திங்கள், 9 ஜனவரி, 2012

படித்தால் மட்டும் போதுமா? 15

25/11/67 காலையில் ஊருக்குத் கிளம்ப
வேண்டியிருந்ததால் இரவே தங்கியிருந்த அறை மற்றும்
உணவுக்கான பணத்தை கொடுத்துவிட்டேன்.காலையில்
7 மணிக்கு இரயில் என்பதால் இரவு சீக்கிரமே படுக்க
சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து குளித்து
தயாரானேன்.இரவே மெஸ் மேலாளரிடம்
சொல்லியிருந்ததால்‘டாக்ஸி’க்கு ஏற்பாடு
செய்து இருந்தார்.

ஆறு வாரமும் என்னோடு தங்கி ,என் கூட
பயிற்சிக்கு வந்து,எல்லா உதவிகளையும் செய்த
நண்பர்கள் திரு தர்மலிங்கம் மற்றும்
திரு இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விடைபெற்று
கிளம்பினேன்.

நான் ஏற இருந்த Frontier Mail இரயில் பழைய
தில்லி இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியதால்
டாக்ஸி ஓட்டுனர் என்னை அங்கு அழைத்து சென்று
விட்டார். அங்கே ஒரு போர்ட்டரிடம், Frontier Mail
என்று சொன்னவுடன் அவர் எனது Hold All
எடுத்துக்கொண்டு என்னை அந்த இரயில்
நின்றுகொண்டு இருந்த பிளாட்பாரத்திற்கு அழைத்து
சென்றார். ஆனால் அங்கே எனக்காக பதிவு
செய்யப்பட்டிருந்த பெட்டியே இல்லை!

என்ன செய்வதென்று தெரியாமல் பெட்டியை தேடி
அலைந்தபோது,அந்த போர்ட்டர் இந்தியில் ஏதோ
கேட்க நான்‘பொறு.பொறு’ ஆங்கிலத்தில் கூறிவிட்டு
பயணச்சீட்டு பரிசோதகரை தேடினேன்.கடைசியில்
அவரை கண்டுபிடித்து எனது சீட்டைக் காண்பித்து.
இருக்கை முன்பதிவு செய்துள்ள பெட்டியே
இல்லையே. என்னவாயிற்று?’ என ஆங்கிலத்தில்
கேட்டபோது,அவர் என்னவோ இந்தியில்சொன்னார்.

நான் ‘எனக்கு இந்தி தெரியாது.தயை செய்து
ஆங்கிலத்தில் சொல்லுங்கள்.’என்றபோதும் அவர்
இந்தியிலேயே பதில் சொன்னார்.அவருக்கு
ஆங்கிலத்தில் பேச வராது போலும்.

அதற்குள் போர்ட்டர் என்னை இந்தியில் நச்சரிக்க
ஆரம்பித்துவிட்டார்.எனது படுக்கையை வைத்துவிட்டு
சீக்கிரம் போனால் தான் அவருக்கு வேறு பயணி
கிடைப்பார்.அதனால்தான்.

நான் அல்லாடுவதை பார்த்த ஒருவர்,என்னிடம் வந்து
‘நீங்கள் மதராசியா?உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்ற
ஒருவித கிண்டலோடு கேட்டார்.அப்போது எனக்கு
இருந்த தவிப்பில் கோபம் வந்தாலும், அடக்கிக்கொண்டு
‘ஆமாம்.எனக்கு உதவமுடியுமா?’ எனக் கேட்டேன்.

முதலில் கிண்டலாக கேட்டாலும் எனது ‘பரிதாப’
நிலையை உணர்ந்து, என்னிடம் விவரங்களைக்
கேட்டுக்கொண்டு, அந்த பரிசோதகரிடம் அது பற்றி
பேசிவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.’இந்த வண்டி
பஞ்சாபிலிருந்து வந்திருக்கிறது. இதனுடன் இந்த
இரயில் நிலையத்தில் இங்கிருந்து கிளம்பும்
பயணிக்களுக்கான வேறு சில பெட்டிகளை
இணைப்பார்கள். நீங்கள் பதிவு செய்துள்ள பெட்டி
அவைகளில் ஒன்று. அந்த பெட்டிகள் இணைப்புக்காக
அடுத்த பிளாட்பாரத்தில் உள்ளன. இன்னும் சிறிது
நேரத்தில் இங்கு அவைகள் இங்கு கொண்டு வரப்பட்டு
இதில் இணைக்கப்படும். எனவே காத்திருங்கள்.’
என சொல்லிவிட்டு,அந்த போர்ட்டரிடமும்
அது பற்றி சொன்னார்.

நான் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே, இணைப்பதற்கான பெட்டிகள்
வந்துவிட்டன. பெட்டிகள் இணைக்கப்பட்டவுடன்,
போர்ட்டர் பெட்டியில் ஏறி எனது உடமைகளை
வைத்ததும் அவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு
இருக்கையில் அமர்ந்தென். எனக்கு பக்கவாட்டில்
உள்ள இருக்கை கிடைத்திருந்தது.

எனக்கு எதிரே ஒரு சர்தார்ஜி உட்கார்ந்திருந்தார்.
நல்ல வேளை. அவர் என்னுடன் ஆங்கிலத்திலேயே
பேசினார். இம்முறை பதிவு செய்து பயணித்ததால்,
காலை,மதியம் மற்றும் இரவு உணவு வகைகள்
‘ஆர்டர்’ செய்து இருந்த இடத்திற்கே
வரவழைத்ததால் ஒரு கஷ்டமும் தெரியவில்லை.

சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு
பொழுதைப் போக்கினேன்.மறுநாள் காலை பம்பாய்
சென்ட்ரல் இரயில் நிலையத்தை அடைந்தபோது,முன்பே
எழுதியிருந்ததால் நண்பர் அரங்கநாதனின் அண்ணன்
என்னை அழைத்துப்போக வந்திருந்தார்.

அவருடன் அவர் வீட்டுக்குப்போய் குளித்து காலை
சிற்றுண்டி சாப்பிட்டதும்,‘ஏதாவது
வாங்கவேண்டுமென்றால் வெளியில் போய் வரலாம்.’
என்றார்.அவருடன் வெளியே சென்றபோது எனக்காக
ஒரு கடையில் ‘பேன்ட்’டுக்காக துணி எடுத்தேன்.
அப்போது அவர் இங்கேயே தைத்துக்கொள்கிறீர்களா?’
என்றார். ‘வேண்டாம்,தைத்தபின் இதை வாங்கி
எனக்கு அனுப்பும் அனாவசிய சிரமத்தை
உங்களுக்கு தர எனக்கு விருப்பமில்லை.’என்றேன்.

அதற்கு அவர் ‘இல்லை. இல்லை.இன்று மாலையே
நீங்கள் ஊருக்கு போகுமுன் தைத்துக்
கொடுத்துவிடுவார்கள்.’என்றார். அப்போது(1967 ல்)
எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.சரி என்றதும்
அங்கேயே இருந்த தையல்கலை நிபுணரிடம்
அளவுகளைக் கொடுத்துவிட்டு, பின் என் அண்ணனுக்காக
தொங்கவிடும் Wardrobe ஒன்றை வாங்கிக்கொண்டு,
Malabar Hill என அழைக்கப்படும் இடத்தையும் பார்த்து
வீடு திரும்பினோம்.

மதிய உணவுக்குப்பின் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு,
மாலை ‘பேன்ட்’ தைக்கக் கொடுத்திருந்த கடைக்கு
சென்று அதை வாங்கிக்கொண்டு வந்தோம்.
(பம்பாயில் ஒரே நாளில் பேன்ட் தைத்துக்
கொடுப்பதை,பல நாட்கள் நண்பர்களிடம் சொல்லி
ஆச்சரியப்பட வைத்ததுண்டு.இப்போது சொன்னால்
அடிக்க வந்துவிடுவார்கள்.காரணம் இது ஒன்றும்
இப்போது நடக்கக்கூடாத அதிசயமல்ல.)

இரவு உணவு அருந்தி நண்பர் அரங்கநாதன் வீட்டாருக்கு
நன்றி சொல்லி கிளம்பியபோது,அவரும் என்னுடன்
V.T இரயில் நிலையம் வந்து, பூனா செல்லும் இரயில்
என்னை ஏற்றிவிட்டு விடை பெற்றார்.

