நான் ஏறிய இரயில் பெட்டியில் ஒரு சிலர்தான்
இருந்தனர். அப்போதெல்லாம் யாரும் இரண்டாம்
வகுப்புப் பெட்டியில் ஏறமாட்டார்கள்.பயணம்
செய்வோர் ஒன்று அரசு ஊழியராய் இருப்பர்
இல்லாவிடில் இரயில்வே ஊழியராய் இருப்பர்.
எனக்கு பதிவு செய்யப்பட்ட இருக்கை இருந்த Bayல்
யாரும் இல்லை.சன்னல் வழியே ஊர்களையும்,
இரயில் நின்ற இடங்களையும் பார்த்துக்கொண்டு
நேரத்தைப் போக்கிக்கொண்டு இருந்தேன்.
பெல்காம் இரயில் நிலையம் சென்றதும்,உணவு
பரிமாறும் ஊழியர் ஒருவர் வந்து இரவுக்கு‘சாப்பாடு
வேண்டுமா?’ எனக் கன்னடத்தில் கேட்டார்.
நான் தார்வார் சென்று 10 மாதங்களுக்கு
மேலாகிவிட்டதால்,என்னால் கன்னடத்தை
புரிந்துகொண்டு பேசமுடிந்தது.
‘இரவு உணவு வேண்டும்.’ என கன்னடத்திலேயே
கூறினேன்.’எப்போது தருவீர்கள்?’என்றதற்கு அவர்
‘சார். மீரஜ் சந்திப்பில்(மகாராஷ்டிர மாநிலத்தில்
உள்ள ஒரு இரயில் சந்திப்பு) தருவேன்.’ என்றார்.
மீரஜ் சந்திப்பு வந்ததும் இரவு உணவு வந்தது.
சாப்பிட்டுவிட்டு, அமரும் இருக்கையில் யாரும்
இல்லாததால் கீழேயே படுத்துவிட்டேன்.அன்றைக்கு
எந்த கஷ்டமும் எனக்குத் தெரியவில்லை.
மறுநாள் சனிக்கிழமை அன்று, காலை கண்
விழித்தபோது, இரயில் ஏதோ ஒரு மகாராஷ்டிர
மாநிலத்தில் உள்ள ஒரு இரயில் நிலையத்தைத்
தாண்டி சென்றுகொண்டு இருந்ததைப் பார்த்தேன்.
உடனே பல் துலக்கிவிட்டு, புனே வந்தவுடன்
இறங்கத் தயாரானேன்.
காலை சுமார் 7 மணி வாக்கில் இரயில் புனே இரயில்
நிலையத்தை அடைந்தது.பெட்டிக்குள் ஏறிய போர்ட்டர்
ஏதோ மராட்டியில் கேட்டார்.அவர் சுமையைத் தூக்கிவர
வேண்டுமா எனக் கேட்பதை புரிந்துகொண்டு,நான் தந்திச்
செய்தி போல் ‘பாம்பே டிரயின்' என்று சொன்னேன்.
உடனே அவர் எனது Hold All ஐ எடுத்துக்கொண்டு
இறங்கினார். அவரை பின் தொடர்ந்தபோது,அடுத்த
பிளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு இரயிலின்
மூன்றாம் வகுப்பு பெட்டி ஒன்றில் எனது ‘ஹோல்டாலை’
வைத்தார்.
நான் Second Class Compartment என்று எவ்வளவோ
சொல்லியும் அவர் அதை காதில் வாங்கிக்
கொண்டதாகத் தெரியவில்லை.அவரிடம் என்னால்
அவரது மொழியில் பேசி விளக்கமுடியாததால்
வேறு வழியின்றி அந்த பெட்டியிலேயே அமர்ந்து
கொண்டு, அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து
அனுப்பிவிட்டேன்.
என்னை அவர் ஏற்றிய பெட்டி முன் பதிவு
செய்யப்படாதது என்பதால் கூட்டம் அதிகமாக
இருந்தது.
போர்ட்டர் வந்து ஏற்றியதால் உட்கார இடம்
கிடைத்தது.ஆனால் கையையும் காலையும்
குறுக்கி வைத்துக்கொண்டுதான் உட்காரமுடிந்தது.
எல்லோரும் மராத்தியில் பேசிக்கொண்டு இருந்ததால்
ஒன்றும் புரியவைல்லை.
மேலும் எனக்குள் இன்னொரு பயமும் இருந்தது.
அந்த சமயத்தில்தான் பால் தாக்கரேயின்
‘சிவ சேனா’ இயக்கம் தென்னிந்தியர்களை குறி
வைத்து தாக்கிக்கொண்டு இருந்தது. ஒருவேளை
நாம் ‘மதராசி’ எனத் தெரிந்தால் தொந்தரவு
தருவார்களோ என்ற பயத்தால் கண்ணை
மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
அந்த நினைப்பில் காலை சிற்றுண்டி சாப்பிட
வேண்டுமென்ற நினைப்பே வரவில்லை.
அந்த இரயில் சுமார் 8 மணிக்கு ‘புனே’ வை விட்டு
கிளம்பியது. சற்றும் நேரம் கழித்து கண் திறந்து
பார்த்தபோது என் அருகில் இருந்த ஒரு பெரியவர்
செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.
அவரை நான் பார்ப்பதைப் பார்த்ததும், நான் அந்த
செய்தித்தாளை படிக்க விரும்பிக்கிறேன் என நினைத்து,
தான் படித்த தாளை என்னிடம் கொடுத்தார்.
அதுவோ மராத்தி மொழியில் வரும் ஒரு தினத்தாள்.
அதை வேண்டாம் என சொல்லத்தெரியவில்லை.
பேசாமல் அதை வாங்கிக்கொண்டேன். எங்காவது
ஆங்கிலம் தென்படுகிறதா எனப் பார்த்தபோது அந்த
தினத்தாளின் பெயர் ஆங்கிலத்தில் ‘Lok Satta' என
அச்சிடப்பட்டு இருந்தது. அது இந்தியன் எக்ஸ்பிரஸ்
குழுமத்தை சேர்ந்தது எனத்தெரியும்.
அடுத்தப்பக்கத்தில் இருந்த, ஒரு Tender Notice நல்ல
வேளையாக ஆங்கிலத்தில் வெளியாகி இருந்ததால்
அதைப் படித்துவிட்டு(?) அவரிடம் கொடுத்துவிட்டென்.
நல்ல வேளையாக அவர் ஏதும் பேசவில்லை.
திரும்பவும் கண்ணை மூடிக்கொண்டேன்.
இப்படி சுமார் 4 மணி நேரம் தவிப்புடன் எப்போது
மும்பை வரும் எனக் காத்து இருந்தேன்.சுமார்
மதியம் 12 மணிக்கு அந்த இரயில் இப்போது
சத்ரபதி சிவாஜி முனையம் என சொல்லப்படுகிற
Victoria Terminus ஐ அடைந்தது.
தொடரும்
சென்னா கிதீரா? ஊட்டா/திண்டி மாடிதீரா -இவ்வளவுதான் எனக்குத் தெரிந்த கன்னடம். நீங்கள் பரவாயில்லை. சிவசேனாவை எண்ணி நீங்கள் பயந்தது இப்போது எனக்கு படிக்க சுவாரசியமாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் உஙகள் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. தொடரும் உங்கள் அனுபவத்திற்கு ஆவலுடன் காத்திருக்கும்.. பா.கணேஷ்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நான் வீரிய விதை ஆய்வாளராகவும்,சான்றிதழ் தருபவராகவும், இருந்ததால் தார்வார் மாவட்டத்தின் சின்னச்சிறு கிராமத்திற்கும்
பதிலளிநீக்குசெல்லவேண்டியிருந்தது.அப்போது விவசாயிகளிடம் பேசியே கன்னடத்தை கற்றுக்கொண்டேன்.அது பற்றி ‘நினைவோட்டம்’ தொடரில் பின் எழுத இருக்கிறேன்.
உண்மையில் அந்த மும்பை பயணம், அப்போதைய சூழ்நிலையில் மொழி தெரியாத எனக்கு ஒரு ‘கண்டம்’ போல் தான்.
கையில் இரண்டாம் வகுப்புச் சீட்டு இருந்தும் மூன்றாம் வகுப்பில், சிவசேனாக் காரர்கள் நடுவில் ஒரு தனித் தமிழனாக!வெறும் தவிப்பு இல்லை அது.பயங்கரமான தவிப்பு!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குமொழி தெரியாமல் பட்ட அவதிகளையும் ரயிலில் சிவ சேனா ஆதரவாளர்கள் மத்தியில் பயணம் செய்ய நேரிட்ட போது ஏற்பட்ட அச்சத்தினை விவரித்த விதம் மிகவும் எதார்த்தமாக இருந்தது . அரசியல் காரணம் வட மொழியினை கற்க விடாமல் ஒரு சூழ்நிலை தமிழகத்தில் இருந்தது வருந்த தக்கதே .நிற்க எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .தங்களக்கு ஏற்பட்ட அச்சம் ஒரு சூழ்நிலையில் எனக்கும் ஏற்பட்டது ..வருடம் 1991 , மாதம் May . திரு ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படு கொலை செய்ய பட்ட செய்தி தலை நகரில் கசிய தொடங்கியது .நான் அப்போது தலைநகரில் பணி புரிந்து வந்த நேரம் .திருமதி இந்திரா அம்மையார் கொலைக்கு பின் ஏற்பட்ட பின் விளைவுகள் அனைவர் நெஞ்சிலும் பசுமையாக இருந்தது ..நல்ல வேளை அப்போதிருந்த ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் அவர்கள் தலையிட்டு (பிரதமர் அந்நாள் தலை நகரில் இல்லை )
பதிலளிநீக்குயாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் கவனித்து கொள்ள ராணுவத்தினை கேட்டு கொண்டதின் விளைவு ...எந்த சமூகத்தினற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை ..கரணம் தப்பினால் மரணம் என்பார்களே .... வாசுதேவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!நீங்கள் சொல்வது சரியே.வடக்கே உள்ள அரசியல் வாதிகள் இந்தியை திணிக்க விரும்பியதும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அதை எதிர்த்ததுமே இந்த நிலைக்கு காரணம்.
பதிலளிநீக்குஇது பற்றி தனியாக ஒரு பதிவு எழுத உள்ளேன்.
அய்யா உங்கள் பதிவினுள், பெல்காம் இரயில் நிலையம் என்றதும் எனக்கு, எனது பழைய நினைவுகள் என்னுள் கிளர்ந்து வந்தன. நான் வேலையில் சேர்ந்ததும், எனக்கு முதன் முதல் எங்களது வங்கி பயிற்சிக்காக, பெல்காமில் இருந்த ஸ்டாப் டிரெயினிங் சென்டருக்குத்தான் அனுப்பினார்கள்.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! பெல்காம் அருமையான ஊர். இது கர்நாடகாவில் இருந்தாலும் மகாராஷ்ட்ர மாநில அரசு இதை தங்கள் மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்