வெள்ளி, 24 டிசம்பர், 2010

நினைவோட்டம் 33

பத்தாம் வகுப்பில் எங்களது வகுப்பு ஆசிரியர் A.K என

அழைக்கப்பட்ட திரு A.கிருஷ்ணசாமி அவர்கள்.

இவர் முகத்திலும் சிரிப்பை பார்ப்பது அபூர்வம்.


ஒருதடவை பள்ளிக்கு கடலூரிலிருந்து ஆய்வாளர்

வருகிறார் என்றதும், அவர் வரும் நேரம் பாடம்

நடத்த மன்னர் அசோகன் பற்றிய ஆங்கில பாடத்தை

முதல் நாளே நடத்தி, அதில் மறுநாள் கேட்கப்போகிற

சில கேள்விகளையும் பதில்களையும் சொல்லி,

யார் யார் எந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்

என்றும் சொல்லியிருந்தார்.


அதே போல் மறுநாள் ஆய்வாளர் வந்ததும்

தலைமை ஆசிரியர் அவரை அழைத்துக்கொண்டு

நேரே எங்கள் வகுப்புக்கு வந்துவிட்டார்.

முதல் வகுப்பு ஆங்கில வகுப்பு என்பதால்

திரு A.K அவர்கள் பாடம் நடத்திக்கொண்டு

இருந்தார்.


வகுப்புக்கு வந்த ஆய்வாளர் என்ன பாடம்

நடத்துகிறீர்கள் எனக்கேட்டுவிட்டு

அமர்ந்துவிட்டார். ஆசிரியர் பாடம் நடத்தி

முடிந்தவுடன் ஏற்கனவே சொல்லிவைத்தபடி

கேள்வி கேட்க தொடங்கினார்.


முதல் இரண்டு கேள்விகளுக்கு அவர்

சொல்லிக்கொடுத்தபடி இரு மாணவர்கள்

பதில் அளித்தனர். மூன்றாவது கேள்வியை

அவர் எங்கள் வகுப்பு தோழன்

திரு ராஜசேகரன் ராஸிடம் கேட்பதாக ஏற்பாடு.

திரு A.K அவர்கள், ‘ராஸ்’என கூப்பிட்டு

கேள்வி கேட்பதற்கு முன்பே அவன் எழுந்து

பதிலை சொன்னதும் நாங்கள் எல்லோரும்

எங்களை மறந்து சிரித்துவிட்டோம்.


உடனே ஆய்வாளார் அவர்கள் ‘ஏதேது பையன்கள்

கேள்வி கேட்கு முன்பே என்ன கேட்கப்போகிறீர்கள்

எனத்தெரிந்துகொண்டு பதில் சொல்கிறார்களே.

புத்திசாலிகள்தான். பேஷ்.பேஷ்.’ என சொன்னதும்

எங்கள் ஆசிரியர் முகம் போன போக்கை பார்க்கவே

பயங்கரமாக இருந்தது. ஆய்வாளர் போனதும்

ராஸுக்கு திட்டு கிடைத்தது வேறு கதை.


(இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர்

தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்த ‘பள்ளிக்கூடம்’

திரைப்படத்தில் பள்ளியில் ஆய்வாளர் வரும்போது

நடக்கின்ற சம்பவங்களை அவர் காண்பித்தபோது

எல்லா அரசுப்பள்ளிகளிலும், அன்றிலிருந்து இன்று

வரை இதுதான் நடக்கிறது போலும்

என நினைத்துக்கொண்டேன்.)


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. பாவம் அந்த ஆசிரியர்! உங்களைப்போல் அவராலும் அந்த நாளை மறந்திருக்க முடியாது! நல்ல நினைவோட்டம்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. பள்ளி பருவத்தில் அனைவருமே அனுபவித்த சுவையான நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பை இதில் உணர முடிகிறது . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!ஒவ்வொருவருக்கும் இதுபோல் பள்ளியில் நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப்பார்ப்பதே ஒரு தனி சுகம்தான்.

  பதிலளிநீக்கு