புதன், 7 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 6

புது தில்லி இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கூட
பயணம் செய்த தமிழர் உதவியால்,ஒரு போர்ட்டரைக்
கூப்பிட்டு எனது பொருட்களை எடுத்துக்கொண்டு
வெளியே வந்தேன். அந்த போர்ட்டர் நேரே ஒரு
ஆட்டோ அருகே என்னை அழைத்து சென்று,அதில்
எனது ஹோல்டாலை வைத்துவிட்டு அவரது
சேவைக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு
சென்றுவிட்டார்.

அந்த ஆட்டோ ஓட்டுனர் ஏதும் கேட்கு முன்பே,நான்
West Patel Nagar என்று எனது தலைமை அலுவலகம்
இருக்கும் இடத்தை சொல்லிவிட்டேன்.அவர் திரும்ப
ஏதோ கேட்டபோது, தலையை ஆட்டினேன். உடனே
அவர் இன்னொரு பயணியை அழைத்து
என்னுடன் அமரச்சொன்னர்.

அவரை அழைத்து செல்லலாமா எனக் கேட்டிருக்கிறார்
போலும். அவர் பேசியது எனக்குப் புரியாததால்,
தலையை ஆட்டியிருக்கிறேன். அதற்கு பிறகு என்னால்
அவரை ஏற்ற வேண்டாம். தனி ஆட்டோ தான் வேண்டும்
எனச் சொல்லத்தெரியவில்லை.

இந்தியும் தெரியாது. எனது அலுவலகம் எந்த திசையில்
இருக்கிறது என்பதும் தெரியாது.எப்படி அலுவலகத்தைக்
கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற யோசனையோடு
பக்கத்தில் இருப்பவரிடம் உதவி கேட்கலாமா என
நினைத்து, அவரைப் பார்த்தேன்.அவரோ எங்கோ பார்த்துக்
கொண்டு இருந்தார்.ஒருவேளை அவருக்கு ஆங்கிலம்
தெரியாவிட்டால் என்ன செய்வது.இனி நடப்பது
நடக்கட்டும் என எண்ணி சும்மா இருந்துவிட்டேன்.

ஆட்டோ புது தில்லி ஸ்டேஷனுக்கு நேர் எதிரே
பயணித்து,சிறிய சந்துகளின் ஊடே சென்றது.எங்கு
செல்கிறது என வெளியே உள்ள வணிக நிறுவனங்களின்
பலகையைப் பார்த்தபோது,‘பகாட் கஞ்ச்’ (Pahar Ganj)
என்ற இடம் வழியாக செல்வது தெரிந்தது.இரண்டு
மூன்று சந்துகள் தாண்டி ஒரு இடம் சென்றதும்
என்னுடன் பயணித்தவர் இறங்கிவிட்டார்.

பின் எனது ஆட்டோ அந்த சந்துகளை விட்டு வெளியே
வந்து, மெயின் ரோடில் பயணிக்க ஆரம்பித்தது. நானும்
West Patel Nagar வந்துவிட்டதா என வெளியே உள்ள
பெயர் பலகைகளைப் பார்த்துக்கொண்டு வந்தேன்.

முதலில் Pusa Road என்ற பெயர் பலகையைப் பார்த்தேன்.
பின் East Patel Nagar என்ற பெயர் பலகையைப்
பார்த்ததும் தான், ஆட்டோ ஓட்டுனர் சரியான
இடத்திற்குத்தான் அழைத்து செல்கிறார் எனத்
தெரிந்துகொண்டதும் சற்றே நிம்மதி வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், நான் செல்ல வேண்டிய
West Patel Nagar வந்துவிட்டதை அறிந்தேன். வெளியே
பார்த்துக்கொண்டு வந்தபோது, வலப்புரத்தில்
National Seeds Corporation Ltd, என்ற பெயர்ப் பலகையைப்
பார்த்ததும் ‘ஸ்டாப் ஸ்டாப் ‘ எனக் கத்தினேன்.

உடனே ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி
என்னைப் பார்த்தபோது.நான் கையை வலப்புரம் காட்டி
‘அங்கு போங்கள்.’என ஆங்கிலத்தில் சொன்னேன்.
அவரும் ஆட்டோவை திருப்பி சாலையைக் கடந்து
எனது அலுவலகம் முன்பு நிறுத்தினார்.

