புதன், 23 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 1

1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் (அப்போது
மைசூர் மாநிலம்) தார்வாரில் தேசிய விதைக்
கழகத்தில்(National Seeds Corporation Ltd.,)வேலை
பார்த்துக் கொண்டிருந்தேன்.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் எனது வட்டார
மேலாளர் கூப்பிட்டு புது தில்லியில், எங்களது
நிறுவனமும்,இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமும்
(Indian Agricultural Research Institute) பன்னாட்டு
விதை ஆய்வு கூட்டமைப்பும் (International Seed Testing
Association) சேர்ந்து விதை ஆய்வு பற்றி 16/10/1967
முதல் 24/11/1967 வரை 40 நாட்கள் ஒரு பயிற்சியை
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் நடத்த
இருப்பதாகவும், அதற்கு தில்லியில் இருந்த
எங்களது தலைமை அலுவலகம் என்னை தேர்ந்து
எடுத்திருப்பதாகவும் சொன்னார்.

கேட்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.காரணம்
பணியில் சேர்ந்த பிறகு கிடைக்கும் முதல் பயிற்சி
என்பதாலும், புது தில்லியை காணும் வாய்ப்பு
கிடைக்கிறதே என்பதாலும் தான்.

பயணச்சீட்டை முன் பதிவு செய்ய உடனே தார்வார்
இரயில்நிலையம் சென்றேன். தார்வாரில் இருந்து
தில்லிக்கு நேரடி இரயில் இல்லை எனவே
தார்வாரிலிருந்து புது தில்லி செல்ல
வேண்டுமென்றால், பெங்களூரிலிருந்து புனே
(அப்போது பூனா) செல்லும் இரயிலில் சென்று,
பிறகு அங்கிருந்து மும்பை(அப்போது பம்பாய்)
சென்று,பின் மும்பையில் தில்லிக்கு இரயில்
ஏறவேண்டும்.

அப்போது இப்போது போல் கணினி மூலம் பதிவு
செய்வது இல்லையாதலால்,புது தில்லிக்கு
பயணச்சீட்டு தந்தாலும்,13/10/1967 தேதி அன்று
மதியம் செல்லும் இரயிலில் புனே வரைக்கும்
தான் முன்பதிவு செய்தார்கள்.

அப்போது இரயில் பெட்டிகளில் மூன்று வகுப்புகள்
உண்டு.மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் உட்காரும்
மற்றும் சாயும் இடங்களில் Cushion இருக்காது.

இரண்டாம் வகுப்புப்பெட்டியில் அனைத்து
இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவதில்லை.
முன்பதிவு செய்தவர்கள் மட்டும் மேலே Luggage
வைக்கும் பகுதியில் இரவில் படுத்து உறங்கலாம்.
மற்றவர்கள் உட்கார்ந்து தான் செல்ல முடியும்.

ஆனால் மூன்றாம் வகுப்பு பெட்டிகளை
1977 ஆம் ஆண்டு ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு
வந்ததும் எடுத்துவிட்டார்கள்.

எனது நிறுவன விதிமுறைப்படி,இரண்டாம்
வகுப்பில் பயணம் செய்ய எனக்கு அனுமதி
உண்டு.எனவே தில்லி வரை பயணம் செய்ய
இரண்டாம் வகுப்புக்கான பயணச்சீட்டை
எடுத்தேன்.

குறிப்பிட்ட நாள் வருமுன் தில்லி செல்ல
ஆயத்தமானேன். எனது ஆடைகள் மற்றும்
தேவையானவற்றை, Hold All எனப்படும்
பைகளுடன் கூடிய சுருட்டி எடுத்து செல்லக்கூடிய
படுக்கை விரிப்பில் 40 நாட்களுக்கு
தேவையானவைகளை எடுத்து வைத்தேன்.

நண்பர் திரு அரங்கநாதன் அவர்கள் ‘நீங்கள்
செல்லும் காலம் குளிர் ஆரம்பிக்கும் காலம்.
எனவே என்னுடைய இந்த ஸ்வேட்டரை எடுத்து
செல்லுங்கள். உபயோகமாக இருக்கும்.
வரும்போது நீங்கள் உங்களுக்கு என்று ஒன்று
வாங்கி வரலாம்’ என்று அன்புடனும்,
அக்கறையுடனும் அவரது ஸ்வேட்டரை
கொடுத்தார். அதோடு அவரது கோட் மற்றும்
‘டை’யையும் கொடுத்தார்.

புதில்லிக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சி
இருந்தாலும் மனதில் ஒரு இனம் புரியாத கவலை
இருந்தது.தார்வாரிலிருந்து புனே,மும்பை வழியாக
தில்லிக்கு இரயிலில் பயணம் செய்யவேண்டும்.
வெள்ளி மதியம் தார்வாரிலிருந்து கிளம்பினால்
திங்கள் காலைதான் தில்லியை அடைய முடியும்.
அதாவது மூன்று இரவு பயணம்.எனக்கு இந்தி
எழுதப்படிக்க தெரிந்திருந்தாலும்,பேசி
பழக்கமில்லாததால் எப்படி வழியில் ஏதாவது
தேவைப்பட்டால் சமாளிக்கப்போகிறோம்
என்ற கவலைதான்.

கூடவே முன்பதிவு இல்லாமல், மும்பையில்
இருந்து எப்படி தில்லி செல்லப்போகிறோம்
என்ற கவலையும் சேர்ந்துகொண்டது.

உடனே நண்பர் அரங்கநாதன் அவர்கள்
மும்பையில் அவரது அண்ணன் சென்ட்ரல்
இரயில் நிலையம் அருகே உள்ள RBI
ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசிப்பதால்,
அவர் நிச்சயம் முன் பதிவு கிடைக்க உதவுவார்
என்று தைரியமூட்டி, அவரது அண்ணனுக்கு ஒரு
கடிதமும் எழுதினார். எனக்கு அவரது
முகவரியையும் கொடுத்தார்.

ஆவலோடும்,இனம்புரியா தயக்கத்தோடும்
13/10/1967 அன்று மதியம் உடன் பணிபுரிந்த நண்பர்கள்
வழியனுப்ப,தார்வாரில் இரயில் ஏறினேன்.


தொடரும்

8 கருத்துகள்:

  1. பயணம் தொடங்கும்போதே தொடரும் போட்டுத் தவிக்க விட்டு விட்டீங்களே! என்ன நடந்தது பயணத்தில் எனத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... பயணம் எப்படி அமைந்தது? ரிசர்வேஷன் கிடைத்ததா? எப்படி ஹிந்தி பேசி சமாளித்தீர்கள்? இப்படிப் பல கேள்விகளை என்னுள் இடற விட்டு தொடரும் போட்டு விட்டீர்களே... உங்க பேச்சு கா! (அடுத்த பகுதி வரும் வரைக்கும்...)

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே.பயணத்தில் மட்டுமல்ல, டில்லியில் என்ன நடந்தது என்பதைப் பற்றியதுதான் இந்த பதிவு.

    ஆவலுடன் காத்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே.நிச்சயம் தொடர் முடியுமுன் ‘பழம்’ விட்டுவிடீர்கள் என நம்புகிறேன். காய்,கனியாவது இயற்கைதானே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு “என் ராஜபாட்டை” ராஜா அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. அய்யா! இந்த தொடரை படித்திட, இப்போதுதான் உங்கள் டில்லி பயணத்தோடு தொடங்கி இருக்கிறேன். இந்த தொடரைப் பற்றி செல்போனில் குறிப்பிட்டுச் சொன்ன தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பயணத்தில் தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு