ஞாயிறு, 15 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 31


மணிப்பாலில் பயிற்சியை முடித்துவிட்டு,வேறொரு ஊருக்கு செல்லும் வழியில் என்னை சந்தித்த அந்த நண்பர், தலைமை அலுவலகத்திற்கு
நான் எழுதிய கடிதம் பற்றி மேலாளருக்கு எப்படி தெரிந்தது என்று
சொன்னபோது. எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.

என்ன நடந்திருக்கிறது என்றால்,என் கடிதம் தலைமை அலுவலகத்தில் இருந்த வேளாண்மை நிதித்துறையின் தலைவரின் கைக்கு போய் சேர்ந்தபோது அவர் அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த எனது
முன்னாள் பயிற்சியாளரைக் கூப்பிட்டு எனது கடிதத்தைக் காட்டி,
என்ன இது? புதிதாக சேர்ந்துள்ள, உங்களால் பயிற்சி கொடுக்கப்பட்ட அலுவலர் இந்த மாதிரி எழுதியுள்ளாரே?’ எனக் கேட்டிருக்கிறார். 

அவர்பேரில் எங்கள் துறைத் தலைவருக்கு நல்ல அபிப்பிராயம் 
உண்டு என்பதால் அவரிடம் எனது கடிதத்தில் எழுதியிருந்த 
செய்தியின் உண்மை நிலை பற்றி கேட்டிருக்கிறார். 

அதற்கு அவர், ’இல்லை சார். இதில் கூறப்பட்டு இருப்பது உண்மை 
அல்ல. புதியாய் சேர்ந்துள்ள சபாபதிக்கு விவரம் போதாது. 
இள இரத்தம் அல்லவா? கேள்விப்பட்டதை யாரிடமும் விசாரிக்காமல் அப்படியே எழுதியுள்ளார். இதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து. என்று சொல்லியிருக்கிறார்.

நம் ஊரில் வேடிக்கையாய் சொல்வார்களே.சிகப்பாய் இருப்பவனுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று! அதுபோல் மூத்த பணியாளர்கள் (Seniors) சொல்வது சரியாய் இருக்கும் என்ற தவறான,எழுதப்படாத
விதியின் படி,வேளாண் நிதித் துறையின் தலைவர் எனது
புகாரின்பேரில் எந்த வித மேல் நடவடிக்கையும் தொடராமல் 
அந்த கடிதத்தின் மேல்  File என எழுதி அந்த விவகாரத்தை 
முடித்து வைத்து விட்டாராம். 

மேலும் எனது கிளையின் மேலாளரின் பேரில் அப்போது இருந்த 
வங்கித் தலைவருக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு என்பதால்,எனது 
புகார் எடுபடாது என்பதும்  துறைத் தலைவருக்குத் தெரியும்.
அதனால்தான் அவர் அந்த கடிதத்தை கோப்பில்(File)வைக்க சொல்லிவிட்டார். நல்ல வேளை அந்த கடிதம் எழுதியதற்காக 
என் மேல் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை!

அந்த  கடிதம் நான் பணியாற்றிய கிளை இருந்த மாவட்டத்தின் 
பெயரில் இருந்த கோப்பில் பத்திரமாகவைக்கப்பட்டு இருந்ததை 
பின்பு நான் H.O வில் பணியாற்றியபோது பார்த்தேன்.

(இன்றைக்குக் கூட பணிக்குப் புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் சொல்லும் கருத்துக்கு அநேக Boss கள் செவி சாய்ப்பதில்லை என்பது 
என் கருத்து.மூத்த பணியாளர்களின் அனுபவம் தேவைப்பட்டாலும், இளைய தலைமுறையின் கருத்தையும் காது கொடுத்தாவது கேட்கவேண்டும். அவர்களுக்கு அனுபவம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கருத்துக்களை உதாசீனப்படுத்துவது நிறுவனத்திற்கு நல்லதல்ல என்பேன் நான்.)

எனது கிளையின் மேலாளர் தலைமை அலுவலகம் போனபோது,
வேலை முடிந்ததும், மாலையில் மங்களூர் வந்து இரயில்
ஏற டாக்ஸி யில் கிளம்பியிருக்கிறார். அப்போது பேச்சுத் துணைக்கு
எனது முன்னாள் பயிற்சியாளரை ‘’நீங்களும் வாருங்களேன் மங்களூர்
வரை. என்று கூப்பிட்டு இருக்கிறார். அப்போது அருகில் இருந்த 
எனது நண்பரையும் ‘;நீங்களும் வரலாம். என்றிருக்கிறார்.

அவர்கள் மூவரும் மணிப்பாலில் இருந்து மங்களூர் இரயில் நிலையம்
வரை டாக்ஸி யில் பயணித்தபோது. பேச்சினூடே எனது முன்னாள் பயிற்சியாளர், மேலாளரிடம் நான் H.O வுக்கு எழுதிய கடிதம் பற்றி சொல்லிவிட்டு, தான் எப்படி துறைத் தலைவரிடம் பேசி, 
மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க செய்ததையும் சொல்லி இருக்கிறார். மேலும் என்னிடம் எச்சரிக்கையாய் இருக்கும்படியும் கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டதும் மேலாளரின் முகம் சிவந்து விட்டதாம்.அங்கேயே கோபமாக,’இருக்கட்டும்.நான் போய் அவரை கவனித்துக் கொள்கிறேன்
என்று கூறியிருக்கிறார்.

