புதன், 4 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 27


நான் பேருந்தில் வந்து, நடந்து வருகிறேன்.என்றதும் அந்த விவசாயி ‘சார் நீங்கள்  வாடகைக் காரில் வந்திருக்கலாமே? ஆய்வுக்கு வரும் உங்களைப் போன்ற வங்கி அலுவலர்கள் வாடகை காரில் வந்து போகும் செலவுக்கு  ரூபாய் 100 தரவேண்டும் என்று, ‘பம்ப்  செட்’ டை வாங்கிய கடையின் உரிமையாளர் சொன்னபோது, அவர் கேட்ட பணத்தை கொடுத்து வந்திருக்கிறேனே.” என்று சொன்னார். 

(இன்றைய நிலையில் ரூபாய் 100 என்பது குறைவான தொகை போன்று தெரியலாம். ஆனால் அவர் அதை கொடுத்த ஆண்டு 1969. அப்போதைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபா 10 காசுகள்! அதை வைத்து கணக்கிட்டால் அவர் கொடுத்த பணத்தின் மதிப்பு பன் மடங்கு என்பது புரியும்

அவர் சொன்னதை கேட்டதும்  எனக்கு ஆச்சரியமாகவும் 
அதிர்ச்சியாகவும் இருந்தது. வங்கியில் கடன் வழங்கும் சமயத்திலேயே சேவை கட்டணம் (Service Charge) என்று மிகக் குறைந்த கட்டணத்தை வசூல் செய்வார்கள்.அது கூட ரூபாய் 10 அல்லது 15 க்குள் தான் 
இருக்கும். வேறு கட்டணம் எதுவும் வசூல் செய்வதில்லை. (நான் சொல்வது அப்போது) 

வங்கி அலுவலர்கள் வந்துபோகும் செலவை வங்கியே 
ஏற்றுக்கொள்ளும். அதற்காகத் தனியாக எதுவும் வசூலிப்பதில்லை. 
எனவே நான் கேள்விப்பட்ட அந்த செய்தி பற்றிய மேல் விவரம் அறிய, அவரிடம் யாரிடம் எங்கு பணம் கொடுத்தீர்கள்? நீங்கள் மட்டும்தானா?  அல்லது வேறு யாரும் கொடுத்தார்களா? என்று கேட்டேன்.

அதற்கு அவர். நான் மட்டுமல்ல. உங்கள் வங்கியில் பம்ப்  செட்’ 
கடன் வாங்கிய அனைவருமே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் அந்த கடையில் தான்  கொடுத்தோம். என்றார். 

நீங்கள் வங்கியைக் கேட்காமல் ஏன் அந்த கடைக்காரரிடம் 
கொடுத்தீர்கள்? நீங்கள் தான் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துகிறீர்களே? அதுவே போதுமே.வங்கியே எங்களது ஆய்வுக்கான பயணச்செலவை வங்கியே ஏற்றுக்கொள்வதால் நீங்கள் அந்த பணத்தை தந்திருக்கத்தேவையில்லை. என்றேன் நான்.

அவர்,’சார். நாங்கள் அதிகம் படிக்காதவர்கள். கடைக்காரர் மூலம் தான் வங்கியில் பம்ப் செட் வாங்க கடன் பெற்றோம். எனவே அவர் 
சொன்னால் சரியாய் இருக்கும் என நினைத்து கொடுத்துவிட்டோம். என்றார். 

சரி. இனி நீங்கள் யாருக்கு ஏதும் தராதீர்கள். வங்கிக்கு கட்டவேண்டிய பணத்தைக்கூட நீங்களே வங்கிக்கு வந்து செலுத்துங்கள். எனக் 
கூறிவிட்டு அவரிடம் இருந்த மோட்டார் எண்ணை குறித்துக்கொண்டு, அதில் எங்கள் வங்கியின் நிதி உதவியால் வாங்கப்பட்டது என எழுதப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து குறித்துக்கொண்டேன்.

பின் அவர் வைத்துள்ள பயிர்கள் பற்றியும் கடன் வாங்கு முன் அவர்செய்த பயிர் சாகுபடி பற்றியும் கேட்டு, பம்ப் செட் வைத்ததால் அவரது வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினேன். 

திரும்பி பேருந்தில் வரும்போது, என் நினைப்பெல்லாம் அந்த விவசாயி சொன்னதிலேயே இருந்தது.அவர் உண்மையைத்தான் சொல்கிறார் 
என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. இந்த பயனாளிகளின் அறியாமையை அல்லது எளிதாக நம்பிவிடும் குணத்தை எப்படி 
அந்த கடைக்காரர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் 
என்று நினைக்கையில் எனக்கு கோபம் கோபமாக வந்தது.

வங்கியில் கடன் பெற்றவர்கள் 60 பேரும்,அந்த விவசாயி சொன்ன கடையிலேயே பம்ப்  செட்’ வாங்கியிருந்ததால்,அந்த கடைக்காரர் 
இந்த பயனாளிகளிடம் பெற்ற/ஏமாற்றிய தொகை எவ்வளவு இருக்கும் என்பதை மனதில் கணக்கு போட்டு பார்த்தேன். 60 பேரிடமும் ஆளுக்கு ரூபாய் 100 வீதம் மொத்தம் ரூபாய் 6000 த்தை வசூலித்திருக்கிறார் என அறிந்தபோது அந்த கடைக்காரரை சும்மா விடக்கூடாது என முடிவு செய்தேன்.