நடு இரவில் பூனா வந்ததும் இறங்கி, திரும்ப தார்வாருக்கு
செல்ல பயண சீட்டு வாங்க வெளியே வந்தபோது,அங்கு
இருந்த ஒரு கேரள நண்பர் பயண சீட்டு வாங்க உதவினார்.

திரும்பவும் பிளாட்பாரம் வந்து,பெங்களூர் செல்ல இருந்த
இரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் உட்கார்ந்து
கொண்டேன். அந்த பேட்டியில் முதலில் ஏறியஆள்
நான்தான், அதன் பிறகு சிலர் ஏறினாலும், தார்வார்
செல்லும் வரை பெட்டியில் கூட்டம் இல்லை.

அந்த இரயில் காலை சுமார் 6 மணிக்கு கிளம்பி
மாலை சுமார் 6 மணிக்குத் தான் தார்வாரை அடைந்தது.
படித்திருந்தும், நம்மால் நம் நாட்டிலே படிப்பறிவில்லா
மனிதர்கள் போல் பிறர் உதவியை நாடவேண்டி
இருக்கிறதே என வண்டியில் அமர்ந்திருந்தபோது
யோசித்தேன். அப்போதே தீர்மானித்தேன். கூடியவரை
வட்டார மொழிகளைப் படிப்பதென்று.(அவ்வாறே
என்னென்ன மொழிகளைக் கற்றேன் என்பதை
பின்னால் எழுதுவேன்.
)

நான் வருவதை முன்பே அறிந்திருந்ததால்,
நண்பர்கள் அரங்கநாதன், சீனிநிவாசன் மற்றும்
சுப்ரமணியம் ஆகியோர் தார்வார் இரயில் நிலையத்தில்
காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சொந்தங்களைப்
பார்த்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மை.

அறைக்குத் திரும்பியதும் நண்பர்களிடம் எனது
தார்வார்- தில்லி பயணம் பற்றியும்,நான் தில்லியில்
மொழி தெரியாமல் பட்ட கஷ்டத்தையும்,
நண்பர் இராதாகிருஷ்ணன் நாம் பள்ளியில் இந்தி
படிக்காதது பற்றி கூறிய கருத்தையும் எடுத்து
சொன்னேன்.

அதற்கு நண்பர் அரங்கநாதன் சொன்னார்.‘நடனசபாபாதி,
நீங்கள் சொல்லியிருக்கவேண்டும், நாங்கள் இந்தியை
பள்ளியில் படிக்காவிட்டாலும், யாருக்கும் சோடை
போனவர்கள் அல்ல. தில்லி வரும் எங்கள் மாநில
மக்கள், மூன்று மாதத்திற்குள் பேரம்பேசி பொருட்கள்
வாங்கும் அளவுக்கு, இந்தியை பேசக் கற்றுக்கொண்டு
விடுகிறார்கள்.எனவே இந்தி படித்தால் மட்டும்
போதாது, பேசவும் தெரிந்திருக்கவேண்டும்.இல்லாவிடில்
அதைப் படித்ததில் எந்த பயனும் இல்லை என்று.’
நானும் அதை ஆமோதித்தேன்.

உண்மைதானே! ஒரு மொழியை படித்தால் மட்டும்
போதுமா?

14 கருத்துகள்:

  1. எந்த மொழியிலுமே படிப்பாகப் படிப்பதற்கும் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டுதான். நான் இந்தி கற்றுக் கொண்டு பேசியபோது அது கிராமாடிக்கலாக (இந்த வார்த்தைக்கு தமிழ் தெரியல) இருக்கிறதென்று ஒரு இந்திக்கார நண்பர் சொன்னார். நம்ம ஊருக்கு வந்து தமிழ் க்த்துக்கிட்டா அவங்க சென்னை, மதுரை, நெல்லை, கோவைத் தமிழ்ப் பேச்சுக்கு குழம்பிப் போயிடுவாங்கதானே... சுவாரசியம் குன்றாமல் சொல்லிச் செல்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி எனக்கு.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! ‘கிராமாடிக்கலாக ‘என்பதற்கு ‘இலக்கண சுத்தமாக’ என சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  3. I wonder, how could you recall all the minute details; by nature we easily remember bitter experiences in order to not to encounter it again. But, looks like you remember all the experiences. Hats off to your memory.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே! வங்கியில் 34 ஆண்டுகள் பணி செய்ததால், ஒருவேளை நினைவாற்றல் அதிகரித்திருக்கலாம் என எண்ணுகிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நினைக்கும்போது, அதனோடு தொடர்புடைய எல்லா நிகழ்ச்சிகளும் எனக்கு உடனே மனக்கண் முன் வந்துவிடுகிறது. அவ்வளவுதான். மறுபடியும் உங்கள் பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. படித்தல் மட்டும் போதாது..பயிற்சி இல்லாமல் படித்தது வாழாது உண்மைதான்.ஆனால் மொழியைப் பொறுத்தவரை படிக்காமல் பயிற்சி இருந்தால் பேசிவிட முடிகிறது..
    1967 ல் உங்களோடு நானும் சேர்ந்து பயணித்ததைப் போலிருந்தது..

    நேரமிருப்பின் வாருங்கள்..

    கொக்கரக்கோ

    பதிலளிநீக்கு
  6. Nice to note that Return trip was comfortable barring some minor glitches. Once Mr.Morarji Desai said in the parliament that Tamilians master spoken Hindi within 3 months of landing in New Delhi and as such why should they oppose the language. This was uttered in the context of anti Hindi sentiments that ran deep in the south then. If I remember right Mr.Annadurai replied stating that south is not against Hindi per se ; but only opposed its imposition. The point is your friends were absolutely correct in stating that mere reading would not help but experience in spoken language is a must. South has seen through the games of wily politicians and south indians can now boast of having mastered many languages including foreign languages. Vasu

    பதிலளிநீக்கு
  7. கருத்துக்கு நன்றி திரு மதுமதி அவர்களே! அவசியம் உங்கள் பதிவுக்கு வருகை தருவேன்.

    பதிலளிநீக்கு
  8. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொன்னத்து நூற்றுக்கு நூறு உண்மை.அண்ணா இன்னொன்றும் சொன்னதாக சொல்வார்கள்.முதன் முதல், முதல் அமைச்சர் ஆனவுடன் தில்லிக்கு சென்றபோது பத்திரிக்கையாளர்கள் சிலர், மிஸ்டர் அண்ணாதுரை, தென்னாட்டவர்கள் தில்லி வந்தவுடன் வெகு சுலபமாக இந்தியை கற்றுக்கொண்டு மூன்று மாதங்களில் பேசிவிடுகிறார்களே? நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, அவர் சொன்னாராம், ‘வேடிக்கையாய் சொல்கிறேன். மூன்று மாதங்களுக்குமேல் கற்பதற்கு அதில் என்ன இருக்கிறது!’.என்று.

    பதிலளிநீக்கு
  9. //ஒரு மொழியை படித்தால் மட்டும்
    போதுமா? //
    தலைப்பை நியாயப்படுத்தியாகி விட்டது!
    உன்மை!மொழி படிப்பது என்பது வேறு;சரளமாகப் பேசுவது என்பது வேறுதான்.
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே !

    பதிலளிநீக்கு
  11. ''...அப்போதே தீர்மானித்தேன். கூடியவரை
    வட்டார மொழிகளைப் படிப்பதென்று.(அவ்வாறே ..''அப்பப்பா... எவ்வளவு கஷ்டம்...சுவையாக இருந்தது. வாழ்த்துகள்..தொடருங்கள்...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது என்பது போல, நாம் என்னதான் படித்து இருந்தாலும், வெளியூரில் மொழிதெரியாத இடத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள், மற்றவர்களுக்கு ஒரு பாடம்.

    (அய்யா, சென்ற வாரமே இந்த தொடரை படித்து முடித்து விட்டேன். மழை, BSNL BROADBAND இல் இண்டர்நெட் இணைப்பு பிரச்சினை என்று சரியாக வலைப்பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும். இப்போது கூட எனது மகனின் டாடா வயர்லெஸ் இணைப்பு மூலம்தான் இதனை எழுத முடிந்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே!
      4 நாட்களாக இணைய இணைப்பு இல்லாததால் தங்களது பின்னூட்டத்திற்கு உடனே பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க!

      நீக்கு