ஞாயிறு, 1 ஜூலை, 2012

Boss கள் பலவிதம்! 26


நான் ஏன் மேலாளரின் கோபத்துக்கு ஆளானேன் என்பதை சொல்லு
முன்பு அவர் குணம்(!) எத்தகையது என்பதை அந்த கிளையில்
நடைபெற்ற சில நிகழ்வுகள், எனக்கு காண்பித்ததை சொல்லலாமென எண்ணுகிறேன்.

ஒரு நாள் எங்கள் கிளைக்கு தலைமை அலுவலகத்தால் புதிதாக எழுத்தர்களாக நியமிக்கப்பட்ட இரு இளைஞர்கள் பணியில் சேர
ஆவலோடு வந்தனர். அவர்கள் மேலாளரைப் பார்த்து தங்களது 
பணி நியமன ஆணையைக் காட்டி தாங்கள் அன்று சேர 
விரும்புவதாக சொன்னதும்,அவர் என்ன காரணத்தாலோ இன்று 
நீங்கள் சேரமுடியாது. நாளை வந்து பணியில் சேருங்கள் என 
சொல்லி விட்டார்.

பாவம் அவர்கள்! ஏன். இன்று நாங்கள் பணியில் சேரக்கூடாது?  
எனக்கேட்கக்கூட தைரியம் இல்லாமலும், நல்லநாள் பார்த்து சேர 
வந்த தங்களை ஏன் பணியில் அன்று சேர விடமால் தடுக்கிறார் 
எனத் தெரியாமலும் பரிதாபத்தோடு திரும்பி சென்று விட்டார்கள். 
எப்படி தலைமை அலுவலகம் நியமித்தவர்களை இவர் தன் 
இஷ்டம்போல் தடுத்து நிறுத்துகிறார் என்று என்னால் 
ஆச்சரியப் படத்தான் முடிந்தது அப்போது.

இன்னொரு நாள் ஒரு பெண் ஊழியர் கண்ணீரோடு அமர்ந்திருந்தார். என்னவென்று விசாரித்ததில் அவருக்கு அவர் கேட்காமலேயே(!) 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு (Earned Leave) கொடுத்து,அந்த விடுப்பு நாட்கள் கழித்து அவர் வேலைக்கு வந்தால் போதும் என்று மேலாளர் சொல்லிவிட்டாராம். விடுப்பு கேட்டால் வேலைப்பளுவை காரணம் 
காட்டி இல்லை என சொல்லுவது வழக்கமான ஒன்று. ஆனால் கேட்காமலேயே விடுப்பை அவர் ஏன் தந்தார் என விசாரித்தேன்.

வங்கியின் நடைமுறைப்படி பணி செய்த 11 நாட்கள் 
ஒவ்வொன்றிற்கும் ஒரு நாள் விடுப்பை ஈட்ட முடியும்.அதாவது 
ஒரு ஆண்டு பணி செய்தால் 33 நாட்கள் ஈட்டிய விடுப்பு கிடைக்கும். 
அந்த விடுப்பை தேவை இருந்தால் தான் ஊழியர்கள் எடுப்பார்கள். 
அந்த பெண் ஊழியருக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. 

திருமணம் நிச்சயம் ஆனபிறகு திருமணத்திற்காக அந்த விடுப்பை எடுக்கலாம் என நினைத்திருக்கலாம்.ஆனால் அவரை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு விடுப்பில் போக சொல்லிவிட்டார். பின்பு விடுப்பு இருப்பில் இல்லாதபோது அவர் விடுப்பில் போக நினைத்தால்,சம்பளம் இல்லா விடுப்பில் செல்லட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அந்த ஈட்டிய விடுப்பை  கேட்காமலேயே ஒப்பளிப்பு (Sanction) செய்திருக்கிறார்.அவரின் அந்த சர்வாதிகார போக்கை எதிர்க்க 
வழியின்றி அவரும் விடுப்பில் சென்றுவிட்டார்.

