எனக்கு அந்த இடத்தை விட்டு,அப்போதே,அந்த
மணித்துளியே கிளம்ப வேண்டும் என வெறி
இருந்ததால்,மறு நாள் காலை வெகு சீக்கிரமே
எழுந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல
தயாரானேன்.
நேரம் இல்லாததால்,என் அண்ணன்களிடம்
அதுபற்றி பேசி அவர்களது அறிவுரையை கேட்க
நேரமில்லை.இப்போது போல் தொலைபேசி
வசதியோ அல்லது கைப்பேசி வசதியோ அப்போது
இல்லை. இருந்திருந்தால் முதல் நாள் பணிக்கான
ஆணை வந்ததும் அதுபற்றி கேட்டு இருப்பேன்.
அஞ்சல் எழுதிஅறிவுரை கேட்கவும் அவகாசமில்லை.
எனவே நானே வந்தது வரட்டும் என முடிவெடுத்து
ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து பணி விலகல்
கடிதம் கொடுக்க கிளம்பியபோது,நண்பர் திரு வீராசாமி
தானும் கூட வருவதாக சொன்னார்.
போகும்போது அவர், நீங்கள் முதலில் விடுப்பு
கேளுங்கள்.அதற்குப்பின் ஊருக்கு போய் பதவி விலகல்
கடிதம் அனுப்பிவிடலாம்.நீங்கள் இப்போது பதவி
விலகுவதாக சொன்னால் ஆணையர் ஒத்துக்கொள்ளாமல்
போனாலும் போகலாம்.’என்றார்.
ஆனால் நானோ,‘வேண்டாங்க.இப்போதே பணியை
விட்டு விலகுவதை சொல்லிடலாம்’ என்றேன்.அதற்கு
அவர் ‘அப்படியானால் நாம் நேரே ஆணையர் வீட்டுக்கு
போவோம்.அங்கே தான் அவரிடம் இதுபற்றி
சாவகாசமாகப் பேசமுடியும்.அலுவலகத்தில் என்றால்,
நிறைய பேர் வந்துகொண்டும் போய்க்கொண்டும்
இருப்பார்கள்.நம்மால் விவரமாக பேசமுடியாது.’என்றார்.
ஆணையர் வீடு ஒன்றிய அலுவலகத்திற்கு அருகிலேயே
இருந்தது.நாங்கள் ஆணையர் வீட்டுக்கு சென்றபோது,
அவர் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.
எங்களைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன்,‘என்ன விஷயம்?
ஏதேனும் அவசரமான காரியமா?’என்று கேட்டார்.
நான் உடனே ‘சார்.நான் பணியிலிருந்து விலக
இருக்கிறேன்.’என்றதும்,அவர் என்னை ஆச்சரியமாக
பார்த்து,‘நடனசபாபதி,ஏன் வேலையை விட
விரும்புகிறீர்கள்.இங்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம்(!)
உண்டு. நன்றாக பணி செய்தால் சீக்கிரமே ஒன்றிய
ஆணையராக வரலாம்.’என்றார்.
‘இல்லை.சார்.வீட்டில் ஒரு சின்ன ‘ப்ராப்ளம்’.
அதனால்தான் பணியை விட விரும்புகிறேன்? எனவே
எனது பணி விலகல் கடிதம் பெற்றுக்கொண்டு,என்னை
உடனே பணியிலிருந்து விடுவியுங்கள்.’என்றேன்.
நான் ‘ப்ராப்ளம்’ என்று சொன்னது பொய்தான்.
ஆனால் வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே,
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
என்று! அதனால் பணியை விடுவதின் உண்மையான
காரணத்தை சொல்லவில்லை.
என்னை விடுவியுங்கள் என்று நான் விடாப்பிடியாக
சொன்னதும், அவரது முகத்தில் மாற்றம் தெரிந்தது.
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு,‘நோ.நோ.
நான் அப்படியெல்லாம் உங்களின் பணி விலகல்
கடிதத்தைப் பெற்றுக்கொண்டு விடுவிக்க முடியாது.
தஞ்சாவூருக்கு அனுப்பி மாவட்ட ஆட்சித்தலைவரின்
தனி உதவியாளரின் (P.A to Collector) அனுமதி
பெற்றே விடுவிக்க முடியும்.’ என்றார்.
நான் உடனே,‘சார். நான் பணியில் சேரும்போது அவர்
அனுமதி பெற்றா, என்னை சேர அனுமதித்தீர்கள்.மேலும்
எனக்கு இந்த பணிக்கான ஆணை கொடுத்தது
வேளாண் துறையின் இயக்குனர்.P.A to Collector
அல்ல.’என சற்று காட்டமாகவே சொன்னேன்.
நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது
அவரது பேச்சிலேயே தெரிந்தது.‘அது பற்றி யெல்லாம்
நான் இங்கு பேச முடியாது.நீங்கள் அலுவலகம்
வாருங்கள்.’ எனக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே
சென்று விட்டார்.
நண்பர் திரு வீராசாமி என்னிடம்,‘நான் முன்பே
சொன்னேன் அல்லவா.திடீரென பணி விலகல் பற்றி
சொல்லவேண்டாம். விடுப்பு மட்டும் கேளுங்கள் என்று.
சரி. இப்போது என்ன செய்யலாம்.’ என்றார்.
நான் ‘வாருங்கள் காலை சிற்றுண்டியை முடித்து விட்டு
அலுவலகம் போய் விடுப்புக்கு முயற்சிக்கலாம்.’ என்றேன்.
நாங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று
ஆணையரை அவரது அறையில் சந்தித்தோம்.அவரிடம்,
‘சார்.அவசியம் ஊருக்கு போய் ஆக வேண்டும்.என்னை
பணியிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால் ஒரு பத்து
நாட்கள் விடுப்பாவது கொடுங்கள்.போய் வருகிறேன்.’
என்றேன்.
அதற்கு அவர்,‘என்ன நீங்கள்.அங்கே வேலையை விட்டு
போகவேண்டும் என்றீர்கள்.இங்கே வந்து விடுப்பு
வேண்டும் என்கிறீர்கள். அதெல்லாம் தர இயலாது.
நீங்கள் நீர்முளைக்குப் போய் உங்கள் பணியைக்
கவனியுங்கள்.’என்றார்.
‘சரி சார்.’ என சொல்லிவிட்டு,வெளியே வந்ததும்,
நண்பர் வீராசாமி கேட்டார்.’என்ன செய்யப்போகிறீர்கள்?’
என்று. நான் அமைதியாகச் சொன்னேன் ‘இன்று
ஊருக்குப் போகிறேன்.’என்று.
நான் அப்படி சொன்னதும்,பணியில் இருந்து விடுப்பு
பெறாமல் நான் எப்படி போகமுடியும் என்று நினைத்து
நண்பர் திகைத்து நின்றுவிட்டார்!
தொடரும்
நீங்கள் நீர்மூளைக்குப் போய் உங்கள் பணியைக் கவனியுங்கள்.’என்றார்.
பதிலளிநீக்குநீர்மூளைன்னா என்ன சார்? சுத்தமாப் புரியலை எனக்கு... நல்ல இடத்துல தொடரும் போட்டிருக்கீங்க, அப்புறம் நிலைமைய எப்படி சமாளிச்சீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல். உடனே தொடருங்கள்...
ஸாரி சபாபதி ஸார். எப்படியோ முதல் பகுதியைத் தவற விட்டிருக்கிறேன். இரண்டாம் பகுதியிலிருந்து படித்ததால் நீர்மூளைன்னா என்னன்னு கேட்டுட்டேன். இப்பப் புரிஞ்சிடுச்சு. குழப்பினதுக்கு ஸாரி.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகவும் விறு விறுப்பாகவும் உள்ளது .. நீங்கள் கடைபிடித்த செய்கை என்ன என்று அறிய ஆவலாக உள்ளது ...வாசு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நீர்முளை என்பது ஒரு சிற்றூர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.மேற்கொண்டு என்ன செய்தேன் என்பது அடுத்த பதிவில்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நான் ஒன்று பெரிதாக ஏதும் செய்யவில்லை.என்ன செய்தேன் என்பதை அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். அதுவரை காத்திருக்கவும்.
பதிலளிநீக்குவிவரணம் விறுவிறுப்பாக செல்கிறது. தொடரட்டும் பணி. வேலையும் விலகலும் வில்லங்கமான ஒன்று தான். நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகப் போகிறது.அடுத்து என்ன நடந்ததோ என எதிர்பார்ப்பில் விட்டு விட்டீர்கள்.தாமதத்துக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குதாமதமாக வந்தாலும் தவறாது வந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குதிரு சென்னை பித்தன் அவர்களே!