வெள்ளி, 27 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 35


மறு நாள் காலை கிளைக்கு தயக்கத்தோடு நுழைந்த நான்,எப்படி அந்த மேலாளரின் கீழ் திரும்பவும் பணியாற்றப் போகிறோம் என்று எண்ணி நிமிர்ந்து பார்த்தபோது,மேலாளரின் அறையில் இருக்கையில், அவர் இல்லை! அவருக்குப் பதில், அருகில் இருந்த மாவட்டத் தலைநகர் கிளையின் மேலாளர் அவருடைய இருக்கையில் அமர்ந்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

பழைய மேலாளர் என்னவானார் என்று யோசித்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும் என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் வந்து கையை குலுக்கி, ‘திரும்பி வந்ததற்கு சந்தோஷம். என்றார்கள். அனைவர் முகத்திலும் 
(ஒரு சிலரைத்தவிர) ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தைப் பார்த்தேன்.
எல்லோரும் ஆகஸ்ட் 15, அன்று கொண்டாடுவதுபோல் எனக்குத் தோன்றியது!

என்ன நடந்தது? பழைய மேலாளர் எங்கே? இவர் எப்போது வந்தார்?’
என்று கேட்டபோது, அவர்கள், ’நீங்கள் உள்ளே போய் மேலாளரைப் பார்த்துவிட்டு வாருங்கள்.பிறகு சொல்கிறோம்.என்றார்கள். 

மேலாளர் அறைக்கு சென்று  வணக்கம்  தெரிவித்தேன். அவரது 
பழைய கிளையில் ஒரு வாரம் பயிற்சியில் இருந்ததால் அவருக்கு என்னை தெரியும். அவர், என்னைப்பார்த்ததும், ‘Welcome Back சபாபதி! உங்களை திரும்பவும் இங்கு மாற்றியுள்ளார்கள். அதற்கான ஆணையை இன்று வரும் உங்கள் துறைத் தலைவர் கொண்டுவருவார். நீங்கள் உங்களது பணி ஏற்பு அறிக்கையை அந்த ஆணை வந்ததும் தரலாம்.அதுவரை நீங்கள் போய் உங்கள் இடத்தில் காத்திருங்கள்.'
என்றார்.

நான் உடனே, ‘சார். ஊரில் இருக்கும்போது திடீரெனத் தந்தி கொடுத்து என்னை இங்கு வர சொல்லி விட்டதால்,என்னால் திருவள்ளூர் போய்
எனது பெட்டி படுக்கைகளை எடுத்து வரமுடியவில்லை.கையில் ஒரு மாற்றுடை தவிர வேறொன்றும்  இல்லை. என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, அவர்,‘கவலை வேண்டாம். இவ்வார இறுதியில்,வங்கி செலவிலேயே நீங்கள் போய் உங்கள் பொருட்களைஎடுத்துவரலாம்.
சரிதானே. என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்து எனக்கான இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் வந்த நண்பர்கள்  எனது மாற்றலுக்குப் பிறகு நடந்தது பற்றி சொன்ன போது, Much water has flown under the bridge .என்று ஆங்கிலத்தில் சொல்லும் மரபுத்தொடர் (Idiom) அந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்தது.

அவர்கள் சொன்ன செய்திகள், ஒரு திரைப்படத்திலோ அல்லது கதையிலோ நடக்கும் சம்பவங்கள் போல் இருந்தன, 
தலைமையகத்திலிருந்து  எனக்கு திருவள்ளூருக்கு மாற்றல் கிடைத்த வாரம்,ஒரு அரசு சார்ந்த நிறுவனம் அந்த வங்கிக் கிளையின் பேரில் 
ஒரு புகாரை நேரடியாக வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியிருக்கிறது. வங்கித் தலைவருக்கு கிளையின் பேரிலும் மேலாளரின் பேரிலும் நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் 
அரசு சார்ந்த நிறுவனமே புகார் தந்ததால் அதை விசாரிக்க சொல்லி ஆய்வுத்துறைக்கு பணித்திருக்கிறார்.

அவர்கள் மேலாளர் கிளையில் இருக்கும்போது அதை ஆய்வு செய்தால் தங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்காமல் போகலாம் 
என்பதால் அவரை கிளையில் இல்லாதபோது ஆய்வு செய்ய  விரும்பியிருக்கிறார்கள்.அதனால் மேலாளரை கலந்தாய்வுக்கு 
தலைமை அலுவகத்திற்கு வரச்சொல்லிவிட்டு அதே நாளில் 
கிளையில் ஆய்வு செய்து இருக்கிறார்கள்.

ஆய்வின்போது அந்த நிறுவனம் தந்த புகாரில் உண்மை இருப்பது தெரிந்ததாலும், மேலும் பல வெளிச்சத்திற்கு வராத அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்ததாலும், அவற்றை அப்படியே வங்கித் 
தலைவருக்கு தொலைபேசி மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

மேற்கொண்டு எல்லா விவரங்களையும் அறிய முழுமையான 
ஆய்வுக்கு ஆணையிட்டுவிட்டு, தலைமை அலுவலகம் சென்ற மேலாளரை,மாற்றல் ஆணை கொடுத்து அங்கேயே இருத்திக்கொண்டார்களாம். ஆய்வு முடிந்து புதிய மேலாளர் வரும் 
வரை மாவட்ட தலைநகரிலிருந்த மேலாளரை தற்காலிகமாக 
பொறுப்பு ஏற்க சொல்லியிருக்கிறார்கள்.  

