திங்கள், 21 நவம்பர், 2011

நினைவோட்டம் 60

விருத்தாசலத்தில் என் அண்ணனுடன் தங்கி படித்த
போது அடிக்கடி திரைப்படம் பார்க்க அனுமதிக்க
மாட்டார். மிகவும் கண்டிப்பானவர் என்பதால்
காலாண்டு,அரையாண்டு மற்றும் வருடாந்திர
தேர்வுகள் முடிந்தவுடன் தான் திரைப்படம்
பார்க்க அனுமதிப்பார்.

ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து பார்த்த
படங்கள் வணங்காமுடி&வஞ்சிக்கோட்டை
வாலிபன் ஆகியவை.சிலசமயம் அம்மா
சிபாரிசின் பேரிலும்,சில படங்களுக்கு
அனுமதித்திருக்கிறார்.

அப்படிப்பார்த்த படங்கள் யார் பையன்,முதலாளி
ஆகியவை.அவரே சிலசமயம் அவரது எழுதப்படாத
விதிகளை மீறி அனுமதி தந்த,து புதையல்,பதிபக்தி
மற்றும் ஜனக் ஜனக் பாயல் பாஜே ஆகிய
படங்களுக்கு.

பத்தாம் வகுப்பில் 7 படங்களும், பள்ளி இறுதி
ஆண்டில் 4 படங்களும் பார்த்திருக்கிறேன்.(அந்த
படங்களின் பெயர்கள் நினைவில் இருந்தாலும்
அவைகளை இங்கே எழுதாமல் விடுகிறேன்)

அப்போதெல்லாம் சக மாணவர்கள் திரைப்படம்
பார்த்துவிட்டு வந்து வகுப்பில் சொல்லும்போது
நம்மால் பார்க்க இயலவில்லையே என
நினைத்ததுண்டு.

ஒருவேளை அப்படி நிறைய படங்கள்
பார்த்திருந்தால்,எனது கவனம் சிதறி,தேர்வில்
நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி
பெற்றிருக்கமாட்டேன்.அண்ணன் அப்படி
அனுமதிக்காததும் நன்மைக்குத்தான் என
இப்போது நினைக்கிறேன்.

ஆனால் பின்னாட்களில் திருச்சியில் புகுமுக
வகுப்பு வகுப்பு படித்தபோது பார்த்த படங்கள்
20க்கு மேலும், அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் நான்காண்டுகள் படித்தபோது பார்த்த
திரைப்படங்கள் (பல்கலைக்கழக திறந்தவெளி
அரங்கில் பார்த்த படங்கள் நீங்கலாக) 80க்கு
மேலும் இருக்கும்.

வழக்கம்போல் S.S.L.C தேர்வு முடிந்த அன்று
என் அண்ணன் திரைப்படம் பார்க்க அனுமதி
தந்ததும், நான் பார்த்தது விருத்தாசலம்
இராஜராஜேஸ்வரி திரை அரங்கில்
ஓடிக்கொண்டிருந்த, மறைந்த சிரிப்பு நடிகர்
சந்திரபாபு அவர்கள் நடித்த சகோதரி என்ற
திரைப்படம்.இரவுக்காட்சிக்கு வகுப்பு நண்பர்
திரு கண்ணன் அவர்களுடன் சென்றது
நினைவுக்கு வருகிறது.

படம் முடிந்து நண்பர் கண்ணனிடம் விடைபெற்று
வீட்டிற்கு வந்து படுத்தேன்.முதல் நாளே
அண்ணன் நாளை நீ ஊருக்கு போகலாம் என்று
சொல்லியிருந்ததால் விடியற்காலை 5 மணிக்கு
எழுந்து ஊருக்கு செல்ல ஆயத்தமானேன்.

தேர்வை முடித்து ஊருக்கு செல்கிறோமே என்ற
மகிழ்ச்சி இருந்தாலும் ஏனோ ஒரு இனம் புரியாத
சோகம் இருந்தது உண்மை.

(மூன்றாண்டு காலம் அண்ணனின் கண்டிப்பில்
வளர்ந்தாலும்,எனது எண்ணப்படி நான் சுதந்திரத்தை
இழந்ததாக நினைத்திருந்தாலும்,அவர் கண்டிப்பாக
இருந்தது நான் நன்றாக படிக்கவேண்டும்
என்பதற்காகத் தான் என்று இப்போது
புரிகிறது.)

‘போய் வருகிறேன்’என அண்ணனிடம் சொல்லிவிட்டு
வீட்டுக்கு அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில்
வந்து ஊருக்கு போகும் பேருந்துக்காக
காத்திருந்தேன்.

பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்
நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே உள்ள
தெற்கு வீதி வழியே தான் செல்லும்.

அப்போது எங்கள் ஊருக்கு நேரடிப் பேருந்து கிடையாது.
விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடம் செல்லும்
பேருந்தில் ஏறி குறுக்கு ரோடு என சொல்லப்படும்
கருவேப்பிலங்குறிச்சியில் இறங்கி சுமார் 3 கி.மீ
நடந்துதான் எங்களது ஊரான தெ.வ புத்தூரை
அடையவேண்டும்.

