செவ்வாய், 31 ஜனவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 2

நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தபோது முதலில்
பொறியாளர் திரு சுப்ரமணியன் வந்தார்.அவரிடம்
எனது புதிய பணிக்கான ஆணை கிடைத்து இருப்பது
பற்றி சொன்னபோது,அவர் அந்த பணி ஆணையை
படித்துவிட்டு,‘இந்த சம்பளத்திற்கு மாநிலம் விட்டு
மாநிலம், அதுவும் வெகு தூரத்திற்கு போய் பணி
செய்யவேண்டுமா? யோசித்து முடிவெடுங்கள்.’
என்றார்.

அவர் கேட்டதில் நியாயம் இருந்தது.அப்போது
(1966 டிசம்பர்) எனது மாத சம்பளம்

அடிப்படை சம்பளம் (BP) ரூ.200.00
அகவிலைப்படி (DA) ரூ. 73.00
தொகுப்பு பயணப்படி (FTA) ரூ. 30.00
ஆக மொத்தம் ரூ.303.00

புதிய பணிக்கான ஆணையில் குறிப்பிட்டு இருந்த
மாத சம்பளம்
அடிப்படை சம்பளம் ரூ.210.00
அகவிலைப்படி ரூ.110.00
வீட்டு வாடகைப் படி ரூ. 13.75
ஆக மொத்தம் ரூ. 333.75


வெறும் 30ரூபாய் 75 காசுகள் அதிகம் என்பதால்,
ஊருக்கு அருகே உள்ள வேலையை விட்டுவிட்டு
அடுத்த மாநிலத்திற்கு அதுவும் மொழி தெரியாமல்
செல்லவேண்டுமா என அவர் கேட்டது சரி
என்றாலும், நான் போக முடிவெடுத்ததற்கு
காரணங்கள் இருந்தன.

அப்போது அரசு,வேளாண் பட்டப்படிப்பு
படித்துவிட்டு வருபவர்களை சரியாக
உபயோகப்படுத்திக் கொள்ளாமல்,சம்பந்தமில்லாத
மற்ற பணிகள் செய்ய சொன்னதும்,அரசுத்
துறையில் இருந்த மேல் அதிகாரிகள் சர்வாதிகாரிகள்
போல் செயல் பட்டதும்,பணியில் மன நிறைவு
இல்லாததும்(Job Satisfaction) மற்றும் இன்னபிற
காரணங்களும் தான்.

(அது பற்றி பின் விரிவாக எழுதுவேன்)

நான் ‘இந்த பணியில் எனக்கு மன நிறைவில்லாத
காரணத்தால்,இந்த பணியை விட்டு அங்கு செல்ல
இருக்கிறேன்.வேறு எதற்காகவும் அல்ல.’ என
சொன்னதும் அவர்,’பின் உங்கள்விருப்பம்போல்
செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து நண்பர் திரு வீராசாமி வந்ததும்
எனது புதிய பணியின் ஆணை பற்றி சொன்னதும்
அவர் அதை வாங்கி படித்துவிட்டு,‘மிக்க மகிழ்ச்சி.
இதை விட்டு போவது நல்லதுதான்.எனவே உங்கள்
விருப்படியே செய்யுங்கள். ஆனால் பணியை விட்டு
விலக,விலகல் கடிதம்(Resignation Letter) கொடுத்தால்
உடனே ஏற்று உங்களை விடுவிப்பார்களா? அதை
பற்றி யோசிப்போம்.; என்றார்.

(இந்த சமயத்தில் நண்பர் திரு வீராசாமியைப்பற்றி
குறிப்பிடவேண்டும். அவர் கல்லூரியில் இருக்கும்போதே
IAS ஆக வேண்டும் என விரும்பியவர்.அதனால் படிப்பை
முடித்தவுடன் பணி புரிந்துகொண்டே, அந்த தேர்வுக்கு
தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். ஆனால்
அப்போது IAS தேர்வுகளை எழுத வேளாண் பட்டதாரிகள்
எழுத அனுமதி இல்லாததால், மாநில அரசின் Group I
தேர்வு எழுதி வெற்றிபெற்றாலும் நேர்முகத்தேர்வில்
தேர்வு செய்யப்படாததால், வேளாண் அறிவியலில்
முதுகலைப் பட்டம் (M.Sc(Agri)) பெற்று பின்
முனைவர் (Ph.D) பட்டமும் பெற்று இந்தியா வேளாண்
ஆராய்ச்சி கழகத்தில் (Indian Agricultural Research Institute) முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து,
பணி ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்)

நான் சொன்னேன்.‘என்ன, நான் நிரந்தரப் பணியிலா
இருக்கிறேன்? இது 10 A(1) கீழ் தரப்பட்ட தற்காலிகப்
பணிதானே.எனவே நாளையே விலகல் கடிதம் கொடுத்த
நான் செல்ல விரும்புகிறேன்.’ என்றேன்.

நண்பர் திரு வீராசாமியும், ‘சரி. அப்படியானால்
நாளை காலை முதல் வேலையாக ஊராட்சி ஒன்றிய
ஆணையரை (Commissioner, Panchayat Union) சந்தித்து
பேசிவிட்டு பின் அலுவலகத்தில் கடிதத்தைத் தரலாம்.’
என்றார்.

(அரசுத் துறைகளில் நிரந்தரப் பணிக்காக ஊழியர்களை
அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கு முன்
காலியாக உள்ள இடங்களில் தற்காலிகமாக அந்தந்த
துறைத் தலைவரே தற்காலிக அடிப்படையில்
அலுவலர்களை 10 A(1) என்ற பிரிவின் கீழ் நியமிக்கலாம்.

ஆனால் அவர்கள் நிரந்தர ஊழியராக வேண்டுமென்றால்,
அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள
பணியிடங்களுக்காக தேர்வு செய்ய நடத்தப்படும்
நேர்முகத்தேர்வு பற்றி அறிவிப்பு தந்தவுடன்,
விண்ணப்பித்து,நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு
வெற்றி பெற்றால் மட்டுமே நிரந்தர ஊழியர் ஆகலாம்.)

அந்த 10 A(1) என்ற பிரிவின் கீழ் தான் எனக்கு
வேளாண் துறை பணி நியமன ஆணை கொடுத்தது.
வேளாண்மை பட்டதாரிகள் பலருக்கு அதே துறையில்
பணி கொடுத்தாலும்,ஒரு சிலரை ஊராட்சி ஒன்றியத்தில்
வேளாண் விரிவாக்க அலுவலராக பணி புரிய
அனுப்புவதும் உண்டு. அவ்வாறு தலைஞாயிறு
ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்.

என்னைப் போன்றோருக்கு மாவட்ட வேளாண்மை
அலுவலர் மேல் அதிகாரி ஆனாலும்,ஊராட்சி ஒன்றிய
ஆணையர்தான் நிர்வாகத் தலைவர் (Administrative Head). எனவே அவரிடமே எனது பணி விலகல்
கடிதத்தைக் கொடுக்க முடிவு செய்து, அவர் அதை
வாங்கிக்கொண்டு என்னை விடுவிப்பார் என்ற
நம்பிக்கையில் நிம்மதியோடு உறங்கச் சென்றேன்.

ஆனால் நான் நினைத்ததுபோல் அது நடக்கவில்லை!

தொடரும்

வியாழன், 26 ஜனவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 1

அனைவருக்கும் எனது குடியரசு தின
நல் வாழ்த்துக்கள்!


1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.அப்போது நான்,
தஞ்சை (தற்போது நாகப்பட்டினம்)மாவட்டத்தில்
இருக்கும் நீர்முளை என்ற ஊரில் தமிழக(அப்போதைய
சென்னை மாநில) ஊரக வளர்ச்சித்துறையில்
வேளாண் விரிவாக்க அலுவலராக
(Agricultural Extension Officer) வேலை
பார்த்து வந்தேன்.

அந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் தலைஞாயிறுக்கும்
இடையே இருக்கிறது.அங்கு தங்கும் வசதி இல்லாததால்,
5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தலைஞாயிறில்
நண்பர்களுடன் தங்கியிருந்தேன்.

தலைஞாயிறு அக்ரஹாரம் என்ற அழைக்கப்பட்ட
தலைஞாயிறில் இருந்த ஒரு அக்ரஹாரத்தில் தான்
நான் தங்கியிருந்த வீடு இருந்தது.

அந்த வீட்டில் நானும்,அருகில் இருந்த பனங்காடி
என்ற ஊரில் வேளாண் விரிவாக்க அலுவலராக
பணியாற்றிக்கொண்டு இருந்த என்னுடைய
வகுப்புத்தோழர் திரு வீராசாமி அவர்களும்,
பொதுபணித்துறையில் இளநிலை பொறியாளராகப்
பணியாற்றிக்கொண்டு இருந்த திரு சுப்ரமணியன்
அவர்களும், கால்நடை மருத்துவமனையில்
உதவி கால்நடை மருத்துவராக பணியாற்றிக்கொண்டு
இருந்த Dr ரூடி அவர்களும் ஒன்றாகத் தங்கியிருந்தோம்.

(எனது தலைஞாயிறு அனுபவத்தையும், தமிழக ஊரக
வளர்ச்சித்துறையில் வேலை பார்த்த அனுபவம் பற்றி
முன்பே சொன்னபடி விரிவாக ’நினைவோட்டம்‘
தொடரில் எழுத இருக்கிறேன்.)

அந்த மாதம் 15 ஆம் தேதி எனது ஊரிலிருந்து,
என் சகோதரி எனக்கு அங்கு வந்திருந்த ஒரு
அஞ்சலை திருப்பி அனுப்பியிருந்தார். அஞ்சலை
பிரித்துப் பார்த்ததும் எனக்கு ஒரே மகிழ்ச்சி.

தேசிய விதைக் கழகத்தில் (National Seeds
Corporation Ltd.,
) விதை பெருக்க உதவியாளர்
(Seed Production Assistant) பதவிக்கு, நவம்பர்
மாதம் ஹைதராபாத்தில் நடந்த நேர்முகத்தேர்வில்
கலந்துகொண்டு இருந்தேன்.

அந்த தேர்வின் முடிவுப்படி,என்னை தேர்ந்தெடுத்து
இருப்பதாகவும்,மைசூர் மாநிலத்தில்(இப்போதைய
கர்நாடக மாநிலம்) தார்வாரில்உள்ள அலுவகத்தில்
உடனே சேரவேண்டும் என்ற பணி ஆணையினை
சுமந்து வந்த அஞ்சல்தான் அது.

எப்போது அந்த பணியிலிருந்து விடுபட்டு விடுதலை
பெறுவோம் என தினம் நினைத்துக்கொண்டு இருந்த
எனக்கு அந்த அஞ்சலைப் பிரித்து படித்தபின் ஏற்பட்ட
மகிழ்ச்சியை எழுத்தில் வடிக்க இயலாது.

மாலை தலைஞாயிறு திரும்பியதும்,எனது புதிய
பணிக்கான ஆணை பற்றி சொல்லி எனது மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ள, நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தேன்.


தொடரும்

வியாழன், 19 ஜனவரி, 2012

என் பெயர் பட்ட பாடு!

எனது தந்தை ஒரு தீவிர சிவ பக்தர் என்பதால்,
எங்கள் வீட்டில் அனைவருக்கும் சிவன்
சம்மந்தப்பட்ட பெயராகவே வைத்திருந்தார்.

அப்படி அவர் எனக்கு இட்ட பெயர் தில்லையில்
உள்ள நடராசப்பெருமானின் இன்னொரு பெயரான
நடனசபாபதி என்பதாகும்.அவர் எனக்கு இந்த
பெயரை சூட்டியபோது நினைத்துக்கூட
பார்த்திருக்கமாட்டார்,என் பெயர் பிற்காலத்தில்
சில பேர் வாயில் புகுந்து என்ன பாடுபடப்
போகின்றது என்று.

என் பெயர் அத்தனை கடினமானதா என்று நானே
சில சமயம் யோசித்ததுண்டு.காரணம் என்
பெயரை சரியாக உச்சரித்தவர்களை விட தவறாக
உச்சரித்தவர்கள் தான் அதிகம் என்பதால்!

நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை
எனது பெயர் சரியாகவே உச்சரிக்கப்பட்டது.
அதுவரை நான் எனது பெயரை ஆங்கிலத்தில்
Natanasabapathy என்றே எழுதிவந்தேன்.ஒன்பதாம்
வகுப்பு வந்தபோது SSLC புத்தகத்தில் விருத்தாசலம்
பள்ளியில், எனது ஆசிரியர் ஆங்கிலத்தில் என்
பெயரை எழுதும்போது மூன்றாவது எழுத்தான
‘t’‘d’ ஆக மாற்றி Nadanasabapathy என
எழுதிவிட்டார்.அதனால்தான் சிக்கலே வந்தது.

கல்லூரி முடிக்கும் வரை எனது முழுப்பெயரைச்
சொல்லி யாரும் கூப்பிட்டதில்லை,வருகைப்
பதிவை எடுக்கும் ஆசிரியர்களைத்தவிர!

வீட்டிலும், பள்ளி மற்றும் கல்லூரியிலும்
எல்லோரும் என்னை நடனம் என்றே சுருக்கி
அழைத்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது,
பெயர் நீளமாக இருக்கிறதென்று எனது புத்தகங்களில்
V.N.S.Pathy என சுருக்கமாக எழுத ஆரம்பித்தேன்.
நண்பர்கள் சில விளையாட்டாக வனஸ்பதி(!) என
அழைத்ததால் அவ்வாறு எழுதுவதை விட்டுவிட்டேன்.

வேலையில் சேர்ந்ததும்,அதுவும் முதன் முதல்
கர்நாடக மாநிலத்தில் தேசிய விதைக் கழகத்தில்
சேர்ந்தபோது, அங்கு என்னோடு பணிபுரிந்த
நண்பர்கள் குறிப்பாக வட மாநில நண்பர்கள்
முழுப் பெயரை சொல்லாமல் எனது பெயரில்
உள்ள பின்பகுதியை மட்டும் எடுத்து சபாபதி
என்றே அழைத்தனர்.

அந்த பெயரே, பின் சிண்டிகேட் வங்கியில் சேர்ந்த
பிறகும் நான் பணி ஓய்வு பெறும் வரை நிலைத்தது.
இன்றைக்கும் எனது வங்கி நண்பர்களுக்கு சபாபதி
ஆகவும், உறவினர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி
நண்பர்களுக்கு நடனமாகவும் இருக்கிறேன்.

இப்படி என்னை அழைத்ததில் எனக்கு
வருத்தமில்லை.காரணம் இது ஒரு நெருக்கத்தை
உண்டாக்கியது என்பதால்.

ஆனால் எனது பெயர் சிலருக்கு வியப்பைத் தந்தது
என்பதை 1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில்
உள்ள கதக் என்ற ஊரில் பணி புரிந்தபோது
தெரிந்துகொண்டேன்.

ஒருநாள், ஒரு விவசாயி, என்னுடைய பெயர் என்ன
என்று கேட்டார்.நான் சபாபதி என்றதும், அவர்
சிரித்துக்கொண்டே,‘எந்த சபைக்கு? லோக் சபைக்கா
அல்லது ராஜ்ய சபைக்கா?’ என்றது எனக்குப்
புரியவில்லை. பின்புதான் தெரிந்தது சபாபதி
என்றால் சபாநாயகர் என்ற பொருளாம்.!

நான் பணி புரிந்துகொண்டு இருந்த சிண்டிகேட்
வங்கியில், 70 களில் இயக்குனராக, சிற்பக்கலை
வல்லுனர் திரு கணபதி ஸ்தபதி அவர்கள் இருந்தார்.
(குமரி முனையில் உள்ள வள்ளுவர் சிலை அவரது
கைவண்ணத்தால் எழுந்ததுதான்)

மற்ற மாநிலங்களில் எல்லோருக்கும் துணைப்பெயர்
(Sur name) உண்டு. அதனால் அவரது பெயரில் உள்ள
பாதியையும் எனதுபெயரில் உள்ள பாதியையும்
துணைப்பெயர் என நினைத்து,எனது பெயரை சரியாக
படிக்காமல் தில்லியில்,‘மிஸ்டர் ஸ்தபதி’ என்று
என்னை அழைத்தவர்கள் அநேகம். இன்னும் சிலபேர்
என்னை,‘நீங்கள் திரு ஸ்தபதி அவர்களுக்கு
உறவினரா?’ என்று கேட்டதும் உண்டு.

புதுதில்லியில் பணிபுரிந்தபோது என்னை
ஒரிஸ்ஸாவைச் (ஒடிஷாவை) சேர்ந்தவன் என
நினைத்து,சத்பதி என அழைத்தவர்கள் தான் அதிகம்.
காரணம் அப்போது ஒடிஷாவைச் சேர்ந்த ஒரு பிரபல
பெண் அரசியல்வாதியின் பெயர் நந்தினி சத்பதி ஆகும்.

நான் கோவையில் எங்கள் வங்கியில் வட்டார
மேலாளராக பணிபுரிந்துகொண்டு இருந்தபோது, அங்கு
வந்த எங்கள் செயல் இயக்குனர் (Executive Director)
‘மிஸ்டர். சத்பதி நீங்கள் ஒரிஸ்ஸாவை சேர்ந்தவரா?’
எனக் கேட்டபோது ‘இல்லை’ எனக்கூறி எனது பெயர்
பற்றி ஒரு சிறிய விளக்கமே தரும்படி ஆகிவிட்டது.
எனது பெயரின் பொருளைக் கூறியதும் அவர்,
‘உங்களுக்கு ஆடத்தெரியுமா?’ என்று கேட்டார்.
(Do you know Dancing?) அதற்கு நான், ‘இல்லை.சார்.
ஆனால் நான் மற்றவர்களை ஆடவைப்பேன்.’
(No. Sir. But I make others to dance.) என்றதும் அதன்
பொருளை உணர்ந்து அவர் சிரித்துவிட்டார்!

எங்களது வங்கித் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது,
என்னை நந்தன் சபாபதி என்றும் நந்தன் என்றும்
சிலர் அழைத்தபோது அவர்களிடம் என் பெயர் பற்றி
ஒரு குட்டி பிரசங்கமே செய்யும்படி ஆகிவிட்டது.

சரி வட இந்தியாவிலும் மற்ற மாநிலங்களிலும் தான்
எனது பெயரை சரியாக உச்சரிக்க(படிக்க)முடியவில்லை
போலும் என நினைத்திருந்த என்னை, அதுவும் தவறு
என்று உணர்த்தியது சமீபத்திய நிகழ்வு.

போனவாரம் ஒரு நாள் எனது வீட்டு அழைப்பு
மணியை யாரோஅடிப்பது அறிந்து, கதவைத்திறந்தேன்.
அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஒரு விரைவு அஞ்சலை
(Speed Post) எடுத்து வந்த ஒரு அஞ்சல் ஊழியர், என்னிடம், ‘நடேச பூபதி இருக்கிறாரா?’என்றார்.முதலில்,
‘இல்லை’ என்றேன். பின் சந்தேகப்பட்டு அந்த அஞ்சலை
வாங்கிப்பார்த்ததில் அது எனக்கு வந்த அஞ்சல்தான்.
என் பெயர் சரியாகத்தான் எழுதப்பட்டு இருந்தது.

நான் கோபத்தோடு கேட்டேன்.’உங்களுக்கு படிக்கத்
தெரியாதா?’ என்று.அவரும்,‘சாரி.நான் சரியாக
பார்க்கவில்லை.’ என்றார்.நான் வெளியே காம்பௌண்ட்
சுவரில் எனது பெயர் தமிழில் உள்ளதே,அதைப்
பார்த்தாவது சரியாக சொல்லியிருக்கலாமே? என்றேன்
அவர் ஒன்றும் சொல்லாமல் அந்த அஞ்சலைக்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இப்போது எனக்கு உள்ள சந்தேகமே உண்மையிலேயே
எனது பெயர் படிக்க அல்லது உச்சரிக்க அத்தனை
கடினமானதா? புதிராகவே உள்ளது!

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்து !

அன்பென்ற உலைநீர் வைத்து,
அறிவென்ற அரிசி யிட்டுப்
பண்பென்ற வெல்லம் சேர்த்துப்
பரிவென்ற நெய்யை வார்த்துத்,
தின்கின்ற பொங்கல் ஆக்கும்
தினம் இந்தத் திருநாள் என்போம்!
இன்பென்ற பயனைக் காண்பீர்!
இன்றுபோல் வாழ்வீர் நன்றே!



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு
மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


(இன்று எனது வீட்டின் முன்பு எனது மனைவியும்
மருமகளும் போட்ட கோலங்களின் புகைப்படம் கீழே )








70 களில் பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது சீத்தாராம்
லாட்ஜில் தங்கியிருந்தேன்.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் லாட்ஜின்
முன் புறம் இருந்த வரவேற்பு அறையில் அமர்ந்து
கொண்டு எனது நண்பர் திரு முத்துராம் அவர்களிடம்,
1972 ஆம் ஆண்டுக்கான பொங்கல் வாழ்த்து அட்டை
அடிக்கவேண்டும்.சென்ற ஆண்டு நானே கவிதை(?)
எழுதி அச்சடித்து அனுப்பிவிட்டேன். இந்த ஆண்டும்
அதே கவிதையை அனுப்ப விருப்பமில்லை.
வேறொரு கவிதை எழுத நேரமில்லை. என்ன செய்ய?’
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த லாட்ஜின் உரிமையாளரின்
மகன் திரு இராமமூர்த்தி ‘எனக்குத் தெரிந்த நண்பர்
ஒருவர் வெளியூர்க்காரர் இங்கே வந்து தங்கியிருக்கிறார்.
அவர் ஒரு தமிழ் புலவர்.அவரிடம் சொல்லி உங்களுக்கு
கவிதை வாங்கித் தரட்டுமா?’என்றார்.

நான் ‘சரி’ என்றதும் அவரிடம் என்னை அறிமுகப்
படுத்தினார்.அவரும் உடனே எனக்கு ஒரு பொங்கல்
வாழ்த்துக் கவிதையை ஊருக்குப்போய் எழுதி
அனுப்புவதாக சொன்னார். ஆனால் அவர் அனுப்பிய
அந்த வாழ்த்து குறித்த நேரத்தில் வரவில்லை.
அதனால் அதை அப்போது உபயோகப்படுத்திக்கொள்ள
முடியவில்லை.

ஆனால் அந்த தமிழ் புலவர் கைப்பட எழுதி
அனுப்பியிருந்த பொங்கல் வாழ்த்தை பத்திரமாக
40 வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தேன்.
இப்போது அந்த முகம் மறந்துபோன தமிழ் புலவருக்கு
நன்றி கூறி, அவர் என்னை உபயோகப்படுத்திக்
கொள்ளக் கொடுத்த அந்த கவிதையை மேலே
தந்திருக்கிறேன்.

புதன், 11 ஜனவரி, 2012

என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

பெயரில் என்ன இருக்கிறது?என சிலர் நினைக்கலாம்.
William Shakespeare ரோமியோ & ஜூலியட்
நாடகத்தில் கூறுவார்.’ரோஜாவை என்ன பெயரிட்டு
அழைத்தாலும், அது அதே நறுமணத்தோடுதான்
மணக்கும்’ என்று.
(What's in a name? That which we call a rose
by any other name would smell as sweet;)


ஆனால் என்னைப் பொறுத்தவரை ரோஜாவை
வேறு பெயரிட்டு எவ்வாறு அழைக்கமுடியாதோ
அல்லது அழைக்கக்கூடாதோ அதுபோல் ஒரு
குறிப்பிட்ட பெயருள்ள ஒருவரையும் தவறான
பெயரில் அழைக்கக்கூடாது என்பதுதான்.ஏனென்றால்
பெயர் என்பது ஒரு அடையாளம். அது ஒரு
அங்கீகாரம்.

ஆனால் நம் நாட்டிலோ பெயரை சரியாக
சொல்லக்கூட சோம்பேறித்தனம் சிலருக்கு.
அதை அலட்சியம் என்று கூட சொல்வேன் நான்.

சிலர் பெயர்களை தப்புத்தப்பாக உச்சரிப்பதை
கேட்கும்போது கோபமும் வேதனையும் எனக்குள்
எழுகிறது என்பது உண்மை.ஆனால் அவர்களை
என்னால் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும்
முடியவில்லையே என்ற ஆதங்கமும் உண்டு.

ஒருநாள் ஒரு பேருந்தில்,அது போகுமிடம்
அம்தொபே என எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
இது எந்த இடம் என மூளையைக்
கசக்கிக்கொண்டதில், நமக்கு மிகவும் தெரிந்த,
ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான,
அம்பத்தூர் தொழிற் பேட்டை என்பதைத்தான்
சோம்பேறித்தனத்தாலோ அல்லது எழுத இடம்
இல்லாததாலோ அம்தொபே என
எழுதியிருக்கிறார்கள் என அறிந்துகொண்டேன்.

