சனி, 12 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 24அந்த வாடிக்கையாளரின் வேண்டுகோளை, 
உச்ச நீதிமன்றம் அந்த சமயத்தில் தந்த ஒரு தீர்ப்பு 
காரணமாக என் அளவில் நிறைவேற்ற இயலாத 
நிலை அப்போது.

உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பைத் தர காரணம், 
ஒரிஸ்ஸாவில் இருந்த ஒரு 
நாட்டுட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் கிளை 
மேலாளர் ஒருவரின் செயல்பாட்டை அவரது 
வங்கி அங்கீகரிக்காததால் ஏற்பட்ட சிக்கல்தான். 
  
அந்த வங்கியின் கிளையில், அதன் மேலாளர் 
ஒரு வாடிக்கையாளருக்கு கொடுத்திருந்த 
தற்காலிக மிகைப்பற்று (Temporary Overdraft), 
அந்த வாடிக்கையாளர் குறித்த நேரத்தில் 
திருப்பி செலுத்தாததால் வாராக்கடனாக 
(Non Performing Asset) ஆகிவிட்டது. 

அவர் கொடுத்த பணத்தை வசூலிக்காத 
காரணத்தால், அந்த கிளை மேலாளர் மேல் 
அந்த வங்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 
அவரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டது. 

அவர் உயர் நீதி மன்றத்தில் முறையீடு 
செய்தபோது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, 
அவரை திரும்பவும் பணியில் அமர்த்த நீதிமன்றம் 
உத்தரவிட்டது. 

ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து அந்த வங்கி 
உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 
வங்கியின் முறையீட்டை ஏற்று, உயர்நீதி மன்ற 
தீர்ப்பை இரத்து செய்தது உச்ச நீதி மன்றம். 
மேலும் வங்கி மேலாளர், ஒப்பளிக்கத் தகுதிபெற்ற 
அலுவலரிடம்  (Sanctioning Authority) அனுமதி 
பெறாமல் அந்த வசதியை தந்ததால், அவர் 
ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்றும், 
அதனால் முறைப்படி நடத்தப்பட்ட 
விசாரணையின் அடிப்படையில் அவரது தகுதி நீக்கம் 
செய்தது சரியே என தீர்ப்பைத்  தந்தது.

இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லவேண்டியது 
அவசியம் என நினைக்கிறேன். வங்கிகளில் கிளை 
மேலாளர் முதல் வங்கியின் இயக்குனர்குழு 
(Board of Directors) வரை, கடன் மற்றும் மிகைப்பற்று 
வசதிகளை ஒப்பளிப்பு (Sanction) செய்ய, ஒவ்வொரு 
நிலையிலும்  ஒரு குறிப்பிட்ட வரம்பு உண்டு.

எனவே கிளைகளில் உள்ள எல்லா கடன் மற்றும் 
மிகைப்பற்று வசதிகளையும் கிளை மேலாளரே 
ஒப்பளிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் சில 
நேரங்களில் கிளை மேலாளர் ஒப்பளிப்பு செய்யாத 
கணக்குகளில் நான் முன்பு சொன்னதுபோல 
காசோலை பரிமாற்ற அலுவலகம் (Clearing House)  
மூலம் வரும் காசோலைகளை வாடிக்கையாளர் 
கேட்டுக்கொள்வதின் காரணமாக  Pass 
செய்யவேண்டி இருந்தால், அந்த கணக்கில் 
அனுமதிக்கப்பட்ட வரம்பை சில நேரங்களில் 
மீற நேரிடலாம். 

ஆனால் அந்த கணக்கை குறிப்பிட்ட 
காலத்துக்குள் (அதாவது 7 நாட்களுக்குள் - இது 
வங்கிக்கு வங்கி மாறுபடலாம்) நேர் செய்ததும், 
அந்த வசதியை ஒப்பளிப்பு செய்த அலுவலரின் 
ஏற்புக்கு (Approval) எழுதி,  அதைப் 
பெறுவது நடைமுறை.

ஆனால் ஒரிஸ்ஸா நிகழ்வில் என்ன நடந்தது 
என்று தெரியவில்லை. என்ன காரணத்தாலோ 
அந்த மேலாளரின் செயல் ஆமோதிக்கப்படவில்லை. 
அதனால்தான் அவர் மேல் நடவடிக்கை 
எடுக்கப்பட்டது. ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் 
பிறகு வங்கிக் கிளைகளில் யாருமே அது போன்ற   
தற்காலிக வசதியை வாடிக்கையாளருக்குத் 
தரத் தயங்கினார்கள். 

உங்களில் சிலர் நினைக்கலாம். ஏன் 
மேலதிகாரிகளுக்கு எழுதி ஒப்புதல் பெற்று 
தரலாமே என்று. காசோலை பரிமாற்றம் மூலம் 
மதியம் 12 அல்லது 1 மணிக்கு வரும் 
காசோலைகளை அதே நாளில் மதியம் 2 அல்லது 
3 மணிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் 
இல்லாவிடில் திருப்பி அனுப்பிவிடவேண்டும். 
இல்லாவிடில் அவைகள் Pass செய்ததாக 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

வாடிக்கையாளர்கள் கணக்கில் தேவையான பணம் 
இல்லாவிடில் மேல் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட 
வரம்பை மீற, அவர்களது அனுமதியை அந்த 
இரண்டு மணி நேரத்திற்குள் பெற்றால்தான் 
அதை செய்யமுடியும்.

அப்போதிருந்த சூழ்நிலையில் தொலைபேசியில் 
தொடர்புகொண்டாலும், எழுத்து மூலம் 
பரிந்துரையை அனுப்பவேண்டும்.(ஏனெனில் 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு யாரும் 
எழுத்து மூலம் அனுமதிபெறாமல் அந்த வசதி
தருவதை நிறுத்திவிட்டனர்.) 

அப்படியே தொலையச்சு (Telex) மூலம் 
பரிந்துரையை அனுப்பினாலும், அந்த மேலதிகாரி 
அந்த நேரத்தில் அவர் பணி நிமித்தம் காரணமாக   
வெளியூர் செல்லாமல் ஊரில் இருக்கவேண்டும். 
அப்படியே அனுப்பினாலும், அதற்கான 
அலுவலக குறிப்பை (Office Note) கீழ்மட்டத்தில் 
உள்ள அலுவலர்கள் எழுதி அவர் முன் வைத்து 
அனுமதி பெற்று, அந்த அனுமதியை 
தருவதற்குள் Clearing House நேரம் முடிந்துவிடும்.

எனவே யாரும் அதை முயற்சி செய்வதில்லை. 
அப்படி காசோலைகள் வந்து வாடிக்கையாளர்களின் 
கணக்கில் போதிய பணம் இல்லையென்றால், 
வங்கி மேலாளர்கள் அவற்றை திருப்பி 
அனுப்பிக்கொண்டு இருந்தனர். 

இதனால் வணிகர்களுக்கும் தொழில் 
நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்கள் 
எண்ணிலடங்கா. அதை சரி செய்ய அவர்கள் தங்கள் 
சங்கங்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகி 
ஆவன செய்ய அரசிற்கு விண்ணப்பித்துக்கொண்டு 
இருந்த காலம் அது. 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த வாடிக்கையாளர் 
என்னை அணுகி தாங்கள் கொடுத்துள்ள காசோலை 
அன்றைய Clearing மூலம் வரும் என்றும் அந்த 
காசோலையை அவர்களது கணக்கில் பற்று (Debit) 
 வைத்தால் அவர்களது கணக்கில் உள்ள தொகை 
அனுமதிக்கப்பட்ட வரம்பை விட ரூபாய் 15,000  
அதிகமாகிவிடும் என்றும், எனவே அந்த 
காசோலையை திருப்பாமல் Pass செய்யுமாறும்  
அந்தக் தொகையை மறு நாள் கட்டிவிடுவதாகவும் 
சொன்னார்.

அப்போது மணி 11 இருக்கும். அந்த 
வாடிக்கையாளர் முன்பாகவே திருவனந்தபுரத்தில் 
இருந்த எனது துணைப் பொது மேலாளரை தொடர்பு 
கொண்டேன்.

தொலைபேசியை எடுத்த எனது Boss, விவரத்தைக் 
கேட்டுவிட்டு அந்த காசோலை Clearing ல் வந்தபிறகு, 
எழுத்து மூலம் பரிந்துரையை அனுப்புங்கள். என்று  
 சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். 
(அந்த  தீர்ப்புக்குப் பின் எல்லோருமே அதிக கவனமாக 
இருக்க தொடங்கிவிட்டனர்.) 

அந்த வாடிக்கையாளரிடம் எனது Boss சொன்னதை 
சொன்னதும் அவர் இன்னும் ஒருமணி நேரம் தானே. 
நான் இங்கேயே இருந்து நீங்கள் அனுமதி பெற்று  
Pass செய்ததும் போகிறேன். என்று என் முன்னேயே 
அமர்ந்துவிட்டார்.

எனக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. 
அந்த காசோலை வந்து பரிந்துரையை அனுப்பி, 
குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதியை பெறமுடியுமா 
என்ற கவலையில் அமர்ந்து, Clearing House சென்ற   
எங்கள் வங்கி ஊழியரின் வருகைக்குக் காத்திருந்தேன்.


தொடரும்

14 கருத்துகள்:

 1. நீண்ட இடைவெளி ஆகிவிட்டது எனக்கும் இணையத்துக்கும். விட்டுப் போன உங்களின் தொடர் நினைவலைகளை முழுமையாகப் படித்துவிட்டு மீண்டும இணைந்து கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருக திரு பால கணேஷ் அவர்களே! தொடர்வதற்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. எவ்வாளவு எதிர்பாரா சிக்கல்கள்.அதை சமாளித்த விதத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 3. அந்த ஒரு மணி நேரம் கழித்து என்ன ஆகியிருக்கும் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! நடந்ததை அறிய தயைசெய்து காத்திருக்கவும்.

   நீக்கு
 4. Discretionery Powers ஐ நடைமுறைப் படுத்துவதில் பல இடையூறுகள் வருவது இயல்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. வங்கி நடைமுறைகளைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளீர்கள்;நன்றி;சஸ்பென்சை சீக்கிரம் உடையுங்கள்!
  சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! சஸ்பென்ஸ் அல்ல அது. மன உளைச்சல் தான். அது அடுத்த பதிவில் தீர்ந்துவிடும்! உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 6. இக்கட்டான நிலைகளை சமாளிக்கும் ஆற்றல் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  இனிய பொங்கல் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. அன்பின் நடன சபாபதி - உச்ச நீதி மன்றத் தீர்ப்பினை - வேத வாக்காகக் கருத வேண்டியதில்லை - நாம் செய்யும் செயல்கள் நமக்குச் சரியெனப் பட்டால் நாம் செய்யலாம். இச்செயல் முறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும் - நம்க்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே உள்ள உறவு நலல் முறையில் இருந்தால் - நாம் சொல்வதை - வங்கியின் வளர்ச்சியினை மனதில் கொண்டு அனுமதி அளிக்கும் வழக்கமும் உண்டு - பெரும்பாலும் வங்கிகள் இத்தீர்ப்புகளைப் பொதுவாகக் கருத்தில் கொள்வதில்லை, நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொல்வது சரி. வங்கியின் செயல் முறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆனால் எங்கள் வங்கியில் அப்போது இருந்த நிலை எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

   நீக்கு