செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 1

நம்மில் சிலர் மறுபிறவி உண்டென்றும்,இறந்தவர்கள்
திரும்பவும் இந்த உலகில் பிறப்பார்கள் என்றும்
நம்புகிறோம்.

மறுபிறப்பு இல்லை என மறுப்போரும் உண்டு.

மறுபிறப்பு என்பது நாம் இப்பிறவியில் செய்த
தவறுகளுக்கு கஷ்டங்களை அனுபவிக்க, இறைவன்
தரும் தண்டனை என்றும் சிலர் சொல்வதுண்டு.

அவையெல்லாம் மூட நம்பிக்கை என்பாரும் உண்டு.

மறுபிறப்பு உண்டா இல்லையா என்ற
விவாதத்திற்குள் புக நான் விரும்பவில்லை.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யுமுன்
தருகின்ற மயக்க மருந்தால், மயக்க நிலைக்கு
செல்லும் நோயாளிகள் கூட வாழ்வின் விளிம்புக்கு
சென்றே, இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.

ஒருவேளை திரும்ப முடியாமல் நோயாளிகள்
‘கோமா நிலைக்கு சென்றால் உயிர் பிழைப்பது
கடினம்தான். எனவே மயக்க மருந்து தரப்படுகின்ற
நோயாளிகளுக்கு நினைவு திரும்புவது கூட
மறுபிறப்பு தான்.

அவ்வளவு ஏன் மருத்துவசதி இல்லாத அந்த
காலங்களில் மகப்பேறு என்பதே பெண்களுக்கு
மறுபிறவி போன்றதுதானே.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட
திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை
பற்றி குறிப்பிடும்போது

“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.”


என்று இறப்பை உறங்குவது போலும் என்றும்
பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.

அப்படிப்பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும்
தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத்தானே
பொருள்.

ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத்
தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?
அதை மறுபிறவி என்று சொல்லலாமா?

எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது,
இதுவரை ஐந்து முறை மரணத்தின் பிடியிலிருந்து
தப்பியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு
போன்றது தான் என்பது என் கருத்து.

முதலாவது நிகழ்வு நான் மூன்றாவது
படித்துக்கொண்டிருந்தபோது நடந்தது.

நினைவோட்டம் 2 ல் சொல்லியபடி எங்கள்
ஊரின் மேற்கே இருந்த பெரிய ஏரியின்
அருகே இருந்த ஆலமரம் தான் நான் படித்த
பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தில் உணவு
இடைவேளை மட்டுமல்லாமல் காலையிலும்
மாலையிலும் சுமார் பத்து நிமிடம்
‘ஆசுவாசப்படுத்திக்’ கொள்ளவும்
இடைவேளை உண்டு.

அப்போது நாங்கள் உடனே ஓடிப்போய்
ஏரிக்கரை அருகே சென்று திரும்பி
வருவோம். சிலர் ஏரியில் இறங்கி
தண்ணீர் குடிப்பதும் உண்டு.

இப்போதுதானே நாம் ‘மினரல் வாட்டர்’ என
சொல்லப்படுகின்ற சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை
குடிக்கிறோம். அப்போதெல்லாம் அவை இல்லாத
நாட்கள்.

அந்த ஏரியில் ஒருபுறம் குளித்துக்கொண்டும்,
இன்னொருபுறம் துணிகளை துவைத்துக்கொண்டும்
இருப்பார்கள்.

ஊரில் பல பேரின் குடி நீர் தேவையை அது
பூர்த்தி செய்தது உண்மை. அங்கே தண்ணீர்
குடித்ததால் யாருக்கும் எந்த கேடும் அப்போது
ஏற்பட்டதாக தெரியவில்லை.

அந்த குறிப்பிட்ட நாளில் மதியம் 3 மணிக்கு
இடைவேளை விட்டபோது நானும் எனது
வகுப்புத்தோழர்களோடு எரிக்கரைக்கு சென்றேன்.

சில மாணவர்கள் தண்ணீர் குடிக்க ஏரிக்குள்
இறங்கியபோது நானும் அவர்களோடு சென்றேன்.

பெரிய ஏரி என அழைக்கப்பட்ட அந்த ஏரியில்
மக்கள் இறங்கி குளிக்க வசதியாக படிக்கட்டு
கட்டியிருந்தார்கள். சுமார் பத்து அல்லது
பன்னிரெண்டு படிக்கட்டுக்கள் இருக்கும்.

மழைக்காலங்களில் ஆற்றிலிருந்து தண்ணீர்
அதிகம் ஏரிக்கு வரும் ஆதலால் பாதிப்படிகள்
தண்ணீரில் மூழ்கியிருக்கும்.

நாங்கள் அனைவரும் தண்ணீருக்கு அருகே
உள்ள படியில் அமர்ந்துகொண்டு கைகளால்
தண்ணீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தோம்.

எனக்குப்பக்கத்தில், பக்கத்து ஊரான
வேட்டக்குடியை சேர்ந்த இராமநாதன் என்ற
என் வகுப்பு மாணவனும் உட்கார்ந்து தண்ணீர்
குடித்துக்கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை.
என்னைபிடித்து அப்படியே ஏரிக்குள்
தள்ளிவிட்டான்.

கடைசிப்படியில் இருந்து நாங்கள் இருந்த
இடம் வரை தண்ணீர் மட்டம் பெரியவர்களுக்கு
இடுப்பளவு தான் என்றாலும் எங்களைப்போன்ற
சிறுவர்களுக்கு அது தலைக்குமேல் இருந்ததால்
நான் தண்ணீரில் விழுந்ததும் எழுந்திருக்கமுடியாமல்
‘மடக் மடக்’ கென்று தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன்.

தொடரும்

15 கருத்துகள்:

  1. கண் திறந்து மூடுவது கூட பிறப்பும் இறப்பும் போலத்தானே!!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் இரா. குணசீலன் அவர்களே! தாங்கள் சொல்வதும் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. மடக் மடக்’ கென்று தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன். /

    அப்புறம் எழும்பவே இல்லையா?
    hahaha..

    நல்ல பதிவு...
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு விடிவெள்ளி அவர்களே!

    எழுந்ததால்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
    என்ன சரிதானே?

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் ’எட்டாப்புப்’ படிக்கும்போது இது போன்ற அனுபவம் ஏற்பட்டது!
    சுவாரஸ்யம்!தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். நீங்கள் அந்த அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?

    பதிலளிநீக்கு
  8. Two of the escapades result of sort of drowning in rivers ; eager to learn about the remaining 3 episodes...by the way after all these were you able to learn swimming ! Vasudevan

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! இன்றுவரை நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.அதில் எனக்கு வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
  10. அய்யா V.N.S அவர்களுக்கு, சுவாரஸ்யமான இந்த தொடரை இப்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன். இன்று இரவுக்குள் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். (எனக்கும் நீச்சல் தெரியாது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! உங்களது மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு