வெள்ளி, 2 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்! தொடர் பதிவு

நண்பர் ‘மின்னல் வரிகள்’ கணேஷ் அவர்கள்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!'என்ற தொடர்
பதிவில்,என்னையும் திரும்பவும் பள்ளிக்கு
செல்ல அன்புடன் அழைத்திருக்கிறார்.அவருக்கு
முதற்கண் எனது நன்றி!

நான் முன்பே எனது பள்ளி அனுபவம் பற்றி
‘நினைவோட்டம்’ என்ற தலைப்பில் 60 பதிவுகள்
எழுதி உள்ளேன்.(நினைவுகள் என்ற துணைத்
தலைப்பின் கீழ்) இருப்பினும் அதில்
எழுதாதவைகளையும், எழுதியவைகளையும்
இங்கே திரும்பவும் எழுதுவதற்காக
கால இயந்திரத்தில்(Time Machine) ஏறி
திரும்பவும் பள்ளிக்கு செல்கிறேன்!

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை
(1949 - 54) ஊரில் எங்களது தெரு முனையில்
இருந்த திண்ணைப் பள்ளியில் படித்தேன்.
திண்ணைப் பள்ளி என்றா சொன்னேன்.
இல்லை இல்லை அது மரத்தடிப் பள்ளி.
தெருவின் முனையில் இருந்த ‘சாவடி’க்கு
முன் இருந்த ஆலமரத்தின் கீழ்தான்
எங்கள் பள்ளி(!) இருந்தது.

சூரியன் நகர நகர,எங்களது வகுப்புகளும்
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும்.
மழைக் காலங்களில் அருகில் இருந்த
தெய்வானை அத்தை வீட்டு திண்ணைதான்
எங்களது வகுப்பறை. ஐயா என்று எங்களால்
மரியாதையுடன் (பயத்துடன்) அழைக்கப்பட்ட
திரு சாமிநாத அய்யர் அவர்கள்தான்
எங்களது ஆசிரியர்.

ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு
முடிப்பதற்குள் ஆத்திச்சூடி,உலக நீதி,
வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன்,
விவேக சிந்தாமணி, நன்னெறி, நல்வழி,
அறப்பளீஸ்வரர் சதகம்,குமரேச சதகம்

முதலியவைகளை மனப்பாடம் செய்து
எங்களை அவர் கற்க வைத்ததையும்,
பிள்ளையார் சதுர்த்தியில் தொடங்கி
ஆயுத பூஜை வரை உள்ள நாட்களில்
எங்களுக்கு அவர் கற்றுக்கொடுத்த
கோலாட்டத்தையும், இன்னும் நான்
மறக்கவில்லை.

கிராம வாழ்க்கைக்கு உபயோகப்படக்கூடிய,
பிராமிசரி நோட்டும் குத்தகை சீட்டும் எழுத
நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் பயிற்சி
பெற்றதும் வேறெந்த பள்ளியிலும் நினைத்துப்
பார்க்கமுடியாதவை.

நான்காம் வகுப்பு படிக்கும்போது காலம்சென்ற
என் அண்ணன் டாக்டர்.வே.சிவசுப்ரமணியன்
(வேளாண் மரபியல் விஞ்ஞானி) அவர்கள்
எங்களை அய்யாவுடன் நிற்க வைத்து எடுத்த
ஒரு அரிய புகைப்படம் கீழே. என்னைப்
பொருத்தவரை இது ஒரு பொக்கிஷமே!

புகைப்படத்தில் மரத்திற்குப் பின்னால் தெரிவது
தான் சாவடி.படத்தில் வலமிருந்து ஏழாவதாக
நிற்பது நான். நாடு சுதந்திரம் அடைந்த பொழுது
இருந்த பள்ளிகளின் நிலை இதுதான்.

ஐந்தாவது படிக்கும்போது எங்கள் ஊர்
ஆற்றங்கரையில் என் அண்ணன்
டாக்டர்.வே. ஞானப்பிரகாசம் அவர்களுடன்
(பின் நாட்களில் தமிழ்நாடு
கால்நடை அறிவியல் பல்கலைக் கழக துணை
வேந்தர் ஆக இருந்தவர்)என்னை வைத்து,
எனது இன்னொரு அண்ணன்
திரு வே.சபாநாயகம் எடுத்த புகைப்படம் கீழே.
ஆறாவது மற்றும் ஏழாவது வகுப்புகளை
(1954 - 56) அரியலூர் கழக உயர்நிலைப் பள்ளியில்
படித்தபோது,ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடல்களை
அங்க அசைவுகளோடு ஒப்புவிக்கும் போட்டியில்
பங்குபெற்றதும்,என் ஆசிரியர் திரு கல்யாண சுந்தரம்
அய்யர் அவர்கள் சொல்லிக்கொடுத்தபடி, என்னை
அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது
‘People call me Nadanasabapathy’ என்று சொல்லி
எல்லோரிடமும் கைத்தட்டல் வாங்கியதும்,
(அப்போது அவ்வாறு சொல்வது புதிது) எதிர்பார்த்தபடி
முதல் பரிசு பெற்று எழுத்தாளர் திரு கி.வா.ஜ
அவர்களிடமிருந்து, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய
காந்தி மகான் கதையை பரிசாக பெற்றதும்,ஏதோ
நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது.

எட்டாம் வகுப்பை (1956 - 57)பெண்ணாடம் கழக
உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.அங்குதான்
‘பிராத்மிக்’ எனப்படும் இந்தித் தேர்வை எழுதியதும்,
1957 பிப்ரவரியில் நடந்த பொதுத்தேர்வில்
அரசியலில் ஆர்வம் காட்டியதும், கட்டுரைப்போட்டியில்
கலந்துகொண்டு மூன்றாம் பரிசாக 'கடல் கன்னி'
என்ற புதினத்தை பரிசாக பெற்றதும், எனக்காக
என் பெரியம்மா தன் சௌகரியத்தை பாராது,
என் விருப்பப்படி சமையல் செய்து என்னை
படிக்கவைத்ததையும் எப்படி மறக்கமுடியும்?

எட்டாவது படிக்கும்போது என் மாமா மகன்
திரு J.M.கல்யாணசுந்தரம் எடுத்த
எனது படம் கீழே!
ஒன்பது, பத்து, மற்றும் பதினொன்றாம்(S.S.L.C)
வகுப்புகளை(1957 – 60)விருத்தாசலத்தில் என்
அண்ணன் திரு சபாநாயகம் அவர்களோடு
தங்கி படித்தேன்.

தமிழ் பாடத்தில் ஆர்வம் வந்தும்,கிருஷ்ணன்,
துரைராஜ், பழமலை, கண்ணன், கிருஷ்ணமூர்த்தி,
ராஜாமணி, பார்த்தசாரதி,சிகாமணி,
இராஜசேகரன் ராஸ்,மற்றும் சுப்பிரமணியன்
ஆகியோரை நண்பர்களாக பெற்றதும், ஓரங்க
நாடகத்தில் நடித்ததும், ‘நதி’ என்ற
கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதும்,
‘கணையாழி’ ‘சரஸ்வதி’‘எழுத்து’
இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததும்
திரு சுந்தர ராமசாமி திரு ஜெயகாந்தன்
திரு.புதுமைப்பித்தன், திரு.வல்லிக்கண்ணன்
திரு.ஜானகிராமன், திரு.தி.ஜ.ர
ஆகியோரது
எழுத்து அறிமுகம் ஆனதும், கதை எழுதும்
ஆசையில் கல்கி நடத்திய போட்டியில்
கலந்துகொண்டதும் (வெற்றி பெறாததும்!)
கணிதத்தில் சுமாரான மதிப்பெண்கள் பெற்று
பின் தங்கி இருந்த நான் என் அண்ணன் கொடுத்த
பயிற்சியின் காரணமாக S.S.L.C வகுப்பில்
முதல் இடத்திலும், மாவட்டத்தில் இரண்டாம்
இடத்தில் வந்ததும் விருத்தாசலத்தில்
படித்த போதுதான்.

பள்ளிகளில் படித்தபோது நடந்த நிகழ்வுகளை
திரும்பவும் என்னை ‘அசை’ போட வைத்த
நண்பர் கணேஷ் அவர்களுக்கு மீண்டும்
எனது நன்றிகள்!

இந்த தொடரைத் தொடர

1. திரு சென்னை பித்தன்
2. திரு க.வாசுதேவன்

ஆகியோரை அழைக்கிறேன்.

இவர்கள் முன்பே தங்கள் பள்ளிப்பருவம்
பற்றி எழுதி இருந்தாலும் எழுதாமல் விட்ட
நிகழ்வுகளை திரும்பிப்பார்க்க வேண்டுகிறேன்.

13 கருத்துகள்:

 1. ஆஹா... பள்ளி நினைவுகள் படிக்கப் படிக்க இனிமை. அதிலும் எட்டாம் வகுப்பு புகைப்படம்... அபாரம்! உங்கள் முகத்தில் தெறிக்கும் அப்பாவித் தனத்தை மிக ரசித்தேன். இலக்கியங்கள் படிக்கும் பழக்கம் உங்களுக்கு அறிமுகமான விதமும் அறிந்தேன். மொத்தத்தில் உங்களை எழுத அழைத்ததன் முழுப் பயனையும் பெற்றேன. என் வேண்டுகோளை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு மிகமிக நன்றி. (ஹையா... நண்பர் சென்னைப் பித்தனை மாட்டி விட்டுட்டீங்களா... அவர் என்ன சொல்றார்னு உடனே பாத்துடறேன்...)

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும், நன்றி திரு கணேஷ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. பள்ளி அனுபவம் உள்ளம் திறந்து கூறினீர்கள். நன்று ரசித்தேன். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. பள்ளிக்கால நிகழ்வுகளின் அருமையான பகிர்வு.என்னையும் எழுதச் சொல்லீ விட்டிர்கள்.எழுதித்தானே ஆக வேண்டும்!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களின் பள்ளிக்கால நிகழ்வுகளைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 7. நலமா? வந்தேன் பள்ளி அனுபவமே இருந்தது. சென்று வருகிறேன். மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. Due to frequent disruptions in broad band connection my visits to various blogs including yours were severely curtailed. Your reminiscences about school days were superbly delineated. Not only you were transported in time machine,I am sure,all readers might have felt the same. Your experiences sequentially described right from corner platform that served as school room, stage experiences , how u fell in love with tamil literature were a delight to read. These experiences would have made many a reader to recall his/her experiences. Keep continue writing such experiences which are at once interesting and informative . By the way thanks for your kind invite. Shortly I would start writing again. vasudevan

  பதிலளிநீக்கு
 10. This is just to thank Mr.Ganesh whose request led to publication of a
  delightful piece of blog and some interesting photographs of vintage.

  Vasudevan

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்களும் என்னோடு கால இயந்திரத்தில் பயணித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நானும் திரு கணேஷ் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன் உங்கள் சார்பில்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் நடன சபாபதி - மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்தது நன்று - எத்தனைஎத்தனை நிக்ழ்வுகள் - பள்லீயில் பல்வேறு பரிசுகள் பெற்றது - அதுவும் கி.வா.ஜ விடமிருந்து பெற்றது - சிறுவயதுப் புகைப்படங்கள் - அத்தனையும் பதிவினிற்கு மெருகேற்றுகின்றன. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நினைவுகள் சுகமானவைகள் தானே.

   நீக்கு