நான் தார்வார் வட்டார அலுவலகத்தில் சேர்ந்த
இரண்டாம்
மாதத்திலேயே களத்தில் பணியாற்றும் SPA க்களின்
முதல் கூட்டத்தை கூட்ட RM முடிவு செய்து அதுபற்றி
சுற்றறிக்கை அனுப்பச் சொன்னார்.
திரு மோகன் அவர்கள் தார்வாரில் சேர்ந்த
அன்றே SPA க்களை
சந்தித்து பேசி இருந்தாலும், அது ஒரு வழக்கமான அலுவலக
கூட்டமாக இல்லாதால், எல்லோரையும் சந்தித்து விரிவாக
உரையாடி, அவர்களுடைய பணித்திறன்களை ஆய்வு செய்ய
விரும்பியதால் அந்த கூட்டத்தை நடத்த விரும்பினார்.
எனக்கும் மாநில அரசில் பணியாற்றியபோது
கூட்டத்தில்
கலந்து கொண்டு ‘சூடு’ பட்ட அனுபவம் இருந்ததால், மைய
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தில்
நடத்தப்படும்
கூட்டம் எப்படி இருக்கும் என அறிய ஆவலோடு
காத்திருந்தேன்.
திரு மோகன் அவர்களின் நடைமுறைப் பாங்கு
(Style of Functioning)
எனக்குத் தெரிந்திருந்ததால் நிச்சயம் இந்த
கூட்டம்
வேறுபட்டிருக்கும் என என் மனதுக்குப் பட்டது.
அவரது அறிவுரைப்படி அந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலோடு
(Agenda) ஜூலை (1967) மாதத்தில் நடக்க இருக்கும்
கூட்டம் பற்றிய சுற்றறிக்கையை அனைத்து SPA க்களுக்கும் அனுப்பியிருந்தேன்.
கூட்டம் நடக்க இருக்கு முன்பு, திரு R.M.Arora என்ற உதவி
விதைப்பெருக்க அலுவலர் (Assistant Seed Production Officer)
புது தில்லி தலைமையகத்திலிருந்து பணி இட மாற்றல் மூலம்
வந்து சேர்ந்தார்.
கூட்டம் நடக்க இருந்த அன்று மைசூர் (கர்நாடக)மாநிலத்தில்
பணி ஆற்றிக்கொண்டு இருந்த அனைவரும் வந்திருந்தனர்.
சரியாக 10 மணிக்கு திரு அரோரா அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அனைவரையும் வரவேற்று பேசினார்.
அந்த கூட்டத்தில் எடுத்துக்கொண்டு விவாதிக்க
உள்ள விஷயம்
பற்றி அவர் சொன்னதும் திரு மோகன் பேச ஆரம்பித்தார்.
அவர் பேசும்போது அந்த கூட்டத்தில் தான்
மட்டும் பேசிக்கொண்டு
இருக்கப் போவதில்லை என்றும் ஒவ்வொருவரும்
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த தலைப்புக்கள் பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்க
வேண்டும் என்றும் நிறுவனத்தின் குறிக்கோளை (Mission)
நிறைவேற்றுவதில் ஏதேனும் சிரமம் இருக்குமானால்
அதை
தயங்காது தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அந்த கூட்டம் ஒவ்வொருவரும் தங்களது
பணியை
எடை போட்டுக் கொள்ளக்கூடிய, சுய பரிசோதனை செய்யக்கூடிய
வாய்ப்பு என்பதால்
தயங்காமல் எல்லோரும் கலந்துரையாடலில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
என்னிடமும் ‘சபாபதி. நீங்களும் களத்தில் பணி ஆற்றியவர்
ஆதலால், உங்கள் கருத்துக்ளையும் தாராளமாக இங்கே
சொல்லலாம்.’ என்றார்.
(அந்த கூட்டத்தையும், மன்னார்குடியில் அந்த DAO ‘நடத்திய’
கூட்டத்தையும் அப்போது என்னால் ஒப்பீடு
செய்யாமல் இருக்கமுடியவில்லை)
RM ன் தோழமையான பேச்சைக்கேட்டதும் அனைவரும்
தங்களது பணிகள் பற்றியும், அதில் ஏற்படும் சிரமங்கள்
பற்றியும் விவரமாக,தைரியமாக எடுத்து சொன்னார்கள்.
(தேசிய விதை கழகத்தின் பணி பற்றி விரிவாக
‘நினைவோட்டம்’தொடரில் எழுத இருக்கிறேன்.)
ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கூறியதால் கூட்டம்
மதிய உணவுக்குப் பின்னும் தொடர்ந்தது.
அனைவருடைய கருத்துக்களையும் சிரமங்களையும்
பொறுமையோடு கேட்ட திரு மோகன் அவர்கள், அவைகளை குறித்துக்கொண்டு ஆவன செய்வதாக உறுதி கூறினார். நன்றாக பணியாற்றியவர்களை
பாராட்டியும், பணியில் சுணக்கமாய் இருந்தவர்களை அதுதான் முதல் தடவை என்பதால் இன்னொரு
வாய்ப்பு
தருவதாகவும், அதே நிலை தொடர்ந்தால் தான்
கடுமையாக நடக்கவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
மாலை தேநீர் இடைவேளைக்குப் பின், கணக்கு அலுவலர்
(Accounts Officer) வந்து ஒவ்வொரு SPA யிடமும் நிலுவையில்
உள்ள ஆய்வுக் கட்டணம்பற்றி சொல்லி அவைகளின்
அப்போதைய நிலை என்ன என்பது பற்றி கேட்டு அறிந்தார்.
(வீரிய விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள்
தங்கள்
நிலங்களை NSC ஆய்வு செய்வதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலை (Bank’s Demand Draft) மூலம் செலுத்தவேண்டும். அவைகளை அந்த வயல்களை ஆய்வு செய்யும் SPA கள்தான்
பெற்று, வட்டார அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.)
மாலை 7 மணிக்கு கணக்கு அலுவலர் தன் பணியை
முடித்ததும்
கூட்டம் முடிவடைந்தது என எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால்
திரு மோகன் அவர்கள் ‘உங்கள் அனைவருக்கும் மதியம் சரியான உணவைத்தர
இயலவில்லை. அதனால் இன்று இரவு உங்களுக்கு
நான் இரவு விருந்து தர இருக்கிறேன். எனவே எல்லோரும் இரவு
உணவு சாப்பிட ஹூப்ளி செல்கிறோம். எல்லோரும்
என்னோடு
வாருங்கள்.‘ என்று கூறி 20 கிலோ
மீட்டர் தொலைவில் இருந்த
ஹுப்ளிக்கு இரண்டு ஜீப்புகளில் எல்லாரையும்
அழைத்துக்
கொண்டுசென்றார்.
தொடரும்
தொடர்கிறேன் .., தொடருங்கள் .. :)
பதிலளிநீக்குவருகைக்கும் தொடர்வதற்கு நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ பதிவு நண்பரே!
பதிலளிநீக்குஒரு நல்ல முன்னுதாரணமான பாஸ்!
பதிலளிநீக்குஉண்மைதான். அவர் ஒரு முன் மாதிரி Boss தான்.அதனால் தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவரை நினைவில் வைக்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
மிகவும் அருமையான கூட்டம். ஒவ்வொருவரும் தங்களின் மனம் திறந்து பேசவும், தங்களின் பணியில் ஏற்படும் சிரமங்களையும், குறை நிறைகளையும் எடுத்துச்சொல்ல, அருமையான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் ஒரு கூட்டம் என்றால் எப்படி இருக்கணுமோ அப்படியே அமைந்துள்ளது, உண்மையான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும்.
பதிலளிநீக்குநேரமானாலும் இரவு உணவளிக்கவும் ஏற்பாடு செய்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துள்ள BOSS மிகவும் போற்றத்தக்கவரே.
வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அவரிடமிருந்து கற்றுக்கொண்ட நடைமுறைகளை பின்னர் நானும் கடைப்பிடித்தேன்
நீக்கு