இது நடந்து ஒரு மாதம் இருக்கும். எனக்கு முன்பு அங்கு பயிற்சியில்
இருந்த நண்பர் திரு மாத்யூஸின் பயிற்சி காலம் முடிந்ததும்
கேரளாவில் உள்ள கிளை ஒன்றுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தலைமை அலுவலகத்திலிருந்து ஆணை வந்திருந்தது. பொதுவாக மாற்றலாகிப்
போகும் ஒருவரை எப்போது விடுவிக்கப் போகிறோம் என 
முன்கூட்டியே சொல்வது \வழக்கம்.

அப்போதுதான்  அவர் அடுத்த ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு  பயணச்சீட்டை வாங்கமுடியும் மற்றும் அதை வாங்க வங்கியிலிருந்து
முன் பணத்தையும் (Advance) முன்பே பெற ஏதுவாக இருக்கும் என்பதால்.

ஆனால் திடீரென ஒரு சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல்
(அலுவலக நேரம் முடிந்த பின் ) திரு மாத்யூசைக் கூப்பிட்டு கையில்
ஒரு ஒட்டப்பட்டிருந்த உறையை, மேலாளரின் அன்புக்கு பாத்தியமான உதவி மேலாளர் கொடுத்தார்.அதைப் பிரித்துப் பார்த்த நண்பர் 
மாத்யூசுக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அவர் அன்று அலுவலகம் முடிந்ததும் விடுவிக்கப் பட்டதாக அதில் இருந்தது.

அவருக்கு முன்பே அது பற்றி சொல்லாததால் அவர் முன் பணமும் பெறவில்லை. மேலும் பயணச் சீட்டையும் முன் பதிவும் 
செய்யவில்லை. 

திங்கள் காலையில் தான் முன்பணத்தை பெறமுடியும்.பயிற்சியில்
இருக்கும் போது பயண நேரம் போக ஒரு நாள்தான் Joining Time கொடுப்பார்கள். பணம் எடுக்க திங்கள் கிழமை அங்கு இருந்தால் அனாவசியமாக Joining Time போய்விடும். மேலும் பயணச் சீட்டு
வாங்காததால்  முன்பதிவில்லா இரயில் பெட்டியில் தான் பயணிக்க முடியும்.அவர் கஷ்டப்படவேண்டும் என்ற எண்ணத்தோடுதான்
அவ்வாறு செய்திருந்தார் அந்த மேலாளர்.வேறு வழியின்றி நண்பர்
திரு மாத்யூஸ் திங்கள் அன்று கிளைக்கு வந்து பணம் எடுத்து 
ஊருக்கு சென்றார்.

இப்படி தட்டிக்கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டபிரசண்டன்.
என்ற பழமொழியை மெய்ப்பித்துக்கொண்டு இருந்த அவரிடம் நான்
எவ்வளவு காலம் பணியாற்றிவேண்டி யிருக்குமோ என்ற 
கவலையில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன்.

எனது பயிற்சி காலம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்துத்தான்,
தகுதிகாண் பருவத்தில் (Probation Period) வைப்பதற்கு நடக்கும் நேர்முகத்தேர்வுக்கு கோழிக்கோடு வரச்சொல்லி எனக்கு 
ஆணை வந்தது.

நான் கோழிக்கோடு போய் அந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு
வந்த ஒரு வாரத்திலேயே என்னை Probationary இளநிலை அலுவலராக நியமனம் செய்த கடிதம் வந்தது. ஆனால் அக்கடிதத்தில் எனது 
பயிற்சி காலம் 6 மாதத்திற்கு பதில் 9 மாத காலமாக 
எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏன் எனது பயிற்சி காலம் நீட்டப்பட்டது எனத் தெரியவில்லை.
ஒருவேளை அந்த மேலாளருக்குத் தெரிந்து இருக்கலாம். பயிற்சி 
காலம் நீட்டப்படலாம் என வங்கியில் விதி இருந்ததால்,நான் அந்த பயிற்சி நீட்டலை தலை விதியே என  எடுத்துக்கொண்டேன்.

நான் பணியாற்றியது வேளாண் நிதித்துறை என்பதால், 
விவசாயிகளுக்கு, பயிர்க்கடன், பம்ப் செட் வாங்க கடன், டிராக்டர் 
வாங்க கடன் போன்றவைகளை தர அவர்களது பண்ணைகளை பார்த்துவிட்டு மேலாளர் மூலமாக தலைமை அலுவலகத்திற்கு 
எனது பரிந்துரையைத்  தரவேண்டும். 

அதோடு கடன் கொடுத்தபின், அவர்கள் அந்த கடனை எதன் 
பொருட்டு வாங்கினார்களோ அந்த நோக்கத்திற்கு அதை பயன்படுத்தியிருக்கிறார்களா என ஆய்வு செய்து தலைமை அலுவலகத்திற்கு குறிப்பிட்ட இடைவெளிக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

ஒரு நாள் தலைமை அலுவகத்திலிருந்து, எனக்கு முன்பு 
இருந்தவருடைய காலத்தில், பம்ப் செட் கடன் பெற்றவர்கள்   
பம்ப் செட் வாங்கியிருக்கிறார்களா மற்றும் அதை வாங்கி அவர்கள் நிறுவியபின் அவர்களது  வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது போன்றவைகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஆணை வந்தது.
   
மொத்தம் 60 பேர் பம்ப் செட் வாங்க கடன் பெற்றிருந்ததால்,அவர்கள் பண்ணைக்கு சென்று பார்வையிட மேலாளரின் அனுமதி பெற்று,  
முதலில் ஒரு பயனாளியின் பண்ணைக்கு சென்றேன். அப்போது எனக்குத்தெரியாது எனது பண்ணை விஜயம் ஒரு பூகம்பத்தை   
பின்னால் கிளப்பப் போகிறதென்று!

நான் சென்ற அந்த சிற்றூர் ஒரு மலையடிவாரத்தில் இருந்தது. அந்தஊருக்கு அருகில் உள்ள ஊருக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்து சிறிது தூரம் நடந்து தான் அந்த ஊரை அடைய முடியும். நான் அந்த இடத்திற்கு சென்று அந்த பயனாளியை பார்த்தபோது அவர் நான் யார் எனத் தெரிந்ததும் நீங்கள் ஏன் சார். நடந்து வருகிறீர்கள்.? என அவர் கேட்டார். 

அதற்கு நான் வங்கியில் இப்போது தான் சேர்ந்திருக்கிறேன். இனிமேல்தான் மோட்டார் சைக்கிள் வாங்கவேண்டும்.அதனால்தான் பேருந்தில் வந்து, நடந்து வருகிறேன். என்றேன். அப்போது அவர் 
சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியைத்  தந்தது.


தொடரும்

8 கருத்துகள்:

 1. I feel lucky to not to go through such people in life. If I were you, I might have invited more trouble, due to my nature.

  Packirisamy N

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் கூட அநீதியைக் கண்டால் பொங்கி எழுபவன் தான். ஆனால் படித்து முடித்து வந்தபோது, இருந்த வேகம் நான்கு ஆண்டுகளில் யதார்த்தை உணர்ந்ததால், குறைந்து போனது உண்மை. வங்கியில் சேர்ந்தபோது அது மூன்றாவது பணி.எனவே பொறுத்து இருந்து நாம் மேலாளராக ஆகும்போது, ஒரு முன்மாதிரி மேலாளராக ஆகலாமே என்பதால் பொறுமை காத்தேன். அதற்கான பலனையும் அனுபவித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. பல சங்கடங்களை தாங்கி கொண்டால் ஒரு நாளில் விடிவு வரும் என்பதை உங்கள் பதிவு சுட்டிக்காட்டுகிறது ... அனுபவங்கள் தொடரட்டும்... நன்றி சார் !

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. சஸ்பென்ஸ் தாங்கவில்லை.சீக்கிரம் சொல்லுங்க!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!சஸ்பென்ஸ் இருந்தால்தானே சுவாரஸ்யம்.
  தயை செய்து பொறுத்திருங்கள்
  அடுத்த பதிவு வரை.

  பதிலளிநீக்கு
 7. ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தான் வெட்டிய கிணற்றைக்காணும் என ஓடி வந்து போலீஸில் புகார் அளிப்பார். :)

  அதுபோல ஏதேனும் இங்கு நடந்திருக்குமோ அல்லது நடக்கப்போகுமோ என நினைக்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! இல்லை.இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் நடைபெறவில்லை.அடுத்த பதிவில் காரணத்தை அறிந்துகொள்வீர்கள்.

   நீக்கு