செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 3

தண்ணீருக்குள்ளே போய்க்கொண்டிருந்தபோது
திடீரென தலைமயிரைப் பிடித்து யாரோ
இழுப்பதுபோல் உணர்ந்தேன்.

சில வினாடிகளில் நான் தண்ணீர் மட்டத்திற்கு
வெளியே இருந்தேன்.

அப்போதுதான் பார்த்தேன் எனது தலைமுடியை
நண்பர் இராதாவின் தம்பி இராமலிங்கம் தான்
பிடித்து வெளியே இழுத்திருக்கிறார்.

உடனே இருவரும் என் அருகில் வராமலேயே
என்னை இழுத்துக்கொண்டு நீந்தி வந்து கரையில்
போட்டார்கள்.

பிறகு நண்பர் இராதா என்னிடம் ‘என்ன எங்களை
இப்படி பயமுறுத்திவிட்டாய்? நாங்கள் உன்னோடு
குதித்து வெளியே வந்து பார்த்தால் உன்னைக்
காணவில்லை. எங்களுக்கு பயம் வந்து
பார்த்தபோது நீ உள்ளே போய்க்கொண்டு
இருந்தது தெரிந்தது.

அதனால் தான் திரும்பவும் மூழ்கி உன்னைக்
கொண்டு வந்தோம். நீரில் குதிக்கும்போது
கைகளை கீழே வைத்து அழுத்தவேண்டும்.
அப்போதுதான் வெளியே வரலாம்.
நீ கைகளை மேலே தூக்கிவிட்டதால், வெளியே
வராமல் உள்ளே போக ஆரம்பித்துவிட்டாய்.

நல்லவேளை. உன்னைக் காப்பாற்றி விட்டோம்.
இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு என்ன பதில்
சொல்வது?’ என்றார்.

நான் ‘ஏன் என் தலைமுடியைப்பிடித்து இழுத்து
வந்தீர்கள். என்னை அப்படியே தூக்கியிருக்கலாமே?’
என்றபோது அவர் ‘நீரில் மூழ்குபவர்களின் அருகில்
சென்றால் பயத்தில் அவர்கள் நம்மை
கட்டிப்பிடித்து கொள்வார்கள்.அப்போது காப்பாற்ற
சென்றவர்களும் மூழ்கவேண்டியதுதான்.
அதனால்தான் அருகில் வராமலேயே உன்னுடைய
தலைமயிரை பிடித்து இழுத்து கரை சேர்த்தோம்.’
என்றார்.

அவரிடம் சொன்னேன் ‘எனக்கும் தண்ணீருக்கும்
இராசி இல்லை போலும். இனி கனவில் கூட இந்த
மாதிரி முயற்சிக்க மாட்டேன்.உங்களால் எனக்கு
இன்றைக்கு புது வாழ்வு கிடைத்தது.அதற்கு நன்றி.’
என்று.

அதற்கு அவர்’ நீ மாட்டேன் என்று கூறியும்,
நாங்கள் வற்புறுத்தியதால் தானே நீ குதித்தாய்.
அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்.’என்றார்.

சிறிது நேரம் ஆற்றங்கரையிலேயே ஓய்வெடுத்து
பின் அவர்களோடு வீடு திரும்பினேன்.இந்த
செய்தியை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள்
என்று சொல்லவில்லை.

மூன்றாவது தடவையாக நான் மரணத்தில் இருந்து
தப்பிய நிகழ்வு, நான் புது தில்லியில் சிண்டிகேட்
வங்கியில் பணிபுரிந்தபோது நடந்தது.

1973 அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் எனது
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்காக
அக்டோபர் 9 ஆம் நாள் தில்லியிலிருந்து சென்னை
செல்லும் GT Express இரயிலில் முன்பதிவு
செய்திருந்தேன்.

திடீரென அக்டோபர் 1 அன்று எனது Boss கூப்பிட்டு
அரியானா மாநிலத்தில் உள்ள Hodal என்ற ஊரில்
இருந்த கிளையில் நிறைய வேளாண் கடன்
விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருப்பதாகவும்,
போய் பார்த்துவிட்டு வந்து அறிக்கை தருமாறு
பணித்தார்.

நான்,“சார். நான் 9 ந்தேதி ஊருக்கு விடுப்பில்
செல்ல இருப்பதால் வேறு யாரையாவது
அனுப்புங்கள்” என்றேன். உடனே அவர் ‘
அங்கு நீங்கள் அதிக நாள் இருக்க
வேண்டியதில்லை.ஒரு நாள் அல்லது இரண்டு
நாளில் வேலை முடிந்துவிடும். எனவே
நீங்கள் திருமணத்திற்கு செல்லும் நாளுக்கு
முன்பே திரும்பி வந்துவிடலாம்.’ என்றார்.

நானும் அக்டோபர் 3 அன்று காலை ஜனக்பூரியில்
நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கிளம்பி ISBT என
அழைக்கப்பட்ட,வேறு மாநிலங்களுக்கு செல்லும்
பேருந்துகளுக்கான நிலயத்திற்கு சென்று Hodal
செல்லும் ஹரியானா மாநில பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.

தில்லியிலிருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில்
இருந்த ஹோடல் அடைய சுமார் இரண்டு
மணிக்கு மேல் ஆகும் என்பதால் படிக்க
‘குமுதம்’ வார இதழ் வாங்கிக்கொண்டேன்.

பேருந்தில் ஏறும் இடத்தருகே இருந்த
சன்னலோர இருக்கையில் அமர்ந்து ‘குமுதம்’
படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

'குமுதம்' இதழ் படிக்கும் சுவாரஸ்யத்தில் பேருந்து
ஃபரிதாபாத் தாண்டியதையும் 62 கி.மீ தூரத்தில்
இருந்த Palwal என ஊரை அடைந்ததையும்
கவனிக்கவில்லை.

Palwal இல் இருந்து 3 கி.மீ தூரத்தில் இருந்த
Bamni Khera என்ற ஊரை நெருங்கும் போது
தான் அது நடந்தது.

அதுவரை வார இதழில் மூழ்கியிருந்த நான்
தற்செயலாக தலையைத் தூக்கிப் பார்த்தேன்.
அந்த பேருந்தின் ஓட்டுனர் அடிக்கடி திரும்பிப்
பார்த்துக்கொண்டு இருப்பதைக் கவனித்தேன்.

அந்த ஊரை நெருங்குமுன் திடீரென அருகில்
இருந்த குளத்தை நோக்கி அவர் பேருந்தை
திருப்பியதும் எனக்குள் திடீரென பயம்
தொற்றிக்கொண்டது.

என்ன ஏது யோசிப்பதற்குள் பேருந்து வேகமாக
குளத்திற்குள் இறங்க ஆரம்பித்தது.

தொடரும்

10 கருத்துகள்:

 1. வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி முனைவர் இரா. குணசீலன் அவர்களே! எதிர்பார்ப்புதானே வாழ்க்கை. தயை செய்து காத்திருக்கவும்.

  பதிலளிநீக்கு
 2. வழக்கம் போல் சஸ்பென்ஸா!
  (ஹோடலுக்கும் பல்வலுக்கும் எத்தனை முறை ஆய்வுக்காகப் போயிருக்கிறேன்!)

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
  ‘சஸ்பென்ஸ்’ இருந்தால் தானே சுவை. நானும் 15 நாட்கள் பல்வலிலும்
  4 நாட்கள் ஹோடலிலும் தங்கியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. அந்த ஊரை நெருங்குமுன் திடீரென அருகில்
  இருந்த குளத்தை நோக்கி அவர் பேருந்தை
  திருப்பியதும் எனக்குள் திடீரென பயம்
  தொற்றிக்கொண்டது.

  என்ன ஏது யோசிப்பதற்குள் பேருந்து வேகமாக
  குளத்திற்குள் இறங்க ஆரம்பித்தது.//எதிர்பார்ப்போடு

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு நன்றி திருமதி மாலதி அவர்களே!
  தங்களது எதிர்பார்ப்புக்கு நன்றி.
  அடுத்த பதிவு வரை பொறுத்தருள்க.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!
  தங்களது நகைச்சுவை பொதிந்த கேள்விக்கு பதிலைத்தரும் நிலையில் நான் இருக்கிறேன். என்ன சரிதானே?

  பதிலளிநீக்கு
 7. சுவாரஸ்யமாக உள்ளது ...மூன்றாம் முறையும் நீரில் கண்டம் .... எனக்கு நடிகர் விவேக் ஒரு படத்தில் இதே போல் நீரில் கண்டம் என புலம்பிக்கொண்டே பல முறை இக்கட்டான சம்பவங்களில் மாட்டி தவித்தது நினைவிற்கு வந்தது ! பின்னால் ஏன் ஓட்டுனர் பார்த்துக்கொண்டே வந்தார் .....அறிய அவா ... வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கு நன்றி திரு வாசுதேவன் அவர்களே! நீங்கள் சொல்லும் நகைச்சுவை காட்சியைப் பார்த்த போது என்னுடைய அனுபவம் எனக்கும் நினைவுக்கு வந்தது. ஓட்டுனர் திரும்பிப் பார்த்ததன் காரணம் அடுத்த பதிவில்.

  பதிலளிநீக்கு