இவ்வாறு பெயர்களை சுருக்கி எழுத யார்
இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? யார் என்றால்,
இது பற்றி வாய் திறக்காத நாம் தான் என்பேன் நான்.

இந்த‘பெயர் சுருக்கும்’வியாதி,பேருந்துகளின்
பெயர் பலகைகளில் மட்டுமல்ல,நகர்கள்,
தெருக்களின் பெயர்களிலும் தொற்றிக்கொண்டுள்ளது
என்பதுதான் கவலைப்படவேண்டிய,அல்ல!அல்ல!
வெட்கப்படவேண்டிய விஷயம்.

நம்மிடையே வாழ்ந்த சில பெரியோர்கள் இந்த
சமுதாயத்திற்கு செய்த தொண்டினை போற்றும்
விதமாக,அவர்களுக்கு மரியாதை செலுத்தும்
நிமித்தம் சில தெருக்களுக்கு அவர்களது
பெயர்களை சூட்டுவது நம்முடைய
நல்ல(!)பழக்கம்.

ஆனால் அப்படி சூட்டப்பட்ட பெயரில் அவைகள்
அழைக்கப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே
சொல்வேன் நான்.அவ்வாறு சொல்வதன் காரணம்
ஒரு சாலையின் பெயரைப் பார்த்து
வேதனைப் பட்டதால் தான்.

சென்னையில் K.B.Dasan சாலை என்று ஒன்று
இருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

அண்ணா சாலையில்,நீதியரசர் பஷீர் அகமது
சயீத் அவர்கள் பெயரில் அமைந்திருக்கும்
பெண்கள் கல்லூரியை (பழைய பெயர்
S.I.E.T கல்லூரி) அடுத்து,ஆழ்வார்பேட்டை
செல்லும் சாலை தான் K.B.Dasan சாலை
என அழைக்கப்படுகிறது.ஏன் தெருவில் உள்ள
மாநகராட்சியின் பெயற் பலகையிலேயே
அவ்வாறுதான் எழுதப்பட்டு உள்ளது.

அவ்வளவு ஏன் அந்த பெண்கள் கல்லூரி கூட
அவர்களது வலைத்தளத்தின் முகவரியில்
K.B.Dasan சாலை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

K.B.Dasan என்ற பெயர் புதியதாக இருக்கிறதே.யார்
இவர் என ஆராய்ந்தபோது (?) தான் தெரிந்தது,

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேயர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்


என்ற புகழ்மிக்க(பெற்ற) பாடல்களை எழுதி,
தமிழர்களின் நாடி நரம்புகளை தட்டி எழுப்பி,
வீறு கொள்ள வைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
அவர்களை நினைவு கூறும் முகத்தான்,
கவிஞர் பாரதிதாசன் சாலை என அந்த சாலைக்கு
அரசு பெயரிட்டிருக்கிறது.

ஆனால் நம்மவர்களோ அவரது அந்த பெயரை
சுருக்கி K.B.Dasan சாலை என்றாக்கி விட்டார்கள்.
நல்ல வேளை அதையும் சுருக்கி K.B.D சாலை என
மாற்றாமல் இருக்கிறார்களே என சந்தோஷப்படலாம்!!

இருந்த பெயரையும் சுருக்கிவிட்டதால்,இளைய
தலைமுறையினருக்கும்,எதிர்கால சந்ததியருக்கும்
அவர் யார் என்றே தெரியாமல் போக வாய்ப்பு உண்டு.

இல்லாவிட்டாலும் இன்றைய இயந்திரமயமான
வாழ்க்கையில்,அவர் யார் என இளைய
தலைமுறைக்குத் தெரியுமா என்ன என சிலர்
நினைக்கலாம்.முழுப்பெயர் இருந்தால் ஒரு
சிலராவது யார் இவர் எனத் தெரிந்துகொள்ள
ஆர்வம் காட்டலாம் அல்லவா? ஆனால் தமிழ்
அறிஞர்கள், அரசு இயந்திரம் உட்பட யாரும்
இதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை
என்பது வருந்தக்கூடிய விஷயமே.

இதுபோன்று இன்னொரு இடத்தின் பெயரும்
சுருக்கப்பட்டு இருப்பது அனேகருக்குத் தெரியும் என
நினைக்கிறேன்.கோயம்புத்தூரின் மய்யப்பகுதியான
R.S.புரம்தான் அது. நிறைய பேருக்கு R.S. இன்
விரிவாக்கம் என்ன வென்று தெரியுமா எனத்
தெரியவில்லை.

கோயம்புத்தூரின் நகராட்சியின் தலைவராக
இருந்த திரு இரத்தினசபாபதி என்பவரின்
பெயரால் இரத்தினசபாபதிபுரம் என
பெயரிடப்பட்ட அந்த இடம் தான் இப்போது
ஆர்.எஸ். புரம் ஆகிவிட்டது.

ஆங்கிலேயர்களின் பெயரையே முழுமையாக
உச்சரிப்பதில் பெருமை கொள்ளும் நமக்கு,
ஒரு தமிழனின் முழுப்பெயரை சொல்லக்கூட
நேரமில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

இன்னொரு தகவலையும் இங்கே தரலாம் என
எண்ணுகிறேன்.தற்போதைய அண்ணா பல்கலைக்
கழகத்திற்கு முதலில்,பேரறிஞர் அண்ணா
தொழிநுட்பப் பல்கலைக் கழகம்(Perarignar Anna University
of Technology)
என்றுதான் பெயரிட்டிருந்தார்கள்.
நம்மவர்கள் சோம்பேறித்தனத்தாலோ அல்லது அந்த
பெயர் பிடிக்காததாலோ,வழக்கம்போல்(!)அதை
சுருக்கி PAUT என அழைக்க ஆரம்பித்தனர்.
நல்ல வேளை அரசு விழித்துக்கொண்டு அந்த
பெயரை Anna University என்று
அதிகாரபூர்வமாகவே சுருக்கிவிட்டனர்.

இதுபோல் கலைஞர் கருணாநிதி நகர் என்பதை
கே.கே.நகர் என்றும் ஜெ.ஜெயலலிதா நகர்
என்பதை ஜெ.ஜெ,நகர் என்றும் பெயர்
சுருக்கப்பட்டுள்ளஎத்தனையோ
எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே
போகலாம்.

நாம் வைக்கின்ற பெயர்களால்,நம்மால் அழைக்க
முடியாதென்றால், அல்லது அழைக்க விருப்பம்
இல்லாமல் போகும் எனத்தெரிந்தால், ‘பின் ஏன் அந்த
பெயர்களை வைத்து அந்த பெயர் கொண்டவர்களை
அவமரியாதை செய்யவேண்டும்?’
என்பதே எனது கேள்வி..

திங்கள், 9 ஜனவரி, 2012

படித்தால் மட்டும் போதுமா? 15

25/11/67 காலையில் ஊருக்குத் கிளம்ப
வேண்டியிருந்ததால் இரவே தங்கியிருந்த அறை மற்றும்
உணவுக்கான பணத்தை கொடுத்துவிட்டேன்.காலையில்
7 மணிக்கு இரயில் என்பதால் இரவு சீக்கிரமே படுக்க
சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து குளித்து
தயாரானேன்.இரவே மெஸ் மேலாளரிடம்
சொல்லியிருந்ததால்‘டாக்ஸி’க்கு ஏற்பாடு
செய்து இருந்தார்.

ஆறு வாரமும் என்னோடு தங்கி ,என் கூட
பயிற்சிக்கு வந்து,எல்லா உதவிகளையும் செய்த
நண்பர்கள் திரு தர்மலிங்கம் மற்றும்
திரு இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விடைபெற்று
கிளம்பினேன்.

நான் ஏற இருந்த Frontier Mail இரயில் பழைய
தில்லி இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியதால்
டாக்ஸி ஓட்டுனர் என்னை அங்கு அழைத்து சென்று
விட்டார். அங்கே ஒரு போர்ட்டரிடம், Frontier Mail
என்று சொன்னவுடன் அவர் எனது Hold All
எடுத்துக்கொண்டு என்னை அந்த இரயில்
நின்றுகொண்டு இருந்த பிளாட்பாரத்திற்கு அழைத்து
சென்றார். ஆனால் அங்கே எனக்காக பதிவு
செய்யப்பட்டிருந்த பெட்டியே இல்லை!

என்ன செய்வதென்று தெரியாமல் பெட்டியை தேடி
அலைந்தபோது,அந்த போர்ட்டர் இந்தியில் ஏதோ
கேட்க நான்‘பொறு.பொறு’ ஆங்கிலத்தில் கூறிவிட்டு
பயணச்சீட்டு பரிசோதகரை தேடினேன்.கடைசியில்
அவரை கண்டுபிடித்து எனது சீட்டைக் காண்பித்து.
இருக்கை முன்பதிவு செய்துள்ள பெட்டியே
இல்லையே. என்னவாயிற்று?’ என ஆங்கிலத்தில்
கேட்டபோது,அவர் என்னவோ இந்தியில்சொன்னார்.

நான் ‘எனக்கு இந்தி தெரியாது.தயை செய்து
ஆங்கிலத்தில் சொல்லுங்கள்.’என்றபோதும் அவர்
இந்தியிலேயே பதில் சொன்னார்.அவருக்கு
ஆங்கிலத்தில் பேச வராது போலும்.

அதற்குள் போர்ட்டர் என்னை இந்தியில் நச்சரிக்க
ஆரம்பித்துவிட்டார்.எனது படுக்கையை வைத்துவிட்டு
சீக்கிரம் போனால் தான் அவருக்கு வேறு பயணி
கிடைப்பார்.அதனால்தான்.

நான் அல்லாடுவதை பார்த்த ஒருவர்,என்னிடம் வந்து
‘நீங்கள் மதராசியா?உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்ற
ஒருவித கிண்டலோடு கேட்டார்.அப்போது எனக்கு
இருந்த தவிப்பில் கோபம் வந்தாலும், அடக்கிக்கொண்டு
‘ஆமாம்.எனக்கு உதவமுடியுமா?’ எனக் கேட்டேன்.

முதலில் கிண்டலாக கேட்டாலும் எனது ‘பரிதாப’
நிலையை உணர்ந்து, என்னிடம் விவரங்களைக்
கேட்டுக்கொண்டு, அந்த பரிசோதகரிடம் அது பற்றி
பேசிவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.’இந்த வண்டி
பஞ்சாபிலிருந்து வந்திருக்கிறது. இதனுடன் இந்த
இரயில் நிலையத்தில் இங்கிருந்து கிளம்பும்
பயணிக்களுக்கான வேறு சில பெட்டிகளை
இணைப்பார்கள். நீங்கள் பதிவு செய்துள்ள பெட்டி
அவைகளில் ஒன்று. அந்த பெட்டிகள் இணைப்புக்காக
அடுத்த பிளாட்பாரத்தில் உள்ளன. இன்னும் சிறிது
நேரத்தில் இங்கு அவைகள் இங்கு கொண்டு வரப்பட்டு
இதில் இணைக்கப்படும். எனவே காத்திருங்கள்.’
என சொல்லிவிட்டு,அந்த போர்ட்டரிடமும்
அது பற்றி சொன்னார்.

நான் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே, இணைப்பதற்கான பெட்டிகள்
வந்துவிட்டன. பெட்டிகள் இணைக்கப்பட்டவுடன்,
போர்ட்டர் பெட்டியில் ஏறி எனது உடமைகளை
வைத்ததும் அவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு
இருக்கையில் அமர்ந்தென். எனக்கு பக்கவாட்டில்
உள்ள இருக்கை கிடைத்திருந்தது.

எனக்கு எதிரே ஒரு சர்தார்ஜி உட்கார்ந்திருந்தார்.
நல்ல வேளை. அவர் என்னுடன் ஆங்கிலத்திலேயே
பேசினார். இம்முறை பதிவு செய்து பயணித்ததால்,
காலை,மதியம் மற்றும் இரவு உணவு வகைகள்
‘ஆர்டர்’ செய்து இருந்த இடத்திற்கே
வரவழைத்ததால் ஒரு கஷ்டமும் தெரியவில்லை.

சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு
பொழுதைப் போக்கினேன்.மறுநாள் காலை பம்பாய்
சென்ட்ரல் இரயில் நிலையத்தை அடைந்தபோது,முன்பே
எழுதியிருந்ததால் நண்பர் அரங்கநாதனின் அண்ணன்
என்னை அழைத்துப்போக வந்திருந்தார்.

அவருடன் அவர் வீட்டுக்குப்போய் குளித்து காலை
சிற்றுண்டி சாப்பிட்டதும்,‘ஏதாவது
வாங்கவேண்டுமென்றால் வெளியில் போய் வரலாம்.’
என்றார்.அவருடன் வெளியே சென்றபோது எனக்காக
ஒரு கடையில் ‘பேன்ட்’டுக்காக துணி எடுத்தேன்.
அப்போது அவர் இங்கேயே தைத்துக்கொள்கிறீர்களா?’
என்றார். ‘வேண்டாம்,தைத்தபின் இதை வாங்கி
எனக்கு அனுப்பும் அனாவசிய சிரமத்தை
உங்களுக்கு தர எனக்கு விருப்பமில்லை.’என்றேன்.

அதற்கு அவர் ‘இல்லை. இல்லை.இன்று மாலையே
நீங்கள் ஊருக்கு போகுமுன் தைத்துக்
கொடுத்துவிடுவார்கள்.’என்றார். அப்போது(1967 ல்)
எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.சரி என்றதும்
அங்கேயே இருந்த தையல்கலை நிபுணரிடம்
அளவுகளைக் கொடுத்துவிட்டு, பின் என் அண்ணனுக்காக
தொங்கவிடும் Wardrobe ஒன்றை வாங்கிக்கொண்டு,
Malabar Hill என அழைக்கப்படும் இடத்தையும் பார்த்து
வீடு திரும்பினோம்.

மதிய உணவுக்குப்பின் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு,
மாலை ‘பேன்ட்’ தைக்கக் கொடுத்திருந்த கடைக்கு
சென்று அதை வாங்கிக்கொண்டு வந்தோம்.
(பம்பாயில் ஒரே நாளில் பேன்ட் தைத்துக்
கொடுப்பதை,பல நாட்கள் நண்பர்களிடம் சொல்லி
ஆச்சரியப்பட வைத்ததுண்டு.இப்போது சொன்னால்
அடிக்க வந்துவிடுவார்கள்.காரணம் இது ஒன்றும்
இப்போது நடக்கக்கூடாத அதிசயமல்ல.)

இரவு உணவு அருந்தி நண்பர் அரங்கநாதன் வீட்டாருக்கு
நன்றி சொல்லி கிளம்பியபோது,அவரும் என்னுடன்
V.T இரயில் நிலையம் வந்து, பூனா செல்லும் இரயில்
என்னை ஏற்றிவிட்டு விடை பெற்றார்.

நடு இரவில் பூனா வந்ததும் இறங்கி, திரும்ப தார்வாருக்கு
செல்ல பயண சீட்டு வாங்க வெளியே வந்தபோது,அங்கு
இருந்த ஒரு கேரள நண்பர் பயண சீட்டு வாங்க உதவினார்.

திரும்பவும் பிளாட்பாரம் வந்து,பெங்களூர் செல்ல இருந்த
இரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் உட்கார்ந்து
கொண்டேன். அந்த பேட்டியில் முதலில் ஏறியஆள்
நான்தான், அதன் பிறகு சிலர் ஏறினாலும், தார்வார்
செல்லும் வரை பெட்டியில் கூட்டம் இல்லை.

அந்த இரயில் காலை சுமார் 6 மணிக்கு கிளம்பி
மாலை சுமார் 6 மணிக்குத் தான் தார்வாரை அடைந்தது.
படித்திருந்தும், நம்மால் நம் நாட்டிலே படிப்பறிவில்லா
மனிதர்கள் போல் பிறர் உதவியை நாடவேண்டி
இருக்கிறதே என வண்டியில் அமர்ந்திருந்தபோது
யோசித்தேன். அப்போதே தீர்மானித்தேன். கூடியவரை
வட்டார மொழிகளைப் படிப்பதென்று.(அவ்வாறே
என்னென்ன மொழிகளைக் கற்றேன் என்பதை
பின்னால் எழுதுவேன்.
)

நான் வருவதை முன்பே அறிந்திருந்ததால்,
நண்பர்கள் அரங்கநாதன், சீனிநிவாசன் மற்றும்
சுப்ரமணியம் ஆகியோர் தார்வார் இரயில் நிலையத்தில்
காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சொந்தங்களைப்
பார்த்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை.

அறைக்குத் திரும்பியதும் நண்பர்களிடம் எனது
தார்வார்- தில்லி பயணம் பற்றியும்,நான் தில்லியில்
மொழி தெரியாமல் பட்ட கஷ்டத்தையும்,
நண்பர் இராதாகிருஷ்ணன் நாம் பள்ளியில் இந்தி
படிக்காதது பற்றி கூறிய கருத்தையும் எடுத்து
சொன்னேன்.

அதற்கு நண்பர் அரங்கநாதன் சொன்னார்.‘நடனசபாபாதி,
நீங்கள் சொல்லியிருக்கவேண்டும், நாங்கள் இந்தியை
பள்ளியில் படிக்காவிட்டாலும், யாருக்கும் சோடை
போனவர்கள் அல்ல. தில்லி வரும் எங்கள் மாநில
மக்கள், மூன்று மாதத்திற்குள் பேரம்பேசி பொருட்கள்
வாங்கும் அளவுக்கு, இந்தியை பேசக் கற்றுக்கொண்டு
விடுகிறார்கள்.எனவே இந்தி படித்தால் மட்டும்
போதாது, பேசவும் தெரிந்திருக்கவேண்டும்.இல்லாவிடில்
அதைப் படித்ததில் எந்த பயனும் இல்லை என்று.’
நானும் அதை ஆமோதித்தேன்.

உண்மைதானே! ஒரு மொழியை படித்தால் மட்டும்
போதுமா?

புதன், 4 ஜனவரி, 2012

படித்தால் மட்டும் போதுமா? 14

Andrews Ganj ல் உள்ள எனது மாமா மகன்
திரு வேணுகோபாலன் அவர்கள் வீட்டுக்கு
போனதும்,என்னை வரவேற்று பின்,
‘நீ ஏன் தில்லி வருவது பற்றி எனக்கு
தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் நானே
இரயில் நிலையம் வந்து அழைத்து
வந்திருப்பேனே.’என்றார்.

