புதன், 23 மார்ச், 2011

நினைவோட்டம் 43

நண்பர் பழமலை கவிதை எழுதுவது மட்டுமல்லாமல்
பேச்சுத் திறனிலும் வல்லவர்.அநேக பேச்சுப்போட்டிகளில்
கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.நானும் அவரோடு
இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.
அவர் கலந்துகொண்ட அனைத்து போட்டிகளிலும்
முதற் பரிசு அவருக்குத்தான்.

பள்ளியில் வளர்த்த தமிழ் ஆர்வத்தை,எங்களைப்போல்
அப்படியே விட்டுவிடாமல் கல்லூரியிலும் தொடர்ந்தார்
நண்பர் பழமலை.நாங்களெல்லாம் மருத்துவர்களாகவும்,
பொறியாளர்களாகவும், வேண்டி புகுமுக வகுப்பில்
(தற்போதைய 12 ஆம் வகுப்பு) கணிதம்,அறிவியல்
பாடங்களை எடுத்து படித்தபோது,அவர் கலைத்துறை
பாடங்களை எடுத்துப்படித்து, அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலை(B.A)யில்
சேர்ந்தார்.அதற்கு பின்அங்கேயே முதுகலை(M.A)
பட்டமும் பெற்றார்.

அங்கே அவர் படிப்பில் முதன்மையாக
இருந்தார் என்பதற்கு அவர் பல்கலைக்கழகத்தில் பெற்ற
தங்கப்பதக்கமே சான்று.

படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து பேராசிரியராக
பணிபுரிந்தாலும் அவரது கவிதைப்பயணம்
தொடர்ந்துகொண்டுதான் இருந்தது/இருக்கிறது!

அவரது “பழமலை இருக்கானா, பார்த்துட்டு
போக வந்தேன்’
என்று அவரை வளர்த்த
ஆயியை(பாட்டியை)பற்றி அவர் எழுதிய கவிதை
(கவிதையின் ஆரம்பம் நினைவில் இல்லை)
ஒன்று குமுதத்தில் வெளியானபோது தான்
நண்பர் பழமலையின் புதிய பரிமாணம்
பல பேருக்கு தெரிய வந்தது!

தேசியக்கவி பாரதியைப்பற்றி சொல்லும்போது
சொல்வார்கள்.அவரது கவிதைகளைப் படிக்க
அகராதி தேவையில்லை என்று.காரணம் அவர்
எல்லோருக்கும் புரியும் வண்ணம்,சாதாரணமாக
நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் சொற்களை
கொண்டே கவிதை எழுதியிருப்பார்.

கவிஞர் பழமலையும் அவ்வாறே.அவரது கவிதை
ஆர்ப்பாட்டமில்லாத, எளிய நடையில் இருக்கும்.
அதுவும் தென்னாற்காடு மாவட்டத்தை (தற்போது
கடலூர்,விழுப்புரம் என இரு மாவட்டங்களாகி
விட்டன)சேர்ந்தவராதலால்,அவரது கவிதையில்
வட்டார வழக்கே அதிகம் காணப்படும்.

‘சனங்களின் கதை’ என்ற அவரது கவிதைத்
தொகுப்பில் எளிய நடையில்,மனதைப்பிழியும்
கவிதை வரிகள் இதோ.

"அம்மா, உன் வறுமை
வாழைப்பழத்தின்
தோலும் நாங்கள் எறிந்தால் தான்!”


"கீழைக் காட்டு வேம்பு கசந்தது
அம்மா சோகம் கேட்டுக் கேட்டுத்தான்''


வறுமையையும்,சோகத்தையும் இதைவிட
படம் பிடித்துக் காட்டமுடியுமா என்ன?

விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்
விழுப்புரத்திலேயே வசித்துவருகிறார்.
இவர் தமிழுக்கு ஆற்றிய மற்றும் ஆற்றும்
பணியை பாராட்டும் விதமாக தமிழக அரசு
2009 சனவரி 15 ஆம் நாள்
திரு கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பெயரால்
விருதும், பொற்கிழியும் அளித்து
சிறப்பு செய்தது.

நண்பர் திரு த.பழமலை அவர்கள்
நம்அனைவருக்கும் அறிமுகமான
கவிஞர்தான்.அவர் வேறு யாருமில்லை.

அவர்தான் ‘கவிஞர் பழமலய்’என அழைக்கப்படும்
எனது வகுப்புத்தோழர்.

எனது நண்பர் ஒரு புகழ் பெற்ற கவிஞர் என்பதில்
எனக்கு பெருமையே!நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. ஒரு சோதிடர்,ஒரு கவிஞர் என்று களை கட்டுகிறதே உங்கள் தோழர் பட்டாளம்! பழமலய் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமான ஒன்றே!கொஞ்சம் படித்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.
  'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றார் கவியரசர். நண்பர்கள் அமைவதும் அவ்வாறே என எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  பதிலளிநீக்கு