செவ்வாய், 31 ஜனவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 2

நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தபோது முதலில்
பொறியாளர் திரு சுப்ரமணியன் வந்தார்.அவரிடம்
எனது புதிய பணிக்கான ஆணை கிடைத்து இருப்பது
பற்றி சொன்னபோது,அவர் அந்த பணி ஆணையை
படித்துவிட்டு,‘இந்த சம்பளத்திற்கு மாநிலம் விட்டு
மாநிலம், அதுவும் வெகு தூரத்திற்கு போய் பணி
செய்யவேண்டுமா? யோசித்து முடிவெடுங்கள்.’
என்றார்.

அவர் கேட்டதில் நியாயம் இருந்தது.அப்போது
(1966 டிசம்பர்) எனது மாத சம்பளம்

அடிப்படை சம்பளம் (BP) ரூ.200.00
அகவிலைப்படி (DA) ரூ. 73.00
தொகுப்பு பயணப்படி (FTA) ரூ. 30.00
ஆக மொத்தம் ரூ.303.00

புதிய பணிக்கான ஆணையில் குறிப்பிட்டு இருந்த
மாத சம்பளம்
அடிப்படை சம்பளம் ரூ.210.00
அகவிலைப்படி ரூ.110.00
வீட்டு வாடகைப் படி ரூ. 13.75
ஆக மொத்தம் ரூ. 333.75


வெறும் 30ரூபாய் 75 காசுகள் அதிகம் என்பதால்,
ஊருக்கு அருகே உள்ள வேலையை விட்டுவிட்டு
அடுத்த மாநிலத்திற்கு அதுவும் மொழி தெரியாமல்
செல்லவேண்டுமா என அவர் கேட்டது சரி
என்றாலும், நான் போக முடிவெடுத்ததற்கு
காரணங்கள் இருந்தன.

அப்போது அரசு,வேளாண் பட்டப்படிப்பு
படித்துவிட்டு வருபவர்களை சரியாக
உபயோகப்படுத்திக் கொள்ளாமல்,சம்பந்தமில்லாத
மற்ற பணிகள் செய்ய சொன்னதும்,அரசுத்
துறையில் இருந்த மேல் அதிகாரிகள் சர்வாதிகாரிகள்
போல் செயல் பட்டதும்,பணியில் மன நிறைவு
இல்லாததும்(Job Satisfaction) மற்றும் இன்னபிற
காரணங்களும் தான்.

(அது பற்றி பின் விரிவாக எழுதுவேன்)

நான் ‘இந்த பணியில் எனக்கு மன நிறைவில்லாத
காரணத்தால்,இந்த பணியை விட்டு அங்கு செல்ல
இருக்கிறேன்.வேறு எதற்காகவும் அல்ல.’ என
சொன்னதும் அவர்,’பின் உங்கள்விருப்பம்போல்
செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து நண்பர் திரு வீராசாமி வந்ததும்
எனது புதிய பணியின் ஆணை பற்றி சொன்னதும்
அவர் அதை வாங்கி படித்துவிட்டு,‘மிக்க மகிழ்ச்சி.
இதை விட்டு போவது நல்லதுதான்.எனவே உங்கள்
விருப்படியே செய்யுங்கள். ஆனால் பணியை விட்டு
விலக,விலகல் கடிதம்(Resignation Letter) கொடுத்தால்
உடனே ஏற்று உங்களை விடுவிப்பார்களா? அதை
பற்றி யோசிப்போம்.; என்றார்.

(இந்த சமயத்தில் நண்பர் திரு வீராசாமியைப்பற்றி
குறிப்பிடவேண்டும். அவர் கல்லூரியில் இருக்கும்போதே
IAS ஆக வேண்டும் என விரும்பியவர்.அதனால் படிப்பை
முடித்தவுடன் பணி புரிந்துகொண்டே, அந்த தேர்வுக்கு
தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். ஆனால்
அப்போது IAS தேர்வுகளை எழுத வேளாண் பட்டதாரிகள்
எழுத அனுமதி இல்லாததால், மாநில அரசின் Group I
தேர்வு எழுதி வெற்றிபெற்றாலும் நேர்முகத்தேர்வில்
தேர்வு செய்யப்படாததால், வேளாண் அறிவியலில்
முதுகலைப் பட்டம் (M.Sc(Agri)) பெற்று பின்
முனைவர் (Ph.D) பட்டமும் பெற்று இந்தியா வேளாண்
ஆராய்ச்சி கழகத்தில் (Indian Agricultural Research Institute) முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து,
பணி ஓய்வு பெற்று தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்)

நான் சொன்னேன்.‘என்ன, நான் நிரந்தரப் பணியிலா
இருக்கிறேன்? இது 10 A(1) கீழ் தரப்பட்ட தற்காலிகப்
பணிதானே.எனவே நாளையே விலகல் கடிதம் கொடுத்த
நான் செல்ல விரும்புகிறேன்.’ என்றேன்.

