ஞாயிறு, 20 மார்ச், 2011

கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (3)

திரும்பி வந்து பார்த்தால், மின் பலகை, கவுன்ட்டர்
A ன் வரிசை எண் 45 யும் Counter E ன் வரிசை
எண் 41 எனவும் காட்டியது. எங்களுக்கு ஒரே
சந்தோஷம். மதியம் ஒரு மணிக்குள் வேலை
முடிந்துவிடும்.சீக்கிரம் வீட்டுக்கு போய்விடலாம்,
என நினைத்து முதல் தளத்தில் காலியாக இருந்த
இருக்கையில் அமர்ந்தோம்.

பதினைந்து நிமிடம் போன பிறகு பார்த்தால்
எங்களது வரிசையில் எந்த முன்னேற்றம் இல்லை.
வரிசை எண் அதே 41 ஐ காட்டியது. ஆனால்
A வரிசை எண் 53 ஐ தொட்டிருந்தது. அங்கிருந்த
ஊழியர்களிடம் அது பற்றி கேட்டதற்கு சரியான
பதிலை தரவில்லை.

சரியாக 1 மணிக்கு அனைவரும் சாப்பிட
சென்றுவிட்டார்கள்.உணவு இடைவேளை
1 மணியிலிருந்து 2 மணி வரையாம். எங்கள்
தலைவிதியை நொந்துகொண்டு அங்கேயே
சாப்பிட போகாமல் காத்திருந்தோம்.

அடிக்கடி கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டே
இருந்தேன்.அருகில் எங்களைப்போல்
உட்கார்ந்திருந்தவர்கள்,எதிர் கட்சி தலைவர்
செல்வி ஜெயலலிதா 160 தொகுதிக்கான
வேட்பாளர்கள் அறிவித்தபின்
நடந்துகொண்டிருக்கும் அரசியல் நிகழ்வு
பற்றி காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
செவிக்கு உணவு கிடைத்ததால், வயிற்றுக்கு
உணவில்லாதது தெரியவில்லை!!

சரியாக இரண்டு மணிக்கு மீண்டும் இரண்டாம்
தளம் சென்றோம். Counter A ன் வரிசையில்
முன்னேற்றம் இருந்தாலும்,எங்களது Counter ன்
வரிசை எண் மெல்ல மெல்ல 43 ஐ தொட்டிருந்தது.
யாரும் சரியான காரணத்தை சொல்லாததால்,
இனி வெளியே காத்திருப்பதில் பிரயோஜனம்
இல்லை என உள்ளே சென்றோம்.

ஆனால் அங்கேயே,A முதல் E வரை உள்ள
Counter களும்,பணம்/காசோலை கொடுக்கும்
மூன்று Counter களும் இருந்ததால் ஒரே
கூட்டம். உள்ளே நகரக்கூட முடியவில்லை.

இந்த நேரத்தில் பொதுமக்களையும் குறை
சொல்லவேண்டும்.தங்களது வரிசை எண்
வராதவர்கள் கூட அங்கே காத்திருந்தார்கள்.
அதற்குள் எங்கள் வரிசை எண்ணை கூப்பிட்டதால்,
எல்லோரையும் தள்ளிக்கொண்டு Counter சென்று
விண்ணப்பத்தை கொடுத்தேன்.நல்ல
வேளையாக அங்கிருந்த பெண் ஊழியர் மிகவும்
பொறுமையாக என் விண்ணப்பத்தை
பார்த்துவிட்டு,அதில் PISON என எழுதிவிட்டு,
‘நீங்கள் கோழிக்கோடில் Passport வாங்கி
இருப்பதால் D Counterசென்று,இதைக்கொடுங்கள்.
அவர்கள் Verification சான்றிதழ் தருவார்கள்.
அதை எடுத்துக்கொண்டு வாருங்கள்’
எனக்கூறிவிட்டார்.

‘என்ன இது சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி
வரம் கொடுக்காது போல இருக்கிறதே என
நினைத்துக்கொண்டு D Counter சென்றேன்.

நல்லவேளையாக அங்கே கூட்டம் அதிகமில்லை.
என் முறை வந்ததும்,அங்கிருந்த அலுவலர் எனது
விண்ணப்பத்தில் PISON என இருப்பதை பார்த்ததும்,
என் பழைய Passport வாங்கி அதில் உள்ள
எண்ணை அவரது கணினியில் உள்ள
விசைப்பலகையில் தட்டியதும் எனது புகைப்படமும்
என்னைப்பற்றிய விவரங்களும் வந்தன. உடனே
என்னை நிமிர்ந்து பார்த்து புகைப்படத்தில்
இருப்பது நான்தான் என உறுதி செய்துகொண்டு,
உடனே அந்த விவரம் உள்ள பக்கத்தை Print
செய்தார். அந்த நகலை எடுத்து அதில் புகைப்படமும்
மற்ற விவரங்களும் சரிபார்க்கப்பட்டது என
முத்திரையிட்டு கையொப்பமிட்டு கொடுத்தார்.
அப்போது தான் கவனித்தேன் PISON என்றால்
Passport Information Services On Net
என்பதன் சுருக்கம் என்பதை.

அதை எடுத்துக்கொண்டு திரும்பவும் E Counterக்கு
ஓடினேன்.அங்கு அதை காட்டியவுடன்,அந்த
ஊழியர் என் விண்ணப்பதோடு இருந்த
நகல்களையும் அசல் ஆவணங்களையும் ஒப்பிட்டு
சரிதானா என பார்த்தார்.பின் அந்த விண்ணப்பத்தில்
எனது கையொப்பத்தை வாங்கிக்கொண்டு, எனது
Passport ல் Cancelled என்ற முத்திரையை குத்தி,
அவைகளை ஒரு கோப்பில்(File) இட்டு என்னிடம்
கொடுத்து, வங்கி காசோலையுடன் அந்த கோப்பை
காசோலை/பணம் செலுத்தும் Counter ல் தருமாறு
சொன்னார்.முக்கால் கிணறு தாண்டிய மகிழ்ச்சியோடு
காசோலை/பணம் செலுத்தும் Counter க்கு சென்றேன்.

அதற்காக மூன்று Counter கள் இருந்தாலும் இரண்டில்
மட்டுமே ஊழியர்கள் இருந்தனர். அங்கே நீண்ட
வரிசையில் இருந்தவர்களிடம் கேட்டபோது,
மூத்த குடிமக்களுக்காக தனி Counter ஏதுமில்லை
என்றும் அங்குதான் எல்லோரும் நின்று கட்டவேண்டும்
என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் வரிசையில்
நின்றேன்.ஆனால் வரிசை நகருவதாகக்காணோம்.
Counter ல் இருந்தவர் வெகு நிதானமாக இரசீது
தந்துகொண்டு இருந்ததால் Slow Cycle Race
போல கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது.

என் முறை வந்து கொடுத்கபோது,காசோலை
பின்னால் எனது பெயரையும்,எனது கைப்பேசி
எண்ணையும் எழுதித்தருமாறு
திருப்பிக்கொடுத்துவிட்டார். இதை வெளியே
தகவல் பலகையில் எழுதி இருந்தால்,
எல்லோருமே அவைகளை எழுதிக்கொண்டு
வந்திருப்பார்கள்.நேரமும் மிச்சமாயிருக்கும்.

கேட்ட விவரங்களை எழுதிக்கொடுத்து,அவரிடம்
இரசீது பெற்றபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை
சொல்ல வார்த்தை இல்லை. நேரத்தை
பார்த்தபோது மணி 3-15 ஆகியிருந்தது.

அதற்குள் என் அண்ணியும் என் மகனும்
காசோலைகளை செலுத்தி இரசீது பெற்றுவிட்டதால்
அனைவரும் கீழே வந்தோம்.அப்போதுதான்
மதியம் சாப்பிடாதது நினைவுக்கு(?)வந்தது.

அந்த நேரத்தில் மதிய உணவு எந்த உணவகத்திலும்
இருக்காது என்பதால் வில்லேஜ் சாலையில் உள்ள
ராஜ் பவன் சென்று சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டே
வீடு திரும்பினோம்.

வீட்டிற்கு வந்தபோது மாலை மணி 5.

காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டு சென்ற
நான் கிட்டத்தட்ட 10 மணி நேரம் இந்த கடவுச்சீட்டு
புதுப்பிக்கும் பணிக்காக செலவிட்டிருக்கிறேன் என
நினைத்தபோது,மலைப்பாகவும்,அலுப்பாகவும்
இருந்தது. உண்மையில் நாம் தொழில் நுட்பத்தில்
முன்னேறியிருக்கிறோமா என சந்தேகம் வந்தது.

இந்த பணியை அரசு நினைத்தால் பொது மக்களுக்கு
கஷ்டம் இல்லாமல் அவர்களுக்கும் தொந்தரவு
இல்லாமல் மிக சுலபமாக முடிக்கமுடியும்.

வரிசை எண் கொடுப்பதற்கு அனைவரையும்
வரச்சொல்லிகூட்டம் கூட்டி வரிசை எண்
Slip ஓட்டுவதற்கு பதிலாக, On Line ல்
பதிவு செய்யும்போதே நாளை குறிப்பிடும்போது
வரிசை எண்ணையும் அங்கு வரவேண்டிய
நேரத்தையும் கொடுத்துவிடலாம். இதன் மூலம்
அனைவரும் ஒரே நேரத்தில் வரத்தேவையில்லை.
மேலும் பணி செய்யும் இடத்திலும் அதிக கூட்டம்
இருக்காது. வரும் அனைவருக்கும் உட்கார
இருக்கை கிடைக்கும்.

தற்சமயம் Thatkal மூலம் தினம் 500 பேர்
வருவதாகவும் அதனால்தான் கூட்டம் அதிகம்
என்றும் சமீபத்தில் செய்தித்தாளில் படித்தேன்.
அதற்கு காரணம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்
நேரத்தைக் கணக்கிடாமல் கேட்கும் நாளை
கொடுப்பதுதான். ஒரு நாளில் எவ்வளவு பேரின்
ஆவணங்களை சரிபார்க்கமுடியும் என்பதை
முடிவு செய்து அந்த அளவுக்கு மட்டும்
நேரத்தைக்குறிப்பிட்டு Appointment கொடுத்தால்
அனைவருக்கும் சௌகரியமாக இருக்கும்.

மேலும் உண்மையிலேயே மூத்த குடிமக்களுக்கும்,
மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தையுடன் வரும்
தாய்மார்களுக்கும் உதவி செய்ய நினைத்தால்
Counter ஐ கீழ் தளத்தில் வைக்கலாம்.

காசோலைகளை வாங்கும் பணியை விரைவுபடுத்தி,
மூத்த குடிமக்களையும் மற்றவர்களையும் சீக்கிரம்
வெளியே செல்ல உதவலாம்.

இந்த பணியை அரசின் துறையால் விரைவாக
செய்ய முடியாது என நினைத்தால்,Outsource
முறையில் இப்பணியை தனியார் நிறுவனங்களுக்கு
கொடுத்து பொதுமக்களுக்கு உதவலாம்.

அரசு இதைச்செய்யுமா?

காலம்தான் பதில் சொல்லவேண்டும்!!!

13 கருத்துகள்:

 1. மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் வசிப்பது அமெரிக்காவில். இங்கு நம் பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியன் கான்சுலேட்-இல் விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக விதிகள் எளிதாக உள்ளன. கொடுக்க வேண்டிய எல்லா சான்றுகள் பற்றி online- இல் தெளிவாக கொடுத்துள்ளார்கள். எல்லாவற்றையும் தபாலில் அனுப்பி வைத்தால் அது கிடைத்த பத்து-பதினைந்து நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் அனுப்பி விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இன்னும் எளிமையாக இருந்தது. நேரே சென்று பார்த்தால் ஒரு வாரத்திற்குள் புதிய பாஸ்போர்ட் கொடுத்து கொண்டிருந்தார்கள்.

  இவ்வளவு பேருக்கு சர்வீஸ் செய்ய போதுமான திட்டமோ அதற்கான அணுகுமுறையோ இல்லாதது தான் பிரச்சனையை. என் மனைவிக்கு சென்னையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டி வந்த பொது நீங்கள் எழுதிய அதே கொடுமையை அவரும் அனுபவிக்க வேண்டியிருந்தது!

  பதிலளிநீக்கு
 2. மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் வசிப்பது அமெரிக்காவில். இங்கு நம் பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியன் கான்சுலேட்-இல் விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக விதிகள் எளிதாக உள்ளன. கொடுக்க வேண்டிய எல்லா சான்றுகள் பற்றி online- இல் தெளிவாக கொடுத்துள்ளார்கள். எல்லாவற்றையும் தபாலில் அனுப்பி வைத்தால் அது கிடைத்த பத்து-பதினைந்து நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் அனுப்பி விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இன்னும் எளிமையாக இருந்தது. நேரே சென்று பார்த்தால் ஒரு வாரத்திற்குள் புதிய பாஸ்போர்ட் கொடுத்து கொண்டிருந்தார்கள்.

  இவ்வளவு பேருக்கு சர்வீஸ் செய்ய போதுமான திட்டமோ அதற்கான அணுகுமுறையோ இல்லாதது தான் பிரச்சனையை. என் மனைவிக்கு சென்னையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டி வந்த பொது நீங்கள் எழுதிய அதே கொடுமையை அவரும் அனுபவிக்க வேண்டியிருந்தது!

  பதிலளிநீக்கு
 3. நீங்க கூறியபடி கண்டிப்பாக இதனை முறைபடுத்தி கூட்டத்தை குறைக்கலாம்தான். மேலும், எத்தனை கவுண்டர்கள் நீங்க மாறினீங்க? ஏன் ஒரே சிஸ்டத்தில உங்க PISON செக் செய்து, ஸ்டாம்ப் செய்ய முடியாதா? ஏன், அதே ஆளும் பணத்தையும் வாங்கி போட்டுகிட்டு வேலைய முடிக்க முடியாதா? அப்போ கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகமான மாதிரியும் இருக்குமே.

  இது டெல்லி வெளியுறவுத் துறை அலுவலகம் வரைக்குமே இப்படித்தான் கூட்டத்தை கூட்டி வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கசப்பான அனுபவத்தை கொடுக்கிறார்கள். என்னவோ போங்க! பாவம் வயசானவுங்க...

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பந்து அவர்களே!

  உங்களுக்கு அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தைப் பெற இங்கு பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பதே தற்போதைய நிலை.இது மாறவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தெக்கிக்காட்டான் அவர்களே! மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது முது மொழி. மனம் இல்லையே. என்ன செய்ய.

  பதிலளிநீக்கு
 6. அப்பா, ஒரு வழியாக முடிந்ததா? கோவையில் second police verification தேவை எனச் சொல்லி இழுத்து அடித்தார்கள்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி திரு கோவிந்தராஜன் அவர்களே!

  பாஸ்போர்ட் ஒரு வாரத்தில் வந்துவிடும் என்றாலும் பின் காவல்துறையினரின் verification இருக்குமாம். பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 8. PISON என்பதை முதலில் POISON என்று படித்து விட்டு என்னடா இது என்று ஆடிப் போய் விட்டேன்!
  இன்னும் ஐந்தாண்டுகள் கழித்தும் நிலைமை இப்படியே இருந்தால் கடவுச் சீட்டைப் புதுப்பிக்காமல் விட வேண்டியதுதான்!
  நன்கு விவரமாக எழுதப்பட்ட பதிவு!

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
  எனக்கு கூட Pison என எழுதியதைப்பார்த்ததும் என்னவோ ஏதோ என நினைத்துவிட்டேன். நல்லவேளை நம்மை Bison என விளிக்காதவரை சந்தோஷந்தான்.

  பதிலளிநீக்கு
 10. கடவுசீட்டினை புதிப்பிக்க பட்ட அவதிகளை மிகவும் கோர்வையாக வர்ணித்து மற்றவர்களுக்கு ( கடவுசீட்டினை புதுபிக்க எண்ணுபவர்களுக்கு ) வழியும் காட்டி விட்டர்கள் ... என்ன என்ன இடையூர்கள் வரும் என்று எதிர்பார்த்து சென்றால் வேதனையின் வலி சற்று குறைவாகவே இருக்கும் ..
  வங்கிகளில் செயல் படுவது போல் " ஒரே ஜன்னல் சேவை " துடங்கினால் சேவையை துரிதபடுத்த இயலும் என்று நினைக்கிறன் . நீங்கள் பட்ட அவதியை பார்த்தால் நம் நாடு இன்னும் பின்தங்கிய நாடாகவே இருப்பது போல் உள்ளது . நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் கடவுசீட்டினை புதுபிக்க பட்ட கஷ்டங்களை கோர்வையாக தினமலர் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுகிறேன் ... அப்பத்திரிகையில் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதை பார்த்து உள்ளேன் . சம்பந்த பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க ஏதுவாக இருக்கும் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!.
  நீங்கள் கூறியதுபோல எல்லாவற்றையும் ஒரே Counter ல் வாங்கினால் உபயோகமாய் இருக்கும். இதே கருத்தைத்தான் திரு தெக்கிக்காட்டான் அவர்களும் சொல்லி உள்ளார்.உங்கள் ஆலோசனைப்படி செய்தித்தாளுக்குஅனுப்பிப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி அன்புடன் மலிக்கா அவர்களே!

  பதிலளிநீக்கு