வியாழன், 19 ஜனவரி, 2012

என் பெயர் பட்ட பாடு!

எனது தந்தை ஒரு தீவிர சிவ பக்தர் என்பதால்,
எங்கள் வீட்டில் அனைவருக்கும் சிவன்
சம்மந்தப்பட்ட பெயராகவே வைத்திருந்தார்.

அப்படி அவர் எனக்கு இட்ட பெயர் தில்லையில்
உள்ள நடராசப்பெருமானின் இன்னொரு பெயரான
நடனசபாபதி என்பதாகும்.அவர் எனக்கு இந்த
பெயரை சூட்டியபோது நினைத்துக்கூட
பார்த்திருக்கமாட்டார்,என் பெயர் பிற்காலத்தில்
சில பேர் வாயில் புகுந்து என்ன பாடுபடப்
போகின்றது என்று.

என் பெயர் அத்தனை கடினமானதா என்று நானே
சில சமயம் யோசித்ததுண்டு.காரணம் என்
பெயரை சரியாக உச்சரித்தவர்களை விட தவறாக
உச்சரித்தவர்கள் தான் அதிகம் என்பதால்!

நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை
எனது பெயர் சரியாகவே உச்சரிக்கப்பட்டது.
அதுவரை நான் எனது பெயரை ஆங்கிலத்தில்
Natanasabapathy என்றே எழுதிவந்தேன்.ஒன்பதாம்
வகுப்பு வந்தபோது SSLC புத்தகத்தில் விருத்தாசலம்
பள்ளியில், எனது ஆசிரியர் ஆங்கிலத்தில் என்
பெயரை எழுதும்போது மூன்றாவது எழுத்தான
‘t’‘d’ ஆக மாற்றி Nadanasabapathy என
எழுதிவிட்டார்.அதனால்தான் சிக்கலே வந்தது.

கல்லூரி முடிக்கும் வரை எனது முழுப்பெயரைச்
சொல்லி யாரும் கூப்பிட்டதில்லை,வருகைப்
பதிவை எடுக்கும் ஆசிரியர்களைத்தவிர!

வீட்டிலும், பள்ளி மற்றும் கல்லூரியிலும்
எல்லோரும் என்னை நடனம் என்றே சுருக்கி
அழைத்தனர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது,
பெயர் நீளமாக இருக்கிறதென்று எனது புத்தகங்களில்
V.N.S.Pathy என சுருக்கமாக எழுத ஆரம்பித்தேன்.
நண்பர்கள் சில விளையாட்டாக வனஸ்பதி(!) என
அழைத்ததால் அவ்வாறு எழுதுவதை விட்டுவிட்டேன்.

வேலையில் சேர்ந்ததும்,அதுவும் முதன் முதல்
கர்நாடக மாநிலத்தில் தேசிய விதைக் கழகத்தில்
சேர்ந்தபோது, அங்கு என்னோடு பணிபுரிந்த
நண்பர்கள் குறிப்பாக வட மாநில நண்பர்கள்
முழுப் பெயரை சொல்லாமல் எனது பெயரில்
உள்ள பின்பகுதியை மட்டும் எடுத்து சபாபதி
என்றே அழைத்தனர்.

அந்த பெயரே, பின் சிண்டிகேட் வங்கியில் சேர்ந்த
பிறகும் நான் பணி ஓய்வு பெறும் வரை நிலைத்தது.
இன்றைக்கும் எனது வங்கி நண்பர்களுக்கு சபாபதி
ஆகவும், உறவினர்கள் மற்றும் பள்ளி,கல்லூரி
நண்பர்களுக்கு நடனமாகவும் இருக்கிறேன்.

இப்படி என்னை அழைத்ததில் எனக்கு
வருத்தமில்லை.காரணம் இது ஒரு நெருக்கத்தை
உண்டாக்கியது என்பதால்.

ஆனால் எனது பெயர் சிலருக்கு வியப்பைத் தந்தது
என்பதை 1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில்
உள்ள கதக் என்ற ஊரில் பணி புரிந்தபோது
தெரிந்துகொண்டேன்.

ஒருநாள், ஒரு விவசாயி, என்னுடைய பெயர் என்ன
என்று கேட்டார்.நான் சபாபதி என்றதும், அவர்
சிரித்துக்கொண்டே,‘எந்த சபைக்கு? லோக் சபைக்கா
அல்லது ராஜ்ய சபைக்கா?’ என்றது எனக்குப்
புரியவில்லை. பின்புதான் தெரிந்தது சபாபதி
என்றால் சபாநாயகர் என்ற பொருளாம்.!

நான் பணி புரிந்துகொண்டு இருந்த சிண்டிகேட்
வங்கியில், 70 களில் இயக்குனராக, சிற்பக்கலை
வல்லுனர் திரு கணபதி ஸ்தபதி அவர்கள் இருந்தார்.
(குமரி முனையில் உள்ள வள்ளுவர் சிலை அவரது
கைவண்ணத்தால் எழுந்ததுதான்)

மற்ற மாநிலங்களில் எல்லோருக்கும் துணைப்பெயர்
(Sur name) உண்டு. அதனால் அவரது பெயரில் உள்ள
பாதியையும் எனதுபெயரில் உள்ள பாதியையும்
துணைப்பெயர் என நினைத்து,எனது பெயரை சரியாக
படிக்காமல் தில்லியில்,‘மிஸ்டர் ஸ்தபதி’ என்று
என்னை அழைத்தவர்கள் அநேகம். இன்னும் சிலபேர்
என்னை,‘நீங்கள் திரு ஸ்தபதி அவர்களுக்கு
உறவினரா?’ என்று கேட்டதும் உண்டு.

புதுதில்லியில் பணிபுரிந்தபோது என்னை
ஒரிஸ்ஸாவைச் (ஒடிஷாவை) சேர்ந்தவன் என
நினைத்து,சத்பதி என அழைத்தவர்கள் தான் அதிகம்.
காரணம் அப்போது ஒடிஷாவைச் சேர்ந்த ஒரு பிரபல
பெண் அரசியல்வாதியின் பெயர் நந்தினி சத்பதி ஆகும்.

நான் கோவையில் எங்கள் வங்கியில் வட்டார
மேலாளராக பணிபுரிந்துகொண்டு இருந்தபோது, அங்கு
வந்த எங்கள் செயல் இயக்குனர் (Executive Director)
‘மிஸ்டர். சத்பதி நீங்கள் ஒரிஸ்ஸாவை சேர்ந்தவரா?’
எனக் கேட்டபோது ‘இல்லை’ எனக்கூறி எனது பெயர்
பற்றி ஒரு சிறிய விளக்கமே தரும்படி ஆகிவிட்டது.
எனது பெயரின் பொருளைக் கூறியதும் அவர்,
‘உங்களுக்கு ஆடத்தெரியுமா?’ என்று கேட்டார்.
(Do you know Dancing?) அதற்கு நான், ‘இல்லை.சார்.
ஆனால் நான் மற்றவர்களை ஆடவைப்பேன்.’
(No. Sir. But I make others to dance.) என்றதும் அதன்
பொருளை உணர்ந்து அவர் சிரித்துவிட்டார்!

எங்களது வங்கித் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது,
என்னை நந்தன் சபாபதி என்றும் நந்தன் என்றும்
சிலர் அழைத்தபோது அவர்களிடம் என் பெயர் பற்றி
ஒரு குட்டி பிரசங்கமே செய்யும்படி ஆகிவிட்டது.

சரி வட இந்தியாவிலும் மற்ற மாநிலங்களிலும் தான்
எனது பெயரை சரியாக உச்சரிக்க(படிக்க)முடியவில்லை
போலும் என நினைத்திருந்த என்னை, அதுவும் தவறு
என்று உணர்த்தியது சமீபத்திய நிகழ்வு.

போனவாரம் ஒரு நாள் எனது வீட்டு அழைப்பு
மணியை யாரோஅடிப்பது அறிந்து, கதவைத்திறந்தேன்.
அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஒரு விரைவு அஞ்சலை
(Speed Post) எடுத்து வந்த ஒரு அஞ்சல் ஊழியர், என்னிடம், ‘நடேச பூபதி இருக்கிறாரா?’என்றார்.முதலில்,
‘இல்லை’ என்றேன். பின் சந்தேகப்பட்டு அந்த அஞ்சலை
வாங்கிப்பார்த்ததில் அது எனக்கு வந்த அஞ்சல்தான்.
என் பெயர் சரியாகத்தான் எழுதப்பட்டு இருந்தது.

நான் கோபத்தோடு கேட்டேன்.’உங்களுக்கு படிக்கத்
தெரியாதா?’ என்று.அவரும்,‘சாரி.நான் சரியாக
பார்க்கவில்லை.’ என்றார்.நான் வெளியே காம்பௌண்ட்
சுவரில் எனது பெயர் தமிழில் உள்ளதே,அதைப்
பார்த்தாவது சரியாக சொல்லியிருக்கலாமே? என்றேன்
அவர் ஒன்றும் சொல்லாமல் அந்த அஞ்சலைக்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இப்போது எனக்கு உள்ள சந்தேகமே உண்மையிலேயே
எனது பெயர் படிக்க அல்லது உச்சரிக்க அத்தனை
கடினமானதா? புதிராகவே உள்ளது!

21 கருத்துகள்:

 1. உங்கள் பெயர் ஒன்றும் உச்சரிக்கக் கஷ்டமானதல்ல. அம்பலக்கூத்தனின் பெயராயிற்றே? வடமாநிலத்தவர் வேண்டுமானால் கொலை செய்து உச்சரிக்கலாம். தபால்காரர் கூடவா? சபாபதியை ஸ்தபதி என்று அழைத்தது நல்ல தமாஷ்.

  பதிலளிநீக்கு
 2. பெயர் பற்றி சொல்லும் போது வேறொன்றும் படித்த நினைவு. புதுச்சேரியில் பணியில் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அவுட் பேஷண்ட் ரிஜிஸ்டரில் DESIGN என்று ஒரு பேஷண்ட் பெயரைப் பார்த்திருக்கிறார். பிரெஞ்சுக்காரர் போலும் என்று எண்ணியிருந்த அவருக்கு மாலையில் வந்த அந்த பேஷண்ட்டைப் பார்த்ததும் ஆச்சரியம். நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு வந்த வைஷ்ணவரைக் கண்டால் வியப்பு எழாதா என்ன? அவரிடம் ‘‘உங்கள் பெயர் டிசைன் என்று போட்டிருக்கிறதே ஏன் இப்படி வினோதமான பெயர்’’ என்று கேட்க, அவர் தலையிலடித்துக் கொண்டு சொன்னாராம். ‘‘நாசமாப் போச்சு. என் பேர் DESIGAN இந்த டைப்பிஸ்ட் ஒரு எழுத்தை விட்டுட்டு என் பேரைக் கொலை பண்ணிருக்கார்’’ என்று. ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! என் பெயர் மட்டுமல்ல அனேகருடைய பெயரும் சிதைக்கப்படுகிறது என்பதை நீங்கள்
  தந்த புதுவை நிகழ்வு மூலம் அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. மற்ற மாநிலத்தார் தவறாக அழைத்தாலும் பரவாயில்லை.தமிழ் நாட்டிலேயே சிக்கலா!
  desigan,design ஆன கதையும் சூப்பர்.
  நல்ல நகைச்சுவை!

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பெயர் பட்ட பாட்டினை விவரித்த விதம் மிகவும் ஹாஸ்யமாக இருந்தது .. ராமன் எத்தனை ராமனடி என்பது போல் .... வாசு

  பதிலளிநீக்கு
 7. மற்ற மாநிலத்தவர்களுக்கு தமிழின் சிறப்பு ்தெரிய வாய்ப்பில்லை. அழைத்துவிட்டு போகட்டும்...ஆனால் நடனசபாபதி தமிழ்நாட்டில் தமிழரால் நடேச பூபதி ஆனதைத்தான் தாங்கமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. பதிவை இரசித்ததற்கு நன்றி திரு வாசு அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கடம்பவன குயில் அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. உங்கள் பெயா அத்தனை கடினம் இல்லையே. மிக எளிமையான பெயர் என்பது என் கருத்தது. எனது பெயர் என்ன தெரியுமா? வேதநாயகாம்பாள். இப்போது செல்லுங்கள் எது கஷ்டமான பெயர்? ஆனால் சுவையான இடுகை வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  உங்கள் பெயர் உச்சரிக்க சுலபமானதுதான்.எனது பெயரும் சுலபமானதுதான்.ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்போது,ஆங்கில எழுத்து a ஆறுமுறை வந்திருப்பது, விரைவாய் படிப்போருக்கு குழப்பம் ஏற்படுத்துகிறது போலும்.

  பதிலளிநீக்கு
 12. இதானால் தான் தாங்கள் பெயர் பெற்றவர் ஆகி விட்டீர்கள் என எண்ணுகிறேன்.ஒரு தேசியப் பெயராய்,பலராலும் கருதப் பட்டது மகிழ்ச்சியே.நல்ல பகிர்வு.மிக ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு காளிதாஸ் முருகைய்யா அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. வெளி நாடுகளில் இன்னும் பாடு பட்டிருக்கும் உங்கள் பெயர். என்னுடன் பணிபுரிந்த ஒரு இந்திய பெண்மணியின் பெயர் ஸ்ம்ருதி. அவர் மேலதிகாரி கிரீஸ் நாட்டை சேர்ந்தவர். எவ்வளவோ முயற்சித்தும் அவரால் அந்த பெண்மணியின் பெயரை சரியாக உச்சரிக்கவே முடியவில்லை. அவர் எப்போதும் அந்த பெண்ணின் பெயரை சிமெட்ரி (symmetry) என்றே அழைத்து வந்தார்!

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Bandhu அவர்களே! என் பெயரை கொலை செய்வார்கள் என்பதால்தான் வெளி நாட்டில் பணி புரியும் வாய்ப்பு எனக்கு இல்லை போலும்!!

  பதிலளிநீக்கு
 16. தமிழ் பெயர்களை உச்சரிப்பதில் பழக்கமில்லாதவர்களுக்கு குழப்பமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழர்களே தடுமாறினால் என்ன சொல்ல.

  அமெரிக்காவில் பெரும்பாலும் முதல் பெயரை, சொல்ல எளிதானாலும் கூட ஓரசை சொல்லாக சுறுக்கித்தான் அழைக்கிறார்கள்.

  ராபர்ட் - ராப் (அ) பாப்.
  ரிச்சர்ட் - ரிச்
  பில் கிளின்டனின் முழுபெயர் - வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன்.

  அதுபோல நாமும் ஒரு மோகத்தில் நல்ல பெயர்களை செல்லப்பெயர்களாக சொல்லமட்டுமே பழக்கிவைத்திருக்கிறோம் போல.

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் புதிய தகவல்களைத்
  தந்தமைக்கும் நன்றி
  திரு குலவுசனப்பிரியன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 18. பலமாநிலங்களில் பணிபுரிபவர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் உச்சரிக்கப்படுவதும் அதனால் பல வேடிக்கைகள் நடைபெறுவதும் தவிர்க்க முடியாததுதான்.

  பதிலளிநீக்கு
 19. வருகைக்கு நன்றி திரு குடந்தை மணி அவர்களே!

  பதிலளிநீக்கு
 20. சுவாரஸ்யம்தான். வடநாட்டில் உச்சரிக்க முடியாவிட்டால் பரவாயில்லை. தமிழ்நாட்டிலேயே அப்படி சிரமப்பட்டார்கள் என்பது ஆச்சர்யம். தபால்காரரின் பொறுப்பின்மை கண்டிக்கத்தக்கது. பாலகணேஷ் சொல்லி இருக்கும் தேசிக புராணம் சிரிப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

   நீக்கு