவரை வார இதழில் மூழ்கியிருந்த நான்
தற்செயலாக தலையைத் தூக்கிப் பார்த்தேன்.
அந்த பேருந்தின் ஓட்டுனர் அடிக்கடி திரும்பிப்
பார்த்துக்கொண்டு இருப்பதைக் கவனித்தேன்.

அந்த ஊரை நெருங்குமுன் திடீரென அருகில்
இருந்த குளத்தை நோக்கி அவர் பேருந்தை
திருப்பியதும் எனக்குள் திடீரென பயம்
தொற்றிக்கொண்டது.

என்ன ஏது யோசிப்பதற்குள் பேருந்து வேகமாக
குளத்திற்குள் இறங்க ஆரம்பித்தது.

தொடரும்

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 2

நான் தண்ணீர் குடித்து, மூழ்கிக்கொண்டிருந்த அந்த
நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.அதனால்தான்
நான் இன்று இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்
ஒரு தம்பதியினர் இருந்தனர்.அந்த மாமா எங்கள்
ஊருக்கு அருகில் உள்ள ஊரான கிளிமங்கலத்திலிருந்து
வந்ததால் அவரை கிளிமங்கலத்து மாமா என்றும்
அவரது துணைவியார் அருகில் உள்ள
வண்ணாங்குடிகாடு என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால்
அவரை வண்ணாங்குடிகாட்டு அக்கா என்றும்
அழைப்போம்.(அவர்கள் பெயர் இதுவரை எனக்கு
தெரியாது.)

அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் எங்கள்
அனைவரிடமும் அன்பாக இருப்பார்கள்.நாங்கள்
பாதிநேரம் அவர்கள் வீட்டில் தான் இருப்போம்.

அந்த மாமா எங்களுக்கு நிறைய கதை சொல்லுவார்.
அவர்கள் வீட்டில் இருந்த நாரத்தை மரத்திலிருந்து
நாரத்தை பழங்களை பறித்து எங்களுக்கு கொடுப்பார்.

அன்றைக்கு எனது நல்ல நேரம்,அந்த அக்கா
அப்போதுதான் குளித்து கரை ஏறி இருக்கிறார்.நான்
தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பதையும்
பார்த்திருக்கிறார்.

அவர் குளிக்க உபயோகித்த மஞ்சளை மறந்து
படித்துறையிலேயே வைத்துவிட்டு
சென்றுவிட்டதால் அதை எடுக்க திரும்ப
வந்திருக்கிறார்.(இந்த காலத்தில் யார் மஞ்சளை
உபயோகிக்கிறார்கள்?)

அந்த பையன் இராமநாதன் மட்டும் படித்துறையில்
இருப்பதைப் பார்த்துவிட்டு நான் எங்கே என்று
கேட்டிருக்கிறார்.

அவன் பதில் சொல்லாமல் முழித்தபோது தண்ணீரில்
யாரோ தத்தளிப்பதை பார்த்து,உடனே தண்ணீரில்
பாய்ந்து தூக்கியபோது,அது நானாக இருந்ததைக்
கண்டு அதிர்ச்சியுற்று உடனே என்னை தலைகீழாக
பிடித்து நீரை வெளியேற்றி இருக்கிறார்.

பின் தரையில் படுக்கவைத்து உள்ளங்கால்
உள்ளங்கைகளை தான் கைகளால் சூடாக்கி
தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு
திரும்பியிருக்கிறார்.

அதற்குள் செய்தி அறிந்து,பள்ளியில் ஐயா அவர்கள்
அந்த பையனை நன்றாக‘விசாரித்திருக்கிறார்.அவன்
ஏதோ விளையாட்டாக என்னைத் தண்ணீருக்குள்
தள்ளியிருக்கிறான். அவ்வளவே.

நான் கண் விழித்து பார்த்தபோது எங்கள் வீட்டு
கட்டிலில் படுத்திருந்தேன். என்னை சுற்றி அம்மாவும்
அந்த அக்காவும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பா சற்று
தள்ளி நின்று கொண்டிருந்தார்கள்.

நான் கண் விழித்து பார்த்ததில் அனைவருக்கும்
மகிழ்ச்சி. அப்பா மட்டும்‘ஏன் ஏரிக்கு தண்ணீர்
குடிக்கப்போனாய்?’என்று கடிந்துகொண்டார்கள்.

அதற்கு வண்ணான்குடிகாட்டு அக்கா ‘பாவம் தம்பி
பயந்திருக்கு. திட்டாதிங்க.ஒரு கண்டத்திலிருந்து
இப்பதான் தப்பியிருக்கு.’ என்று அப்பாவிடம்
சொன்னார்கள்.

அம்மா மட்டும் நான் பயந்திருப்பதாய் எண்ணி,
கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் மோரை
விட்டு பின் அதை குடிக்க சொன்னார்கள்.

நான் பிழைத்தது புனர் ஜென்மம் தான் என்று
பேசிக்கொண்டார்கள்.

இந்த நிகழ்வுக்கு பிறகு தண்ணீரை கண்டாலே
எனக்கு பயம் தான்.

எனக்கு இரண்டாவது தடவையாக திரும்பவும்
அதே போல் ஒரு நிகழ்வு ஏற்பட்டது.
இது நானாக ஏற்படுத்திக்கொண்டது.

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது புகுமுக
வகுப்பு தேர்வுகளை திருச்சி புனித வளவனார்
கல்லூரியில் (St.Joseph’s College) முடித்துவிட்டு
ஊருக்கு வந்திருந்தேன்.

மாலையில் நானும் எனது பக்கத்து வீட்டு நண்பரும்,
ஆரம்பப்பள்ளி தோழருமான
திரு இராதாகிருஷ்ணனுடனும், அவர் தம்பி
திரு இராமலிங்கத்துடனும் எங்கள் ஊரில் ஓடும்
வெள்ளாற்றுக்கு சென்றோம்.

அப்போதெல்லாம் எங்களுக்கு மாலையில்
பொழுதுபோக்கு ஆற்றுக்கு சென்று சிறிது நேரம்
ஆற்று மணலில் உட்கார்ந்து இருந்து பேசிக்கொண்டு
இருந்து விட்டு,பின் குளித்து இருட்டியபின்
வீட்டுக்கு திரும்புவது தான்.

இந்த நேரத்தில் வெள்ளாற்றைப் பற்றி நான்
சொல்லியாகவேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன்
மலையில் தோன்றி சேலம், பெரம்பலூர் கடலூர்
மாவட்டங்களில் ஓடி பின் பரங்கிப்பேட்டை அருகே
வங்காள விரிகுடாவில் கலக்கும், இந்த ஆறு
வருஷம் முழுதும் ஓடும் வற்றாத நதி அல்ல.

மழைக்காலங்களில் தான் வெள்ளம் ஆற்றில்
கரைபுரண்டு ஓடும். மற்ற நாட்களில் ஆற்றின்
ஒருபுறம் புடவையில் பார்டர் போல சிறிய
அளவில் சலசலத்துக்கொண்டிருக்கும்.

மேலும் இந்த ஆறு ஒழுங்காக நேராக ஓடாது.
வளைந்து வளைந்து பாம்பு நெளிந்து செல்வதுபோல்
ஓடும். இதனாலேயே எங்கள் ஊரில் சரியான
நேர்கோட்டில் எழுதாதவர்களைப் பார்த்து ‘என்ன
வெள்ளாற்று ஒழுங்காய் எழுதுகிறாய்?’என்பார்கள்.

ஆற்றின் போக்கு ஒவ்வொரு வெள்ளத்தின் போதும்
தண்ணீர் ஒட்டத்தின் படி மாறும். அதனால் எங்கள்
ஊரிலிருந்து தொலைவில் இருந்த அது, இப்போது
திசை மாறி ஊருக்கு அருகே வந்துள்ளது.

நாங்கள் ஆற்றுக்கு சென்ற நேரம் கோடை காலம்
என்பதால் ஆற்றில் தண்ணீர் முழங்கால் அளவுக்கும்
கீழே தான் இருந்தது. அப்படி இருக்கும்போது நாங்கள்
தண்ணீர் எங்கு ஆழமாக உள்ளது என்று பார்த்து ஒரு
ஆள் படுத்து குளிக்கின்ற அளவுக்கு அங்கு கைகளால்
மணலை எடுத்துவிட்டு அதில் படுத்து குளித்து
வருவோம்.

அன்றும் அதுபோல் குளிக்கலாம் என்று நான்
சொன்னபோது, நண்பர்கள் இருவரும் ‘இல்லை.
இல்லை.மண்ணைத்தோண்டி நாம் கஷ்டப்படுவதைவிட
இங்கு உள்ள ‘மடு’வில் குளிக்கலாம்’. என்றார்கள்.

மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது
சில இடங்களில் தண்ணீரின் இழுப்பு (Current) சக்தி
காரணமாக,மண் அரிக்கப்பட்டு,பெரிய பள்ளம்
ஏற்படுவதை ‘மடு’ என்பார்கள்.அந்த இடங்களில் ஆழம்
சில சமயம் ஒரு ஆள் அல்லது இரண்டு ஆள்
மட்டத்துக்குக் கூட இருக்கும்.

மடு ஆழமாக இருக்கும் என்பதாலும், எனக்கு
நீச்சல் தெரியாததாலும் நான் வேண்டாம் என
மறுத்தேன்.

நீச்சல் தெரியாததன் காரணம், சின்ன வயதில் ஏரியில்
ஏற்பட்ட அனுபவம் காரணமாக, எங்கள் அப்பா என்னை
நீச்சல் பழக அனுமதிக்கவில்லை.ஆனால் எங்கள் ஊரில்
உள்ள அனைவருக்கும் ஏரியில் குளித்து நீச்சல்
பழகியிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் விடாப்பிடியாக ‘நீச்சல் ஒன்றும்
அப்படி கஷ்டமானது அல்ல.இப்போது இல்லாவிட்டால்
பின் எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறாய்?
நாங்கள் இருக்கிறோம். உனக்கு கற்றுத்தருகிறோம்.
முதலில் நாங்கள் எப்படி நீச்சல் அடிக்கிறோம்
என்று பார். பின் எங்களோடு நீயும் நீரில்
குதித்து முயற்சி செய். நாங்கள் உடன்
இருப்பதால் பயம் வேண்டாம். என
தைரியம் சொன்னார்கள்.

நானும் அரை மனதோடு ‘சரி’ என சொல்லி
அவர்களோடு சற்று தள்ளி இருந்த அந்த
மடுவுக்கு சென்றேன்.

அவர்கள் இருவரும்‘தொப்’ தொப்’என்று இரண்டு
அல்லது மூன்று முறை மடுவில் குதித்து சுலபமாக
நீந்தி கரை சேர்ந்ததைப் பார்த்ததும் நானும் குதிக்க
முடிவு செய்து அவர்களோடு சேர்ந்து மடுவில்
குதித்தேன்.

குதித்தவுடன் கைகள் இரண்டையும் தெரியாமல்
மேலே தூக்கிவிட்டேன். அதனால்
தண்ணீருக்குள்ள்ள்ள்ளே போய்க்கொண்டே
இருந்தேன்.என்ன செய்வது, எப்படி வெளியே
வருவது எனத்தெரியவில்லை.பயத்தில் தண்ணீர்
குடிக்க ஆரம்பித்துவிட்டேன்.


தொடரும்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 1

நம்மில் சிலர் மறுபிறவி உண்டென்றும்,இறந்தவர்கள்
திரும்பவும் இந்த உலகில் பிறப்பார்கள் என்றும்
நம்புகிறோம்.

மறுபிறப்பு இல்லை என மறுப்போரும் உண்டு.

மறுபிறப்பு என்பது நாம் இப்பிறவியில் செய்த
தவறுகளுக்கு கஷ்டங்களை அனுபவிக்க, இறைவன்
தரும் தண்டனை என்றும் சிலர் சொல்வதுண்டு.

அவையெல்லாம் மூட நம்பிக்கை என்பாரும் உண்டு.

மறுபிறப்பு உண்டா இல்லையா என்ற
விவாதத்திற்குள் புக நான் விரும்பவில்லை.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யுமுன்
தருகின்ற மயக்க மருந்தால், மயக்க நிலைக்கு
செல்லும் நோயாளிகள் கூட வாழ்வின் விளிம்புக்கு
சென்றே, இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.

ஒருவேளை திரும்ப முடியாமல் நோயாளிகள்
‘கோமா நிலைக்கு சென்றால் உயிர் பிழைப்பது
கடினம்தான். எனவே மயக்க மருந்து தரப்படுகின்ற
நோயாளிகளுக்கு நினைவு திரும்புவது கூட
மறுபிறப்பு தான்.

அவ்வளவு ஏன் மருத்துவசதி இல்லாத அந்த
காலங்களில் மகப்பேறு என்பதே பெண்களுக்கு
மறுபிறவி போன்றதுதானே.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட
திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை
பற்றி குறிப்பிடும்போது

“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”


என்று இறப்பை உறங்குவது போலும் என்றும்
பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.

அப்படிப்பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும்
தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத்தானே
பொருள்.

ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத்
தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?
அதை மறுபிறவி என்று சொல்லலாமா?

எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது,
இதுவரை ஐந்து முறை மரணத்தின் பிடியிலிருந்து
தப்பியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு
போன்றது தான் என்பது என் கருத்து.

முதலாவது நிகழ்வு நான் மூன்றாவது
படித்துக்கொண்டிருந்தபோது நடந்தது.

நினைவோட்டம் 2 ல் சொல்லியபடி எங்கள்
ஊரின் மேற்கே இருந்த பெரிய ஏரியின்
அருகே இருந்த ஆலமரம் தான் நான் படித்த
பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தில் உணவு
இடைவேளை மட்டுமல்லாமல் காலையிலும்
மாலையிலும் சுமார் பத்து நிமிடம்
‘ஆசுவாசப்படுத்திக்’ கொள்ளவும்
இடைவேளை உண்டு.

அப்போது நாங்கள் உடனே ஓடிப்போய்
ஏரிக்கரை அருகே சென்று திரும்பி
வருவோம். சிலர் ஏரியில் இறங்கி
தண்ணீர் குடிப்பதும் உண்டு.

இப்போதுதானே நாம் ‘மினரல் வாட்டர்’ என
சொல்லப்படுகின்ற சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை
குடிக்கிறோம். அப்போதெல்லாம் அவை இல்லாத
நாட்கள்.

அந்த ஏரியில் ஒருபுறம் குளித்துக்கொண்டும்,
இன்னொருபுறம் துணிகளை துவைத்துக்கொண்டும்
இருப்பார்கள்.

ஊரில் பல பேரின் குடி நீர் தேவையை அது
பூர்த்தி செய்தது உண்மை. அங்கே தண்ணீர்
குடித்ததால் யாருக்கும் எந்த கேடும் அப்போது
ஏற்பட்டதாக தெரியவில்லை.

அந்த குறிப்பிட்ட நாளில் மதியம் 3 மணிக்கு
இடைவேளை விட்டபோது நானும் எனது
வகுப்புத்தோழர்களோடு எரிக்கரைக்கு சென்றேன்.

சில மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஏரிக்குள்
இறங்கியபோது நானும் அவர்களோடு சென்றேன்.

பெரிய ஏரி என அழைக்கப்பட்ட அந்த ஏரியில்
மக்கள் இறங்கி குளிக்க வசதியாக படிக்கட்டு
கட்டியிருந்தார்கள். சுமார் பத்து அல்லது
பன்னிரெண்டு படிக்கட்டுக்கள் இருக்கும்.

மழைக்காலங்களில் ஆற்றிலிருந்து தண்ணீர்
அதிகம் ஏரிக்கு வரும் ஆதலால் பாதிப்படிகள்
தண்ணீரில் மூழ்கியிருக்கும்.

நாங்கள் அனைவரும் தண்ணீருக்கு அருகே
உள்ள படியில் அமர்ந்துகொண்டு கைகளால்
தண்ணீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தோம்.

எனக்குப்பக்கத்தில், பக்கத்து ஊரான
வேட்டக்குடியை சேர்ந்த இராமநாதன் என்ற
என் வகுப்பு மாணவனும் உட்கார்ந்து தண்ணீர்
குடித்துக்கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை.
என்னைபிடித்து அப்படியே ஏரிக்குள்
தள்ளிவிட்டான்.

கடைசிப்படியில் இருந்து நாங்கள் இருந்த
இடம் வரை தண்ணீர் மட்டம் பெரியவர்களுக்கு
இடுப்பளவு தான் என்றாலும் எங்களைப்போன்ற
சிறுவர்களுக்கு அது தலைக்குமேல் இருந்ததால்
நான் தண்ணீரில் விழுந்ததும் எழுந்திருக்கமுடியாமல்
‘மடக் மடக்’ கென்று தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன்.

தொடரும்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

முத்தான மூன்று! தொடர் பதிவு...

நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் விடுத்த அன்பு
அழைப்பை ஏற்று மூன்று பற்றிய தொடர் பதிவிட நானும்
களத்தில் இறங்குகிறேன்.

மூன்று என்றாலே நினைவுக்கு வருபவை,முத்தமிழும்,
முக்கனியும்,மூவுலகமும்,முக்காலமும்,மூவேந்தர்களும்
என சொல்லிக்கொண்டே போகலாம்.

மூன்றுக்கும் எனக்கும் கூட தொடர் உண்டு.எனது பிறந்த
தேதியான 12 ஐ கூட்டினால் வரும் எண் கூட 3 தான்.
எனவே எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத மூன்று பற்றி
இதோ.

1)எனக்குப் பிடித்த மூன்று
அ) நேரம் தவறாமை
ஆ) சொன்ன சொல்லை காப்பாற்றுவது
இ) வெளிப்படையாக பேசுவது

2) எனக்குப் பிடிக்காத மூன்று
அ) சாலை விதியை மதிக்காமல் செல்லும்
மாநகர (நரக) பேருந்துகள்
ஆ) பொது இடத்தில் சத்தம்போட்டு கைபேசியில்
பேசுவது
இ) வேலை செய்யும் நிறுவனத்திற்கு
விசுவாசமில்லாமல் இருப்பது

3) பிடித்த மூன்று எழுத்தாளர்கள்அ) கல்கி
ஆ) தேவன்
இ) சுஜாதா

4) பிடித்த மூன்று படைப்புகள்
அ) பொன்னியின் செல்வன்
ஆ) சிவகாமியின் சபதம்
இ) மிஸ்டர் வேதாந்தம்

5) பிடித்த மூன்று திரைப்படங்கள்
அ) பராசக்தி
ஆ) கப்பலோட்டிய தமிழன்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

6) அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்
அ) மன்னிக்க வேண்டுகிறேன்
ஆ) பனியில்லாத மார்கழியா
இ) கண்போன போக்கிலே கால் போகலாமா

7) பிடித்த மூன்று திரைப்பட கவிஞர்கள்
அ) கவிஞர் கண்ணதாசன்
ஆ) கவிஞர் வாலி
இ) கவிஞர் வைரமுத்து

8) இரசிக்கும் மூன்று
அ) டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
ஆ) செந்தில் கவுண்டமணி நகைச்சுவை
இ) வடிவேல் சிங்கமுத்து நகைச்சுவை

9) வலைப்பதிவில் விரும்பிப்படிப்பவை
அ) கணினி மென்பொருள் பற்றிய தகவல்கள்
ஆ) பின்னூட்டங்களும் பதில்களும்(குறிப்பாக
சென்னை பித்தனின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள்)
இ) அறிவியல் பற்றிய தகவல்கள்

10) வலைப்பதிவில் பிடிக்காதது
அ) தனி நபர் தாக்குதல்
ஆ) தனி நபர் தாக்குதல்
இ) தனி நபர் தாக்குதல்

11) வலையுலகில் தடம் பதிக்க உதவியவர்கள்
அ) நண்பர் திரு மஸ்தூக்கா அவர்கள்
ஆ) நண்பர் திரு மஸ்தூக்கா அவர்கள்
இ) நண்பர் திரு மஸ்தூக்கா அவர்கள்

12) பிடித்த ஊர்கள்
அ) தெற்கு வடக்குப் புத்தூர் (பிறந்து, வளர்ந்த ஊர்)
ஆ) பொள்ளாச்சி
இ) தார்வார் (கர்நாடக மாநிலம்)

13) பிடித்த உணவு வகை
அ) முருங்கைக்காய் சாம்பார்
ஆ) வெந்தய புளிக் குழம்பு
இ) தேங்காய் துவையல்

எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காதவை அநேகம்
இருப்பினும் அவைகள் எல்லாவற்றையும் இங்கு
வெளியிட்டு படிப்போரை‘துன்புறுத்த’விரும்பவில்லை.
இனி நண்பர் திரு வாசுதேவன் அவர்களை
தொடர் பதிவிட அழைக்கிறேன்.