திங்கள், 4 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 1

1987 ஆம் ஆண்டு. அப்போது நான் எங்கள் வங்கியின்
கடலூர் கிளையில் முது நிலை கிளை மேலாளராக
பணியாற்றி வந்தேன்.எல்லா வங்கிகளிலும் ஆண்டுக்கு
ஒருமுறை Internal Audit எனப்படும் ஆய்வு நடத்தப்படும்.

அவ்வாறு ஆய்வு செய்வதற்காக எங்களது
சென்னை வட்டார ஆய்வு அலுவலகத்திலிருந்து
இருவர் கொண்ட குழு வந்தது. அதன் தலைவராக
வந்த ஆய்வாளர் நான் எங்களது சென்னை
கோடம்பாக்கம் கிளையில் உதவி மேலாளராக
பணிபுரிந்தபோது எனக்கு சார்பு மேலாளராக
(Sub Manager) இருந்த திரு ஷெனாய் அவர்கள்.
(அவரது முழுப்பெயர் வேண்டாமென என
எண்ணுவதால் அதைக்குறிப்பிட விரும்பவில்லை)

ஆய்வுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நாட்கள்
நான்கு.புதன் கிழமை காலை வந்த அவர்கள்
சனிக்கிழமை மதியம் தங்களது ஆய்வை
முடித்துக்கொண்டார்கள். அன்று மாலை திரு ஷெனாய்
அவர்கள், “சபாபதி, இங்கிருந்து வைத்தீஸ்வரன்
கோவில் எவ்வளவு தூரம்?” என்றார். அவர் கோவிலுக்கு
போக கேட்கிறார் என எண்ணிக்கொண்டு,“சார்.
இங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் 76 கிலோ
மீட்டர்கள். கோவிலுக்கு போகவேண்டுமா? நான்
வேண்டுமானால் கூட வரட்டுமா?” என்றேன்.

உடனே அவர் “இல்லை. இல்லை. அங்கு நாடி சோதிடம்
பார்ப்பதாக அறிந்தேன். அங்கு போய் சோதிடம்
பார்ப்பதற்காக கேட்டேன். மேலும் நீங்கள் இல்லாமல்
போக விரும்பவில்லை. எனவே நீங்கள் அவசியம்
வரவேண்டும்”என்றார்.

அதற்கு காரணம் அவருக்கு தமிழில் சரியாக பேச வராது.
அவர் கேரளாவில் உள்ள காஞ்சாங்காடு என்ற
ஊரைச்சேர்ந்தவர். தாய் மொழியோ கொங்கணி.
பிறந்து வளர்ந்து படித்தது, கேரளாவில் என்பதால்
மலையாளம் அவருக்கு தெரியும். எனவே
வைத்தீஸ்வரன் கோவிலில் சோதிட நிலையத்தில்,
சோதிடம் பார்க்கும்போது தமிழில் உரையாட என்னை
துணைக்கு அழைத்தார்.

எனக்கும் நாடி சோதிடம் என்றால் என்ன என்று அறிய ஆசை.

(இந்த இடத்தில் நாடி சோதிடம் பற்றி. இந்த உலகத்தில்
பிறந்த பிறக்கப்போகின்ற அனைவருடைய
விவரங்களையும்,அவர்களுக்கு நடக்க இருப்பது
பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அகத்திய
முனிவரால் கணிக்கப்பட்டு பனை ஓலையில்
எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
அந்த ஓலைசுவடிகள் பின்பு தஞ்சை சரஸ்வதி
மஹால் நூல் நிலையத்திலிருந்தன என்றும்,அவைகள்
ஆங்கில அரசால் ஏலம் விட்டபோது, வைத்தீஸ்வரன்
கோவிலை சேர்ந்த ஒருவரால் அவைகள்
வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை
வாங்கியவரின் வழித்தோன்றல்கள் அந்த ஓலைச்
சுவடிகளைப் படித்துதான் வருபவர்களுக்கு சோதிடம்
சொல்கிறார்களாம்)

எனவே நானும் அவரிடம்,“சரி சார். நான் வருகிறேன்.
நாம் இங்கிருந்து நாளை (ஞாயிறு) காலை கிளம்பி
நேராக மயிலாடுதுறை செல்வோம். வைத்தீஸ்வரன்
கோவில் சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடையே
உள்ளதால், மயிலாடுதுறை போய் கோவிலுக்கு
போய் விட்டு திரும்பும்போது வைத்தீஸ்வரன் கோவில்
வந்து நீங்கள் சொல்லும் நாடி சோதிடம் பார்த்து
வரலாம்” என்றேன்.

மறுநாள் காலை 8 மணிக்கு கடலூரிலிருந்து
கிளம்பி 11 மணி வாக்கில் மயிலாடுதுறை
சென்றடைந்தோம். கோவிலுக்கு போய்விட்டு
பின் அங்கே கோவிலுக்கு அருகில் உள்ள எனது
மாமனார் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, மதியம் 1 மணிக்கு
கிளம்பி 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
வைத்தீஸ்வரன் கோவில் சென்று இறங்கினோம்

தொடரும்

8 கருத்துகள்:

 1. என்ன சார்,பதிவை ரொம்பச் சின்னதாக்கிடீங்க!
  காக்க வைக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
  பதிவேற்றுவதில் சிரமம் இருந்ததால் பதிவின் அளவைக்குறைத்து பதிவெற்றியிருக்கிறேன். அடுத்த பதிவில் சரியாகிவிடும்.

  பதிலளிநீக்கு
 3. நாடி ஜோசியத்தை பற்றி பல விதமான கருத்துக்கள் உலவுவதால் நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளது .. தங்கள் அனுபவத்தை அறிய ஆவலாக உள்ளேன் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு வாசுதேவன் அவர்களே!.
  பொறுத்திருங்கள்.எனது அனுபவத்தை வரும் பதிவுகளில் படிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sir nengal senra anupavathai engaluku sollungal nangal senru pakalam enru irukirom naadi jothidam unmaiya poiya solungal sir

   நீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு நாகராஜ் ராமன் அவர்களே! நீங்கள் கேட்டதிற்கான பதிலை, நம்பலாமா நாடி சோதிடத்தை? 4 என்ற தொடரின் இறுதியில் முடிக்கும்போது எழுதியுள்ளேன். தாங்கள் இந்த தொடரை முழுதும் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. இதைப்பற்றி எனது தொடரின் இறுதியில் பின்னூட்டம் இட்ட நண்பர் திரு Ramanans எழுதியதையும் படியுங்கள்.

   நீக்கு
 5. அன்பின் நடன சபாபதி - நாடி ஜோஸ்யம்- மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! தொடர்கள் முழுவதையும் படித்து தங்கள் மேலான கருத்தை எழுதுங்கள்.

   நீக்கு