செவ்வாய், 15 ஜூன், 2010

நினைவோட்டம் 23

நான் படித்தபோது பெண்ணாடம் சிறிய ஊராக இருந்தபோதும், பஸ், ரயில் போன்ற வசதிகள் இருந்தன.ஆனால் மின்வசதி இல்லாததால் லாந்தர் விளக்குகள்தான் உபயோகத்தில் இருந்தன.

ஆனால் ஒவ்வொரு தெருவிலும் ஊராட்சி மன்றத்தால் நிறுவப்பட்ட விளக்கு கம்பங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இரவு முழுவதும் எரிவதற்கு ஏற்பாடு செய்திருந்ததால் மின் வசதி இல்லாத குறை தெரியவில்லை.

பேரூந்து நிறுத்தத்திலிருந்து இரயில் நிலையம் வரை வரிசையாய் இரு மருங்கிலும் மரங்கள் அணி வகுத்து நிற்பது ஒரு கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (ஆனால் இன்றோ அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு வரிசையாய் கான்க்ரீட் கட்டிடங்கள் அவைகளின் இடத்தை
ஆக்கிரமித்துள்ளன.)

அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சமே பெண்ணாடத்தில் இருந்ததில்லை. நிலத்தடி நீர் சுமார் பத்தடிக்கு கீழேயே கிடைத்ததால் ஒவ்வொரு வீட்டிலும் கைகளால் இயக்கும் நீரேற்றும் பம்புகள் இருந்தன.

இருந்தாலும் நான் இருந்த தெருவில் உள்ள என் வயது பையன்கள் அனைவரும் அருகே ஓடும் கால்வாய்க்கு சென்றே குளித்துவருவோம். போகும் வழியில் உள்ள இலுப்பை தோப்பினூடே காலையில் செல்வது ஒரு இனிய அனுபவம். (இப்போது அந்த இலுப்பை தோப்பும் காணாமல் போய்விட்டது.)

காலையில் வீட்டை விட்டு 6 மணி சுமாருக்கு குளிக்க கிளம்பினால் வாய்க்காலில் கும்மாளம் போட்டுவிட்டு திரும்பும்போது 7 மணிக்கு மேல் ஆகிவிடும். வந்தவுடன் பெரியம்மாவின் சொல்படி திருநீறு பூசி ,சாமி கும்பிட்டுவிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்ல தயாராவேன்.

பள்ளிக்கு நாங்கள் ஒரு கூட்டமாக சென்று மதிய இடைவேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வோம். இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. மதிய இடைவேளை நேரம் ஒரு மணி நேரம்தான். அதற்குள் ஓடோடி வந்து (காலில் செருப்பில்லாமல் தான்) சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும். காரணம் நான் முன்பே சொன்னபடி எங்கள் வகுப்பு அறைகள், பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால்.

மாலையில் இந்தி வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும் கைகால் கழுவிவிட்டு காப்பி குடித்துவிட்டு, இரவு படிப்பதற்காக லாந்தர் விளக்கின் கண்ணாடியை துடைப்பேன். அந்த லாந்தர் எனது பெரியம்மாவால் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டதாம். ஒவ்வொரு நாளும் அதை எடுக்கும்போதும் எனது பெரியம்மா 'பார்த்து துடைப்பா.பத்திரம். இதை நான் வாங்கி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. கீழே போட்டுவிடாமல் மெதுவாக துடை' என்பார்கள்.

லாந்தரை எடுத்து, அதன் கம்பி கூட்டிலிருந்து கண்ணாடியை வெளியே எடுத்து என் மடி மீது வைத்துக்கொண்டு விபூதியைக்கொண்டு, அதை துடைத்து, திரும்பவும் மாட்டுவதற்குள் வேர்த்து விறுவிறுத்துவிடும். அப்படி ஒரு நாள் துடைக்கும்போது , அதை கீழே போட்டு உடைத்துவிட்டேன். அதற்காக பெரியம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் மறக்க முடியாதவை.

இந்த நேரத்தில் எனது பெரியம்மாவைப்பற்றி சொல்லவேண்டும். அவர்கள் இளம் வயதிலேயே திருமணமாகி, அறியாப்பருவத்திலேயே கணவனை இழந்தவர்கள். அதனால் எந்த நேரமும் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பார்கள். தினம் சாமி கும்பிட்டுவிட்டுதான் எதையும் தொடங்கவேண்டும் என்று சொல்வார்கள். என்னிடம் கண்டிப்பாக இருந்தாலும், என் பேரில் ஆசையாக இருந்தார்கள்.

எனக்காக அவர்கள் தன் சௌகரியத்தை பாராது, என் விருப்பப்படி சமையல் செய்து என்னை படிக்கவைத்ததை இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த ஆண்டு பள்ளியில் ஒரு கட்டுரைப்போட்டி வைத்திருந்தார்கள். எதோ ஒரு குருட்டு தைரியத்தில் நானும் கலந்துகொண்டேன். கட்டுரையை பாதி எழுதும்போதே பேனாவில் மை தீர்ந்துவிட்டதால் மேலே எழுதமுடியாமல் தாளை கொடுத்துவந்துவிட்டேன். போட்டியின் முடிவை அறிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அதில் மூன்றாவது பரிசு எனக்கு கிடைத்து இருந்தது.

பரிசாக பெண்ணாடத்தில் அப்போது இருந்த 'புதுமை பிரசுரம்' என்ற நூல்கள் வெளியிடும் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட 'கடல் கன்னி' என்ற புதினம் ஒன்றை கொடுத்தார்கள்.

கல்வி ஆண்டு முடிந்தபோது, 'ப்ராத்மிக்' என்ற இந்தி தேர்வையும், எட்டாம் வகுப்பின் இறுதித் தேர்வையும் எழுதிவிட்டு ஊருக்கு திரும்பினேன். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது வேறு ஊருக்கு செல்லவேண்டும் என்பதை நினைத்தபோது வருத்தமாக இருந்தது.

ஏனெனில் அரியலூரைவிட பெண்ணாடத்தில் சுதந்திர காற்றை சுவாசித்தேன் என்பதால்தான்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. எனது பதிவில் இருந்த பின்னூட்டத்தின் வழியாக பெயர் புதிதாக இருக்கிறதே என்று தான் உங்களது வலைத்தளம் வந்தேன். "பென்னாடத்து நினைவுகள் " படிக்க சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. கார்த்திகா வாசுதேவன் அவர்களே! வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி. தங்களைப்போன்றோரின் இடுகைகள் என்னை ஊக்கப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.

  கட்டுரையின் தலைப்பு ஏதும் நினைவிருக்கிறதா?

  தங்களின் ஊர் புகைப்படங்கள் இவற்றைச் சேர்த்தால் பதிவு இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து,

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அந்த கட்டுரையின் தலைப்பு ஏனோ நினைவில் இல்லை. நீங்கள் சொல்வதுபோல் ஊரின் படங்களை இணைத்திருக்கலாம். இனி இணைக்க முயற்சிக்கிறேன்.

   நீக்கு