புதன், 2 நவம்பர், 2011

நினைவோட்டம் 55

அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு 11 ஆண்டுகள்.
பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படிப்பு, பின்
ஒரு ஆண்டு புகு முக வகுப்பை(Pre University
Course)
கல்லூரியில் படித்தபின்(அதாவது 12
ஆண்டுகள் படித்தவுடன்) பட்டப்படிப்பில்
சேரமுடியும்.

நாங்கள் படித்தது தமிழ் வழி கல்வி முறையில்.
எல்லா பாடங்களும் தமிழில் தான் இருந்தன.
நகரத்தில் உள்ள சில பள்ளிகளைத்தவிர
மற்றவை யாவும் தமிழ் வழி கல்வி
முறையைத்தான் அப்போது பின்பற்றின.

இப்போதுபோல் எண்ணற்ற மழலையர் பள்ளிகள்/
Matriculation பள்ளிகள் இல்லாததால்,தங்களது
மழலை பேசும் பிள்ளைகளை ஆங்கில வழி
பள்ளியில் சேர்க்க எந்த பெற்றோரும்
துடித்துக்கொண்டு இருக்கவில்லை.

நான் படித்தபோது, பள்ளிக் கட்டணம்
கீழ் வகுப்புகளுக்கு மாதம் இரண்டு ரூபாய்
எழுபத்தி ஐந்து காசுகளும்,மேல் வகுப்புகளுக்கு
மாதம்ஐந்து ரூபாய் ஐம்பது காசுகள் தான்.
எனவே எல்லோருக்கும் மிக குறைந்த
கட்டணத்தில் தரமான கல்வி தாய்மொழி
மூலம் கிடைத்தது என்பது இப்போது பலருக்கு
ஆச்சரியத்தைத் தரலாம்.

தமிழில் பாடங்களை படித்ததால் பாடங்கள்
புரிந்ததோடு,தாய்மொழியிலும் சிறப்பாக
எங்களால் பேச,எழுத முடிந்தது.ஆனால்
இப்போதோ எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதால்,
தாய் மொழியான தமிழுக்கு யாரும் அவ்வளவு
முக்கியத்துவம் தருவதில்லை.

அதனால் தான் இப்போது உள்ள பிள்ளைகள்
தமிழை சரியாக படிக்க,உச்சரிக்க,எழுத
தடுமாறுகின்றனர்.மேலும் சிலர் அதிக
மதிப்பெண்கள் பெறவேண்டி இரண்டாம்
மொழியாக தமிழை தேர்வு செய்யாமல் இந்தி,
வடமொழி,ஃபிரெஞ்சு போன்ற மொழிகளைத்
தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களால் தமிழில் பேசினால் புரிந்துகொள்ள
முடியும் அவ்வளவே. ஒருவேளை இவர்கள்
தமிழ்நாட்டில் நிலம்,மனை போன்ற அசையா
சொத்துக்களை வாங்க நினைக்கும்போதுதான்
தான் தெரியும் தாய்மொழியை படிக்காததின்
விளைவை.

தமிழிலே பள்ளியில் படித்திருந்தாலும் கல்லூரியில்
புகுமுக வகுப்பில் சேர்ந்து மூன்று அல்லது நான்கு
மாதங்களுக்குள் எங்களால் ஆங்கிலத்தில்
நடத்தப்பட்ட பாடங்களை புரிந்து கொள்ள
முடிந்தது.எனவே எனது சமகாலத்தவர் யாரும்
பள்ளியில் ஆங்கில வழி கல்வி(English Medium)
யில் படிக்காததால்,கல்லூரியில் அல்லல்
படவில்லை.மாறாக சோபிக்கவே செய்தார்கள்.

நாங்கள் படிக்கும்போது,இப்போது போல் 11 ஆம்
வகுப்பிலேயே 12 ஆம் வகுப்புக்கான பாடங்களை
முடித்துவிட்டு,இறுதி ஆண்டில் Revision Test என
வைத்து மாணவர்களை கசக்கிப் பிழிந்து
இம்சை செய்ததில்லை.

நான் S.S.L.C படித்தபோது ஒரு நாள் கூட
எங்களுக்கு சிறப்பு வகுப்புக்கள்
நடத்தப்படவில்லை. வழக்கம்போல் காலை
10 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை
தான் வகுப்புகள் நடைபெற்றன.

ஒருதடவைகூட விடுமுறை நாட்களில் வகுப்புகள்
நடத்தப்படவில்லை.சொல்லப்போனால் நாங்கள்
எந்த வித பதற்றமோ மன அழுத்தமோ இல்லாமல்
மிகவும் மகிழ்ச்சியாக,மறு ஆண்டு கல்லூரியில்
சேரும் கனவுகளோடு படித்தோம் என்பது
மறுக்கமுடியாத உண்மை.

அந்த மகிழ்ச்சி இந்த கால மாணவர்களுக்கு
இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை.

எங்கள் பள்ளியில் Revision தேர்வுகள்
நடத்தப்படவில்லை என்றாலும் மாநில அளவில்
செயல் பட்ட சில குழுக்கள்/அமைப்புக்கள்
மாணவர்களுக்காக தமிழ், ஆங்கில பாடங்களில்
சிறப்புத் தேர்வுகளை டிசம்பர்/ஜனவரி
மாதங்களில் நடத்தின.

அப்படிப்பட்ட அமைப்பில் ஒன்றுதான் 1931 ல்
சென்னையில் துவங்கப்பட்ட மாணவர் மன்றம்
என்ற அமைப்பு.

இந்த மாணவர் மன்றம் பள்ளியில் இறுதி ஆண்டு
மாணவர்களுக்காக பொது மற்றும் சிறப்புத்தமிழ்
பாடங்களில் ஒவ்வொரு வருடமும் தேர்வுகள்
நடத்தும்.நாங்கள் படித்தபோது மயிலை
திரு சிவ முத்து அவர்கள் மாணவர் மன்றத்தின்
தலைவராகவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை
பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த
திரு கோ.வில்வபதி அவர்கள் போட்டிக்குழு
தலைவராகவும் இருந்தனர்.

அந்த தேர்வுகள் இறுதி தேர்வுக்கு முன்
நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் போல.

இந்த தேர்வுகளை எழுதுவது கட்டாயம் இல்லை
என்றாலும் மாணவர்கள் விரும்பி அதில்
பங்கேற்பார்கள். காரணம் அந்த தேர்வுக்கு
படித்தால் இறுதித்தேர்வை சுலபமாக
எழுதலாம் என்பதால்.

தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒருசான்றிதழும்
தருவார்கள்.நானும் அதில் கலந்துகொண்டு
தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. நல்ல நினைவுகள்.நாணும் மாணவ்ர் மன்றத்தில் ரேங்க் தான்!

  பதிலளிநீக்கு
 2. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. We only see English films ; we dont see Tamil films ' என்று காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் தங்கைகள் கூறுவது நினைவிற்கு வந்தது ; தமிழில் பேசுவதையே சிறுமையாக எண்ணும் காட்சியை தான் இப்போது பார்க்க முடிகிறது . தமிழ் என்ற சொல்லையே உச்சரிக்க முடியாமல் தமில் என்று பலரும் கூறுவதை பார்க்க நேரும் போது ( தமிழில் வித்தகர்கள் என்று தங்களை பறைசாற்றி கொண்டு இருப்பவர்கள் பலரும் இதில் அடக்கம் ; பெயர் கூற விரும்பவில்லை . )
  மாணவர்கள் மீது தேவைற்ற எதிர்பார்ப்புகளை திணிக்காவிட்டால் நன்றாகவே செயல் படுவார்கள் என்பது தெரிகிறது ...
  எப்பொழுதும் போல் ஆர்பட்டமில்லா பதிவு . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!.நீங்கள் கூறுவது உண்மை. தாய்மொழியை சரியாக பேசமுடியாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே அவமானம்தா.ன்
  தமிழ் என்று சரியாக உச்சரிப்பவருக்கு பரிசுகள் கூட வழங்கலாம்.முதலில் இந்த தொ(ல்)லைக் காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களுக்கு இந்த போட்டியை நடத்தலாம். நீங்கள் சொன்னதுபோல் மாணவர்கள் மீது பாடங்களைத் திணிக்காதபோது மிக நன்றாக தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை.

  பதிலளிநீக்கு