புதன், 16 மே, 2012

Boss கள் பல விதம்! 14


தொலை பேசியை எடுத்து, வணக்கம்சார்’, என்றதும் திரு மோகன்
அவர்கள் வணக்கம்.சபாபதி.எவ்வாறு இருக்கிறீர்கள்?என்று கேட்டுவிட்டு,
புதிதாய் இருவரை அங்கு பணி அமர்த்தியது பற்றிய நான் அனுப்பிய
அஞ்சல் வந்ததா?’ எனக்கேட்டார்.
 
இன்றைக்குத்தான் வந்தது சார். என்றதும், நல்லது.அவர்கள் இன்று
அல்லது நாளை அங்கு வந்து பணியில் சேரக்கூடும்.நீங்கள் அவர்களுக்கு
தற்போது உங்களுக்கு தரப்பட்டிருக்கும் பகுதியை (Area) பிரித்துக்
கொடுத்துவிட்டு, அவர்களை அழைத்து சென்று வீரிய விதைகள்
(Hybrid Seeds) உற்பத்திசெய்கின்ற விவசாயிகளை அறிமுகம் செய்யுங்கள்.
பின்பு இரண்டொரு நாட்களில் நீங்கள் செய்கின்ற பணிகளை எல்லாம்
அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு எவ்வளவு சீக்கிரம்
வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் தார்வாருக்கு வரவும்.உங்களுக்கு
இங்கு வேறு பணிகள் காத்திருக்கின்றன. என்றார்.

உடனே நான், சார்.அப்படியானால்?’ என்று இழுத்தபோது, அவர்,
இன்னுமா புரியவில்லை. உங்களை எனது அலுவலகத்திற்கு இடமாற்றம்
செய்து என் தொழில்நுட்ப நேர்முக உதவியாளாராக
(Personal Assistant(Technical)) போட்டிருக்கிறேன். அதற்கான ஆணை உங்களுக்கு அனுப்பப்படுகிறதுசந்தோஷம் தானே. All the Best.’ எனக்கூறி
தொலைபேசியைவைத்து விட்டார்.

எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. தார்வாருக்கு மாற்றல்
கிடைத்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், வட்டார அலுவலகத்தில்
வட்டார மேலாளரின் கீழ் எவ்வாறு பணியாற்றப் போகிறேனோ என்ற
கவலையும் ஏற்பட்டது.

கதக் கில் மொழி தெரியாமல், தனிமையில் (அது ஒரு கொடுமை)
இருந்ததால், எப்போது தமிழ் பேசும் நண்பர்களைப் பார்ப்போம் என்ற
ஆவல் இருந்தது உண்மை.

(கதக் கில் எனது அனுபவம் பற்றியும், கன்னடம் கற்றுக்கொண்டது
பற்றியும் நினைவோட்டம் தொடரில் விரிவாக எழுதுவேன்)

அப்போதுதான், தில்லி தலைமை அலுவலகத்திலிருந்து கணக்கு மற்றும்
நிர்வாகத் துறையைச்சேர்ந்த அரங்கநாதன், இராமமூர்த்தி என்கிற
தமிழர்கள் மாற்றலாகி தார்வார் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக
கேள்விப்பட்டிருந்ததால், அங்கு சென்றால் அவர்களோடு இருக்கலாம்
என்பதால் மகிழ்ச்சி.

NSC யில் பணியில் சேர்ந்தவுடன், நேரடியாக களத்தில் பணியாற்ற
வாய்ப்பு கிடைத்ததால், அலுவலகத்தில் எவ்வாறு பணிபுரிவது எனக்குத்
தெரியாது.அதனால் வட்டார மேலாளரின் நேரடிப் பார்வையில் எப்படி பணியாற்றப்போகிறேனோ என்பதால் ஒரு இனம் புரியாத கவலை.

மறுநாளே முதலில் திரு நேமிச்சந்த் என்பவர் வந்து சேர்ந்தார், அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். படித்தது ஆக்ரா பல்கலைக்கழகத்தில்.
வேளாண்மை பட்டப் படிப்பு.ஆனால் அவருக்கு என்னுடன் ஆங்கிலத்தில்
பேசுவது கஷ்டமாயிருந்தது. (அங்கு எல்லாம் இந்தியிலேயே பாடம்
சொல்லிக் கொடுப்பார்களாம்!) மேலும் எனது ஆங்கிலத்தை
புரிந்துகொள்ளவும் சிரமப்பட்டார். எனக்கோ அவரது இந்தி புரியவில்லை.

நல்ல வேளையாக அதற்கு அடுத்த நாள் திரு சுப்ரமணியன் வந்து
சேர்ந்தார். அவர் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர். படித்தது
பெங்களூரிலிருந்த வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில். கன்னடம்
தாய் மொழியாய் இருந்தாலும் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசினார்.
மேலும் அவருக்கு இந்தி தெரிந்து இருந்ததால் திரு நேமிச்சந்துக்கும்
எனக்கும் இடையே ஒரு மொழி பெயர்ப்பாளர் போல் இருந்தார்.நான்
ஆங்கிலத்தில் சொல்வதை அவருக்கு இந்தியில் சொல்லி புரிய வைத்தார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவர்கள் இருவரையும் எனது
Area வுக்கு கீழ் இருந்த Gadag, Shiragatti, Mundargi, Ron, Annigeri ஆகிய
வட்டங்களில் (Taluks), வீரிய சோளம்(Hybrid Sorghum), வீரிய மக்கா சோளம்
(Hybrid Maize), வீரிய கம்பு (Hybrid Pearl Millet) விதைகளை உற்பத்தி செய்ய,
ஒப்பந்தம் போட்டிருந்த விவசாயிகளிடம் அழைத்து சென்று 
அறிமுகப்படுத்தினேன்.

பின் எனது அலுவலகத்தோடு இணைக்கப்பட்டு இருந்த விதை
பக்குவப்படுத்தும் மையத்தில் (Seed Processing  Centre) செய்யக்கூடிய
பணிகளையும் விரிவாக எடுத்துச்சொல்லி விளக்கிவிட்டு, அங்கிருந்து
பொறுப்பில் விடுபட்டு தார்வார் வந்து சேர்ந்தேன்.

நான் தார்வார் அலுவலகத்தில் சேர்ந்த அன்று, வட்டார மேலாளர்
கூப்பிட்டு, என்னை வரவேற்று வாழ்த்திவிட்டு, நான் செய்யவேண்டிய
பணிகள் பற்றி விளக்கினார்.

கோயம்புத்தூர் மற்றும் மைசூர் மாநிலத்தில் உள்ள எங்கள் விதை
பெருக்க உதவியாளர் கள் (Seed Production Assistants) வீரிய விதைப்
பெருக்கம் செய்யும் வயல்களைப் பார்வையிட்டு அவர்களது
அறிக்கைகளை புது தில்லியில்இருந்த தலைமை அலுவலகத்திற்கு
அதுவரை அனுப்பிக்கொண்டுஇருந்தார்கள். அவைகள் அங்கு ஆய்வு
செய்யப்பட்டு, அவைகளின் மேல் எடுக்கவேண்டிய  நடவடிக்கையை
அவர்கள் எடுத்து வந்தார்கள்.

(அது பற்றிய விவரம் பின் எழுதுவேன்)

அந்த பணி வட்டார அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டதால், அந்த ஆய்வு அறிக்கைகளை ஆய்ந்து அவைகளின் தரம் பற்றியும், அதில் உள்ள
குறைகள் பற்றியும் விரிவான அறிக்கையை வட்டார மேலாளரிடம்
தருவதும்,அதுஇல்லாமல் விவசாயிகளிடமிருந்து வரும் குறைகள் பற்றி  
விசாரித்துஉடனுக்குடன் அவர்களது குறைகளை போக்க நடவடிக்கை
எடுப்பதும், தேவைப்பட்டால் அந்த இடங்களுக்கு நேரே சென்று
விசாரித்து விரிவான அறிக்கையை வட்டார மேலாளருக்கு தருவதும்
எனது முக்கிய பணிகள் என்று சொன்னார். 

நான் எனது பணிகளைத் தொடங்கு முன் வேறொரு வேலை எனக்காக
காத்திருந்தது. எங்களது அலுவலகம் இடப் பற்றாக்குறையால்
சப்தாபூரிலிருந்து (Saptapur) மாலமட்டி (Malamaddi) என்ற இடத்திற்கு மாற
இருந்ததால் எனது பணி சம்பந்தப்பட்ட கோப்புகளை உதவியாளர் மூலம்
புதிய இடத்திற்கு எடுத்து செல்ல ஆவன செய்ய வேண்டி இருந்ததுதான்
அது.

புதிய அலுவலக கட்டிடத்தில் பணிகளைத் தொடங்கிய அன்று காலை
9 மணிக்கு எனது அறைக்கு ஒருவர் வந்தார்.


தொடரும் 


8 கருத்துகள்:

  1. உங்களின் அனுபவங்களோடு சேர்த்து இந்த முறை பணியின் தன்மையையும் பொறுப்புகளையும் உணர முடிந்தது. கூடுதல் தகவல்கள் தெரிந்து கொண்டதில் மனமகிழ்வு. தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு சஸ்பென்ஸ் கதையாட்டம் போகுது!தொடருங்க!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!. இந்த தொடரில் Boss கள் பற்றிதான் எழுத நினைத்தேன். ஆனால் பணி சம்பந்தப்பட்ட சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனது பணியின் தன்மை பற்றி பின் எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. I can understand the ecstasy you must have experienced in knowing that you would be reaching a place where you can hear your mother tongue. Be that as it may, the transfer was probably an early reward for the meticulous way you executed your work at Gadag. ( It may be of interest to know that Gadag co-op society, were using TT facility to transfer funds from R,S.Puram coimbatore branch of Syndicate Bank to Gadag,while I was working in that branch. Probably even now.)


    Vasudevan

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு வாசு அவர்களே!.
    நான் தங்கியிருந்த இடத்திற்கும், பின்னால் நான் பணி புரிந்த வங்கிக்கும் தொடர்பு இருந்தது கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. ஆங்காங்கே ஏற்படக்கூடிய மொழிப் பிரச்சனைகளை நன்கு உணர முடிகிறது.

    Personal Assistant (Technical) to BIG BOSS என்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    The Right man for the Right job ! Congrats, Sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! புதிதாகத் தரப்பட்ட பணி மகிழ்ச்சியைத் தந்தாலும் இனம் புரியாத பயம் இருந்தது உண்மை.

      நீக்கு