இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னோட்
பிளேஸுக்கு திரும்பவும் பேருந்தில் செல்ல
தயக்கம் (பயம்!) காரணமாக நடந்து செல்லலாமா
அல்லது ஏதேனும் ஆட்டோவில் செல்லலாமா என
யோசித்துக்கொண்டு நின்றபோது, ‘ஃபட் ஃபட்’
ஒன்று வந்தது.
‘ஃபட் ஃபட்’ என்பது தில்லிக்கே உரித்தான ஒரு
பயண ஊர்தி.பார்ப்பதற்கு முன் பக்கம் மோட்டார்
சைக்கிள் போலவும்,பின் பக்கம் ஆட்டோ போலவும்
இருக்கும். மோட்டார் சைக்கிள் சேஸில்,
(Motor Cycle Chassis) பின்பக்கம் அமரும் இடத்தில்,
நம்மூர் ‘மீன் பாடி’ வண்டி அகலத்தில் அமரும் இடம்
அமைத்து,அதன்மேல் மேற்கூடு கட்டி,
முன்பக்கமும் பின் பக்கமும்,எதிரும் புதிருமாக
இருக்கைகள் அமைத்து தில்லியை வலம் வரும்
அலங்கார ஊர்திதான் ‘ஃபட் ஃபட்'.
அது ஃபட் ஃபட் என ஓசை எழுப்பிக்கொண்டு
வருவதால் அதற்கு தில்லிவாசிகள் ‘ஃபட் ஃப்ட்’
என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.இப்போது
நம் சென்னையில் எப்படி நமக்கு
ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோவுக்கு பதில்
உதவுகிறதோ, அதுபோல அங்கு இந்த
ஃபட் ஃபட் வண்டிகள் கை கொடுக்கின்றன.
அழித்தால் ஐந்து பேர் செய்யலாம். அப்படிபட்ட
உடல் வாகு கொண்ட ஒரு ஆஜானுபாகுவான
சர்தார்ஜிதான்,அந்த ‘ஃபட் ஃபட்’ ஐ,ஒட்டிவந்தார்.
அதிலே ஏற்கனவே இரு பயணிகள் இருந்தனர்.
நாங்கள் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்ததும்,
அந்த சர்தார்ஜி, ‘மதராஸ் ஓட்டல் ஆவோ,
மசால் வடை காவோ’ என்று கூறி எங்கள் அருகே
வண்டியை நிறுத்தினார்.
நாங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பது
தெரியாததால்‘கன்னோட் பிளேஸ்'என சொன்னதும்,
தலையை ஆட்டி,அதிலே ஏறச்சொன்னார்.
அவர் சொன்னதின் பொருள் அப்புறம் தான்
புரிந்தது.
கன்னோட் பிளேஸ் செல்லும் வண்டிகள்
எல்லாம்,அங்கு உள்ள Madras Hotel எனப்
பெயரிட்டு அழைக்கப்பட்ட உணவகம்
அருகே தான் சென்று நிற்கும்.எங்களைப்
பார்த்தும் தென்னிந்தியர்கள் என்பதைப்
புரிந்து கொண்ட அவர்,அங்கு அந்த
ஃபட் ஃபட் செல்லும் என்பதைக் குறிக்க அவ்வாறு
எதுகை,மோனையோடு கூறியிருக்கிறார்!
நாங்கள் அதில் ஏறி அமர்ந்து கன்னோட் பிளேஸில்
இருந்த Madras Hotel நிறுத்தம் சென்று இறங்கினோம்.
(இப்போது Madras Coffee House என அழைக்கப்படுகிறது
என நினைக்கிறேன்) அங்கு யாரையும் கேட்காமல்
நடக்கத் தொடங்கினோம்.
கன்னோட் பிளேஸ் என்பது புது தில்லியில்
வட்டவடிவில் கட்டப்பட்டுள்ள ஒரு வணிக
வளாகம்.இந்த வட்ட வடிவான வளாகத்தின்
இரு பக்கங்களிலும் அநேக வணிக நிறுவனங்கள்
உண்டு.வெளி வட்டத்தை கன்னோட் சர்க்கஸ்
என்றும் உள் வட்டத்தை கன்னோட் பிளேஸ்
என்றும் அழைக்கிறார்கள்.
இங்கே கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.
என்ன,பர்ஸ் கனமாக இருக்கவேண்டும்.
அவ்வளவுதான்!
இந்த வளாகத்தின் உள் வட்டத்திற்கு சென்று
வெளியே வர, ஒரு சக்கரத்தின் ஆரம் போன்று
10 வழிகள் உண்டு.
இந்த வணிக வளாகத்தை, 1929 ல் கட்ட ஆரம்பித்து
1933 ல் முடித்தார்களாம். விக்டோரியா மகாராணியின்
மூன்றாவது மகனான முதலாம் கன்னோட் கோமகன்
(1st Duke of Connaught) என்ற ஆர்தர் இளவரசனின்
(The Prince Arthur) பெயரைக்கொண்டு
Connaught Place என பெயரிடப்பட்டதாம்.
நாங்கள் சென்றபோது,நடுவில் ஒரு அழகிய
பூங்காவும், இந்தியா காஃபி ஹௌஸும் இருந்தன.
ஒரு மூலையில் தில்லித் தமிழ் சங்கத்தின் ஒரு
சிறிய அலுவலகம் கூட இருந்தது. இப்போது
அவை யெல்லாம் இல்லை.
அந்த இடத்தில் Palika Bazaar என்ற பெயரில்
தரை மட்டத்திற்கு கீழே ஒரு வணிக மய்யம்
அமைத்துவிட்டார்கள்.(மாநகரக் காவல் என்ற
படத்தில் விஜயகாந்த் சண்டைபோடுவது போன்ற
காட்சி எடுக்கப்பட்டது இங்கேதான்.)
நாங்கள் இறங்கிய நிறுத்தம் உள் வட்டத்தில்
இருந்தது.சிறிது தூரம் நடந்து உடனே வலப்புறம்
வந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம்.
அது Sansad Marg என பின் தெரிந்துகொண்டோம்.
கடைகள் ஏதும் தென்படவில்லை.
ஜந்தர் மந்தர் எனப்படும், வானியல் உபகரணங்கள்
உள்ள இடம் தாண்டி,சர்தார் பட்டேல் சிலை உள்ள
சந்திப்பை கடந்தபோது, இரண்டு பெரிய துவாரக
பாலகர் போன்ற உருவங்களோடு கூடிய
கட்டிடத்தைப் பார்த்தோம்.அது ரிசர்வ் வங்கி
கட்டிடம் என்பதும் நாங்கள் நிற்பது பாராளுமன்ற
சாலை என்பதியும் தெரிந்துகொண்டோம்.
யாரையும் கேட்காமல் நடந்ததால், கன்னோட்
பிளேஸிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம்
என உணர்ந்து,தலைவிதியை நொந்துகொண்டு
திரும்பி நடந்தோம்.
திரும்ப வணிக வளாகம் வந்தபோது இரவு
மணி 7.30 ஆகிவிட்டது. கடைகளை எல்லாம்
அடைக்க தொடங்கியிருந்தார்கள்.
தில்லியில் இரவு 7.30 மணிக்கு கடைகளை
எல்லாம் மூடிவிடுவார்களாம்.எனவே வேறு
வழியின்றி ஏமாற்றத்தோடு இறங்கிய
இடத்திற்கே திரும்பி,அங்கு நின்றிருந்த
ஃபட் ஃபட் டில் ஏறி கரோல் பாக் திரும்பினோம்.
தொடரும்
ஆக, ஷாப்பிங் எதுவும் செய்யாம வெறுங்கையோடதான் திரும்பும் படி ஆச்சா... அடாடா... நல்ல அனுபவம்தான்.
பதிலளிநீக்குஒரு சுத்து சுத்திக் காண்பிச்சுட்டீங்க! நன்று.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!ஆமாம்.கன்னோட் பிளேஸில் வாங்க முடியாததை பின்பு ‘கரோல் பாக்’ கடைகளிலேயே வாங்கிவிட்டேன்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.தில்லியில் இருந்த உங்களுக்கு சுற்றிக் காண்பிக்கவேண்டுமா என்ன?
பதிலளிநீக்குNice blog with vivid description of Phat Phats, connaught circus etc . Informative too for it contained details of the circular market constructed in honor of a British Prince . The way the blog moved from karol bagh to connaught circus and nearby areas like Parliament st, etc was as if one was being gently guided through these parts of New Delhi . Even those who have never visited the capital would feel familiar with these parts now. For the benefit of all curious readers who may be wondering about phat phats , ( before being ordered to wind up by a Supreme court order in 1998 to contain pollution ) . a Phat phat
பதிலளிநீக்குphoto could have been published.vasu
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!. நீங்கள் கூறியது போல, அடுத்த பதிவில் ‘ஃபட் ஃபட்’ புகைப்படம் ஒன்றை வெளியிடுவேன்.
பதிலளிநீக்கு