திங்கள், 30 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 36


ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த அந்த ஆய்வுக் குழுவின் கூடவே இருந்து அவர்களுக்கு உதவும்படி மேலாளர் சொன்னதால், அவ்வாறே செய்தேன். அந்த கிளையில் இருந்த அனைவரும் (பழைய மேலாளருக்கு வேண்டியவர்கள் தவிர) தங்களுக்குத் தெரிந்த  தகவல்களை தாங்களாகவே தந்து ஆய்வு முழுமையாக நடக்க உதவினார்கள். 
அதனால் ஆய்வுக்குழுவிற்கு மிக முக்கியமான தடயங்கள் கிடைத்தன.

ஒரு நாள் குழுவின் தலைவரான தலைமை கணக்காளர் என்னிடம்.
நீங்கள் இங்கு சுமார் ஒரு வருடம் இருந்தீர்கள் அல்லவா? இங்கு நடந்தவைகள் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். பின் ஏன் தலைமை அலுவலகத்திற்கு சொல்லவில்லை?’ எனக்கேட்டார். 

நான் பதிலளிக்கு முன் எனது துறைத்தலைவர், அவரிடம், ‘இவர் பேரில் தவறு ஏதும் இல்லை.சில மாதங்களுக்கு முன் இவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். நான்தான் இவரது பயிற்சியாளர் சொன்னதை நம்பி,  
இவர் புதியவர் என்பதால் தெரிவித்த செய்தி உண்மையாய் இருக்காது 
என எண்ணி அதன் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டேன். என்று கன்னடத்தில் சொன்னார். எனக்கு கன்னடம் தெரியும் ஆதலால் அவர் சொன்னதை புரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் பேசியது புரியாததுபோல் நடந்துகொண்டேன். 

நான் எழுதியது சரி என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறாரே என்று நினைத்து எனக்குள் சந்தோஷப்பட்டபோது, தருமத்தின் வாழ்வதனைச்
சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் என்ற மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் வரிகள் தான் அப்போது நினைவுக்கு வந்தது.

ஆய்வு முடிந்து அந்த குழு தலைமையகம் சென்று அவர்களது அறிக்கையை அளித்தவுடன், அந்த மேலாளருக்கு குற்ற அறிக்கை 
(Charge Sheet) கொடுக்கப்பட்டு அவரது பதிலுக்குப் பின், அவரை விசாரணைக்கு அழைத்தார்கள். 

விசாரணை நான் இருந்த  கிளையில்தான் நடந்தது. ஆனால் அவர் வரவில்லை.தான் ஒரு சர்வாதிகாரி போல் கோலோச்சிய கிளையில் 
எந்த முகத்தோடு, விசாரணை அலுவலர் முன் வருவது என நினைத்து வராமல் இருந்திருக்கலாம். மற்றும் எங்களைப் போன்றோரை பார்க்க கூச்சப்பட்டும் வராமல்  இருந்திருக்கலாம். அவர் வராததால் அந்த விசாரணை முடிவு அவருக்கு  பாதகமாகவே முடிந்தது.அதற்குப் பிறகு அவர் வங்கிப் பணியிலேயே இருக்கமுடியவில்லை. 

அதிகாரம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டவர், அந்த அதிகாரத்தை தவறாக  பயன்படுத்தியதால், மரியாதையோடு பதவியை விட்டு விலகமுடியாமல், சொல்லாமல் கொள்ளாமல் போகவேண்டியதாயிற்று.
சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள். தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.என்று.

நான் Boss கள் பலவிதம்! 2 ல் மனித வள ஆய்வாளர்கள் Boss கள் அனைவரையும் நான்கு பிரிவாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால் இந்த மேலாளர் நான் குறிப்பிட்டு இருந்த
அந்த நான்கு பிரிவின் கீழும் வரவில்லையே என நீங்கள் நினைக்கலாம்.இவரைப் போன்றவர்களுக்காக சிறப்புப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி அதன் கீழ்தான் இவரைக் கொண்டு வரவேண்டும் போல.

எனக்கு வங்கியில் இருந்த  Boss கள் எல்லாம் இவர் போல் இல்லை என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும். எனக்கு இன்னொரு Boss இருந்தார். நான் வேலை பார்த்த ஒரு கிளையில் மேலாளராக இருந்த அவரது பெயரை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்ற ஊரை சேர்ந்த அவரது பெயர்  திரு N.V.ஷெனாய்.

அவர் அந்த கிளையில் பணி ஏற்ற அன்றே என்னைக் கூப்பிட்டு, ‘உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் எனக் கேட்க மாட்டேன். ஆனால் வங்கியின் ஆய்வுக்குழுவும் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்குழுவும் எந்த வித விதி மீறலோ அல்லது நடைமுறைத் தவறோ இல்லை என 
சொல்லும்படி உங்கள் பணி இருக்கவேண்டும். நீங்கள் அவ்வாறு செய்வீர்கள் என நம்புகிறேன்.என்று சொன்னார். 

அதுபோல் நான் வெளியே பண்ணை ஆய்வுக்கோ அல்லது தவணை கடந்த நிலுவைத் தொகைகளை வசூலிக்க சென்றாலோ அவர் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டதில்லை. ஆனால் நான் அவரிடம் எங்கு போனாலும்,முதல் நாள் மாலையே சொல்லிவிட்டுத்தான் போவேன். 
அவர் கொடுத்த அந்த சுதந்திரத்தை தவறாக உபயோகப்படுத்தியதே இல்லை. 

ஒரு தடவை காலையில் ஒரு ஊருக்கு ஆய்வுக்கு சென்றுவிட்டு 
மதியம் ஒரு மணி கலைந்த தலையுடன் கிளைக்குத் திரும்பினேன்.
(அது ஆடி மாதம் ஆதலால் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தலை முடி கலைந்திருந்தது.)

என்னைப் பார்த்துவிட்டு உள்ளே கூப்பிட்டார். நீங்கள் காலையிலேயே கிளம்பி பண்ணைகளுக்குப் போய் வருகிறீர்கள் எனத்தெரியும். அதனால் நீங்கள் நேரே கிளைக்கு வரத்தேவை இல்லை.உங்களது அறைக்குப்போய் குளித்து சாப்பிட்டுவிட்டு மதியம் வந்தால் போதும்.என்றார்.

அதற்கு நான், ‘இல்லை சார். விவசாயிகள் வந்து எனக்காக காத்திருக்கக் கூடும். அதனால் நேரே இங்கு வந்தேன்.என்றேன். விவசாயிகளிடம்
மதியம் தான் நீங்கள் இருப்பீர்கள்..என சொல்ல சொல்லிவிடுகிறேன்.
நீங்கள் பண்ணைக்கு போகும் நாட்களில் மதியம் வந்தால் போதும்.என்றார். 

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை பேர் இவ்வாறு சொல்வார்கள். அவர் ஒரு மாதிரி என்றால் இவர் வேறு மாதிரி. 
இவரிடம் பணி புரிந்தது பற்றி பின் எழுதுவேன்.

நான் தில்லிக்கு மாற்றல் ஆகிப் போன பிறகு மன்னார்குடி பக்கம்
இருந்த யாரோ ஒருவர் வந்து திரு ஷெனாய் அவர்களிடம் 
என்னைப்பற்றி விசாரித்திருக்கிறார்கள். எதற்கு என அவர் கேட்டதற்கு தங்கள் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக நான் இருப்பேனா என்று தெரிந்துகொள்ள விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்னாராம். எனக்கு திருமண வயதில் பெண் இருந்தால் அவருக்கே என் பெண்ணை கொடுத்திருப்பேன்!என்று.

எனது நண்பர்கள் அது பற்றி பின்னர் என்னிடம் சொன்னபோது,  
என் மேல் எவ்வளவு நல்ல எண்ணம் கொண்டிருந்தால் அவர் அப்படி சொல்லியிருப்பார் என எண்ணி இன்றும் வியந்துகொண்டு இருக்கிறேன்.

நான் முன்பே எழுதியிருந்தது போல், 37 ஆண்டுகளுக்கு மேல் மாநில அரசிலும், மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனத்திலும், பொதுத்துறை வங்கியிலும் பணியாற்றியபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட மேலதிகாரிகளிடம் கீழ் பணி புரிந்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் எழுதினால், பதிவு நீண்டு கொண்டே போகும் என்பதால்,நால்வரிடம் ஏற்பட்ட அனுபவங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். மற்றவர்களிடம் ஏற்பட்ட அனுபவங்களில் சிலவற்றை நினைவோட்டம்தொடரில் எழுத இருக்கிறேன். 

எனது Boss கள் பற்றி தெரிந்து கொண்ட நீங்கள், நான் Boss ஆனபோது
எப்படி நடந்துகொண்டேன் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டாமா? அது பற்றி வரும் பதிவுகளில்!!


 தொடரும்

வெள்ளி, 27 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 35


மறு நாள் காலை கிளைக்கு தயக்கத்தோடு நுழைந்த நான்,எப்படி அந்த மேலாளரின் கீழ் திரும்பவும் பணியாற்றப் போகிறோம் என்று எண்ணி நிமிர்ந்து பார்த்தபோது,மேலாளரின் அறையில் இருக்கையில், அவர் இல்லை! அவருக்குப் பதில், அருகில் இருந்த மாவட்டத் தலைநகர் கிளையின் மேலாளர் அவருடைய இருக்கையில் அமர்ந்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

பழைய மேலாளர் என்னவானார் என்று யோசித்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும் என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் வந்து கையை குலுக்கி, ‘திரும்பி வந்ததற்கு சந்தோஷம். என்றார்கள். அனைவர் முகத்திலும் 
(ஒரு சிலரைத்தவிர) ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தைப் பார்த்தேன்.
எல்லோரும் ஆகஸ்ட் 15, அன்று கொண்டாடுவதுபோல் எனக்குத் தோன்றியது!

என்ன நடந்தது? பழைய மேலாளர் எங்கே? இவர் எப்போது வந்தார்?’
என்று கேட்டபோது, அவர்கள், ’நீங்கள் உள்ளே போய் மேலாளரைப் பார்த்துவிட்டு வாருங்கள்.பிறகு சொல்கிறோம்.என்றார்கள். 

மேலாளர் அறைக்கு சென்று  வணக்கம்  தெரிவித்தேன். அவரது 
பழைய கிளையில் ஒரு வாரம் பயிற்சியில் இருந்ததால் அவருக்கு என்னை தெரியும். அவர், என்னைப்பார்த்ததும், ‘Welcome Back சபாபதி! உங்களை திரும்பவும் இங்கு மாற்றியுள்ளார்கள். அதற்கான ஆணையை இன்று வரும் உங்கள் துறைத் தலைவர் கொண்டுவருவார். நீங்கள் உங்களது பணி ஏற்பு அறிக்கையை அந்த ஆணை வந்ததும் தரலாம்.அதுவரை நீங்கள் போய் உங்கள் இடத்தில் காத்திருங்கள்.'
என்றார்.

நான் உடனே, ‘சார். ஊரில் இருக்கும்போது திடீரெனத் தந்தி கொடுத்து என்னை இங்கு வர சொல்லி விட்டதால்,என்னால் திருவள்ளூர் போய்
எனது பெட்டி படுக்கைகளை எடுத்து வரமுடியவில்லை.கையில் ஒரு மாற்றுடை தவிர வேறொன்றும்  இல்லை. என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, அவர்,‘கவலை வேண்டாம். இவ்வார இறுதியில்,வங்கி செலவிலேயே நீங்கள் போய் உங்கள் பொருட்களைஎடுத்துவரலாம்.
சரிதானே. என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்து எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் வந்த நண்பர்கள்  எனது மாற்றலுக்குப் பிறகு நடந்தது பற்றி சொன்ன போது, Much water has flown under the bridge .என்று ஆங்கிலத்தில் சொல்லும் மரபுத்தொடர் (Idiom) அந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்தது.

அவர்கள் சொன்ன செய்திகள், ஒரு திரைப்படத்திலோ அல்லது கதையிலோ நடக்கும் சம்பவங்கள் போல் இருந்தன, 
தலைமையகத்திலிருந்து  எனக்கு திருவள்ளூருக்கு மாற்றல் கிடைத்த வாரம்,ஒரு அரசு சார்ந்த நிறுவனம் அந்த வங்கிக் கிளையின் பேரில் 
ஒரு புகாரை நேரடியாக வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியிருக்கிறது. வங்கித் தலைவருக்கு கிளையின் பேரிலும் மேலாளரின் பேரிலும் நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் 
அரசு சார்ந்த நிறுவனமே புகார் தந்ததால் அதை விசாரிக்க சொல்லி ஆய்வுத்துறைக்கு பணித்திருக்கிறார்.

அவர்கள் மேலாளர் கிளையில் இருக்கும்போது அதை ஆய்வு செய்தால் தங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்காமல் போகலாம் 
என்பதால் அவரை கிளையில் இல்லாதபோது ஆய்வு செய்ய  விரும்பியிருக்கிறார்கள்.அதனால் மேலாளரை கலந்தாய்வுக்கு 
தலைமை அலுவகத்திற்கு வரச்சொல்லிவிட்டு அதே நாளில் 
கிளையில் ஆய்வு செய்து இருக்கிறார்கள்.

ஆய்வின்போது அந்த நிறுவனம் தந்த புகாரில் உண்மை இருப்பது தெரிந்ததாலும், மேலும் பல வெளிச்சத்திற்கு வராத அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்ததாலும், அவற்றை அப்படியே வங்கித் 
தலைவருக்கு தொலைபேசி மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

மேற்கொண்டு எல்லா விவரங்களையும் அறிய முழுமையான 
ஆய்வுக்கு ஆணையிட்டுவிட்டு, தலைமை அலுவலகம் சென்ற மேலாளரை,மாற்றல் ஆணை கொடுத்து அங்கேயே இருத்திக்கொண்டார்களாம். ஆய்வு முடிந்து புதிய மேலாளர் வரும் 
வரை மாவட்ட தலைநகரிலிருந்த மேலாளரை தற்காலிகமாக 
பொறுப்பு ஏற்க சொல்லியிருக்கிறார்கள்.  

அவர் வந்து பொறுப்பேற்றதும், கிளையில் இருந்த எனது முன்னாள் பயிற்சியாளரையும் மாற்றினால்தான் முழுமையான ஆய்வைத் தொடரமுடியும் என அறிக்கை தந்ததால்,அவரையும் தலைமை அலுவலகத்திற்கு மாற்றிவிட்டார்களாம். 

அவர் இடத்தில் யாரைப் போடலாம் என தலைமஅலுவலகம் 
கேட்டபோது, புதிய மேலாளர் கிளையில் இருந்த சார்பு மேலாளரிடம் 
(Sub Manager) கலந்தாலோசித்தபோது, நான் அங்கு சுமார் ஒரு வருட காலம் இருந்ததால் எனக்கு எல்லா வேளாண்மைக் கடன் வாடிக்கையாளர்களைத்தெரியும் என்பதால் எனது பெயரை சொல்லியிருக்கிறார்.

புதிய மேலாளரும் அவ்வாறே என்னை அங்கு மாற்றல் செய்ய பரிந்துரைத்திருக்கிறார். அதற்குள்  நான் திருவள்ளூரில் சென்று 
பணி ஏற்க விடுவிக்கப்பட்டுவிட்டேன்.

அதனால் தலைமை அலுவலகம் திருவள்ளூர் கிளையை 
தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பணியில் சேர்ந்துவிட்டேனா என விசாரித்திருக்கிறார்கள். நான் ஊருக்கு சென்று இருக்கிறேன் 
எனக் கேள்விப்பட்டதும், எனது மாற்றல் இரத்து செய்யப்பட்டதை சொல்லி, நான் வந்தால் என்னை பழைய கிளைக்கே சென்று 
பணியேற்க சொல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள். அதோடு
எனது ஊருக்கு தந்தியும் அனுப்பியிருக்கிறார்கள்.

இதுதான் நடந்தது என்று அவர்கள் சொன்னபோது எனக்குள் 
மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை.
  
அந்த கிளையில் தீவிர ஆய்வு செய்ய ஒரு உயர்மட்டக்குழுவும் அமைத்திருப்பதாகவும், அந்த குழு அன்று வர இருப்பதாகவும் சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதுபோலவே காலை 11 மணிக்கு தலமை அலுவலகத்திலிருந்து, தலைமை கணக்காளர், வேளாண் நிதித்
துறைத் தலைவர், தலைமை ஆய்வாளர் அடங்கிய குழு வந்தது.
அந்தக் குழுவில் இருந்த எனது துறையின் தலைவர் எனது பணி 
மாற்றல் ஆணையைக் கொடுத்தார்.

அதற்கு பின் புதிய மேலாளரிடம் எனது பணியேற்பு அறிக்கையை கொடுத்தேன்.

உடனே  மூவரும் தங்களது ஆய்வைத் தொடங்கினர். அந்தக் குழுவின் ஆய்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்தது.

தொடரும்



செவ்வாய், 24 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 34


தலைமை அலுவலகத்தில் எனது துறையான வேளாண் நிதித் 
துறைக்கு சென்று எனது பணியேற்பு அறிக்கை (Joining Report) யை 
எழுதிக் கொண்டு போய் துறைத் தலைவரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக்கொண்டு, ‘,வந்துவிட்டீர்களா?’ என்று கேட்டாரே 
தவிர,நான் எழுதிய கடிதம் பற்றி எதுவும் கேட்கவில்லை.அவர்
கேட்கமாட்டாரென தெரியும் ஆதலால், நானாக  எதுவும் 
சொல்லவில்லை. ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லையே 
என்ற வருத்தம் மனதில் இருந்தது உண்மை.

தலைமை அலுவலகத்தில். கிளைகள் அனுப்பும் கடன் 
விண்ணப்பங்களும் அவர்களது பரிந்துரைகளும் எவ்வாறு பரிசீலித்து அலுவலக குறிப்புகள் (Office Notes) எழுதப்படுகின்ற என்றும் அவைகள்  எவ்வாறு கடன் அனுமதி தரும் அலுவலர் (Loan Sanctioning Authority) பார்வைக்கு வைத்து அனுமதிகள் பெறப்படுகின்ற என்பதையும் 
கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக, எங்கள் வங்கியில் புதிதாய்
சேரும் கள அலுவலர்களை சில மாதங்கள் ஒரு மூத்த அலுவலரின் 
கீழ் பயிற்சி பெற அனுமதிப்பார்கள்.

அந்த பயிற்சி பெற என்னை, தமிழக கிளைகளிலிருந்து வரும் 
கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் திரு சுந்தர் ஷெட்டி என்ற 
ஒரு அலுவலரின் கீழ் பணி செய்ய துறைத்தலைவர் பணித்தார். 
அவரின் கீழ் அந்த பயிற்சியை எடுத்துக்கொண்டு இருக்கும்போது தற்செயலாக, நான் பணி புரிந்த மாவட்டத்திற்கான கோப்பில், துறைத்தலைவருக்கு நான் பம்ப் செட் கடன்கள் பற்றி எழுதியிருந்த கடிதம் ‘File' என்ற குறிப்போடு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

முன்பே இதைப்பற்றி அறிந்திருந்ததால் இதைப்பற்றி பேசவேண்டாம்.
வந்த வேலையை பார்ப்போம் என்று எண்ணி எனக்கு கொடுக்கப்பட்ட தலைமை அலுவலக வேலையைக் கற்றுக்கொண்டேன். 
(இது பற்றி பின் விவரமாக எழுதுவேன்.)

மூன்று மாதங்கள் கழிந்ததும், நான் நன்றாக பயிற்சி பெற்றுவிட்டேன்
என துறைத்தலைவருக்கு மனநிறைவு ஏற்பட்டதும்,என்னை வங்கிக்
கிளையில் தனியாக வேளாண்மைக் கடன்களை பார்த்துக்கொள்ள அனுமதிக்கலாம் என ஊழியர் துறைக்கு பரிந்துரைத்தார்.

அவரது பரிந்துரையின் படி ஒரு நாள் என்னை சென்னை அருகே 
இருந்த திருவள்ளூர் கிளைக்கு மாற்றி ஆணை வந்தது.

மாற்றல் வந்த அந்த வாரம் சனிக்கிழமை அன்றே தலைமை அலுவலகத்திலிருந்து  விடுவிக்கப்பட்டேன். அங்கிருந்து 
மகிழ்ச்சியோடு கிளம்பி  திருவள்ளூர் சென்று பெட்டி படுக்கைகளை அய்யப்பா லாட்ஜ்’ என்ற ஒரு விடுதியில் வைத்துவிட்டு, அங்குள்ள கிளைக்கு சென்றேன்.

பணியேற்பு இடைக்காலத்தில் (Joining Time) ஊருக்கு சென்று வருவதைப்
பற்றி அந்த கிளை மேலாளரிடம் சொல்லி வரலாமே என்று கிளைக்கு சென்றேன். அவர்  அப்போது அங்கு இல்லாததால் உதவி மேலாளரிடம் சொல்லிவிட்டு சென்னை வந்து எனது ஊரான தெற்கு வடக்குப்
புத்தூருக்கு சென்றேன்.

ஊரை அடைந்த மறுநாளுக்கும் மறுநாள்  தலைமை
லுவலகத்திலிருந்து ஒரு விரைவுத் தந்தி எனது பெயருக்கு வந்தது. எங்கள் ஊரில்  தந்தி அலுவலகம் இல்லாததால் அது அருகில் இருந்த விருத்தாசலத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து  மெதுவாக சாதாரண அஞ்சலாக எனக்கு வந்தது.

என்ன இப்போது தானே தலைமை அலுவலகத்திலிருந்து வந்தோம்.
அதற்குள் தந்தி அனுப்பவேண்டிய அவசியமென்ன என யோசித்து பிரித்தபோது, அதில் எனது முந்தைய திருவள்ளூருக்கான மாற்றல்
உத்திரவு இரத்து செய்யப்படுவதாகவும், நான் திரும்பவும் எந்த ஊரில்
பயிற்சி பெற்றேனோ அங்கே சென்று உடனே பணியில் சேரவேண்டும்
எனக் குறிப்பிட்டு இருந்தது.

திரும்பவும் அந்த மேலாளரிடம் சென்று வேலை பார்க்கவேண்டுமா?'
என தயக்கம் இருந்தாலும், அது தலைமை அலுவலக ஆணை என்பதால் உடனே கிளம்பிவிட்டேன்.

எனது உடைகள் எல்லாம் திருவள்ளூரில் அந்த விடுதியில் இருக்க,.
கையில் இருந்த மாற்று உடையோடு, கஷ்டப்பட்டு பேருந்து பிடித்து
அந்த ஊருக்கு செல்லும்போது இரவு ஆகிவிட்டது.

மறு நாள் காலை கிளைக்கு சென்றபோது எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

தொடரும்

சனி, 21 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 33


எனது முன்னாள் பயிற்சியாளர் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு இரவு விருந்துக்கு சென்றேன். இரவு உணவு உண்டு முடிந்தபின் பேசிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது? நீங்கள் H.O வுக்கு ஏதும் 
கடிதம் எழுதினீர்களா?’ என்று ஒன்று தெரியாதது போல அவர் கேட்டார்,   

அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்குத் தெரியும் என்பதை 
காட்டிக் கொள்ளாமல்,’பம்ப் செட் கடன் பெற்ற வாடிக்கையாளர் சொன்னதை கேட்டு மேலாளரிடம் சொல்லியும் எந்த 
நடவடிக்கையையும் எடுக்காததால் அதுபற்றி எழுதினேன். என்று சொன்னேன்.

உடனே அவர் நீங்கள்  அவசரப்பட்டுவிட்டீர்கள்.மேலாளருக்கு வேண்டாதவர்கள் ஏதாவது சொல்லியிருப்பார்கள்.அதை நம்பி 
வீணே H.O வுக்கு எழுதியிருக்கிறீர்கள். என்னிடமாவது 
கேட்டிருக்கலாமே?’ என்றார்.

அதற்கு நான் கடன் பெற்ற அந்த விவசாயி மேலாளர் மேல் எந்த குற்றமும் சொல்லவில்லையே. கடைக்காரர் வங்கிப் பெயரை சொல்லி பணம் வாங்கினார் என்று தானே சொன்னார்.அவர் எப்படி மேலாளருக்கு வேண்டாதவராக இருப்பார்?வங்கி பெயரை சொல்லி பணம் வாங்கியதை அந்த கடைக்காரர் மறுத்ததால் மேலாளரிடம் சொன்னேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் H.O வுக்கு கடிதம் எழுதினேன். 
அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லையே. ஏனோ எனக்கு அப்போது உங்களிடம் கேட்கவேண்டுமென்று தோன்றவில்லை.

H.O வுக்கு கடிதம் எழுதிவிட்டேன் என்பதற்காக,வேளாண் நிதித்
துறையின் Probationary Officer ஆக நான் இருந்தும், நீங்கள் பார்த்த 
துறையை என்னைப் பார்த்துக்கொள்ளும்படி தலைமை அலுவலகம் சொல்லியிருந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் Counter ல் என்னை 
எழுத்தர் பணியை செய்ய மேலாளர் சொன்னார். அதற்காக நான் வருத்தப்படவில்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுதான் நடந்திருக்கிறது. General Banking வேலையையும் நன்றாக கற்றுக்கொண்டேன். என்றேன்.

அதற்கு அவர் நீங்கள் வங்கிக்கு புதியவர் என்பதால் இங்குள்ள நடைமுறைகள் பற்றியும், உடன் பணிபுரிபவர்கள் பற்றியும் 
உங்களுக்குத் தெரியவில்லை.

ஒரு கட்டிடத்தைப் பார்க்கிறீர்கள் என்றால் அதன் வெளித்தோற்றத்தை வைத்து அந்த கட்டிடத்தின் மதிப்பை எடை போடாமல் அதனுடைய அடித்தளம் (Foundation) எப்படி என்றும் பார்த்து மதிப்பிடவேண்டும்.
அதுபோல ஒருவரை பார்க்கும்போது அவரது தோற்றத்தை வைத்து 
எடை போடக் கூடாது. அவரது பின்புலத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.  

ஏன் இதை சொல்கிறேன் என்றால்.உங்களுக்கு இந்த மேலாளர் பற்றி எதுவும் தெரியாது.இவர் தலைமை அலுவலகத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர்.அது தெரியாமல் நீங்கள் நடந்துகொண்டு விட்டீர்கள்.அதனால்தான் உங்கள் கடிதத்தின் மேல் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நல்ல வேளை. நீங்கள் அந்த 
கடிதம் எழுதியதற்காக உங்கள் மேல் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையே. அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்!

உங்கள் இடத்தில் நான்  இருந்திருந்தால் மேலாளரிடம் சாதுர்யமாகப் பேசி உள்ள நிலையை  விவரமாக எடுத்து சொல்லியிருப்பேன். 

சரி. பரவாயில்லை. எல்லாம் நல்லதிற்குத்தான் என்று எடுத்துக்கொண்டு விட்டீர்கள். இந்த கிளையில் பயிற்சி முடித்து  தலைமை அலுவலகம் செல்கிறீர்கள். இங்கு  நடந்ததை எல்லாம் ஒரு கனவு  போல் எண்ணி மறந்துவிடுங்கள். திரும்பவும் அங்கு சென்று இது பற்றி பேசவேண்டாம். என்றார்.

அவர் இவ்வாறு சொன்னதும் அவர் ஏன் விருந்துக்கு அழைத்தார் என்பது எனக்கு விளங்கிவிட்டது. அன்று என்னை வீட்டிற்கு அழைத்தது மாற்றலாகி செல்கிறேனே என்று விருந்து தர அல்ல.

விருந்து என்ற சாக்கில் வீட்டிற்குஅழைத்து எனக்கு மூளைச் சலவை செய்து, தலைமை அலுவலகத்தில் நான் மேலும் ஏதும் 
சொல்லாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை அவர் கொடுத்த அந்த சொற்பொழிவிலிருந்து புரிந்து கொண்டேன். நிச்சயம் அந்த மேலாளர் சொல்லித்தான் அவர் என்னிடம் பேசுகிறார் என்பதும் தெரிந்தது.

அவரது நோக்கம் தெரிந்த பிறகு, மேலாளர் பற்றி பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதால் அந்த இடத்தை விட்டு கிளம்பினால் போதும் என்று அவர்  சொன்னதிற்கெல்லாம் சரி என சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.

மறு நாள் உடன் பணிபுரிந்துகொண்டு இருந்த நண்பர்களிடம் விடைபெற்று மங்களூர் சென்று அங்கிருந்து உடுப்பி போய் ஒரு தங்குமிடத்தில் அறை எடுத்து தங்கினேன். அதற்கு மறுநாள் காலை மணிப்பாலில் இருந்த எங்கள் தலைமை அலுவலகத்திற்கு சென்றேன்.
  
தொடரும்