அதற்குள் அவர் நான் ஊருக்கு புதியவன் என்பதையும்
இந்தி தெரியாது என்பதையும், புரிந்து கொண்டுவிட்டார்.
இறங்கியதும் நான் 100ரூபாய் நோட்டைக் கொடுத்ததும்
பாக்கி 75 ரூபாய் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

(பின்பு நண்பர்கள் மூலம் நான் கொடுத்தது அதிகம்
எனக் கேள்விப்பட்டேன்.என்ன செய்ய. என்னை
சரியான இடத்திற்கு கொண்டுவந்து விட்டாரே அதை
நினைத்து ஆறுதல் அடைந்தேன்,)

எனது ஹோல்டாலை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில்
நுழைந்தபோது,அங்கிருந்த இரவுக் காவல்காரர் இந்தியில்
ஏதோ கேட்டார்.நான் ஆங்கிலத்திலேயே ‘தார்வார் NSC
அலுவலகத்திலிருந்து வருகிறேன்.’ என்று பதில்
சொன்னேன்.அவர் நல்ல வேளையாக ஒன்றும்
சொல்லாமல் என்னை அழைத்து சென்று அலுவலகத்தின்
ஒரு பகுதியில் கையைக் காட்டி அங்கு எனது Luggage
வைக்க சைகை காட்டினார்.

அவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த ஆள் மதராசி.
இவனுக்கு இந்தி தெரியாது என்று. நான் அவரிடம்
Bathroom என்றதும், அவர் அது இருக்குமிடத்தைக்
காட்டினார்.

எங்களது அலுவலகம் ஒரு தனியாருடைய பெரிய
வீட்டில் இருந்ததால் அங்கு குளியல் அறையுடன்
கூடிய பல அறைகள் இருந்தன,வெள்ளிக்கிழமை
காலையில் தார்வாரில் குளித்தபிறகு, இரண்டு
நாட்களாகக் குளிக்காததால் எப்போது குளிப்போம்
என இருந்ததால், தண்ணீரைக் கண்டதும் எனக்கு
ஒரே மகிழ்ச்சி.பல்விளக்கி,காலைக்கடன் கழித்து,
குளித்து முடித்தேன்.

எங்கள் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்பப்
பிரிவில்,கோவை வேளாண் கல்லூரியில் படித்த,
சங்கரன் என்பவர் பணிபுரிகிறார் எனக் கேள்விப்
பட்டிருந்தேன். அவர் எப்போது வருவார் எனத்
தெரிந்துகொள்ள அந்த ஊழியரிடம் சென்று ,
‘சங்கரன் எப்போது வருவார்?’ என ஆங்கிலத்திலேயே
கேட்டேன். அவர் தனது கைவிரல் சைகை மூலம்
9 மணி எனச்சொன்னார்.

அப்போது மணி 8.30 இருக்கும். அவர் வருவதற்குள்
உடைமாற்றி தயாராக இருக்கலாம் என எண்ணி,
நண்பர் அரங்கநாதன் கொடுத்த Coat அணிந்து,
‘டை’ யைக்கட்டிக்கொண்டு இருக்கும்போது திடீரென
பேச்சுக்குரல் கேட்டது.அந்த காவலாளியிடம் யாரோ
ஏதோ கேட்கிறார்கள் என்பதையும், அவர் அதற்கு
பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதையும்
புரிந்து கொண்டேன்.

நான் இருந்த அறை ‘ஷூ’ சத்தம் கேட்டபோது,
நிமிர்ந்து பார்த்தேன். அங்கு வந்தவர். ஆங்கிலத்தில்
‘நீங்கள் யார்?’ எனக்கேட்டார். நான் என்னைப்பற்றி
சொன்னதும்,‘வாருங்கள். என என்னை
அழைத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார்.
அந்த அறையின் வெளியே இருந்த பெயர் பலகை
மூலம் அவர்தான் எங்கள் Seed Production Officer,
Dr.M.S.Joshi என அறிந்துகொண்டேன்.

அவர்தான் எங்கள் நிறுவனத்தில் உள்ள எல்லா
தொழில் நுட்ப ஊழியர்களுக்கும் தலைவர்.
எனது Boss அவர்தான் என்றதும் தயக்கதோடு
நின்றபோது, அவர் என்னை அன்போடு
உட்காரச்சொன்னார்.‘எப்போது வந்தீர்கள்?
எனக் கேட்டுவிட்டு.’இந்தி தெரியாதா?’ என்றார்.
(அந்த ஊழியர் சொல்லி இருப்பார் போலும்.)