பேருந்து வந்ததும் ஏறி,குறுக்கு ரோடில் இறங்கி
ஊரை நோக்கி நடந்தேன்,மனதில் ஏதோ
சாதித்ததுபோன்ற நினைப்புடன்!

வீட்டை அடைந்த போது அப்பா இல்லை.
‘எங்கே?’ எனக்கேட்டபோது நெல் அறுவடையாகி
வந்திருப்பதால், அப்பா போரடி என நாங்கள் அழைத்த
களத்து மேட்டில் இருப்பதாக அம்மா சொன்னார்கள்.

வயலில் நெல் அறுவடைசெய்ததும் நெற்கதிர்
கட்டுகளையெல்லாம் எங்களது களத்து மேட்டுக்கு
கொண்டு வந்து வைத்து அவைகளை அடித்து
நெல்லைப் பிரித்து,தூற்றி மூட்டையில் கட்டி
வீட்டுக்கு கொண்டு வரும் வரை அப்பா இரவில்
அங்கேயே தங்கிவிடுவார்கள்.

காப்பி குடித்துவிட்டு நேரே அங்கே சென்றேன்.அப்பா
என்னைப்பார்த்ததும் ‘தேர்வை எப்படி எழுதியிருக்கிறாய்?’
எனக்கேட்டார்கள்.‘நன்றாக எழுதியிருக்கிறேன்’ என
சொல்லிவிட்டு,அப்பாவிடம் ‘நீங்கள் வீட்டுக்குபோய்
வாருங்கள். நான் காவலுக்கு இருக்கிறேன்.’என்றேன்.

சுமார் ஒரு வாரம் இரவைத்தவிர, பகலில் அங்கு
இருந்து நெல் வீட்டுக்கு வரும் வரை அப்பாவுக்கு
உதவியாக இருந்தேன்.

விடுமுறை சுமார் 3 மாதம் என்பதால் அம்மா
என்னை ‘பெரியம்மா ஊருக்கு போய்வாயேன்.
அக்காவும் சந்தோஷப்படுவாள்’ என்றார்கள்.
நானும் அப்போதைய திருச்சி மாவட்டத்தில்
(இப்போது அரியலூர் மாவட்டம்) இருந்த
என் பெரியம்மாவின் ஊரான கோமான்
என்ற ஊருக்கு கிளம்பினேன்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

10 கருத்துகள்:

  1. என் அனுபவம் வேறு மாதிரியானது. நான் அண்ணணின் பராமரிப்பில் வளர்ந்தவன். பரீட்சைக்காக இரவு பகலாகப் படிக்கும் என்னை பரீட்சைக்கு முதல்நாள் மாலை ஏதாவது சினிமாவுக்கு அனுப்பிவிட்டு, அன்று புத்தகத்தைத் தொடாதே என்பார். மறுதினம் அதிகாலை எழுந்து படித்ததை ஒரு ஃபாஸ்ட் ரீடிங் விட்டுவிட்டு பரீட்சைக்குச் செல்வேன். எந்தப் பரீட்சையிலும் தோற்றதில்லை. உங்கள் அனுபவங்கள் படிக்கப் படிக்கப் பிடித்துப் போகின்றன. தொடருங்கள், தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி. தொடரைத் தொடர்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  3. அண்ணன் காட்டிய வழியில் நடந்ததனால் ,பிறருக்கு வழி கட்டும் நிலையை பிற்காலத்தில் அடைந்தீர் போலும் . நிற்க ,திரு கணேஷ் அவர்கள் எழுதியபடி தங்கள் எழுத்துக்கள் சுகமான தாலாட்டு போல் ஆர்பாட்டமில்லா நடை ! திரு ரஹ்மான் பாடல் போல படிக்க படிக்க சுவை கூடுகின்றது .வாசு

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! தங்களுடைய உற்சாகமூட்டும் பாராட்டுக்கள்,என்னை மேன்மேலும் நன்றாக எழுத ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சுகமாகப் போகிறது அனுபவத் தொடர்.திரும்பத்திரும்பச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது,உங்கள் நினைவுத்திறன் பற்றி.தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சுய சரிதை என்றாலே போரடிக்கும் கட்டுரை என்று நினைக்க வைக்கும்

    ஆனால் உங்களது பிசிறில்லாமல் ,ரத்தின சுருக்கமாகவும் ,சுவாரஸ்யமாகவும் உள்ளது ,தொடருங்கள் தொடர்கிறேன்

    தமிழ்மணம் 3 வது வாக்கு

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. //சுய சரிதை என்றாலே போரடிக்கும் கட்டுரை என்று நினைக்க வைக்கும்.
    ஆனால் உங்களது பிசிறில்லாமல் ,ரத்தின சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது தொடருங்கள் தொடர்கிறேன்.//

    வருகைக்கும் தங்களது பாராட்டுக்கும் நன்றி திரு M.R அவர்களே!இந்த தொடர் ஆரம்பிக்கும்போதே நான் இவ்வாறு எழுதிருந்தேன் ‘சிலருக்கு இது சுயபுராணம் போல் தோன்றினால் என்னை மன்னிக்க. இடையிடையே எனக்குப்பிடித்த கவிதைகள் மற்றும் செய்திகளை வேறு தலைப்பில் வெளியிட இருக்கிறேன்.’ என்று.
    தங்களின் கருத்துக்கள் என்னை மேன்மேலும் ஊக்குவித்து எழுதத் தூண்டும்.

    பதிலளிநீக்கு
  9. Hello Sir! உங்களுடைய "நினைவோட்டம்" தொடர் முழுவதையும் இன்றைக்கு படித்தேன். நான் படிக்க அப்பாவும் கேட்டார். மிகவும் அழகாகவும், எளிமையாகவும் உங்களுடைய வாழ்கையை பதிவு செய்திருக்கிறீர்கள். படித்ததில்- நான் மிகவும் ரசித்த ஒரு சில விஷயங்கள்:
    "Fountain" பேனாவை "ஊற்றுப்பேனா"-- என நீங்கள் குறிப்பிட்டது இது வரை நான் கேள்விப் பட்டதில்லை. கோலாட்டம் ஆடியது பற்றியும் தங்களுடைய ஆசிரியர்- "ஐயா" பற்றியும் நீங்கள் எழுதிய சம்பவங்கள் அருமை! பாட்டு பாடி கணக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் பற்றி என் அம்மா/அப்பா வும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்... பெண்ணாடம் என்று ஒரு ஊர் இருப்பதும் எனக்குத் தெரியாது இது வரை. அந்த பெயர் காரணம் அருமை. தி. மு. க. poster --- superb! இன்று வரை அதை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பது தான் ஆச்சரியம்! அப்பா- இந்த சம்பவங்களை ஒட்டி நடந்த தன்னுடைய அனுபவங்களை சொன்னார் "சிகப்பு pencil -கருப்பு பேனா" வை pocket இல் வைத்திருப்பார்கள், மாணவர்கள்--- தி. மு. க. கோடி போல என்று சொன்னார். தங்களது பெரியம்மா விளக்கு தொடைக்கும் போது-- "கவனம்-கவனம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அந்த சம்பவம் அழகு. கணக்கு பரீட்சையில் நமது அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு தங்களது அண்ணன் கூறிய "strategy" மிக அருமை.
    என் அப்பா- மற்றும் உங்களது காலத்தில் ஒரு 15 ஆசிரியர்கள் பற்றி உங்களால் பெருமையாகக் கூறிக்கொள்ள முடிகிறது என்றால் என் பள்ளி கால ஆசிரியர்களில் 2-3 பேர் பற்றி கூட என்னால் பெருமையாய் பேச முடிந்தால் அது பெரிய விஷயம்! (I am 25 yrs old). Tables மனனம் செய்யும் பழக்கம் நான் படிக்கும் போது கிடையாது. (only up to 10 tables). வாய்ப்பாடு மனப்பாடம் செய்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது ஒரு சில "competitive exams" எழுதும்போது தான் புரிகிறது. நீங்கள்-மற்றும் என் அப்பாவைப் போல "அந்த கால மனிதர்கள்" எல்லோருக்கும் common ஆக இருப்பது ஒரு விஷயம்-- "Disciplined life-style". அது எங்களது generation க்குஅவ்வளவாக (?) இல்லை -- இது ஏன் என்று யோசிக்க வைத்தது இந்த தொடர். நான் பள்ளியில் அவ்வளவாக தமிழ் படித்தது கிடையாது. இதனால் அந்த கால தமிழ் கல்வி முறை பற்றி படித்ததும் வியப்பாக இருக்கிறது.
    "நினைவோட்டம்" தொடர் முழுவதையும் நான் படிக்கக் கேட்டுக்கொண்டிருந்த என் அப்பா- "தமிழ் தாத்தா" எழுதிய "என் சரிதம்" போன்ற தங்கு தடையில்லாத/riveting நடை-- என்று கூறினார்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கு நன்றி திருமதி மாதங்கி அவர்களே! இதுவரை நான் எழுதியிருந்த எனது ‘நினைவோட்டம்’ தொடரை முழுமையாக படித்து கருத்து தந்தமைக்கு நன்றி!நான் இதை எழுத ஆரம்பித்தபோது சிலர் இதை சுயபுராணம் என நினைப்பார்களோ என எண்ணினேன். எனது எண்ணம் தவறு என இப்போது எண்ணுகிறேன். நினைவோட்டத்தை தொடருவேன். அதற்குள் சில நிகழ்வுகளை சொல்லலாமென்பதால் அந்ததொடர் எழுதுவதை தள்ளி வைத்திருக்கிறேன். நீங்கள் சொல்வது சரி. அந்த கால மனிதர்களுக்கு கட்டுப்பாடான வாழ்க்கை இருந்தது உண்மை. தங்கள் தந்தையாரின் கருத்துக்கு எனது நன்றியையும், அவருக்கு எனது வணக்கத்தையும் தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு