செவ்வாய், 6 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 10

’தார்வாருக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்.’ எனத்
தமிழில் கேட்டவுடன், ‘கௌண்டர்’உள்ளே இருந்தவர்
நிமிர்ந்து என்னைப் பார்த்து, ‘ஊருக்கு புதுசா?’
என்றார்.

அவர் கேட்டதன் காரணம்,கன்னடம் பேசுகின்ற
ஊரில் வந்து தமிழில் பேசுகின்றானே என்பதால்.
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது நான்
பழக்கதோஷத்தில்,தமிழ்நாட்டுக்கு வெளியே
இருக்கிறேன் என்பதை மறந்து தமிழில்
பேசிவிட்டேன் என்பதை.

இருந்தாலும்,இங்கு கூட தமிழ் பேசுபவர்கள்
இருக்கிறார்களே என்ற சந்தோஷத்தில் எதற்காகக்
கேட்கிறார் என்பதைக்கூட யோசிக்காமல்,
‘ஆமாம்.’என்றேன்.உடனே ‘எங்கிருந்து
வருகிறீர்கள்?’ என்று கேட்டார்.

இதையெல்லாம் ஏன் கேட்கிறார் என எண்ணிக்
கொண்டு நான் ‘விருத்தாசலத்திலிருந்து
வருகிறேன்.’என்றேன்.

‘தார்வாருக்கு என்ன விஷயமாகப் போகிறீர்கள்
எனத் தெரிந்துகொள்ளலாமா?அங்கு யாரையாவது
தெரியுமா? ஏன் கேட்கிறேன் என்றால் இந்த வண்டி
தார்வார் போகும்போது இரவு ஆகிவிடும்.ஊருக்குப்
புதியவர் என்றால் மொழி தெரியாவிட்டால், இடம்
தேட கஷ்டமாயிருக்கும்.அதனால்தான் கேட்டேன்.’
என்று அனுசரணையாகப் பேசினார்.

நான் புதிய வேலையில் சேர வந்திருப்பதை
சொன்னதும், அவர் ‘நீங்கள் உள்ளே வாருங்கள்.’
என்றார்.

எதற்காக வரச்சொல்கிறார் என யோசித்துக்
கொண்டே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து
பயணச்சீட்டு கொடுக்கும் அறைக்கு சென்றேன்.

அங்கு சென்றதும் என்னை உட்காரச்சொல்லிவிட்டு
அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அவரது பெயர் சோமசுந்தரம் என்றும் அவர்
கடலூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்து
கொண்டேன்.

‘தம்பி,நீங்கள் ‘டிக்கெட்’கேட்கும்போதே ஊருக்குப்
புதியவர் எனத்தெரிந்து கொண்டேன்.நீங்கள் நம்ம
மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும்,
நீங்கள் எதற்காக தார்வார் செல்கிறீர்கள் எனக்
கேட்டேன். நீங்கள் புதிதாக வேலைக்கு சேர
வந்திருக்கிறீர்கள் என அறிந்ததும், நம்
ஊர்க்காரராகிய நீங்கள் இரவில் புதிய இடமான
தார்வாருக்கு சென்று திண்டாட வேண்டாமே
என்பதால் உங்களுக்கு உதவலாமே என்றுதான்
உள்ளே கூப்பிட்டேன்.’என்றார்.

நான் அவரது மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற
பாசத்தாலும்,தமிழன் என்ற இன உணர்வாலும்
எனக்கு உதவ வேண்டி உள்ளே அழைத்திருக்கிறார்
எனத் தெரிந்தபோது எனக்குள் ஏற்பட்ட
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.என்ன பேசுவது
எனத் தெரியாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன்.


தொடரும்

4 கருத்துகள்:

 1. என்ன சார் ?சரியான இடத்தில் தொடரும் போட்டுப் பதிவைச் சுருக்கமா முடிச்சிட்டீங்க! காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
  போன பதிவு நீண்டு இருந்ததால்,
  இந்த பதிவை சிறிது சுருக்கிவிட்டேன்.
  ‘தொடரும்’ என போடுவதற்காக அல்ல. காத்திருப்பதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!உண்மைதான்.அடுத்தவற்கு உதவும் நல்ல எண்ணம் எல்லோருக்கும் இருப்பதில்லை.அவர் போன்றோர் நம்மிடையே இருப்பது மனித நேயம் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

  பதிலளிநீக்கு