திங்கள், 27 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே 9

இரயில் ஓடத்தொடங்கி சில நேரம் ஆனதும்
என் அருகில் இருந்தவர் என்னிடம்,‘எங்கு
செல்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.நான் முதலில்
ஒன்றும் பதில் சொல்லவில்லை.அவர் திரும்பவும்
அதே கேள்வியைக் கேட்டவுடன்,சற்று கோபமாக,
‘அதைத் தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப்போகிறது?’
என பதில் சொன்னேன்.

அவர் எனது பதிலைக் கேட்டு மௌனமாகிவிட்டார்.
ஏன் இவரிடம் இந்த கேள்வியைக் கேட்டோம் என
அவர் நினைத்திருக்கக்கூடும்.நான் சரியான பதில்
சொல்லாததற்கு காரணம் உண்டு.ஹைதராபாத்
நேர்முகத்தேர்வுக்கு போனபோது முன் பின்
தெரியாத ஒருவரிடம் எனது ஊரைப்பற்றி
பேசப்போய் ‘சூடு கண்ட பூனை’போல்
‘கற்றுக்கொண்ட’ பாடம் நினைவுக்கு வந்ததால்
ஏற்பட்ட விளைவு அது.

(எத்தனைக்காலம்தான் ...? என்ற தொடரில்
அந்த நிகழ்வு பற்றி பிப்ரவரி 2011 ல் எழுதி
இருக்கிறேன்.)

பிறகு கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி
செய்தேன்.சிறிது நேரம் தூங்கி இருப்பேன்.யாரோ
எழுப்புவதுபோல் உணர்ந்து கண்ணைத் திறந்தேன்.
யாரும் எழுப்பவில்லை. டிசம்பர் மாத குளிர் தான்
என்னை எழுப்பி இருக்கிறது!

கிளம்பும்போது தெரியாத குளிர்,வேகமாக
இரயில் ஓட ஆரம்பித்ததும் தனது சுயரூபத்தைக்
காட்டியதால் என்னால் உறங்க முடியவில்லை.

‘கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீ இப்’


என்று சத்திமுத்தப் புலவர் பாடியதுபோல, அன்று
இரவு முழுதும் கையையும் காலையும்
குறுக்கிக்கொண்டு எப்போது விடியும் என
எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தேன்.

விடிந்ததும் பல் துலக்கிவிட்டு,குண்டக்கல்
சந்திப்புக்காக காத்திருந்தேன்.காலை சுமார் 9
மணிக்கு நான் பயணம் செய்த இரயில்
குண்டக்கல்லை அடைந்தது.கீழே இறங்கி
ஹூப்ளி செல்லும் இரயிலில் ஏற எந்த
பிளாட்ஃபாரம் செல்லவேண்டும் என
விசாரிக்கலாம் என்றால் யாரும் நின்று பதில்
சொல்ல நேரம் இல்லாமல் போய்க்
கொண்டிருந்தார்கள்.

சரி இரயில் நிலைய அலுவலரிடம் கேட்கலாம்
என நகர நினைத்தபோது,என்னோடு இரயிலில்
பயணித்து, முதல் நாள் இரவு நான் எங்கே
போகிறேன் எனக் கேட்டவர் வந்து.‘என்ன சார்?
எங்கு போகவேண்டும்?’என்றார்.தயக்கத்தோடு
அவரிடம், ‘ஹூப்ளி செல்லும் இரயிலுக்கு
செல்லவேண்டும்.’என்றதும், அவர்,‘அந்த இரயில்
கிளம்பத் தயாராக அடுத்த பிளாட்ஃபாரத்தில்
உள்ளது.நீங்கள் உடனே போய் ஏறுங்கள்.’
என்று சொன்னார்.

யாரை நான் சந்தேகப்பட்டு இரவு பதில் சொல்ல
மறுத்தேனோ,அவரே வந்து உதவி செய்தது எனக்கு
என்னவோ போல் இருந்தது.ஒரு நிகழ்வை வைத்து
எல்லோரையும் எடை போடக்கூடாது என்பதை
அன்று தெரிந்துகொண்டேன்.

ஓட்டமும் நடையுமாய்ப் போய் அந்த ஹூப்ளி
செல்லும் ‘பாசஞ்சர்’ இரயிலில் ஏறியதும் ஏதோ
எனக்காக காத்திருந்தது போல் அது நகர ஆரம்பித்தது.

எனது அக்கா மகன் திரு சி.எஸ்.சதாசிவம்
சொன்னதுபோல் ஹூப்ளி வரை சீட்டு வாங்காமல்
குண்டக்கல் வரை வாங்கியிருந்தால்,குண்டக்கல்லில்
வெளியே சென்று பயணச்சீட்டு வாங்கி நான் உள்ளே
வருவதற்குள் நிச்சயம் அந்த இரயில் புறப்பட்டிருக்கும்.

நல்ல வேளை அவர் சொன்னதைக் கேட்டது
நல்லதாயிற்று.அது காலை வேளை என்பதாலும்
எல்லா இடத்திலும் நிற்கும் என்பதாலும் வண்டிக்குள்
நல்ல கூட்டம் இருந்தது.உட்கார இடம் இல்லாததால்,
மேலே பொருட்கள் வைக்கும் இடத்தில் ஏறி
உட்கார்ந்துகொண்டேன்.

வண்டியின் உள்ளே கன்னடமும்,களி தெலுங்கும்
கலந்த ஒரே சத்ததுடன் கூடிய பயணிகளின்
பேச்சுக்கள். ஒன்றும் புரியவில்லை.இரவு தூங்காததால்
தூக்கம் கண்ணை சுழற்றியதால்,அப்படியே படுத்து
தூங்கிவிட்டேன்.

திடீரென கண் விழித்துப் பார்த்தபோது இரயில்
கதக் (Gadag) என்ற இரயில் சந்திப்பில் நின்றிருந்தது.
அப்போது நேரம் மாலை 4 மணி இருக்கும்.
காலையிலும் மதியத்திலும் ஒன்றும் சாப்பிடாததால்,
பசி வயிற்றைக் கிள்ளியது.நேர் எதிரே இருந்த
பெட்டிக் கடையில் பன்னும் தேநீரும் வாங்கி
பசியாற்றிக் கொண்டேன்.

அதே ‘கதக்’ கில் இன்னும் 15 நாட்களில் வந்து
ஐந்து மாதங்கள் பணிபுரியப்போகிறேன் என
எனக்கு அப்போது தெரியவில்லை.

வண்டி மெல்ல மெல்ல, ஊர்ந்து மாலை சுமார்
6 மணிக்கு ஹூப்ளி சந்திப்பை அடைந்தது. கீழே
இறங்கி வெளியே வந்து பயணச்சீட்டு கொடுக்கும்
இடம் சென்று, அங்குள்ள கவுண்டரில் பணத்தைக்
கொடுத்து. ‘’தார்வாருக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்.’
எனத் தமிழில் சொன்னேன்.

தொடரும்

4 கருத்துகள்:

 1. ரயில் பயண அனுபவங்களைச் சுவைபடச் சொல்லி நிற்கிறது பதிவு.15 நாட்களில் கதக்கா? காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. ‘கதக்’ என்று டான்ஸ் கேள்விப்பட்டிருக்கிறேன். ஊரா? அங்கே பணி புரிய பதினைந்தே நாட்களில் வாய்ப்பா? என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் ஆவலுடன் தொடர்கிறேன்.

  தங்களை ஒரு தொடர்பதிவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

  http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_28.html

  நன்றி!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நீங்கள் கேள்விப்பட்டது Kathak. ஆனால் இது Gadag. தமிழில் எழுதும்போது கதக் என எழுதியதால் வந்த குழப்பம் இது.

  நான் ‘கதக்’ சென்றபிறகு எனது வகுப்புத்தோழர் திரு முத்தையா வுக்கு மகிழ்வுடன் இருப்பதாக எழுதியதற்கு, அவரும் அந்த ஊரை உங்களைப் போலவே நினைத்து, இனி உங்களை ‘கதக்’ களி நடனம் என அழைக்கலாம் என எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

  மீண்டும் பள்ளிக்கு திரும்பும் தொடர் பதிவை எழுத அழைத்தமைக்கு நன்றி. விரைவில் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு