வெள்ளி, 30 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 13

நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த வணிகரிடம், அந்த
ஜோடி செருப்பின் விலை எவ்வளவு என இந்தியில்
கேட்டபோது,அவர் ‘டாயி ருப்யா’என்றார்.உடனே
நண்பர்,’நை.நை.பாஞ்ச் ருப்யா.’என்றார்.அதாவது
அவர் சொன்ன விலை அதிகம் என எண்ணி ஐந்து
ரூபாய்தான் தர முடியும் என சொன்னார்.

(இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.இந்த நிகழ்ச்சி நடந்த வருடம் 1967.
அதனால் என்ன செருப்பு ஐந்து ரூபாய்க்கு கேட்டாரே
என எண்ணவேண்டாம்.அப்போது இருந்த
விலைவாசி அப்படி.)

அந்த வணிகர் திரும்பவும்,‘அரே பாய்.கேவல்
டாயி ருப்யா.’என்றார். நண்பரோ திரும்பவும்,
’நை.நை. பாஞ்ச் ருப்யா.’என்றார்.இப்படி அவர்
‘டாயி ருப்யா’ என்பதும், நண்பர் இராதாகிருஷ்ணன்
’நை.நை.பாஞ்ச் ருப்யா’என்பதும்,சிறிது நேரம்
தொடர்ந்தது.

பிறகு அவர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்து,
‘பாய் ஸாப்.டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா ‘என்றார்.
அப்போதுதான் எங்களுக்கு (நண்பர்
இராதாகிருஷ்ணனுக்கும் தான்) புரிந்தது இந்தியில்
டாயி (ढाई) என்றால் இரண்டரை என்று!

நண்பருக்கு ஒன்றிலிருந்து நூறு வரை தான்
இந்திக்கான சரியான சொற்கள் தெரியும் போல.
எனவே அந்த வணிகர்,டாயி ருப்யா என்றதும்,
பின்னங்களுக்கான சரியான சொல் தெரியாததால்
இவர் அது பத்து ரூபாய்க்கு மேல் போலும் என
நினைத்து(!) ஐந்து ரூபாய்க்கு கேட்டிருக்கிறார்!!

நண்பர் விலை விசாரித்தபோது பேசிய இந்தியிலிருந்து,
அந்த வணிகருக்கு நாங்கள் ஊருக்கு புதியவர்கள்
என்றும்,‘மதராசிகள்’என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

பிறகு நண்பர் திரும்பத் திரும்ப இரண்டரை ரூபாய்
சொன்ன பொருளை,ஐந்து ரூபாய்க்கு கேட்டதும்,
அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகம்
பறந்தோடிவிட்டது.அதனால் அவர் உடனே
‘டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா’ என ஆங்கிலத்தில்
சொல்லிவிட்டார்.

உடனே நண்பர் தவறை உணர்ந்து, ’நை.நை.
தோ ருப்யா’ (இரண்டு ரூபாய்) என்றார்.அதற்கு
அவர் ‘நை பாய்.’ எனக் கூறிவிட்டார்.வேறு
வழியின்றி நான் அவர் கேட்ட பணத்தைக்
கொடுத்து அதை வாங்கினேன்.

நண்பரின் இந்திப் புலமையைப் பற்றி நன்றாக
தெரிந்து கொண்டதால், அதற்குப் பிறகு ஒன்றும்
வாங்காமல் திரும்பி விட்டேன்.

அறைக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன்.
’எங்கள் ஊரில் சொல்வார்கள். ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவாது என்று. அதுபோல நீங்கள் என்னதான்
பள்ளியில் இந்தி படித்திருந்தாலும்,பேசுவது எப்படி
எனத்தெரியாவிட்டால் படித்தும் பிரயோஜனம் இல்லை.
இந்தியை பள்ளி இறுதி வரை படித்த நீங்களும்,
இந்தி படிக்காத நானும் இப்போது ஒரே
நிலையில்தான் இருக்கிறோம்.எனவே இனியாவது
இந்தியை படித்திருக்கிறோம் என பெருமை
பேசாதீர்கள்.’என்றேன்.அதற்கு பிறகு அவரிடமிருந்து
எந்த பேச்சும் இல்லை.

மறுநாள் நாங்கள் இருந்த ராமானுஜம் மெஸ்
மேலாளரிடம் எங்கு பொருட்களை வாங்கலாம் எனக்
கேட்டபோது அவர் சொன்னார்.‘நீங்கள் ஆர்ய
சமாஜ்சாலை தாண்டியதும் உள்ள அஜ்மல்கான்
சாலையின் இடதுபுறம் உள்ள கஃப்பார் மார்க்கெட்
(Gaffar Market)சென்றால் என்ன உங்களுக்கு
வேண்டுமோ அது எல்லாம் அங்கு கிடைக்கும் என்றார்.

அதற்குப் பிறகு நாங்கள் ஒரு நாள் பயிற்சி
முடிந்து வந்ததும், கஃப்பார் மார்க்கெட் போனோம்.
அங்கே வரிசையாக நிறைய கடைகள்,
சென்னையில் உள்ள'ரிச்சி மார்க்கெட்’ போல
நெருக்கத்தில் இருந்தன.

அங்கே இல்லாத பொருளே இல்லை எனலாம்.
நான் அப்பாவுக்கு கம்பளிக் குல்லாவும்,
அம்மாவுக்கு ஸ்வெட்டரும் மற்றும் எனக்கு
பெல்ட், ஷூ முதலியவைகளை வாங்கினேன்.

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தால் நானே
ஆங்கிலத்திலேயே பேசி (பேரமும் பேசி)
பொருட்களை வாங்கினேன். அங்கு இருந்தவர்கள்
நாம் ஆங்கிலத்தில் பேசினாலும், பாதி ஆங்கிலம்
பாதி இந்தியில் என(HInglish ல்)பேசியதால்
சிரமம் ஏதும் இல்லை.

ஆனாலும் இந்தியில் பேசாததால்,நிச்சயம் அதிக
விலை கொடுத்திருப்பேன்.அதனாலேன்ன,
மொழி தெரியாததற்கு அது விலை என
எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

அப்போது புது தில்லியில் எனது மாமா மகன்
திரு வேணுகோபாலன் அவர்கள்
Public Health Engineering துறையில் முது நிலைப்
பொறியாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார்.
ஊருக்கு எழுதி அவரது முகவரியை
அறிந்துகொண்டு பின் அவரது முகவரிக்கு கடிதம்
எழுதினேன்.நான் பயிற்சிக்கு வந்திருப்பதை
தெரிவித்து,அவர் வீட்டுக்கு எவ்வாறு வருவது
எனக்கேட்டு எழுதி இருந்தேன்.

அவருடன் பணியாற்றும் வேதராமன் என்கிற
பொறியாளர்‘கரோல் பாக்’ கில்தங்கி இருந்ததால்,
அவர் மூலம் நான் எவ்வாறு Andrews Ganj ல் இருந்த அவர் வீட்டிற்கு வருவது என கடிதம்
கொடுத்து அனுப்பி இருந்தார்.

அந்த பொறியாளர் என்னை நேரில் வந்து
பார்த்து கடிதத்தைக் கொடுத்துவிட்டு,எவ்வாறு
பேருந்து பிடித்து அங்கு செல்வது என விவரமாக
சொன்னார்.

புது தில்லி சென்று 20 நாட்களுக்கு மேல்
ஆகிவிட்டதால்,முதலில் இருந்த‘பயம்’போய்விட்டது.
எங்கு சென்றாலும் அங்கு உள்ளவர்கள் ஆங்கிலம்
பேசினாலும் பேசாவிட்டாலும் நான் ஆங்கிலத்தில்
பேசி நிலைமையை சமாளிக்கும் தைரியம்
வந்துவிட்டதால், தனியாக Andrews Ganj செல்ல
தயக்கம் ஏற்படவில்லை.

அப்போதே டில்லியில் விடுமுறை நாட்களில்
DTC யில் ஐந்து ரூபாய்க்கு சிறப்பு பயணச்சீட்டு
விற்பனை செய்வார்கள்.அதை வாங்கினால்
நாள் முழுவதும் எந்த பேருந்திலும் எந்த
வழித்தடத்திலும் பயணம் செய்யலாம்’

ஒரு ஞாயிறு காலை ஆர்ய சமாஜ் சாலையில்
இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு
நடத்துனரிடம்(விடுமுறை நாட்களில் சிறப்பு
பயணச்சீட்டு வழங்க, ஒரு நடத்துனர் இதற்காகவே
நின்றுகொண்டு இருப்பார்) ஐந்து ரூபாய் கொடுத்து
சிறப்பு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பேருந்தில்
ஏறி பாராளுமன்றம் அருகே இறங்கி அங்கு
வேறொரு பேருந்து பிடித்து Andrews Ganj ல் உள்ள
எனது மாமா மகன் வீட்டுக்கு போனேன்.

(அடுத்த பதிவு 2012 ல் என்பதால், அனைவருக்கும்
இப்போதே எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!)

தொடரும்

19 கருத்துகள்:

 1. நல்ல பதிவு.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி திரு இரத்தினவேல் அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. ஹா... ஹா.... இரண்டரை ரூபாய் பொருளை ஐந்து ரூபாக்கு பேரம் பேசிய கதை அருமை. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் பாராட்டியதற்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கு நன்றி திரு இரவிச்சந்திரன் அவர்களே!உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. ஆவாரா என்ற ஹிந்தி படம் ஒன்றில்( more than 50 years ஓல்ட் movie ...) ராஜ் கபூர் ஒரு கடையில் வாழைபழம் பேரம் பேசி வாங்கும் ஒரு காட்சி ஒரு ரூபாய்க்கு மூன்று பழம் என்று கடைக்காரர் சொல்ல ராஜ்கபூர் மூன்று பழம் ஒரு ரூபாய்க்கு தர முடியுமா முடியாதா என்று கேட்பார் ..மீண்டும் மீண்டும் இந்த வாதம் தொடரும் ..நல்ல ஹாஸ்யம் ..அது போல கிட்டத்தட்ட ... நீங்கள் நன்றாக கூறினீர்கள் .. பழக பழக தான் மொழி வரும் வெறும் படிப்பு புரிந்து கொள்ள தான் உதவும் ...

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ..வாசு

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் புதிய தகவலுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!
  //பழக பழக தான் மொழி வரும்.// மிகவும் சரி.

  பதிலளிநீக்கு
 9. இனிய வாழ்த்துக்கள்...நல்ல பதிவு. பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி மலிக்கா அவர்களே! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

  தில்லி அனுபவங்கள் சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! வாழ்த்திய தங்களுக்கு நன்றி. தங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. பழக பழக தான் மொழி வரும்.
  என்பது தான் எவ்வளவு உண்மை! வாழ்த்துகள் சகோதரா..தொடருங்கள்..
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 14. கருத்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 15. This "nai nai pAnch rupyA" episode reminds me of another episode that occured in the US. Two Indian friends went to buy some gadget in an auntion house. The auctioneer spoke at a fast pace (as is their wont) when he pointed to a gadget that one of the friends wanted. The auctioneer rattled, "I want three, dollar fifty". (He meant he would be happy to sell it at 3 dollars but he started the auction at $1.50). The friend shouted "five dollars" (thinking it was a good bargain). The auctioneer immediately said "sold".

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கும் புதிய தகவலுக்கும் நன்றி திரு நாரதா அவர்களே

  பதிலளிநீக்கு