ரூபாய் 6000 என்பது அப்போதைய மதிப்பில் மிகப் பெரிய தொகை.வங்கியின் பெயரை சொல்லி பணத்தை வாங்கிய அவரிடமிருந்து அதை திரும்ப பெற்று பணம் கொடுத்தவர்களுக்கே திருப்பித்தர ஆவன செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டு நான் பணி செய்துகொண்டு இருந்த ஊருக்கு திரும்பியதும், முதல் வேலையாக வங்கிக்கு கூட செல்லாமல் பேருந்து நிலையத்திலிருந்து அந்த கடைக்கு சென்றேன். முன்பே என்னை அவர் வங்கியில் பார்த்திருந்ததால் என்னை 
அவருக்குத் தெரியும். 

என்னைப்பார்த்த அந்த கடைக்காரர், ‘வாங்க. சார் உட்காருங்க. 
என்றதும் உட்காருவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீங்கள் ஏன் 
எங்கள் வங்கியில் பம்ப் செட் கடன் பெற்றோரிடம் வங்கி அலுவலர்கள் ஆய்வுக்கு என ரூபாய் 100 வசூலித்தீர்கள்?’ என சுற்றி வளைக்காமல் நேரடியாகவே காட்டமாக கேட்டேன். 

அந்த கேள்வியை என்னிடம் அவர் எதிர்பார்க்கவில்லை போலும். அதுவரை அவரது முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போய்விட்டது. உடனே பதிலுக்கு அவர் வேகமாகவும் கோபமாகவும், ‘நான் கொடுத்த 
பம்ப் செட்டுக்குத்தான் பணத்தை பெற்றெனே தவிர நீங்கள் சொல்வதுபோல் ஆய்வுக்கென்று எந்த தொகையையும் வாங்கவில்லை. யாரோ சொன்னதை கேட்டு இங்கு வந்து என்னை அவமானப் படுத்திவிட்டீர்கள். புதிதாய் வந்த உங்களுக்கு வேண்டுமானால் என்னைப்பற்றி தெரியாமல் இருக்கலாம் நான் யார் என்று. உங்கள் மேனேஜரிடம் போய் கேட்டுப்பாருங்கள் அவர் சொல்வார் என்னைப்பற்றி என்று கூறிவிட்டு அவரது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அந்த புகாரை சொன்னது யார் எனக் கூட விசாரிக்காமல், நான் பேசி முடிப்பதற்குள், மறுத்துப் பேசியது, அவர் மேல் உள்ள எனது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. 

மேற்கொண்டு அவர் என்னிடம் பேச விரும்பாததால், இனி அவரிடம் பேசிப் பயனில்லை என முடிவெடுத்து, மேலாளரிடம் சொல்லி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைத்து, வங்கி கிளைக்கு சென்றேன்.

நான் சென்றபோது மாலை மணி 6 ஆன போதிலும், மேலாளர் அவரது அறையில் தான் இருந்தார். அவரது அறையின் கண்ணாடி கதவருகே நின்று அவரது அழைப்புக்காக சிறிது நேரம் காத்திருந்து அவர் அழைத்தபின் உள்ளே சென்றேன். 

அவர் நிமிர்ந்து பார்த்து யெஸ் என்றார்.


தொடரும்

8 கருத்துகள்:

  1. தங்களின் அனுபவ கட்டுரை மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது சார் ! தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி !

    பதிலளிநீக்கு
  2. If a person does something unethical for survival may be (only may be) it is acceptable. Because he is left with no choice. “Padiththavan thavaru seidhall ayyo endru povaan”. It is very painful to read, what you have written. I do not know whether I have escaped or ditched India. Hope my children may not have this guilt.
    Packirisamy N

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!
    நீங்கள் சொல்வது உண்மை.
    நேர்மையாய் இருப்பவர்கள் கஷ்டப்படுவதும்,அநியாயம் செய்பவர்கள் சந்தோஷமாக இருப்பதும்தான் இங்கு நடந்துகொண்டு இருக்கிறது.நல்ல வேளை நீங்கள் தப்பித்து கொண்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. அடப்பாவிகளா... உழைப்பவரை உறிஞ்சிப் பிழைக்கும் அட்டைகள் எந்தக் காலத்திலும் உண்டு போலும். உங்கள் புகாருக்கு (நியாயமான) நடவடிக்கையை அந்த வங்கி மேலாளர் எடுத்தாரா என்பதைத் தெரிந்து கொள்ள... ஆவலுடன் நான்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள்(ஏய்த்துப் பிழைப்பவர்கள்)இருப்பார்கள் என்பது தானே நியதி.அப்புறம் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில்!

    பதிலளிநீக்கு
  7. கடைக்காரர் எதற்குமே பயப்படாமல் தெனாவெட்டாகப் பேசுவதைப் பார்க்கும்போது, அந்த வசூல் பணத்தில் அவருக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பங்கு இருக்கும் போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!. நீங்கள் நினைப்பது சரிதான். அந்த மேலாளருக்கும் அதில் பங்கு இருந்திருக்கிறது.

      நீக்கு