நண்பர் திரு வீராசாமியும், ‘சரி. அப்படியானால்
நாளை காலை முதல் வேலையாக ஊராட்சி ஒன்றிய
ஆணையரை (Commissioner, Panchayat Union) சந்தித்து
பேசிவிட்டு பின் அலுவலகத்தில் கடிதத்தைத் தரலாம்.’
என்றார்.

(அரசுத் துறைகளில் நிரந்தரப் பணிக்காக ஊழியர்களை
அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கு முன்
காலியாக உள்ள இடங்களில் தற்காலிகமாக அந்தந்த
துறைத் தலைவரே தற்காலிக அடிப்படையில்
அலுவலர்களை 10 A(1) என்ற பிரிவின் கீழ் நியமிக்கலாம்.

ஆனால் அவர்கள் நிரந்தர ஊழியராக வேண்டுமென்றால்,
அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள
பணியிடங்களுக்காக தேர்வு செய்ய நடத்தப்படும்
நேர்முகத்தேர்வு பற்றி அறிவிப்பு தந்தவுடன்,
விண்ணப்பித்து,நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு
வெற்றி பெற்றால் மட்டுமே நிரந்தர ஊழியர் ஆகலாம்.)

அந்த 10 A(1) என்ற பிரிவின் கீழ் தான் எனக்கு
வேளாண் துறை பணி நியமன ஆணை கொடுத்தது.
வேளாண்மை பட்டதாரிகள் பலருக்கு அதே துறையில்
பணி கொடுத்தாலும்,ஒரு சிலரை ஊராட்சி ஒன்றியத்தில்
வேளாண் விரிவாக்க அலுவலராக பணி புரிய
அனுப்புவதும் உண்டு. அவ்வாறு தலைஞாயிறு
ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்.

என்னைப் போன்றோருக்கு மாவட்ட வேளாண்மை
அலுவலர் மேல் அதிகாரி ஆனாலும்,ஊராட்சி ஒன்றிய
ஆணையர்தான் நிர்வாகத் தலைவர் (Administrative Head). எனவே அவரிடமே எனது பணி விலகல்
கடிதத்தைக் கொடுக்க முடிவு செய்து, அவர் அதை
வாங்கிக்கொண்டு என்னை விடுவிப்பார் என்ற
நம்பிக்கையில் நிம்மதியோடு உறங்கச் சென்றேன்.

ஆனால் நான் நினைத்ததுபோல் அது நடக்கவில்லை!

தொடரும்

10 கருத்துகள்:

 1. மீண்டும் சஸ்பென்ஸ்!பழைய ஊதியச் சீட்டெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்களோ?!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பழைய ஊதியச்சீட்டுகள் இல்லை. ஆனால் அதை எழுதி வைத்திருந்த 'நோட் புக்’ இருக்கிறது. சஸ்பென்ஸ் தொடரும்.அது இருந்தால்தானே சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 3. சென்னைப் பித்தன் ஐயா சொன்னது போல இந்த முறையும் எதிர்பார்ப்பில்..
  அனுபவங்களை சொல்லும்போது படிப்பவர்களுக்கு சுவையாக இருக்க வேண்டும்..சுவை இருக்கிறது..
  தொடர்ந்து சொல்லுங்கள்.கேட்க வருகிறேன்..

  பதிலளிநீக்கு
 4. கரெக்ட்! மனதுக்குப் பிடிக்காமல் எந்த வேலையையும் பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொன்னது ரொம்ப கரெக்ட்! புதிய வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, பழைய வேலையிலிருந்து வெளியேறுவது கடினமாகியதா..? எப்போது தொடரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு மதுமதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. தடங்கல்களும் அதனை வெற்றிகரமாக வீழ்த்துவதிலும் தான் சுவாரஸ்யமே ... அடுத்தது என்ன ? வாசு

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  இரண்டு நாட்களாக எனது அகண்ட அலைவரிசை இணைப்பு வேலை செய்யாததால் உடன் பதிவு போட முடியவில்லை.

  நாளை அல்லது மறுநாள் அடுத்த பதிவை எதிர்பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா..நான் இன்று இட்டுள்ள பதிவில் தங்களை குறிப்பிட்டு உள்ளேன்.அவசியம் காண வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 10. ‘லீப்ஸ்டர்’ என்ற விருதை எனது வலைப்பதிவுக்கு கொடுத்து என்னை கௌரவித்தமைக்காக வணக்கமும் நன்றியும் திரு மதுமதி அவர்களே! முக்கிய பணி காரணமாக வலைப்பக்கம் மூன்று நாட்களாக வர இயலவில்லை. 8 ஆம் தேதிக்குப்பின் எனது பதிவு இருக்கும், நான் தரும் ‘லீப்ஸ்டர்’ விருதுகளுடன்!

  பதிலளிநீக்கு