இராமானுஜம் மெஸ் சென்றதும்,டாக்ஸிக்கு பணம்
கொடுத்துவிட்டு நண்பர் தர்மலிங்கத்தைத் தேடினேன்.
அப்போது மேலிருந்து என் பெயரைச்சொல்லி யாரோ
கூப்பிடுவதுபோல் இருந்ததும், நிமிர்ந்து பார்த்தேன்.
மேலே பால்கனியில் இருந்து நண்பர் தர்மலிங்கம்
என்னைப் பார்த்து ‘நேரே முதல் தளத்திற்கு
வாருங்கள்.’ என்றார்.
அதற்குள் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் வந்து
என் படுக்கையை எடுத்துக்கொண்டு மாடிக்கு
சென்றார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.அவர்
நேரே நண்பர் தங்கியிருந்த அறைக்கு சென்று
அங்கு காலியாக இருந்த கட்டிலின் மேல் எனது
ஹோல்டாலை வைத்துவிட்டு சென்று விட்டார்.
பின் நண்பர், கீழே என்னை அழைத்து சென்று
அந்த மெஸ்ஸின் மேலாளரிடம் என்னை
அறிமுகப்படுத்தினார். அறைக்கு வந்ததும் எங்களைப்
பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டோம்.
நண்பர் தர்மலிங்கம் கோவையில் பணிபுரிந்தாலும்
கேரளாவில் வளர்ந்தவர் என்பதும், வேளாண்
அறிவியல் படிப்பை திருவனந்தபுரத்தில் இருக்கும்,
வெள்ளயானி வேளாண் கல்லூரியில் படித்தவர்
என்றும் தெரிந்துகொண்டேன்.
மேலும் அவர் வீட்டில் கன்னடம் பேசுபவர் என்றும்,
அப்போது தான் திருமணமானவர் என்றும்
துணைவியார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும்
அறிந்துகொண்டேன்.
நண்பர் இராதாகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவர்
என்பதையும் அவரும் திருவனந்தபுரம் வெள்ளயானி
வேளாண் கல்லூரியில் படித்தவர் என்றும்
தெரிந்துகொண்டேன்.இருவரும் ஒரே கல்லூரி
என்பதால் பழைய நட்பை அங்கு வந்ததும்
புதுப்பித்துக்கொண்டனர் போலும்.
இந்த நேரத்தில் நான் தங்கியிருந்த இராமானுஜம்
மெஸ் பற்றியும்,‘கரோல் பாக்’ பற்றியும் கொஞ்சம்
சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.நம்
சென்னையின் திருவல்லிக்கேணி போல்,அப்போது
தென் இந்தியாவிலிருந்து வந்து,டில்லியில் அரசு
மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில்
சேரும் கட்டை பிரம்ச்சாரிகளுக்கு, புகலிடம்
தந்தது ‘கரோல் பாக்’ தான்.
தில்லி விரிவாக்கத்தின் போது,‘கரோல் பாக்’ கில்
கட்டப்பட்ட, வீடுகளின் உரிமையாளர்கள், இந்தியா
பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு
வந்த பஞ்சாபிகள்.(இவர்களை உள்ளூர் மக்கள்
கேலியாக Repatriate என்பதை குறிக்கும் விதமாக
'R’ என சொல்வதுண்டு.)
ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது மூன்று தளங்கள்
கொண்டதாக இருக்கும்.மேலே பர்சாத்தி என
சொல்லப்படும் மொட்டை மாடியில் ஒரு அறை
குளியல் வசதி(?)யோடு இருக்கும்.
கீழ் தளத்தில் வீட்டின் உரிமையாளர் தங்கிக்கொண்டு,
மற்ற தளங்களை தென்னிந்தியருக்கே வாடகைக்கு
விடுவார்கள்.மேலே உள்ள மொட்டை மாடி அறையை
தென்னிந்திய பிரமச்சாரிகளுக்கே வாடகைக்கு
விடுவார்கள்.
தப்பித்தவறி கூட வட இந்தியர்களுக்கு
அதுவும் குறிப்பாக அவர்கள் இனத்தை சேர்ந்த
பஞ்சாபிகளுக்கு வாடகைக்கு விடமாட்டார்கள்.
Only for South Indians என்று ‘வாடகைக்கு’ என
எழுதிய பலகையில் எழுதியே இருப்பார்கள்.
காரணம் தென்னிந்தியர்கள் வம்பு தும்புக்கு
போகமாட்டார்கள்,வாடகையை ஒழுங்காக
கொடுத்து விடுவார்கள்,அதுவுமல்லாமல்
தேவைப்படும்போது தகராறு செய்யாமல் வீட்டை
காலி செய்து விடுவார்கள் என்பதால்.
இன்னொரு சிறப்பு(!)காரணமும் உண்டு. நமது
சாம்பார் மேல் அவர்களுக்கு கொள்ளை பிரியம்.
சாம்பரை அப்படியே குடிப்பவர்களும் உண்டு.
அவர்களுக்கு எப்படி அதை செய்வது எனத்
தெரியாததால், தங்கள் வீட்டில் ஒரு ‘மதராசி’
குடும்பத்தோடு தங்கியிருந்தால்
தேவைப்படும்போது சாம்பார் வாங்கிக்
கொள்ளலாம் அல்லவா?
சில பஞ்சாபிகள் தங்கள் வீடுகளை,‘மெஸ்‘ நடத்தும்
தென்னிந்தியர்களுக்கும் வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
அப்படி ‘கரோல் பாக்’ கில் இருந்த சரஸ்வதி மார்க்
என்ற தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தான்
இராமானுஜம் மெஸ் இருந்தது.
கரோல் பாக் கில் முக்கிய வணிக சாலையான
அஜ்மல்கான் சாலைக்கு இணையாக மேற்கு
திசையில் இருந்தது இந்த சாலை.அஜ்மல்கான்
சாலைக்கு இணையாக கிழக்கு திசையில்
இருந்தது குருத்வாரா சாலை. இந்த மூன்று
சாலைகளுக்கும், தெற்கே பூசா சாலையும்,
வடக்கே ஆர்யசமாஜ் சாலையும் இருந்தன.
இந்த இடங்கள் தான் முதன் முதல் தில்லி
வரும் தென்னிந்தியர்களுக்கு சொர்க்க பூமி.
ஏனெனில் இங்குதான் இராமானுஜம் மெஸ்
போன்று, இராமநாத அய்யர் மெஸ், சௌத்
இந்தியன் மெஸ், ராவ் மெஸ் என அனேக
உணவகங்களோடு கூடிய அறைகள் உள்ள
மெஸ் கள் இருந்தன.
இவை எல்லாமே 90 சதம் அறைகளை
மாதாந்திர வாடகைக்கும், மீதியை தில்லிக்கு
வணிக அல்லது வேறு விஷயமாக வரும்
தென்னிந்தியர்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தன.
இங்கு தென்னிந்திய உணவு கிடத்ததால்,எப்போதும்
இந்த 'மெஸ்' களில் கூட்டம் தான்.
நான் தங்கியிருந்த இராமானுஜம் 'மெஸ்'ஸில்
காலையில் எல்லோரும் அலுவலகம்
போய்விடுவதால்,காலையிலேயே சாம்பார்,ரசம்
கூட்டு உள்ள முழுச்சாப்பாடு தான்.திரும்பவும்
இரவும் சாப்பாடுதான். மாதாந்திர அறை
வாடகையுடன் இரண்டு சாப்பாடுக்கான
பணத்தையும் கட்டிவிடவேண்டும்.
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்
காலை டிபன் உண்டு.காலை காப்பிக்கும்
மாலை நேர டிபனுக்கும் தனியாக பணம்
தரவேண்டும்.
தலைநகரில் நம் ஊர் சாப்பாடு கிடத்ததால்,நல்ல
வேளை நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படவில்லை.
ஆனால் மதியம் மட்டும் வேறு வழி இல்லாமல்
IARI கேண்டீனில் பிரெட் சாப்பிட வேண்டி இருந்தது.
தினம் காலையில் நண்பர்களுடன் 8.30 மணிக்கு
சாப்பிட்டுவிட்டு (காலையில் சாதம் சாப்பிடுவது
கஷ்டமாயிருந்தாலும்) ஆர்யசமாஜ் சாலை வந்து,
பேருந்து பிடித்து பயிற்சி நடக்கும் இடத்துக்குப்
போய்விட்டு மாலை திரும்பிக்கொண்டு இருந்தேன்.