அதற்கு நான்,‘என்னிடம் உங்கள் முகவரி
இல்லை.திடீரென வரும்படி ஆகிவிட்டதால்
உங்களது முகவரியை ஊருக்கு எழுதிக்கேட்டு
அறிந்து பின் உங்களுக்கு தகவல் தெரிவிக்க
நேரம் இல்லை.’என்றேன்.

பிறகு எனது பணி மற்றும் மற்றும் குடும்ப
விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு
இருந்தோம்.காஃபி சாப்பிடவுடன்,‘வா.வெளியே
போய் அருகில் உள்ள சில இடங்களைப் பார்த்து
வரலாம் என்று சொல்லி, அவரது Vespa Scooter ல்
என்னையும் விஸ்வநாத் என்கிற அவரது மூன்று
வயது மகனையும், அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

(இப்போது பொறியாளராக உள்ள திரு விஸ்வநாத்,இந்திய
கப்பல் படையில், Captain ஆக கோவாவில்
பணிபுரிந்துகொண்டு இருக்கிறார்.)

முதலில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள
Himayun’s Tomb க்கு அழைத்து சென்றார். முகலாயப்
பேரரசர் உமாயூனின்(பேரரசர் பாபரின் மகன்) பூத உடல்
அடக்கம் செய்யப்பட்டஇடம் இது.

உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம்
அவர்களால்,உமாயூன் இறந்து ஒன்பது வருடங்களுக்கு
பிறகு,அதாவது கிபி 1565 ஆம் கட்ட ஆரம்பித்து
கிபி 1572 ல்,அப்போதைய மதிப்பில் ரூபாய் 15
இலட்சத்திற்கு காட்டி முடிக்கப்பட்டதாம்.

இந்தியாவிலேயே முதன் முதல் சிவப்பு மணற்
கற்பாறை (Red Sandstone) கொண்டு பாராசீக கட்டிடக்
கலைப்பாணியில் கட்டப்பட்ட அழகிய கல்லறை
இது. இதன் உள்ளே தற்போது நூறுக்கும் மேற்பட்ட
கல்லறைகள் உள்ளனவாம்.

இந்த கட்டிடத்தின் புறத்தோற்றத்தின் அமைப்பை
மாதிரியாக கொண்டுதான் ஆக்ராவில் தாஜ் மகால்
கட்டினார்களாம்.

தில்லி செல்வோர் அவசியம் பார்க்கவேண்டிய இடம்
இது.இந்த இடம் எவ்வாறு இருக்கிறது என்பதை
பார்த்துதான் இரசிக்கவேண்டும்.பிறர் சொல்லி அல்ல!

தற்போது இது இந்திய அரசின் தொல்பொருள் துறையின்
கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.(புகைப்படம் கீழே)





பின் ராஜ்பாத் என அழைக்கப்படும் இராஜ பாட்டையில்
அமைந்துள்ள,India Gate க்கு அழைத்து சென்றார்.
முதலாம் உலகப்போரில் உயிர் துறந்த 90,000 க்கும்
மேற்பட்ட இராணுவ வீரர்களின் நினைவாக
கட்டப்பட்ட போர் நினைவுச்சின்னம் இது.

இது வழியாகத்தான் இன்றும் ஜனவரி 26 ஆம்
நாள் குடியரசு தினத்தன்று குடியரசுத்தலைவர்
மாளிகையிலிருந்து செங்கோட்டை வரை
அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு நேர்
எதிரே உள்ள விதானத்தில்(Canopy),நான்
சென்றபோது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை
வைக்கப்பட்டிருந்தது.

இப்போது அதை எடுத்து சென்று Coronation Park ல்
வைத்துவிட்டார்கள். இப்போது அது காலியாகத்தான்
இருக்கிறது.அங்கே எங்களை நிற்கவைத்து எனது
மாமா மகன் எடுத்த படங்கள் கீழே.

India Gate அருகே எடுத்த புகைப்படம்






கீழே உள்ள படம் அபூர்வமானது.படத்தில் எங்கள்
பின்னால் உள்ள விதானத்தில் தெரிவதுதான்
ஜார்ஜ் மன்னரின் சிலை.இப்போது அது இல்லை.





பின் அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில்
அவரது மகனுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு
வீடு திரும்பினோம். வீட்டிற்கு வந்ததும் எனது
இரயில் பயணம் பற்றிய அனுபவங்களைப்
சொன்னதும் அவர் முன்பதிவு செய்யாமல்
பயணம் செய்தால் அப்படித்தான்
எனக்கூறிவிட்டு ஊருக்கு திரும்ப தான்
வேண்டுமானால் முன்பதிவு செய்து
தருவதாக கூறினார்.

அவரிடம் எனக்கு பம்பாய்(மும்பை) திரும்ப
25/11/67 அன்று காலை புறப்படும் Frontier Mail ல்
மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு வாங்கித்தரக்
கேட்டுக்கொண்டேன்.பின் மதிய உணவருந்தி,
ஓய்வெடுத்துவிட்டு,மாலை அங்கிருந்து கிளம்பி
கரோல் பாக் வந்து சேர்ந்தேன்.

இரண்டொரு நாளில் எனது மாமா மகன்
அவரது நண்பர் மூலம் பயண சீட்டை வாங்கி
அனுப்பிவிட்டார்.வழக்கம்போல நண்பர்களுடன்
பயிற்சிக்கு போய் வந்தேன்.

நாற்பது நாட்கள் பயிற்சியின் இடையே இருந்த
விடுமுறை நாட்களில் டாக்டர்.அமர் சிங் அவர்கள்
எங்களையெல்லாம் டில்லியில் உள்ள குதூப் மினார்,
ஆக்ரா மற்றும் ‘ஃபதேப்பூர் சிக்ரி’க்கு அழைத்து
சென்றார். பின்பு பயிற்சி நிமித்தம் லூதியானா
சென்றபோது பக்ரா நங்கல் அணையையும் பார்த்து
வந்தோம்.(இது பற்றி பின் எழுதுவேன்)

பயிற்சி முடிந்த கடைசி நாளில் (24/11/1967)
புகைப்படம் எடுத்துக்கொண்டு பயிற்சி
பெற்றதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொண்டு
அறைக்குத் திரும்பினேன்.

தொடரும்