புதன், 8 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 28

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டவை அநேகம். அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள். இந்த நேரத்தில் அவர்களை நினைத்து வணங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என் மனதில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களுடைய தன்னலமில்லா சேவையே
என்பது தான் உண்மை.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்க முடியாதவர்கள் பலர்.அவர்களைப்பற்றி எழுதுவது அவர்களுக்கு நான் தரும் மரியாதை என எண்ணுகிறேன்.

எனக்கு தமிழிலே ஆர்வம் வரக்காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள்.ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர்.

தூய வெள்ளை ஜிப்பாவுடனும் தோளில் துண்டுடனும் அவர் வகுப்பறையில் நுழையும்போதே எங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். காரணம் அவர் பாடம் நடத்திய விதம். எவ்வளவு கடினமான பாடலானாலும் பொருள் புரியும் வண்ணம் சொற்களை பிரித்து அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள். நான் முன்பே சொன்னது போல அப்போதெல்லாம் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என இரு பாடப்பிரிவுகள் உண்டு.

அனைவரும் கட்டாயமாக பொதுத்தமிழைப்படித்தாக வேண்டும்.சிறப்புத்தமிழ் எடுக்காதவர்கள் வடமொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இலக்கண பாடம் இருந்ததால் சிறப்புத்தமிழ்தான் கடினமாக இருக்கும்.

ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.

அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிகரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.

(அவர் வைத்த போட்டியில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டதும், எங்களில் சிலர் பின்னால் கவிஞர்கள் ஆனதும் தனிக்கதை.அந்த வகுப்புத்தோழர்களைப்பற்றி பின்பு எழுதுவேன்.)

எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார்
என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.

இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.

'கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசிவரை வராது' என்பார்கள். ஆனால் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் இன்றுவரை எங்களிடம் இருக்கிறது என்பதை
பெருமையுடன் சொல்லுவேன்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

 1. ஓஓ

  அசையும் தளையும் அடியும் தொடையும் கற்க வேண்டியவயதில் அதைக் கொண்டு வெண்பா எழுதச் செய்வது என்றால் ....!!!!!

  இது போன்ற ஆசிரியர்கள் அமைவது அன்றைய மாணவர்கள் செய்த தவமென்பேன்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
   வங்கியில் பணிபுரியும்போது சந்தித்த ஒரு தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியையிடம் ‘மாணவர்களுக்கு ‘வெண்பா’ எழுத சொல்லிக் கொடுப்பதுண்டா?’ என வினவியபோது. அவர்,’எங்கே சார். நாங்களே அது பற்றி சரியாக படிக்காதபோது எப்படி சொல்லிக்கொடுக்கமுடியும். மேலும் மாணவர்களும் அதையெல்லாம் கற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.’ என்றார்.
   உண்மையில் இந்த கால மாணவர்களைப் பார்க்கும்போது நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் தான். எங்கள் தமிழாசிரியர்கள் புலவர் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் படிக்கும்போது எந்த கேள்வியையும் choice இல் விட முடியாது. இப்போது தமிழ் பட்டப்படிப்பு படிப்பவர்கள் சிலவற்றை மட்டும் படித்து தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்கிறபோது அவர்களை குற்றம் சொல்லி பயன் இல்லை. தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

   நீக்கு