ஒருநாள் சீக்கிரம் அறைக்கு வந்துவிட்டதால்,
தில்லியின் முக்கிய வணிக மய்யமான
கன்னோட் பிளேஸ் (Connaught Place) சென்று
வரலாமென முடிவு செய்தோம்.(இப்போது
அந்த இடம் ‘ராஜீவ் சௌக்’ என அழைப்படுகிறது.)
தொடரும்
ஓஹோ, நீங்க நம்ம ஜாதியா? (விவசாய இலாக்கா)
பதிலளிநீக்குGood Writeup...
பதிலளிநீக்குஎன்னது... நாம ரசத்தைத்தான் குடிப்போம். வடநாட்ல சாம்பாரையே குடிப்பாங்களா...? தென்னிந்தியர்கள் தகராறு செய்ய மாட்டார்கள் என்ற மரியாதை கிடைக்குமா? புதிய புதிய தகவல்களுடன் சுவாரஸ்யமாக இருக்கிறது தங்கள் அனுபவங்கள். ரசிப்புடன் தொடர்கிறேன் தங்களை.
பதிலளிநீக்குஆமாம் முனைவர் கந்தசுவாமி அவர்களே! வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி திரு பிரகாஷ் அவர்களே!
பதிலளிநீக்குபதிவை இரசித்து பாராட்டியதற்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!
பதிலளிநீக்குஇராமனுஞ்ச மெஸ்ஸில் தங்கியவன் என்பதினால் என்னால் தங்கள் விவரிப்புகளை மிகவும் ரசிக்க முடிகிறது .அன்றும் இன்றும் தென்னாட்டிலிருந்து வருபவர்களுக்கு முதல் புகலிடம் கரோல் பாக் தான் .இராமானுஜ மெஸ் இன்னும் இருக்கின்றது என்றே நினைக்கிறன் ..ஆனால் முன்போல் உணவு வசதிகள் இல்லை என்று கேள்வி . அந்த காலத்தில் கரோல் பாகில் மிகவும் பிரபலமான வைத்தியநாத அய்யர் மெஸ் மற்றும் மகாதேவன் மெஸ் தங்கள் பதிவில் விடுபட்டு போய் உள்ளது . இன்றும் அங்கு உள்ளவர்கள் தென்னாட்டில் இருந்து வருபவர்களுக்கே வாடகைக்கு வீட்டினை தருகிறார்கள் .. நீங்கள் கூறிய பல காரணங்கள், சாம்பார் உட்பட , சரியானவை தான் ! சுவையாக செல்கிறது தங்கள் பதிவு-பயணம் . மேலும் வரும் பதிவுகளில் தலை நகரின் பல முக்கிய தலை நகரத்திற்கே உரித்தான செய்திகள் ( ஃபட் ஃபட் உட்பட ) இடம் பெற்று பதிவின் சுவையினை கூட்டும் என்று நம்புகிறேன் . இதை படிப்பவர்கள் தலை நகர் சென்று பணி புரியும் வாய்ப்பு வரும் பொது தயங்க மாட்டார்கள் . வாசு
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!தங்களோடு இராமானுஜம் ‘மெஸ்’ஸில் தங்கியது குறித்தும் நினைவோட்டம் பகுதியில் எழுத இருக்கிறேன்.அடுத்த பதிவில் ‘ஃபட் ஃபட்’ பற்றியும் எழுத நினைத்திருந்தேன்.‘கரோல் பாகில் மிகவும் பிரபலமான வைத்தியநாத அய்யர் மெஸ் மற்றும் மகாதேவன் மெஸ் தங்கள் பதிவில் விடுபட்டு போய் உள்ளது.’ என எழுதி உள்ளீர்கள். உண்மைதான் அவைகளை எழுத மறந்துவிட்டேன்.
பதிலளிநீக்குடில்லியில் எனது அனுபவம் பற்றி நினைவோட்டம் பகுதியில் விவரமாக எழுதுவேன்.இந்த பதிவு ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக மட்டுமே.