‘தெரியாது.’ என்றதும்,‘பரவாயில்லை. எங்கு
தங்கப்போகிறீர்கள்?’ என்றார்.‘தெரியவில்லை சார்.
திரு சங்கரன் மூலம் ஒரு ஓட்டலில் தங்க
எண்ணியுள்ளேன்.’என்றதும்.கவலை வேண்டாம்.
‘கரோல் பாக்’கில்(Karol Bagh) உங்களவர்கள் ஓட்டல்கள்
நிறைய உள்ளன. சங்கரன் வந்ததும் அவர்
உங்களுக்கு உதவி செய்வார்.’ எனக்கூறி எனது
பயணம் பற்றி விசாரித்தார்,

நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி சொன்னதும்,
சிரித்துக்கொண்டே ’ரிசர்வ் செய்யாமல் வந்தால்
இப்படித்தான் என்ன செய்ய?’ என்றார். அவரிடம்
பேசும்போது முதலில் தயக்கம் இருந்தாலும்,
அவரது ஆதரவான வார்த்தையைக்கேட்டதும்
இரண்டு நாட்கள் நான் பட்ட கஷ்டங்கள்
மறைந்துவிட்டன.

(அந்த நேரத்தில், நான் தமிழ் நாடு வேளாண் துறையில்
இரண்டு மாதங்கள் பணியாற்றியபோது, எனது
மாவட்ட வேளாண் அதிகாரி அதிகாரத் திமிரோடு
என்னை நடத்தியது,அப்போது நினைவுக்கு வராமல்
போகவில்லை. அது பற்றி ‘நினைவோட்டம்’
தொடரில் எழுதுவேன்.)

அப்போது திரு சங்கரன் வந்துவிடவே, அவரைக்
கூப்பிட்டு ‘உங்கள் ஊர்க்காரர் வந்திருக்கிறார். அவருக்கு
உதவி செய்யுங்கள்.’என Dr.Joshi சொன்னார். அவருக்கு
நன்றி சொல்லிவிட்டு, திரு சங்கரனுடன் அவர் இருக்கும்
இருக்கைக்கு சென்றேன்.


தொடரும்

13 கருத்துகள்:

  1. மேலதிகாரிகள் என்றாலே சிரித்துப் பேசிவிடக் கூடாது, கடுகடுப்பாக இருந்தால்தான் வேலை வர்ங்க முடியும் என நினைக்கும் பல மேலதிகாரிகளை என் வாழ்விலும் சந்தித்திருக்கிறேன். (விதிவிலக்காக தோளில் கை போட்டு சிரித்துப் பேசிய சிலரது அன்பையும் அனுபவித்திருக்கிறேன்.) ஹூம்... ஆட்டோக்காரர்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது. அடுத்த பகுதியை எதிர்நோக்கி ஆவலுடன்... பா.கணேஷ்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!. நீங்கள் கூறுவது சரியே. எனது 38 ஆண்டுகள் பணியில் பல Boss களின் கீழே பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம் பற்றி தனிப் பதிவே எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல வேளையாக போய்ச் செர்ந்ததும் மேலதிகாரி நல்லவராக இருந்தாரே! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. அப்பப்பா பயண அனுபவம் என்பது மிகத் திறில்லான விடயம் தான். சுவைபட எழுதியுள்ளீர்கள். 2 கிழமை இடைவேளை ..அதோடு நீண்டு விட்டது. வாழ்த்துகள். அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  6. அப்பப்பா பயண அனுபவம் என்பது மிகத் திறில்லான விடயம் தான். சுவைபட எழுதியுள்ளீர்கள். 2 கிழமை இடைவேளை ..அதோடு நீண்டு விட்டது. வாழ்த்துகள். அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. கருத்துக்கு நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. பொதுவாகவே வட நாட்டில் அதிகாரிகள் உதவும் மனப்பான்மை உடையவர்கள் ...நான் வட நாட்டில் அதுவும் தலைநகரில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் வசித்த அனுபவத்தில் கூறுவது இது . மற்ற படி எப்படியோ ...அவர்கள் சொந்த பிரச்சினை என்றால் உதவுவதற்கு ஓடி வருவார்கள் . தங்கள் விஷயத்திலும் இதுவே நடந்து உள்ளது .பட்ட கஷ்டங்கள் முடிந்து தலை நகரை வந்து அடைந்து விட்டீர்கள் . இனி மேலும் அவதிகள் இருக்காது என்றே எண்ணுகிறேன் ... வாசுதேவன்.

    பதிலளிநீக்கு
  10. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!. நீங்கள் சொல்வது சரியே! நம் மாநில அதிகாரிகள் எவ்வாறு தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களை நடத்துகிறார்கள் என்பதை எனது மாநிலப் பணி பற்றி எழுதும்போது விரிவாக எழுத இருக்கிறேன். புது தில்லியில் நான் பட்ட அனுபவமே இந்த பதிவின் தலைப்பு. வரும் நாட்களில் அது தெரிய வரும்.

    பதிலளிநீக்கு
  11. nice post.... thanks for sharing the information.. please read my tamil kavithaigal in www.rishvan.com

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரிஷ்வன் அவர்களே!

    பதிலளிநீக்கு