புதன், 6 அக்டோபர், 2010

நினைவோட்டம் 30

எந்த ஒரு நிகழ்வையும் நினைவில் இருத்த, அதோடு தொடர்புடைய நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றை நினைவில் வைத்தால் அந்த நிகழ்வை எப்போதும் மறக்காமல் இருக்கமுடியும் என்பதே எங்கள் ஆசான் திரு M .R .G எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது.

குறு நில மன்னர்கள் தத்து எடுப்பதை தடுக்க கொண்டுவந்த திட்டம் யாரால்
கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் இருத்த, 'தத்து எடுப்பது எப்போது நடைபெறும்?' என எங்களிடம் கேட்டார்.

'நாங்கள் குழந்தை இல்லாதபோது' என சொன்னபோது 'குழந்தை இல்லாத வீடு எப்படி இருக்கும்?' எனக்கேட்டு அவரே சொன்னார். "Dull ஆக இருக்கும். அதாவது அந்த House Dull ஆக இருக்கும். இதை நீங்கள் நினைவில் வைத்தால் அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் Dalhousie பிரபு என சுலபமாக சொல்லிவிடலாம்" என்று.

அது போல மன்னர் அக்பர் தன்னுடைய குதிரைப்படையில் உள்ள குதிரைகளை யாரும் களவாடி செல்லாமல் இருக்க, கால் நடை மருத்துவர்கள் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை பரிசோதித்தபின் அவைகளுக்கு முத்திரை இடுவதுபோல், அந்த குதிரைகளின் உடலின்மேல் எண்ணிக்கை முத்திரை (Tattoo) வைத்தார் என சொன்னது இன்றும் நினைவுக்கு வருகிறது.

அப்போதெல்லாம் S.S.L.C தேர்வில், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி இறுதி படிப்பான S.S.L.C வரை சொல்லிக்கொடுத்த சமூகவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்பார்கள் என்பதால் ஒன்பதாம் வகுப்பில் படித்ததையும் மறக்காமல் இருந்து தேர்வு எழுதவேண்டும்.

எனவேதான் எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறையால் எங்களுக்கு தேர்வு எழுத எந்த கஷ்டமும் இருந்தது இல்லை.

அவர் சொல்லிக்கொடுத்தது 1956 ல். ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அது நினைவில் இருக்கிறது என்றால் அவர் சொல்லிகொடுத்த முறைதான்.

அவரது பயிற்சி எவ்வாறு பிறகு நான் வங்கியில் பணிபுரிந்தபோது உதவியது என்பதை பின்னால் எழுதுகிறேன்.

என்னால் இன்னும் மறக்க முடியாத ஆசிரியர்களில் திரு M.R.G அவர்களும் ஒருவர்.





நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. டல்ஹெஸி பற்றிச் சொன்னது அருமை.

    மறக்கவே மறக்காது.

    இப்படிப் பட்ட வகுப்பில் எப்படி மாணவர்கள் டல் ஆக இருப்பார்கள்.?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு