ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

ஆனால்!!!

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது 'ஒளி' என்ற கையெழுத்து பத்திரிகையில்வந்த 'ஆனால்' என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது.
(எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் பெண்ணாடம் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும்போது வெளியிட்ட கையெழுத்து பத்திரிகை அது) அதை எழுதியவரும் அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவர்தான்.விவரம் புரியாத வயதில் படித்தபோதும் அந்த கவிதை என்னைக்கவர்ந்த காரணத்தால் ஐம்பத்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதை என்னால் மறக்க முடியவில்லை. அந்த கவிதை இதோ.

எல்லா கடலும் ஒன்றானால் எவ்வளவு பெரிய கடலாகும்!

எல்லா மரமும் ஒன்றானால் எவ்வளவு பெரிய மரமாகும்!

எல்லா மனிதனும் ஒன்றானால் எவ்வளவு பெரிய மனிதனாவான்!

எல்லா கைகளும் ஒன்றானால் எவ்வளவு பெரிய கைகளாகும்!

எல்லா வாளும் ஒன்றானால் எவ்வளவு பெரிய வாளாகும்!

அந்த மனிதன் அந்த கையில் அந்த வாளை எடுததோங்கி

அந்த மரத்தை வெட்டிச்சாய்த்து அந்த கடலில் விட்டெறிந்தால்

டும் டுமீல் என்று எத்தனை பெரிய சப்தமிடும்!

அப்போது நான் சிறுவனாக இருந்த காரணத்தால் அந்த கவிதையின் விளைவாக எழுந்த கற்பனை என்னை ஈர்த்திருக்ககூடும்.

இன்றைக்கு ஒருவேளை அந்த கவிதையை இப்படி எழுதினால்?

எல்லா மதங்களும் ஒன்றானால் எத்துணை மகிழ்ச்சி உண்டாகும்

எல்லா மனங்களும் ஒன்றானால் எத்துணை பெரிய மாற்றம் வரும்

இணைந்த மதங்களும் கலந்த மனங்களும்

இங்கு எத்தனை எத்தனை அமைதி தரும்!!!!

கற்பனை நிஜமாகுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

 1. அத்தகைய அமைதி எத்தனை காலம் சுகமாயிருக்கும்? ஊடல் இல்லாமல் கூடல் இனிக்குமா? ஒன்றும் வேண்டாம், வெகுஜன வார இதழான குமுதத்தைப் பாருங்கள். இலங்கைத்தமிழனுக்காக எத்தனை பக்கம் கண்ணீர் விடுகிறார்கள் (அதில் எவ்வளவு உண்மையான கரிசனம் என்பது சர்ச்சைக்குறியது), மீரா ஜாஸ்மின் இதுவரை யாருடன் கூடியிருந்தார், இப்போது யாருடன்.... என்பது போன்ற சமாசாரங்களுக்கு எத்தனை பக்கம் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதை - ஐயா, நாமெல்லாம் கடைந்தெடுத்த ‘படிற்றொழுக்கி’கள் (அதாவது hypocrites).

  பதிலளிநீக்கு
 2. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே. நீங்கள் கூறுவது சரியே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. ஆனால் அருமையான எண்ணங்கள் ..மதம் ஜாதி இல்லா உலகம் நினைக்கவே இனிமையாக உள்ளது ஆனால் ?

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!. கற்பனையே சுகமானதுதான்.அது நனவானால்!

  பதிலளிநீக்கு
 5. நல்ல கவிதை நல்ல கவிதையின் உருவாக்க மாதிரி.

  தங்களின் இளவயது எழுத்தில் உள்ள முதிர்ச்சி, வாசிப்பின் விளைவாக ஏற்பட்டிருக்கக் கூடும்.

  வாழ்த்துக்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு