வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 5

நான் பயணம் செய்த இரயில் வண்டியின் பெட்டி
கடலுண்டி ஆற்றுப்பாலத்தை தாண்டியபோது,திடீரென
பயங்கர குலுக்கலுடன் முன்னும் பின்னும் படு வேகமாக
குலுங்கி நின்றது.

நிற்கும்போது யாரோ எங்கள் இரயில் பெட்டியை
வேகமாக இழுப்பதுபோல் இருந்தது.வெளியே
எட்டிப்பார்த்தபோது மின்னல் வெட்டுவது போல்
தீப்பொறிகள் பறப்பதும், இரயில் பாதை ஓரம் இருந்த
தந்தி கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டு இருப்பதும்
தெரிந்தது.அப்போது பார்த்து பயங்கர மழை வேறு
பெய்து கொண்டு இருந்தது.

யாரோ மலையாளத்தில்‘இரயில் பெட்டிகள் தீ
பிடித்துக்கொண்டன.’என்று கத்தினார்கள்.உடனே
அவசர அவசரமாக அந்த மழையிலும் நானும் என்னோடு
பயணித்த இரு சென்னை பயணிகளும் கீழே
இறங்கிப்பார்த்தபோது,தீ ஏதும் காணப்படவில்லை.

ஆனால் பாலத்தின் அருகே ஒரே அழுகையும்
சத்தமுமாய் இருந்தது.அருகில் உள்ள வீடுகளில்
இருந்து நிறைய பேர் அந்த இடத்திற்கு ஓடி வந்து
கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் சென்று பார்த்தபோது,எனது பெட்டிக்கு
அடுத்தபெட்டி பாலத்தையும் கரையையும்
தொட்டுக்கொண்டு இருந்தது.அதற்கு அடுத்த
இரண்டு பெட்டிகள் பாலத்திலிருந்த தண்டவாளங்களில்
இருந்து இறங்கி தண்ணீரில் விழுந்து
தொங்கிக்கொண்டு இருந்தன.

அந்த கோர விபத்தின் காட்சியை இன்னும் என்னால்
மறக்க இயலவில்லை.இப்போது நினைத்தாலும்
மனதை என்னவோ செய்கிறது.

தண்ணீரில் விழுந்த பெட்டிகளில் இருந்து வந்த
மரணஓலமும், தண்ணீரில் விழுந்த சிலர்
வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி
செய்து கொண்டு இருந்ததும்,சிலர் தண்ணீரில்
மூழ்கிக்கொண்டு இருந்ததும்,என் நினைவைவிட்டு
இன்னும் மறையவில்லை.

விபத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த பயணிகளைக்
காப்பாற்ற ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டு
இருந்தவர்கள் விரைந்து படகில் வந்து தங்களால்
முடிந்த அளவு உயிர்களைக்காப்பாற்ற
உதவிக்கொண்டு இருந்தார்கள்.

அருகில் உள்ள வீடுகளில் இருந்து வந்த பல நூறு
மக்கள் மழையையும் பொருட்படுத்தாது,மீனவர்கள்
காப்பாற்றி கரை சேர்த்தவர்களை மருத்துவ மனைக்கு
கொண்டு செல்ல உதவினார்கள்.அந்த இடத்திற்கு
ஜீப் முதலிய வாகனங்கள் செல்ல வசதியாக சிலர்
சாக்குப் பைகளில் ஈரமணலை நிரப்பி கட்டி
வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில் போட்டு
உதவிக்கொண்டு இருந்தார்கள்.

நாங்களே விபத்தில் மாட்டிக்கொண்ட‘அதிர்ச்சி’யில்
இருந்ததால் என்ன செய்வது எனத்தெரியாமல்
சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தோம்.

ஒரு சில விநாடி முன்பு அந்த விபத்து நடந்திருந்தால்
நாங்கள் பயணம் செய்த பெட்டி தண்ணீரில்
மூழ்கியிருக்கும்.அதை நினைத்தபோதே அடிவயிற்றில்
ஏதோ அமிலம் சுரப்பதுபோல் இருந்தது.

அப்போது திடீரென ஞாபகம் வந்தது. இந்நேரம்
ஊடகங்கள் இந்த விபத்து பற்றி நாடு முழுவதும்
தெரிவித்து இருக்கும்.நான் இந்த இரயிலில்
வருவதாக தெரிவித்து இருந்ததால், உடனே
என் மனைவிக்கு நான் நலமுடன் இருப்பது குறித்து
உடனே தெரிவிக்க வேண்டுமென்று நினைத்து
கைபேசியில் தொடர்பு கொண்டேன்.

எல்லோரும் ஒரே நேரத்தில் கைபேசியில் முயற்சி
செய்ததால் Network Busy என வந்ததால்,அருகில்
உள்ள வீடுகளில் ஏதேனும் தொலை பேசி இருந்தால்
அதன் மூலம் தெரிவிக்கலாம் என்று கிளம்பினேன்.
என்னுடன் கீழே இறங்கிய அந்த இரு பயணிகளும்
உடன் வந்தனர்.

சிறிது தூரம் அங்கே உள்ள தென்னந்தோப்பு வழியே
நடந்து சென்று, ஒரு வீட்டை அடைந்து விஷயத்தை
சொன்னதும் சற்றும் தயங்காது எங்களை
தொலைபேசியை உபயோகிக்க அனுமதித்தார்கள்.

எனது மனைவியைக் கூப்பிட்டபொது அவருக்கு
அந்த விபத்து பற்றி அப்போது தெரியவில்லை. நான்
வந்த இரயில் ஒரு‘சிறிய’ விபத்தில் சிக்கியுள்ளதால்
நான் சென்னையை அடைய சில மணி நேரங்கள்
தாமதமாகும் என்றும்,நான் நலமுடன் இருப்பதாகவும்
கூறி தொலை பேசியை வைத்துவிட்டேன்.

மற்ற பயணிகளும் அவரவர் வீடுகளுக்கு
தொலைபேசியில் தாங்கள் நலமுடன் இருப்பதை
தெரிவித்தார்கள்.

பிறகு நாங்கள் தொலைபேசிக்கான கட்டணத்தை
அந்த வீட்டின் உரிமையாளருக்கு கொடுத்தபோது,
நீங்கள் விபத்தில் இருந்து தப்பித்தீர்களே,அதுவே
போதும் எனக்கூறி அவர் அதை வாங்க மறுத்து,
விட்டார். அவருக்கு நன்றிகள் பல சொல்லி
திரும்பத்தொடங்கினோம்..

திரும்பும்போது ஒரு இடத்தில் Signal கிடைத்தபோது,
என்னோடு வங்கியில் பணி புரிந்து கொண்டு இருந்த
திரு இலக்ஷ்மணன் என்ற நண்பர் தொலை பேசியில்
தொடர்பு கொண்டார்.

அப்போது மணி 6.30 இருக்கும். அவர் பதட்டதோடு என்
நலம் பற்றி விசாரித்தார். நான் நலமோடு இருக்கிறேன்
என்றதும்,‘சார், நாங்கள் செய்தி அறிந்ததும்,பதட்டப்பட்டு
உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.ஆனால்
இணைப்பு கிடக்கவில்லை. உடனே பொது மேலாளர்
உட்பட நாங்கள் 15 பேர் காரிலும் ஜீப்பிலும் கிளம்பி
கோழிக்கோடு வந்தபோது,பொது மக்கள் எல்லோரும்
விபத்து நடந்த இடத்துக்கு சென்றால்,மீட்புப்பணி
செய்ய இயலாது என்பதால் மேலே செல்லவிடாமல்
காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்திவிட்டனர்.
அதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் உங்களை
தொடர்பு கொள்ள எல்லோரும் முயற்சித்துக்கொண்டு
இருக்கிறோம்.தங்கள் குரலைக் கேட்டதும் தான்
எங்களுக்கு நிம்மதி.’ என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்ததும்,
அடுத்து NABARD வங்கியிம் உதவிபொதுமேலாளரும்,
எங்கள் வங்கியில் நெறியாளருமான
திரு சாமுவேல் ஜான்சன் என்னைத் தொடர்பு
கொண்டார். அவரிடமும் இறைவன் கருணையால்
உயிர் பிழைத்ததை சொன்னேன்.

திரும்ப பெட்டிக்கு அருகே வந்தபோது, விபத்து
நடந்த இடத்தில் இரயில்வே துறையினரின்
மீட்புக்குழு வந்து, உள்ளூர் மக்கள் மற்றும் மாவட்ட
நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, சிரமத்தைப்பாராது
விபத்தில் சிக்கி இருந்தோரை காப்பாற்றிக்
கொண்டிருந்ததை பார்த்தேன்.

பயணிகளில் இறந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது
தெரியாவிட்டாலும் குறைந்தது 50 பேருக்கு மேல்
இறந்திருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.அந்த
நேரத்தில் உள்ளூர் மக்கள் செய்த உதவியை
யாராலும் மறக்க இயலாது.

திரும்பவும் மழை வலுத்துக்கொண்டதால்,
பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். அப்போது
அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பொது மக்கள்
பெட்டியில் இருந்த எங்களைப்பார்த்து எல்லோரும்
‘நலம் தானே?’ என விசாரித்து எங்கள் அனைவருக்கும்
வாழைப்பழமும் தேநீரும் கொடுத்து சாப்பிடச்
சொன்னார்கள்.

நாங்கள் மறுத்தபோது,’தயை செய்து சாப்பிடுங்கள்.
உயிரோடு இருந்து இதை சாப்பிட அனுமதித்த
இறைவனுக்கு அதுவே நீங்கள் காட்டும் மரியாதை.’
என்றதும் அனைவரும் மறுக்காமல் அந்த பரிவான
உபசரிப்பை ஏற்றுக்கொண்டோம்.

அப்போது அவர்களில் ஒருவர் ‘இந்த வண்டி எப்போது
கிளம்பும் எனத்தெரியவில்லை. ஒருவேளை இன்று
இரவும் இங்கேயே இருக்க நேரிட்டால், பெண்கள்
எல்லாம் அருகில் உள்ள வீடுகளில் தங்கிக்கொள்ளலாம்.
ஆண்கள் அனைவரும் வண்டியிலேயே இருந்து
பொருட்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள்
உங்களுக்கு காவலாக இருப்போம்.’ என்று
சொன்னதைக் கேட்டதும்,ஆபத்து என்று வந்துவிட்டால்
மொழி, இனம் என்ற பாகுபாடு மறைந்து மனித நேயம்
வெளிப்படும் போலும் என நினைத்துக்கொண்டேன்.

பின் ‘ஹிந்து’ நாளிதழின் நிருபர் ஒருவர் வந்து
நடந்தைப்பற்றி கேட்டபோது அதுபற்றி மற்றவர்கள்
பேசத்தயங்கியபோது நான் முன்வந்து எனக்குத்
தெரிந்ததை சொன்னேன்.

எங்களது இரயில், எஞ்சினோடு முக்கால் பகுதி
கரையைத் தாண்டி விட்டதால்,எங்கள் பெட்டிக்கு
அடுத்த பெட்டியோடு பயணத்தை தொடர
அனுமதிப்பார்கள் என்றும், வண்டியின் கடைசியில்
இருக்கும் Guard Van பாலத்தின் மேல் இருப்பதால்
அது இல்லாமல் வண்டியை எடுக்க அனுமதிக்கு
காத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

என்ன நடந்ததோ தெரியவில்லை. இரவு சுமார்
9 மணிக்கு எங்களது இரயில் அந்த இடத்தை விட்டு
நகர ஆரம்பித்தது.


தொடரும்

13 கருத்துகள்:

  1. எனது பெட்டிக்கு
    அடுத்தபெட்டி பாலத்தையும் கரையையும்
    தொட்டுக்கொண்டு இருந்தது.அதற்கு அடுத்த
    இரண்டு பெட்டிகள் பாலத்திலிருந்த தண்டவாளங்களில்
    இருந்து இறங்கி தண்ணீரில் விழுந்து
    தொங்கிக்கொண்டு இருந்தன./


    நிஜமாகவா...
    உடம்பே சிலிர்க்கிறது...
    நல்ல காலம் இருந்திருக்கு...
    மிக மிக அவலோடும் விறு விறுப்போடும் படித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. இது பல விதங்களில் மறக்க முடியாத ஓர் அனுபவம்தான். நீங்கள் மயிரி ழையில் தப்பியது, சிலர் விபத்தில் பாதிக்கப் பட்டது,ஆபத்து நேரத்தில் வெளிப் பட்ட மனிதம் என ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காக நெஞ்சை விட்டகலாதவைதான். எழுத்துச் சித்திரமாகத் தீட்டி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விடிவெள்ளி அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    நீங்கள் சொன்னதுபோல் அவை நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகள் தான்.

    பதிலளிநீக்கு
  5. இப்போது நினைத்தாலும்
    மனதை என்னவோ செய்கிறது.
    !!!!

    பதிலளிநீக்கு
  6. இப்போது நினைத்தாலும்
    மனதை என்னவோ செய்கிறது.
    !!!!!!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும், உங்களது அனுதாபத்திற்கும் நன்றி
    முனைவர் இரா.குணசீலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், உங்களது வாழ்த்திற்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. I get goose bumps to read the incident. Were you angry for the innocent deaths or thankful to Him for your survival? Is your outlook on life changed after that?

    Packirisamy. N

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் உங்களது கேள்விக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!

    நானும் எல்லோரையும் போல் ஒரு சாதாரண, சராசரி மனிதன். என்னைக்காப்பாற்றியதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன். அதே நேரத்தில் அந்த விபத்தில் இறந்தவர்களுக்காக வருத்தப்பட்டேன்.

    இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு என்னுள் மாற்றம் ஏற்பட்டது உண்மை.

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவை படித்து முடித்தவுடன், அரியலூர் ரயில் விபத்து நினைவுக்கு வந்ததது. அப்போது அந்த ரயில் விபத்து நடந்த இடத்தில், இறந்து போன பயணிகளிடம், மனிதாபிமானம் இல்லாமல் சிலர் நடத்திய கொள்ளையைப் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன். கடலுண்டி மக்களின் மனிதாபிமானம் இவர்களுக்கு இல்லாமல் போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! அரியலூர் இரயில் விபத்து நடந்த போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நடந்த மனிதாபிமானமற்ற செயல்கள் பற்றி படித்திருக்கிறேன். அவைகளில் சில கதைகளாகவும் வந்தன. என்னைப் பொறுத்தவரை கடலுந்தி விபத்தையும் அங்கு இருந்த மக்கள் செய்த உதவியையும் வாழ் நாள் முழுதும் மறக்கமாட்டேன்.

      நீக்கு