அதை கேட்டுக்கொண்டு இருந்த எனது நண்பருக்கு அந்த செய்தியை எப்படியாவது மேலாளர் என்னைக் கூப்பிட்டு பேசுமுன்,அதாவது
மிரட்டு முன்  தெரிவிக்கவேண்டும்  என எண்ணியிருக்கிறார்.
(இப்போது போல் கைபேசி இருந்திருந்தால் அன்றிரவே சொல்லியிருப்பார்.)

மங்களூர் இரயில் நிலையம் வந்ததும் மேலாளர் காப்பி சாப்பிடலாம். என்றபோது, என் நண்பர் வேண்டாம். என சொன்னதும் அவர்கள் இருவரும் காப்பி சாப்பிட இரயில் நிலைய உணவு விடுதிக்கு சென்று இருக்கிறார்கள்.

அப்போது இவர் அவசரம் அவசரமாக RMS அலுவலகம் சென்று ஒரு
அஞ்சல் அட்டை வாங்கி நான் முன்பு எழுதியிருந்த செய்தியை
அன்றைய அஞ்சலில் சேர்த்துவிட்டாராம். அதை வங்கி முகவரிக்கு எழுதினால்,அது காலை 10 மணிக்குத்தான் என்னிடம் வந்து சேரும்
என்பதால் நான் தங்கியிருந்த விடுதி முகவரிக்கு அனுப்பிவிட்டாராம்.

அந்த அஞ்சல் அட்டை மேலாளர் பயணம் செய்த இரயிலேயே 
பயணித்து காலையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த ஊருக்கு வந்து, மேலாளர் வீட்டுக்கு போய் கிளைக்கு வருமுன், என்னை வந்தடைந்துவிட்டது!

இந்த விவரத்தை என்னிடம் நண்பர் சொல்லிவிட்டு ,’சபாபதி. நீங்கள்
என்ன எழுதினாலும் நீங்கள் வங்கிப் பணிக்குப் புதியவர் என்பதால்
உங்களது கருத்துக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.வீணே நீங்கள்
தான் கஷ்டப்படவேண்டியிருக்கும். எனவே நீங்கள் நல்லபடியாக 
Probation ஐ முடிக்கப் பாருங்கள்.பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
என்று சொன்னார்.

அவருக்கு தக்க நேரத்தில் எனக்கு செய்தி அனுப்பியதற்கு நன்றி 
சொல்லி வழி அனுப்பினேன்.பின் யோசித்தபோது, எனக்கு பயிற்சி 
அளித்த அலுவலர் தற்காலிக மாற்றலில் தலைமை அலுவலகத்தில் 
பணி செய்து கொண்டு இருக்கும்போது,  நான் அந்த கடிதத்தை 
அனுப்பி யிருக்கக்கூடாது என்பது அப்போது தான் புரிந்தது.

ஏனெனில் எனக்கு  பயிற்சி அளித்தவர் அந்த கிளையில் பணியாற்றியபோதுதான் அந்த பம்ப் செட் கடன்கள் கொடுக்கப்
பட்டிருந்தன. மேலும் அவர் மேலாளருக்கு வேண்டியவர். நிச்சயம் 
எனது கடிதத்தை தலைமை அலுவலகத்தில் அவரிடம் காட்டிதான் 
அவரது அபிப்பிராயத்தைக் கேட்பார்கள்.

அவர் எப்படி நான் எழுதியது சரி என சொல்வார் என்பதை சற்று யோசித்திருந்தால்.அந்த கடிதம் எழுதுவதை தள்ளிப்போட்டிருப்பேன். .
அந்த சமயத்தில், ஒன்றும் அறியா விவசாயிகளை ஏமாற்றி அந்த கடைக்காரர் பணம் பிடுங்கிவிட்டாரே என்ற கோபத்திலும், அதை எடுத்துச்சொல்லியும் மேலாளர் எந்த நடவடிக்கையும் 
எடுக்க மாட்டேன் என்கிறாரே என்ற ஆற்றாமையிலும் தான்   
அந்த கடிதத்தை எழுதிவிட்டேன் என நினைத்துக்கொண்டேன்.

சரி நடந்தது  நடந்துவிட்டது. இனி எதையும் ஒரு முறைக்கு 
இருமுறை யோசித்து செய்வோம் மேலும் இந்த மேலாளரிடமும் ஜாக்கிரதையாய் இருப்போம் என நினைத்துக்கொண்டு,வழக்கம்போல் 
SB Counter ல் அமர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தேன்.மேலாளரின் பார்வை என் மேலேயே இருந்ததால் நான் யாரிடமும் பேசாமல் 
எனது பணியை மட்டும் கவனித்து வந்தேன்.