அவர் வந்து பொறுப்பேற்றதும், கிளையில் இருந்த எனது முன்னாள் பயிற்சியாளரையும் மாற்றினால்தான் முழுமையான ஆய்வைத் தொடரமுடியும் என அறிக்கை தந்ததால்,அவரையும் தலைமை அலுவலகத்திற்கு மாற்றிவிட்டார்களாம். 

அவர் இடத்தில் யாரைப் போடலாம் என தலைமஅலுவலகம் 
கேட்டபோது, புதிய மேலாளர் கிளையில் இருந்த சார்பு மேலாளரிடம் 
(Sub Manager) கலந்தாலோசித்தபோது, நான் அங்கு சுமார் ஒரு வருட காலம் இருந்ததால் எனக்கு எல்லா வேளாண்மைக் கடன் வாடிக்கையாளர்களைத்தெரியும் என்பதால் எனது பெயரை சொல்லியிருக்கிறார்.

புதிய மேலாளரும் அவ்வாறே என்னை அங்கு மாற்றல் செய்ய பரிந்துரைத்திருக்கிறார். அதற்குள்  நான் திருவள்ளூரில் சென்று 
பணி ஏற்க விடுவிக்கப்பட்டுவிட்டேன்.

அதனால் தலைமை அலுவலகம் திருவள்ளூர் கிளையை 
தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பணியில் சேர்ந்துவிட்டேனா என விசாரித்திருக்கிறார்கள். நான் ஊருக்கு சென்று இருக்கிறேன் 
எனக் கேள்விப்பட்டதும், எனது மாற்றல் இரத்து செய்யப்பட்டதை சொல்லி, நான் வந்தால் என்னை பழைய கிளைக்கே சென்று 
பணியேற்க சொல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள். அதோடு
எனது ஊருக்கு தந்தியும் அனுப்பியிருக்கிறார்கள்.

இதுதான் நடந்தது என்று அவர்கள் சொன்னபோது எனக்குள் 
மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை.
  
அந்த கிளையில் தீவிர ஆய்வு செய்ய ஒரு உயர்மட்டக்குழுவும் அமைத்திருப்பதாகவும், அந்த குழு அன்று வர இருப்பதாகவும் சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதுபோலவே காலை 11 மணிக்கு தலமை அலுவலகத்திலிருந்து, தலைமை கணக்காளர், வேளாண் நிதித்
துறைத் தலைவர், தலைமை ஆய்வாளர் அடங்கிய குழு வந்தது.
அந்தக் குழுவில் இருந்த எனது துறையின் தலைவர் எனது பணி 
மாற்றல் ஆணையைக் கொடுத்தார்.

அதற்கு பின் புதிய மேலாளரிடம் எனது பணியேற்பு அறிக்கையை கொடுத்தேன்.

உடனே  மூவரும் தங்களது ஆய்வைத் தொடங்கினர். அந்தக் குழுவின் ஆய்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்தது.

தொடரும்



20 கருத்துகள்:

  1. ஆகா! பார்த்தீர்களா! பொறுமை எவ்வளவு நிகழ்த்தியுள்ளது. நானும் இப்படி ஆச்சரியங்களை எதிர்பார்த்தேன் நடக்குமென்று என் ஊகம் சரியாயுள்ளது. சுவை. மகிழ்வு! தொடருங்கள். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் போல, எனக்கும் நடந்ததை நினைத்துப் பார்த்தேன்...
    நன்றி சார் ! தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. ''கவலை வேண்டாம். இவ்வார இறுதியில்,வங்கி செலவிலேயே நீங்கள் போய் உங்கள் பொருட்களைஎடுத்துவரலாம்.
    சரிதானே''

    இப்படி எத்தனை பேர் சொல்வார்களென்று தெரியவில்லை.பல வருடங்களுக்கு முன்னால் நடந்த விசயங்களை எப்படி மறக்காமல் எழுதுகிறீர்கள் என ஆச்சர்யப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி கவிஞர் மதுமதி அவர்களே! பழைய அனுபவங்களை நினைத்துப் பார்த்து எல்லோருமே எழுதமுடியும்.ஆனால் பலர் முயற்சிப்பதில்லை.அவ்வளவுதான். பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வரதராஜலு.பூ அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. சுவாரஸ்யமாகவும் ரொம்பவும் வேகமாகவும் பயணிக்கிறது தங்கள் அனுபவத்தொடர்!

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. தங்கள் கூற்று உண்மைதான் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அதே கிளைக்கு வருகிறோமே என்று வந்தால் எத்தனை மாற்றங்கள்?நீங்கள் பிரமித்திர்களொ இல்லையோ,நாங்கள் பிரமித்தோம்.

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. நடந்தது ... நடப்பது ... நடக்கப்போவது எல்லாம் நன்மைக்கே எனத் தெரியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பலநாள் திருடர்கள் ஒருநாள் அகப்படுவார்கள் என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உண்மை ஒரு நாள் வெல்லும் என்பது உண்மையே!

      நீக்கு