ஒரு நாள் மதியம் உணவு இடைவேளைக்குப் பின் மேலாளர் 
என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

எதற்காக என்னைக் கூப்பிடுகிறார் என யோசித்துக் கொண்டே, 
அவரது அறைக்கு சென்றேன்.


தொடரும்

18 கருத்துகள்:

  1. சிகப்பாய் இருப்பவனுக்கு இங்கிலீஷ் தெரியும்-இன்று கூட இந்த நிலை பல இடங்களில் உள்ளது...
    உங்கள் அனுபவம் சுவாரஸ்யமாக உள்ளது... தொடருங்கள் சார் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு அனுபவங்கள்!.சுவையான அனுபவங்களை சொதப்பலாகச் சொல்வோம் என்னைப் போன்ற ஒரு சிலர். நீங்கள் அதிரடி அனுபவங்களை அழகாக சொல்வது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! நான் அனுபவித்தவைகளை அப்படியே சொல்கிறேன். அவ்வளவே. தங்களுக்கு பிடித்திருப்பதற்கு அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. ''..எதற்காக என்னைக் கூப்பிடுகிறார் என யோசித்துக் கொண்டே,
    அவரது அறைக்கு சென்றேன்...''
    What next? மிக ஆவலுடன்!...அருமை!...நல்வாழ்த்து!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. இந்த தொடர் பதிவை முழுமையாய் படித்ததில்லை என்றாலும்.. சில பாகங்களை படித்திருக்கிறேன்.! எழுத்து நடை வெகு சுவாரஸ்யம் புதியவர்களின் யோசனையை கொஞ்சமாவது காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விளக்கிய இடங்கள் அருமை..

    இனி எல்லா பகுதிகளிலும் ஆஜராவேன் தொடருங்கள்...!

    பதிலளிநீக்கு
  8. மூத்த பணியாளர்களின் அனுபவம் தேவைப்பட்டாலும், இளைய தலைமுறையின் கருத்தையும் காது கொடுத்தாவது கேட்கவேண்டும். அவர்களுக்கு அனுபவம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கருத்துக்களை உதாசீனப்படுத்துவது நிறுவனத்திற்கு நல்லதல்ல

    கவனத்தில் கொள்ளவேண்டிய அனுபவப்பாடம் !

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. ஹம் தும் இக் கமரே மே பந்த் ஹே ! சும்மா தமாஷ் ...என்ன நடந்தது என்று அறிய ஆவல் .. வாசு

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நடந்ததும் தமாஷ்தான். அதுபற்றி அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு
  13. சரியான இடத்தில்’ தொடரும்’ போட்டு ஆவலைத் தூண்டி விடுகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. //இன்றைக்குக் கூட பணிக்குப் புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் சொல்லும் கருத்துக்கு அநேக Boss கள் செவி சாய்ப்பதில்லை என்பது
    என் கருத்து.மூத்த பணியாளர்களின் அனுபவம் தேவைப்பட்டாலும், இளைய தலைமுறையின் கருத்தையும் காது கொடுத்தாவது கேட்கவேண்டும். அவர்களுக்கு அனுபவம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கருத்துக்களை உதாசீனப்படுத்துவது நிறுவனத்திற்கு நல்லதல்ல//

    நீங்கள் சொல்வது சரியே. எங்கள் அலுவலகத்தில் Suggestion Scheme என்று ஒன்று வைத்து, எல்லோருடைய ஆலோசனைகளையும் எழுத்து மூலமாக வாங்கி, அவைகளுக்கு உடனுக்குடன் ஒரு acknowledgement கொடுத்து, மாதம் ஒருமுறை ஓர் கமிட்டி வைத்து ஏற்றுக்கொள்ளலாமா நிராகரிக்கலாமா என முடிவு செய்வார்கள். ஏற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகளுக்குப் பரிசும் அளிப்பார்கள். இந்தத் திட்டத்தில் என் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பல நிறுவனங்களில் நீங்கள் சொன்னது போல் ஊழியர்களின் கருத்தை/யோசனையை அறிந்து பணிகளில்/சேவைகளில் மாற்றம் செய்வதுண்டு.எங்கள் வங்கியிலும் பின்னாட்களில் அதை அறிமுகப்படுத்தினார்கள். நான் சேர்ந்தபோது வங்கி அப்போதுதான் நாட்டுடைமை ஆகியிருந்தது. அதனால் அதுபோன்ற நடைமுறை அப்போது இல்லை.

      நீக்கு
  16. இந்தத் தங்களின் தொடரின் பகுதி 21, 24 + 25 க்கான என் பின்னூட்டங்களை நான் அனுப்பியிருந்தேன். கிடைத்ததா ஸார்?

    இன்னும் அவை தங்களால் ஏனோ வெளியிடப்படவில்லை .. அதனால் SPAM போன்ற எங்காவது மாட்டிக்கொண்டிருக்குமோ என ஒரு சின்ன சந்தேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நேற்றுதான் தங்களுடைய பின்னூட்டங்கள் கிடைத்தன. உடனே பதிலும் தந்துவிட்டேன்.

      நீக்கு